மீரட்டுலே நயம் கத்தரிக்கோல் கிடைக்குமாமே?
வசந்தி எந்த நிமிஷத்திலும் வெடிக்கக் கூடிய சிரிப்பை உதட்டில் சுமந்தவளாக, கண்ணை இடுக்கிச் சின்னச் சங்கரனைக் கேட்டாள்.
யார் சொல்றா?
உங்க மனுஷா.
எதுக்குக் காலங் கார்த்தாலே கத்திரிக்கோலும் கத்தி கபடாவும்?
சங்கரன் அவள் பக்கமாக நகர்ந்தபடி கேட்க, அவன் இன்னும் நெருங்காமல் பிடித்துத் தள்ளினாள்.
உங்க ஊர்ப் பொம்மனாட்டிகள் எல்லாம் மீரட்லே இருந்து சன்னமான கத்தரிக்கோல் வாங்கிண்டு வரச் சொல்லியிருக்காளாம்.
எதுக்கு?
எதுக்கு கத்திரிக்கோல் தேடுவா? மயிர் வெட்டிக்கத்தான்.
தலைமயிரா?
இந்த அபத்தத்துக்குத்தான் காத்திருந்த மாதிரி வசந்தி ஓங்கிச் சிரித்தபடி ரெண்டே எட்டில் பாத்ரூமுக்கு ஓடினாள். பின்னாலேயே ஓடினான் சங்கரன்.
வீடு முழுக்க விருந்தாளிகள் நிறைந்து கிடக்கிறார்கள். புருஷனும் பெண்டாட்டியும் வென்னீர் பாய்லரைச் சுற்றி ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆறு பெண்கள். நாலு ஆண்கள். காலையில் அரசூரில் இருந்து பத்து நபர் கொண்ட ஒரு குழு சங்கரனின் தில்லி லோதி ரோடு குடியிருப்புக்கு வந்து சேர்ந்தது. சராசரி வயசு அறுபத்தைஞ்சு இருக்கும் அந்த கோஷ்டியில் சீனியர்மோஸ்ட் லோகசுந்தரி பாட்டி தான். எண்பது வயசுக்கு கிழங்கு மாதிரி இருக்கப்பட்டவள்.
சங்கரனும் வசந்தியும் தில்லி ரயில்வே ஜங்க்ஷனுக்கு குளிர் ஓய்ந்த விடிகாலையிலேயே ரெண்டு பிளாஸ்க் நிறைய காப்பியோடு போய் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸுக்காகக் காத்திருந்து, அவர்களைக் கூட்டி வந்தார்கள். ரயில் ஏகதேசம் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதால் சங்கரனுக்கு பெரிய தோதில் சிரமம் ஏதும் ஏற்படவில்லை. நாளை திங்களும் கூட ஆபீஸ் இல்லாத அபூர்வமான வாரக் கடைசி இது.
வசந்தியின் சரளமான இந்தியும், சங்கரனின் சர்க்கார் அதிகாரி தோரணையும் அதிக பேரமும் வாக்குவாதமும் இல்லாமல் நாலு ஆட்டோ ரிக்ஷா பிடிக்க உதவின. அந்த ரிக்ஷாவில் ஒன்று லீடர் போல முன்னால் போக மற்ற மூணும் சுமுகமாக அதன் பின்னாலேயே வந்து எல்லாரும் நல்லபடிக்கு லோதி ரோடு வீட்டை அடைய ஏற்பாடு செய்திருந்தது.
ஆனாலும் அதில் ஒருத்தன் கொஞ்சம் தூங்கி வழிந்தபடி வண்டி ஓட்டி முன்னால் போய்க் கொண்டிருந்த வேறு வாகனத்தைத் தொடர்ந்து கல்காஜி போகிற பாதையில் போய் அப்புறம் திரும்பி வந்து தொலைத்தான். அந்தப் பத்து நிமிஷம் பரபரப்பான நேரமாக எல்லோருக்கும் அமைந்து போனது.
தடம் மாறிப் போன அந்த வண்டியில் லோகசுந்தரியும் மற்ற இரு சுந்தரர்களும் இருந்தாலும், பாட்டிக்கு லவலேசம் இந்தி தெரிந்திருந்ததால் பெரிய தோதில் பிரச்சனை இல்லை. அவளுடைய சுருக்குப் பையில், வீபுதி மணக்கும் காகித நறுக்கில் எழுதி வைத்திருந்த சங்கரனின் விலாசம் இருந்ததும் அதற்கு ஒத்தாசை செய்தது.
இது கூட இல்லாமல் நாம வடதேச யாத்திரை வந்ததுக்கு லோபமுத்ரா, மகாமுத்ரா லட்சணங்கள் வேணாமா என்றார் சோமசுந்தரமய்யர். சங்கரனின் ரெண்டு விட்ட பெரியப்பா உறவு. அர்த்தம் உருப்படியாக வாய்க்காவிட்டாலும், வாக்கியம் சரியாக இருந்தால் போதும் என்று திடமாக நம்பிய அவர் லோபமுத்ரா, மகாமுத்ரா என்ற பெயர்களை இப்படி டெல்லிக் காலை நேரத்தில் உபயோகித்த உற்சாகத்தில் இருந்தார். அரசூர்க் கோவிலில் ஏதோ உபன்யாசத்தில் கேட்ட பெயர்கள் அவை என்பது தவிர வேறேதும் நினைவில் இல்லாவிட்டாலும் சரியான நேரத்தில் அபிப்பிராயத்தை வலுவாகச் சொல்ல அவற்றைப் பிரயோகித்த தன் மேதாவிலாசத்தின்பால் மோகமும் பெருமையும் கொண்டு பரவசமடைந்தார் அவர்.
வேம்பாவிலே வென்னீர் போட்டு அண்டஞ் சேருமோ? பேசாம விட்டுடு. குழாய் ஜலமே எதேஷ்டம்.
ஏற்கனவே சொல்லி வைத்து ஒத்திகை பார்த்துக் கொண்டது போல பாட்டியம்மாக்கள் எல்லோரும் உறுதியாகச் சொன்னாலும், கிழவர்கள் அந்த முதுபெண்கள் மேல் கருணை காட்ட வேண்டிய அவசியத்தை அதை விட உறுதியாக எடுத்துச் சொன்னார்கள். சொல்லாவிட்டாலும் இன்று முழுக்க வென்னீர் கைங்கர்யம் நடத்துகிற ஏற்பாட்டில் தான் வசந்தி இருந்தாள். குளிர்காலம் முடிந்திருந்தாலும், காற்றில் இன்னும் குளிர்ச்சி இருந்தது.
பாய்லர் வேலை முடிந்துதான் சாப்பாட்டுக் கடை என்று வசந்தி சங்கரனிடம் சொன்னாள். அவன் எப்போதாவது மேலெழும் புத்திசாலித்தனம் இன்னொரு முறை தென்பட, வசந்தியின் தகப்பனார், மெஸ் சுந்தர வாத்தியாருக்கு போன் செய்தான். ஒரு மணி நேரத்தில், லோதி ரோடுக்கு அண்டா குண்டாக்களில் மெஸ் சாப்பாடு சுடச்சுட வந்து இறங்கியது.
ஜாக்கிரதையாக வெங்காயம் ஒதுக்கி வைத்து, சாப்பாடு சடுதியில் முடிய, வந்தவர்கள் கேட்டது –
இங்கே அக்கம் பக்கத்திலே இருக்கப்பட்ட ஷேத்ரங்கள் எதெல்லாம்?
பிர்லா மந்திர்.
ஸ்தலம் உடனடியாக அங்கீகரிக்கப்பட்டது. பிர்லாங்கறது எந்த ஸ்வாமி என்ற பொதுவான குழப்பம் இருந்தாலும் மந்திர் என்பது கோவில் என்பதில் யாருக்கும்
மறு அபிப்பிராயம் இல்லை.
அடுத்து விரல் மடக்கக் கோவில் பட்டியல் இல்லாத காரணத்தால், குதுப் மினார், செங்கோட்டை, லோதி கார்டன், ராஷ்டிரபதி பவன், இந்தியா கேட் என்று அமெரிக்க அதிபரில் இருந்து அரசூர் முதுபெருமக்கள் வரை எல்லோருக்குமான பொதுப் பட்டியல் சங்கரனால் எடுத்துக் கூறப்பட்டு அங்கீகாரமானது.
காந்தி சமாதி எல்லாம் திறந்து வச்சிருக்க மாட்டாளா?
எதிர்பார்க்காத விதமாக லோகசுந்தரிப் பாட்டி கேட்டாள்.
ஏன், போய்த் தரிசிக்காட்ட கிழவிக்கு ஜன்மம் கடைத்தேறாதாமா?
ஆலாலசுந்தரம் தணிந்த குரலில் சங்கரனிடம் எள்ளி நகையாடினார். அவர் என்ன மாதிரி உறவு என்று பேமிலி ட்ரீயான குடும்ப மரம் படம் போட்டுப் பார்த்தால் தான் சொல்ல முடியும். படத்துக்குள்ளே அடங்காமல் உறவு வழுக்கி வெளியே விழுந்து போகவும் வாய்ப்பு இருப்பதாகச் சங்கரனுக்குப் பட்டது.
நேரு சமாதியையும் சேர்த்துக்க வேண்டியது தானே? சீக்கிரம் அந்தக் கட்டேலே போறவனும் போய்ச் சேரட்டும்.
உத்தேசம் எழுபது வயது, முன்பல் நாலு இல்லாமல் காற்றோடு பேச்சைக் கலந்து ஒலிபரப்பும் மாமா ஒருத்தர் உடனடியாக திருத்தப் பிரேரணையாக காற்றடித்தார்.
சங்கரனுக்கு அரசூரில் அவன் பள்ளித்தோழன் தியாகராஜ சாஸ்திரிகள் உடனடியாக நினைவுக்கு வந்தார்.
ஊரோடு காந்தி வெறுப்பும் நேரு துவேஷமும் வளர்த்து வைத்திருக்கிறார்கள். மேற்படி ஜவஹர்லால் நேரு மூச்சு விட மறந்து போக, கொண்டு போய் வைத்து எரித்தால், அரசூரில் தை அமாவாசை மாதிரி வீடு வீடாகப் பால் பாயசம் பண்ணி, பருப்பு வடை தட்டிக் கோலாகலமாகக் கொண்டாடுவார்களாக இருக்கும்.
போற வழியிலே தான் காந்தி சமாதி. பார்த்துக்கலாம்.
வசந்தி சொன்னது லோகசுந்தரிப் பாட்டி முகத்தில் சொல்லொணாக் குதூகலத்தை உண்டாக்க, உதயாதி நாழிகை பத்து மணிக்கு அங்கே இங்கே என்று அலைந்து தேடிக் கூட்டி வந்த நாலு ஆட்டோ ரிக்ஷாக்களில் அரசூர் கோஷ்டி நகர் வலம் கிளம்பியது.
காந்தி சமாதிக்குள் போக லோகசுந்தரிப் பாட்டியும் காந்தி விரோதர்களில்லாத சில ஆண்களும் சம்மதித்தாலும், இதரர்கள் இது சிலாக்கியமில்லை என்று வாசலிலேயே நின்று விட்டார்கள்.
சமாதிக்குள்ளே எல்லாம் புகுந்து புறப்பட்டு வந்தா, சா தீட்டு பிடிச்சுக்கும். இன்னொரு தடவை குளிச்சாகணும். விழுத்துப் போட்டதை துவைக்கணும். காயப் போடணும். லாயக்குப் படாது.
ராஜ்காட்டில் இருந்து இந்தியா கேட் வந்தபோது அந்த வாசலுக்கு ரெண்டு புறமும் இந்தியாவே இருப்பது ஏன் என்று குழம்பியவர்களுக்கு வசந்தி ஒரு வழியாகத் தெளிவு படுத்தினாள் –
இது ஒரு அடையாள வாசல். இந்தியாவுக்குள்ளே வர்றதுக்கு இல்லே. இந்தியாவுக்குள்ளேயே அதுவும் தலைநகரத்திலே அதான் நிறுத்தியிருக்கு.
இதுவரை தெளிவாக இருந்த சங்கரன் குழம்பிப் போனான். இந்தியா கேட்டை ஏன் வேலை மெனக்கெட்டு ஊர் மத்தியில் நிறுத்தியிருக்கிறார்கள்?
ஆபீஸில் கேட்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டான். யாரைக் கேட்க? தில்ஷத் கௌர்? கழுத்துக்கு மேலும் அவளுக்குத் திடமான இருப்பு உண்டே.
லோதி தோட்டத்தில் விருந்தாளிகள் வகை வகையான பூப்பூவாகப் பார்த்ததோடு பின்னணியில் இருந்த சமாதிகளையும் வாசல் படியில் நின்றாவது தரிசிக்க வேண்டிப் போனது. அதுவும் வேறே சம்பிரதாய ஆட்கள் புதைபட்ட இடங்கள்.
இதென்ன ஊரெல்லாம் சமாதி. நடுவிலே நடுவிலே மனுஷா இருக்க வீடு, கடைன்னு ஏற்படுத்தியிருக்கா? அந்த மட்டுக்குமாவது சந்தோஷம். வெள்ளைக்காரன் கைவேலையா? காந்தி கும்பல் அப்போ இருந்து தொலைச்சிருந்தா, ஊர் முழுக்க அவாளே சௌக்கியமா புதையுண்டு போகட்டும், நாங்க வேறே இடத்துலே சின்னதாக் குச்சு வீடு கட்டிக்கறோம்னு தாராளமா தத்தம் பண்ணிட்டு வந்திருக்கும். இங்கிலீஷ் காரன் சத்திய சந்தனாச்சே. சமாதி இதோட போறும்னு கறாரா வச்சுட்டான்.
நேரு விரோதி மாமாக்கள் இங்கிலீஷ் வாழ்த்துப் பாடி மகிழ, வழியோரக் கடையில் டீ குடிக்கலாமா என்று சமய சந்தர்ப்பம் தெரியாமல் சங்கரன் கேட்டது, அவன் அனுபவத்தால் சிறுவன் என்பதால் கூட்டத்தால் மன்னிக்கப் பட்டது. கொஞ்சம் அழுத்திச் சொல்லியிருந்தால் அந்த ஆண்கள் எல்லோருமே கிளாஸில் டீயை எச்சில் பண்ணி ருசிப்பதை விரும்பியிருப்பார்கள் என்று சங்கரன் திடமாக நினைத்தான்.
குதூப் மினார், செங்கோட்டை, ராஷ்டிரபதி பவன் தோட்டம் எல்லாம் போனால் இன்னும் நிறைய சமாதி தான் பார்க்கலாம் என்று பரவலான கருத்து நிலவ, கரோல்பாகில் ஏதாவது சில்லுண்டி சமாசாரங்கள் வாங்கிக் கொண்டு, அப்படியே நாளை ரயிலுக்குப் போக பழ வர்க்கமும் ரொம்ப பழுக்காமல், காய்வெட்டாக இல்லாமல் சேர்த்துக் கொண்டு திரும்பத் தீர்மானமாயிற்று.
ரயில் பிரயாணம் நாளைக்கு ஏழு மணி நேரம் தான். மீரட், முசாபர் நகர், ரூர்க்கி. டாண்ணு நடுப் பகலுக்கு ஹரித்வார் வந்துடும்.
சங்கரன் சொல்ல, நாளை மதியச் சாப்பாடுக்கு இட்லி வார்த்துக் கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை, பழமே எதேஷ்டம் என்றார்கள் கூட்டத்தில் பலரும்.
மீரட்டில் ரயில்வே ஸ்டேஷனிலேயே கத்தரிக்கோல் கிடைக்குமா என்று யாரோ கேட்க, வசந்தி சங்கரனைப் பார்த்துப் பரிமாறிக் கொண்ட விசேஷ அர்த்தப் புன்னகைக்காகவே அடிக்கடி விருந்தாளிகள் வந்து போகலாம் என்று தோன்றியது சங்கரனுக்கு. இந்த ரகசியம் பகிர்தல் சுபமாக முடிந்து, பிடார் ஜெயம்மா நூறு பேர் கூடுகிற இடத்தில் சத்தமாக விசாரிக்கத் தேவை இல்லாமல் போகலாம்.
சங்கரனும் வசந்தியும் நினைத்ததுக்கும் அதிகமாக, கரோல்பாக் வந்த விருந்தாளிகள் எல்லோருக்கும் அங்கே போனது மனதுக்கு வெகு இஷ்டமானதாக இருந்தது.
மஞ்ச-மசுக்க வெல்வெட் துணி கிழித்துச் சுற்றிவரப் பசை தடவி ஒட்டி, கண்ணாடிச் சில்லும், இமிடேஷன் வைரமும் மேற்படி ரக மரகதமும் பொடிக் கல்லாகப் பதித்து ஜரிகை ஜரிகையாகத் தொங்க விட்ட ராமர் பட்டாபிஷேகப் படம் எல்லாருக்கும் பிடித்திருந்தது. வடக்கத்திய புஷ்டியும், உப்பின கன்னமுமாக கிருஷ்ண பரமாத்மா சாயலில் ராமன் இருந்தாலும், இங்கத்திய ஆசாரம் என்ற சமாதானத்தோடு வசந்திக்கு பேரம் பேசத் தேவையான யோசனைகள் சொல்லி – அவள் அதில் ஒண்ணைக்கூட கேட்கவில்லை – வாங்கின படம் எல்லாத்தையும் சங்கரன் தான் சுமந்து கொண்டு கூட்டத்துக்குப் பின்னால் நடந்தான்.
கலாசார அமைச்சகம் சூப்பரிண்டெண்ட் செய்யக்கூடிய காரியம் இல்லை இதெல்லாம். அப்பள நாயுடு போல கஞ்சிப்பசை போட்ட வரவரப்பான அதிகாரி இல்லைதான் சங்கரன். என்ன செய்ய, சந்யாசிக்கும் ஊர்ப் பிரியம், உற்றார் பிரியம் இருக்கும் என்கிற போது ஆபீஸ் சூப்ரண்டெண்டுக்கு வந்து ஏறிக்கொள்ளாதா என்ன?
வாங்கின பழத்தை ஆளுக்குக் கொஞ்சமாக எடுத்து வந்து அஜ்மல்கான் ரோடும் ஆரிய சமாஜ் ரோடும் சந்திக்கிற இடத்தில் நடைபாதை ஓரமாக வைக்க, தலை முண்டிதம் ஆன அத்தனை பாட்டிகளையும் ஒரு சேரப் பார்த்த உள்ளூர் ஜனங்கள் பிட்சுணிகளைப் பார்த்த பக்திப் பரவசத்தோடு நமஸ்காரம் செய்து அப்பால் போனார்கள்.
நாலு ஆட்டோ சேர்த்துப் பிடிக்கும் வழக்கம் பழகி இருந்ததால் வீட்டுக்குப் போக அதே மாதிரி ஏற்பாடு செய்யும் உத்தேசத்தோடு சங்கரன் நிற்க, ஆலாலசுந்தரமய்யர் மப்ளரை பழக்கடையில் விட்டு விட்டு வந்ததாக அறிவித்தார்.
மற்றவர்கள் காத்திருக்க, திரும்பிப் போனவர் போனவர் தான். அரைமணி நேரம் அளவுக்கு அவர் திரும்பாததால் சங்கரன் அவரைத் தேடிப் போக வேண்டிப் போனது. அஜ்மல்கான் வீதியை அங்கங்கே இடைவெட்டிப் போகிற எத்தனையோ சின்னத் தெருக்களில் ஒன்றில் வழி தவறி, இலக்கின்றித் திரிந்து கொண்டிருந்த அந்த ஜனநாயக சோசலிச விரோதியை சங்கரன் ஓடிப் போய்ப் பிடித்தபோது அவர் குழைந்து போய் அழுகிற பதத்தில் இருந்தார்.
விடிகாலை நாலு மணிக்கே மொத்தக் கூட்டமும் குளித்து உடுத்தி தயாராக இருக்க, ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த டாக்சிகள் அவர்களையும் வசந்தி, சங்கரனையும் சுமந்து கொண்டு திரும்ப தில்லி ரயில்வே ஜங்க்ஷன் அடைந்தன.
மூன்றே நாள். ஹரித்வார், ரிஷிகேஷ் தரிசித்து தில்லி வந்து அப்புறம் வாரணாசி போவதாகத் திட்டம். அவர்கள் தில்லிக்குத் திரும்பி வருவது வார நாளில் என்பதால் வசந்தியின் தகப்பனார் மெஸ் சுந்தர வாத்தியார் ஏற்பாடில், அரசூர் கோஷ்டி, இந்து மகா சபா கட்டிடத்தில் காலையில் வந்து இறங்கி, அங்கேயே மெஸ் சாப்பாடு நடக்க, பகலுக்கு வாரணாசி ரயில் ஏற ஏற்பாடு.
மீரட் எப்ப வரும்?
ரயில் கிளம்பும்போது கிசுகிசுப்பாக லோகசுந்தரிப் பாட்டி வசந்தியை விசாரித்தாள்.
இன்னும் ரெண்டு மணி நேரத்துலே. ஜங்ஷன்லேயே கத்தரிக்கோல் கிடைக்கும்.
மெதுவான குரலில் வசந்தி அவளிடம் சொல்ல, அடி பொண்ணே என்று வெட்கமாகச் சிரித்தாள் பாட்டி.
வீடு வெறிச்சுனு இருக்கு.
திரும்பி வந்து, வாசல் கதவைத் திறந்து உள்ளே போனபோது வசந்தி சொன்னாள்.
ஆறு மணி தான் ஆகியிருந்தது. சீக்கிய குரு பிறந்தநாள் என்று சர்க்கார் விடுமுறையான திங்கள்கிழமை.
மீரட் எத்தனை மணிக்கு வரும்?
வசந்தி ரஜாய் மெத்தைக்குள் புகுந்தபடி கேட்டாள்.
இறுகத் தழுவிக் கொண்டு சங்கரன் சொன்னான் –
இன்னிக்கு லேட்டா வரும்.
(தொடரும்).