updatable ebook ?updatable ebook .. you should be kidding…!

நண்பர் ஒருத்தர் விடிகாலையிலே யோசிக்க வைத்து விட்டார்.

ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார் –

ஏன் சார், ஈபுக் ஈபுக்குனு சொல்றீங்களே.. அறிவியல் ஈபுக் இருக்குதுன்னு வைங்க… புத்தகம் வந்து வித்துட்டு இருக்கற போதே அந்த டெக்னாலஜி மாறிடலாம்.. அப்போ வாங்கின புத்தகத்தை என்ன செய்யறது?

இன்னொரு புது பதிப்பு வரும்.. வாங்கி வச்சுக்க வேண்டியது தான்..

அது எதுக்கு முழு புத்தகத்தையும் திரும்ப ஒரு தடவை டௌண்லோட் செய்யணும்.. எது மாறி இருக்கோ அதை மட்டும் அப்டேட் செய்யற மாதிரி..

செய்யற மாதிரி?

update-able ebook இருக்கா?

க்ளீன் பௌல்ட்.. வீட்ட்டுக்கு வந்து ஜெட் கூகிளிங்

அரை மனசா ஒண்ணு ரெண்டு முயற்சி அப்டேட்டபிள் ஈபுக்கில் இருக்கு.. இது மாதிரி..

//Final Jeopardy in “updateable” e-book

december 23, 2010jeopardy book

The e-book of Final Jeopardy can be pre-ordered, as of today, at Amazon and B&N–but there’s a wrinkle. The e-book that turns up on Jan. 26 will be a partial e-book, with only the first 11 chapters. The final chapter, including the result of the man-vs-machine showdown between IBM’s computer and the two human champions, will arrive on Feb. 17 ( following the Feb. 14/15/16 televised match) as an update. USA Today carries the story of the updateable e-book.//

இது அதிக பயன் ஏற்படுத்தக் கூடிய முயற்சியான்னு பத்ரி Badri Seshadri கிட்டே தான் கேக்கணும்..

எனக்கு அச்சு புத்தகம் பிடிக்கும்.. அதிலே அப்டேட்டபிள் ஆப்ஷன் வச்சா

என்ன நல்லா இருக்கீங்களா சார்? எங்கே இவ்வளவு தூரம்? உங்க புத்தகம் இப்போத்தான் படிச்சு முடிச்சேன்.. நல்லா இருக்கு..

அதை கொஞ்சம் எடுத்துட்டு வர்றீங்களா..நாலு எடத்துலே மாத்த வேண்டியிருக்கு… கையோட மாத்திக் கொடுத்திட்டு அடுத்த எடத்துக்குப் போகணும்..

எழுத்துக்காரர்-னா சும்மாவா? இந்தப் பொறுப்பும் எடுத்துக்க வேண்டியதுதான்…
——————————-

நாகசுவரக் காரர்கள் மூத்த நாயனக்காரர், இணை நாயனம், தவில், ஒத்து, தாளம் என்று ‘செட்’டாகவே இருப்பது அந்த நாள்ப் பழக்கம். சில கச்சேரிகளில் அதிக சுவாரசியம் கூட்ட, ‘கெஸ்ட் அப்பியரன்ஸ்’ ஆக வேறொரு அல்லது ரெண்டு தவில் வித்வான்கள் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். இவர்களை ‘ஸ்பெஷல் தவில்’ அல்லது ‘தனித் தவில்’ என்று சொல்வது வழக்கம்.

‘நாகசுவரச் சக்கரவர்த்தி’ என்று புகழ் பெற்ற திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையவர்களுக்கு (டி.என்.ஆர்) இந்த ‘தனித் தவில்’ சமாசாரம் அறவே பிடிக்காதாம்.

கலாக்‌ஷேத்ராவில் டி.என்.ஆர் கச்சேரிக்கு ருக்மிணி அருண்டேல் ஏற்பாடு செய்தபோது செம்பன்னார்கோவில் தட்சிணாமூர்த்தி பிள்ளை (பெயர் சரிபார்க்க வேணும்) தனித் தவில் என்று அழைப்பிதழில் பார்த்து டி என் ஆர் கடுப்பாகி விட்டாராம்.

தட்சிணாமூர்த்தி பிள்ளை விஷயம் தெரியாமல், டி என் ஆர் கூட சென்னை போக அவர் வீட்டுக்குப் போயிருக்கிறார்.

‘நான் என்னத்துக்காக உன்னை கூட்டிட்டுப் போகணும்.. நீதான் தனியா வாசிக்கப் போறியே.. தனியாவே போய்க்கோ’ என்று குழந்தை போல் கோபப்பட்டாராம் டி என் ஆர்.

இதெல்லாம் தினமணி சிவகுமார் நேற்று சொன்னது.

டி என் ஆர் உள்ளூர் கோவில் பக்கம் கடை பெஞ்சில் உட்கார்ந்து சுவாரசியமாக ‘குடியரசு’ அல்லது ‘விடுதலை’ படித்துக் கொண்டு இருப்பாராம். குருக்கள் வந்ததும் கோவிலுக்குள் போவாராம். அவருக்கு ரெண்டும் வேணும்..
————————————–
அமெரிக்கரான டக்ளஸ் நைட் (Douglas M.Knight JR) நாட்டியப் பெருங்கலைஞர் பாலா என்ற பாலசரஸ்வதி தேவியின் மகள் லட்சுமியை மணந்தவர். அவருடைய ‘Balasaraswathi – Her Art and Life’ மறுவாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன்.

பாலா தென்னிந்திய திராவிட கருப்பு. வட இந்தியர்கள் கிண்டல் செய்கிற உடல் வாகு, அவர்கள் பார்வையில் அழகு இல்லாத முகம்.

பாலா இந்தியக் கலைக் குழுவின் அங்கமாக சோவியத் யூனியன் போக 1958-ல் தேர்ந்தெடுக்கப் படுகிறார். எல்லா ஏற்பாடுகளும் முடிந்து பயணம் வைக்கத் தயாரான தினததை நெருங்கும்போது தில்லியில் இருந்து ஒரு செய்தி வருகிறது – பாலா சோவியத் யூனியன் போக வேண்டாம்.

இந்தோ – சோவியத் நல்லுறவு மலர்ந்து வரும் நாட்கள் இவை. சோவியத் மக்களுக்கு மகிழ்வையும், இந்தியா பற்றி அன்பான நேசமான பிம்பத்தையும் உருவாக்க வேண்டியது அவசியம். பாலா சிறந்த நாட்டியக்காரியாக உள்ளூரில் இருக்கலாம். சோவியத் போக அவர் லாயக்கு இல்லை.

இதுதான் காரணம். இது யாருடைய அபிப்பிராயம் என்று நினைக்கிறீர்கள்?நவ பாரத நிர்மாண சிற்பி பண்டித ஜவஹர்லால் நேருவுடையது! You too, Panditji!

கருப்பு பாலாவைப் பிடிக்காத நேருஜி எம்.எஸ்ஸையும் கலாக்‌ஷேத்ரா ருக்மிணி அருண்டேலையும் கொண்டாட அவர்களுடைய, வட இந்தியாவுக்கு அன்னியமில்லாத, இஷ்டமான சிவப்பு நிறம் காரணம் என்று சொல்ல மாட்டேன். இருந்தாலும்..

‘நீங்க அங்கே போய் அவமானப் படறதை விட, உங்க பயணத்தை கான்சல் செய்து, அந்த அவமானத்திலேருந்து உங்களை விடுவிச்சிருக்கோம் சர்க்கார்லே…. எங்க கிட்டே நன்றி சொல்லணும் நீங்க’..

இந்திய அமைச்சு அதிகாரி ஒருவர் பாலாவிடம் பெருமையாகச் சொன்னாராம்.

கருப்பு அந்தக் கால சர்க்காருக்குப் பிடிக்காத கலர் போலே இருக்கு.
—————————————-
’மூணு காலம்… மூணு நடை .. மாற்றி மாற்றி வாசிப்பது ரக்தி மேளம்’ என்றார் நண்பர் தினமணி சிவகுமார்.

கேரளத்தில் ‘தாயம்பகம்’ மாதிரியா என்று கேட்டேன்.

இல்லையாம்.

ரக்தி மேளம் பற்றி நெட்டுலே தேடியபோது கிடைத்தது –

(நன்றி – https://groups.google.com/forum/#!topic/nallisai/spbysYDmMiw)

இரக்தி என்றால்?

“ஆடல் தெய்வம் நடராஜர் காளியோடு நர்த்தனம் செய்யும் பொழுது நந்திகேஸ்வரர் சுத்த மத்தளத்தில், “தீம் தாம்” என்ற சொல்லை அமர்த்தி, “தீம்தக தத்தித்தாம்” என்னும் மிஸ்ர கதி நடையை வாசித்ததாகக் கூறுவர். இன்றும் நடராஜ பெருமான் சுவாமி புறப்படும் பொழுது சுத்த மத்தளத்தில் “தீம்தக தத்தித்தாம்” என்ற சொல்லை மிஸ்ர நடையில் வாசிக்கின்றார்கள். இந்த சொல்லை சம்பிரதாயப்படி அனேகவித இலயக் கற்பனையோடு மிஸ்ர நடை அல்லது மிஸ்ர கதியில் வாசிப்பதற்கு இரக்தி என்று பெயர், இதை

– விளம்ப காலத்தில் ஆரம்பமாக வைத்துக் கொண்டு அமைத்து,

– அதற்கு அடுத்ததாக மத்தியம காலத்தில் திஸ்ர கதியாக அமைத்து,

– அதற்கு அடுத்து மூன்றாவது காலம் அல்லது துரித காலத்தில் சதுஸ்ர நடையாகவும்,

இப்படி மூன்று காலத்தில் மூன்று நடைகள் அமைத்து வாசிப்பதுதான் இரக்தி மேளமாகும்”
————————————-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன