அச்சுதம் கேசவம் நாவலுக்கான தகவல் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஹரித்துவார் நகர அந்தணர்கள் – பாண்டா அல்லது பாண்டேக்கள்- பற்றி அறிந்து கொண்டேன்.
பாரதத்தின் பல இந்துக் குடும்பங்களின் வம்சாவளிச் செய்திகள் இந்தப் புரோகிதர்களின் பரம்பரையினரால் இன்னும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றனவாம். ஒவ்வொரு பாண்டே (பண்டிதர்-) குடும்பத்துக்கும் தேசத்தில் இந்த இந்தப் பிரதேசம் பற்றிய தகவல் காப்பாளார் என்று பொறுப்பு உண்டாம்.
ஹரித்துவார், ரிஷிகேஷ் தீர்த்த யாத்திரை போகிறவர்கள் முன்னோரை வழிபட்டு பித்ரு கடனையாற்ற அவரவருக்கு என்று விதிக்கப்பட்ட பாண்டே குடும்பத்தினரிடம் தான் போவார்கள். இன்னார் என்று உறுதி செய்து கொண்டு, அவர்களுக்கு கர்மங்களை நிறைவேற்ற உதவி செய்வதோடு அந்த பாண்டே, வந்திருக்கும் யாத்ரீகனின் வம்சத் தகவல்களையும் update அப்டேட் செய்து கொள்வாராம்.
இப்படி வம்சாவளியாகத் தகவல் சேகரித்துப் புதுப்பிப்பது இன்றும் உத்தரப் பிரதேசம், வங்காளம், மகாராஷ்டிராவில் இருக்கும் பல குடும்பங்களுக்கு உண்டாம். தென்னிந்தியாவில் இருந்து முக்கியமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து யாத்திரை போன பலஅந்தணர், நகரத்தார், சைவப் பிள்ளைமார் குடும்பங்களின் வம்சாவளித் தகவல்கள் இன்னும் இந்தப் பண்டிதர்களிடம் உண்டு என்றாலும், இங்கிருந்து போகிறவர்களுக்கு அவரவர் குடும்பத்துக்கான தகவல் பொறுப்பாளார் யாரென்று தெரியாததால், இந்தத் தகவல்கள் கிட்டத்தட்ட 75 வருடமாகப் புதுப்பிக்கப் படவில்லை.
வங்காளியான சத்யஜித் ரே-யின் பதினைந்து தலைமுறைகளுக்கு முந்திய முன்னோர் பற்றிய தகவல்கள் அவர் குடும்பத்தினரிடம் உண்டு என்று படித்தேன். மற்ற எத்தனையோ குடும்பங்களின் பரம்பரை பற்றிய தகவல்கள் என்ன ஆனது?
’ஆதார்’ வருவதற்கு ஆயிரம் ஆண்டு முன்னால், மதத்தையும், கலாசாரத்தையும், ஆற்ற வேண்டிய முன்னோர் கடன் சார்ந்த பக்திப் பயணங்களையும் அடித்தளமாகக் கொண்டு கட்டி எழுப்பிய பிரம்மாண்டமான identity and lineage tracking project ஒன்று நசித்துக் கொண்டிருக்கிறது, நம் கவனமின்மையால்.
#அச்சுதம்_கேசவம்