கொட்டும் முழக்கும் சீராகக் கேட்டபடி இருந்த கோவில் பிரகாரத்தில் சங்கரன் கால் வைத்தான். ராத்திரி பத்து மணி கழிந்து சுவர்க் கோழிகள் ஒலிக்கும் இருட்டு வெளி. பாட்டு சத்தம் வழிகாட்ட இடது புறம் திரும்பி நடந்தான் அவன். கூடவே ஒரு சத்தமும் இல்லாமல் வசந்தி போனாள். ஓசை அதிகமானதாகத் தோன்றியதால் வெளிவீதியில் வரும்போதே சற்று நின்று காலில் கொலுசை அகற்றிக் கைப்பையில் போட்டுக் கொண்டிருந்தாள் அவள்.
என்ன அங்கே நடக்கறது?
தாடியும் கருப்புத் துண்டுமாக வேட்டி மடித்துக் கட்டிக்கொண்டு ரெண்டு எட்டு முன்னால் போய்க் கொண்டிருந்தவரோடு சமமாக நடந்து அவரைக் கேட்டான் சங்கரன்.
இதை மலையாளத்தில் கேட்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பகவதிப் பாட்டி கங்கையோடு போனதோடு வீட்டில் புழங்கி வந்த கொஞ்ச நஞ்சம் மலையாளமும் அஸ்தமித்து விட்டது.
கதக்களி.
நிச்சயம் தமிழன் தான். மலையாளியாக இருந்தால் கதகளி என்று தான் சொல்லியிருப்பான். பகவதிப் பாட்டி சொல்லிக் கொடுத்திருந்ததும் அப்படித்தான். அவள் சொன்னதை சிரத்தையோடு கேட்டிருந்தால் யாரையும் கேட்காமல் சங்கரன் இங்கே இஷ்டத்துக்கு சுற்றிக் கொண்டிருப்பான்.
ராத்திரி பூரா நடக்குமோ?
வசந்தி மெல்ல சங்கரனுக்கு மட்டும் கேட்கிற தோதில் கேட்டாள்.
அது நடக்கட்டும். நாம் போனோம் வந்தோம்னு திரும்பிடலாம். நமக்கானா ஆயிரம் காரியம் தலைக்கு மேலே, கீழே.
தன் இடது கை நகத்தால் அவள் உள்ளங்கையைச் சுரண்டியபடி சங்கரன் ரகசியமாகச் சொன்னான்.
சீய்ய்.
பெரிய குத்துவிளக்கு முன்னால் வைத்து இருக்க, கண்ணை உருட்டிக்கொண்டு ஆட்டக்காரர் ஒருத்தர் நடுவிலே நின்றார். பக்கத்தில் பெண் சாயலில் வேஷம் போட்ட இன்னொருத்தர் எதையோ அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவர்களின் வளமான பின்பாகம் தட்டக்கூடிய நெருக்கத்தில் கெச்சலான ஒரு தாடிக்காரர் பாடிக் கொண்டிருந்தார். மேளமும் கைத்தாளமும் கொட்டிக் கொண்டு இன்னும் இரண்டு பேரும் அங்கே உண்டு.
ராமாயணம் மாதிரி இருக்கு. ஹனுமான்கிட்டே சீதா சூடாமணி கொடுக்கறது.
சங்கரன் வசந்தியிடம் தணிந்த குரலில் சொல்ல,, முன்னால் இருந்து யாரோ ரோஷமாக பின்னால் பார்த்து, இது கல்யாண சௌகந்திகம் என்றார்கள்.
பீமன் திரௌபதைக்கு புஷ்பம் கொடுக்கற கதை.
அவர் பின்னால் சாய்ந்து சொல்லி நிமிர்ந்தார். என்ன நினைத்துக் கொண்டாரோ, திரும்பப் பின்னால் சாய்ந்து மகாபாரதம் என்றார்.
அங்கே சிரிக்க ஆரம்பித்ததை ஓட்டம் ஓட்டமாக தங்கியிருந்த லாட்ஜுக்கு ஓடி வந்து படுக்கையில் உருண்டதும் தான் நிறுத்தினாள் வசந்தி. கட்டிப் பிடித்துக் கூடவே உருண்ட சங்கரன் தன் வாயால் அவள் உதட்டைக் கௌவி அடைத்துத் துடைத்த சிரிப்பு அது.
ஐயோ, கோவில் பார்க்க வந்துட்டு.
வசந்தி பொய்க் கோபத்தோடு பக்கத்தில் திரும்பிப் படுத்தாள். அவளை சங்கரன மறுபடி பற்றிப் படர்ந்து இறுக்கிக் கொள்ள,. கல்யாண சௌகந்திகம் ஆரம்பமானது.
விடிய நிறைய நேரம் இருந்தபோது அலாரம் அடிக்க சாடி எழுந்தாள் வசந்தி. மூணே முக்கால் மணி.
மத்த பிசாசு எல்லாம் அலையற நேரம். படு.
சங்கரன் உடல் சூட்டுக்காகத் திரும்பக் கை நீட்ட, வெறும் முதுகில் பலமாக அடித்து, நிர்மால்ய தரிசனம் என்று மட்டும் சொல்லி அவள் குளிக்கப் போனாள்.
காப்பி கிடைக்காத, பழகிய போக்குப்படி மிகச் சரியாக நாள் தொடங்காததற்கான சிடுசிடுப்போடு படுக்கையிலே உட்கார்ந்து ஏதோ ஆபீஸ் ஃபைல் பற்றி வந்த நினைப்பை அசை போட்டுக் கொண்டிருந்தவனை வசந்தி குத்திக் கிளப்பிக் குளிக்க அனுப்பினாள்.
நாலே கால் மணி. கோவிலுக்குப் போகிறவர்களின் நடமாட்டம் மட்டும் இருந்த தெரு. லாட்ஜ் வாசலில் இளம் பெண்களாக குஜராத்திகள் நின்று ஏதோ சுவாரசியமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். முகத்தைப் பார்த்தால் ஒவ்வொருத்தியும் உன்னதமான அழகி. பின்னால் இருந்து பார்க்க அவர்கள் அனைவரும் சங்கரனுக்குக் கதகளி ஆட்டக்காரர்களை நினைவு படுத்தினார்கள்.
யாரோ சங்கரனின் கையைப் பிடித்துக் கொண்டார்கள். மெல்ல நடக்கிறான் அவனும். பக்கத்தில் இதமான கிராம்பு வாடை. பழையதானாலும் பாந்தமாக, ஒரு அழுக்கு இல்லாமல் கசங்கல் காணாமல் இருக்கிற ஒன்பது கஜ பட்டுப்புடவை வாசனை. பகவதிப் பாட்டி.
பாட்டி, சுருக்கம் விழ ஆரம்பித்த கன்னத்தில் கை வைத்து செல்லமாக ஆச்சரியப்பட்டபடி சங்கரனைப் பார்த்துச் சிரிக்கிறாள் –
ஏண்டா கொழந்தே, இருந்து இருந்து இத்தனை வருஷம் கழிச்சு நம்ம பூர்வீக ஊருக்கு வந்திருக்கே. ஸ்ரீகிருஷ்ணனைப் போய்ப் பார்த்து ஒரு நமஸ்காரம் பண்ணுவோம், ஒரு மிடக்கு பால் பாயசம் கழிப்போம், நம்ம பூர்விக வீடு எங்கே இருந்ததுன்னு கொஞ்சம் தேடுவோம்னு இருக்க மாட்டியோ. அது என்னடா உங்க தாத்தா மாதிரியே புடவையை பாத்துட்டா நின்னாறது.
பகவதிப் பாட்டி தெரு முனையில் திரண்டு வந்த பனிப் புகையில் கரைந்து கலைந்து போக எதற்கென்று தெரியாத சிரிப்போடு சங்கரன் வசந்தி பின்னால் நடையை எட்டிப் போட்டான்.
வந்துண்டே இருந்தபோது காணாமப் போய், எனக்கு ப்ளேன்லே அந்த வயசன் காணாமப் போனது ஞாபகம் வந்து கதி கலங்கிடுத்து.
வசந்தி ஒரு வினாடி முழு வட்டம் கறங்கி சங்கரனைத் தேடி அவன் பின்னால் வந்து கொண்டிருப்பதில் ஆசுவாசம் கொண்டு கையை இறுகப் பற்றிக் கொண்டாள். பகவதிப் பாட்டி கை இன்னும் மென்மையாக இருக்கும்.
ஷேர்ட்டு தரிச்சு அகத்தேக்கு கடக்கான் பாடில்ல.
கோவில் முன்வாசல் மண்டபத்தில் யோகம் செய்கிறது போல் உட்கார்ந்து புகையிலையைக் கையில் தேய்த்துக் கொண்டிருந்த பெரியவர் தாக்கீது நல்க, சட்டையைக் களைந்து கக்கத்தில் இடுக்கியபடி நடந்தான் சங்கரன்.
நிர்மால்ய தரிசனம். சந்நிதியில் நின்ற முப்பது பேரோடு சங்கரனும் வசந்தியும் கை கூப்பி வாய் நாமம் சொல்லி, கண் அகத்தில் நிலைகொண்டு உட்திரும்பி நோக்க, அங்கேயும் எங்கேயும் பரவி நின்ற சாந்நித்தியத்தில் துகளாக, துகளின் துகளாகக் கரைந்தார்கள்.
யோசித்து, ஆலோசனை பெற்று, இங்கே பயணம் வைத்து வந்ததன் நோக்கமே மறந்து போனது. ஸ்ரீக்ருஷ்ணனிடம் பிள்ளை வரம் கேட்கவில்லை சங்கரனும், வசந்தியும்.
அபத்தமா இருந்தது அது கொடு இது கொடுன்னு கேட்க. கொட்டி வச்சு என்ன வேணுமோ எடுத்துண்டு போங்கறான் அவனானா.
திரும்பி வரும்போது வசந்தி நின்று பின்னால் திரும்பி கோவிலைச் சுட்டிக் காட்டிப் பேசிய போது பொழுது விடிந்தது.
கோவில் திருக்குளம் இருக்கு. அப்புறம் வாசல்லே ட்ரம் வச்சிருக்கே. அந்த மண்டபம். கூடவே, ஆற்றங்கரை.
இன்னும் பார்க்க வேண்டிய இடங்களை வசந்தி உற்சாகமாகச் சொன்னாள்.
காப்பி கிடைக்கறதான்னு பார்க்கலாம்.
சங்கரனுக்கு ஒரு மிடறு காப்பி குடித்தாலே அடுத்த அடி எடுக்கச் சரிப்பட்டு வரும். என்றால், தெய்வத்தின் சொந்த பூமியில் சாயா குடிக்கிற சீலம் தவிர மற்றது எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
கொஞ்சம் அசதியா இருக்கு. ஒரு நிமிஷம் இங்கேயே இருக்கேன். நீ ஓடியே போய்த் தெப்பக் குளத்தைப் பாத்துட்டு ஓடி வந்துடு.
வசந்தி அவனைக் கூர்ந்து பார்த்தாள்.
அப்படி எனக்கு கோவிலும் குளமும் பார்க்க வேணாம். நீங்களும் வருதுன்னா சொல்லுங்கோ.
சங்கரன் யோசித்தான். அவன் காலடிகளை எதுவோ முன்னால் நடக்க விடாமல் தடுக்கிறது. அல்பமான காப்பி இல்லை.
காலிகோ பைண்ட் செய்த ஹோ அண்ட் கோ கம்பெனி வெளியிட்ட டயரியின் பக்கங்கள் அவை. கருத்த நாட்டு மை கொண்டு எழுதிய பெண்ணெழுத்து. பகவதிப் பாட்டியின் பழைய டயரி பக்கங்கள் ஒவ்வொன்றாக உயிர் பெற்று அவனைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஒரு நிமிஷம் உக்காந்து போகலாம். கோவில் வந்துட்டு உடனே கிளம்பக் கூடாதுன்னு பகவதிப் பாட்டி சொல்லுவா.
அவனைத் தொடர்ந்து வசந்தியும் பிரகார மண்டபத்தின் மேடையில் உட்கார்கிறாள். கைப்பையைத் திறந்து எடுத்த கொண்டை ஊசியைத் அடர்ந்து கருத்த தலைமுடிக்குள் செலுத்தி இறுகச் செருகிக் கொள்ளக் கையை மடக்குகிறாள்.
பெரிய சத்தமாக ஏதோ கேட்கிறது. பழைய பாணியில் கட்டப்பட்ட பெரிய வீடு அது. சங்கரன் கூட்டத்தில் நடுநாயகமாக உட்கார்ந்திருக்கிறான். இல்லை, அது இந்தச் சங்கரன் இல்லை. இங்கே வெளியே கோவில் பிரகாரத்தில் வசந்தியோடு இருந்து இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பவன் தான் இவன்.. பின்னே, அங்கே உட்கார்ந்திருப்பது? அதுவும் சங்கரன் தான். அவன் பெரிய சங்கரன். இவன் சின்னச் சங்கரன். இவனுக்குப் பாட்டன் அவன்.
உள்ளே ஒரு சின்னப் பெண்ணைச் சுற்றி முழுக் குடும்பமும் இருக்கிறது. கூச்சலும் சிரிப்புமாகத் தோழிகள் வேறே. அந்தப் பெண்? பகவதிப் பாட்டிதான்.
சின்ன வயசு பகவதிக்குத் தலையில் தாழம்பூ வைத்துப் பின்னி, உச்சந்தலையில் சூடாமணி வைத்து நேர்த்தியாகச் சிங்காரம் செய்து கொண்டிருந்த அண்டை அயல் பெண்டுகள் முகம் பார்க்கும் கண்ணாடியை எல்லாத் திசையிலும் திருப்பி அவளுக்குக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஆச்சாம்மாடி எச்சுமி? ஏண்டி நாணி, பொண்ணை சபைக்கு அழைச்சுண்டு போகலாமா?
கொஞ்சம் பொறுங்கோ சாலாச்சி மன்னி. சின்னதா ஒரு சாந்துப்பொட்டு கன்னத்திலே வச்சுட்டாப் போதும். காவிலே யட்சிதான். எங்க கண்ணே பட்டு திருஷ்டி விழுந்துடும் போல இருக்கு.
ஐயோ, ஒண்ணும் வேணாம்டீ. ஏற்கனவே நான் கோரம். இதுலே கன்னத்துலேயும் மூக்கிலேயும் எல்லா வர்ணத்தையும் ஈஷிண்டு போய் நின்னா வந்தவா எல்லாம் ஒரே சாட்டமா ஊரைப் பாக்கப் போயிடுவா.
பகவதி சிரிக்கும்போது குழந்தை போல் தெரிந்தாள். பாவாடை தாவணி இல்லாமல், முதல் தடவையாக ஜரிகைப் புடவையைக் கட்டியிருந்த அவள் நிமிஷத்துக்கு ஒரு தடவை கொசுவத்தை இழுத்துச் சரிபார்த்துக் கொண்டாள்.
மெல்ல அடி வச்சு வாடி குழந்தே. பொடவை தடுக்கறதுன்னா கொஞ்சமா உசத்திப் பிடிச்சுக்கோ.
அதுக்காகத் தொடை தெரிய ஒரேயடியா வழிச்சுக்காதேடி பகவதி. அதெல்லாம் ஆம்படையான் பாத்தாப் போதும்.
கூட்டுக்காரி நாணி என்ற நாராயணியைச் செல்லமாக அடிக்கப் பகவதி கை ஓங்க, அவள் சிரித்துக் கொண்டு பின்கட்டுக்கு ஓடினாள்.
இது இடுப்பில் சரியாக இருக்க, கூடத்துக்குப் போய் எல்லோரையும் நமஸ்கரிக்க வேண்டும். அப்புறம் ஓரமாக உட்கார்ந்து, அவர்கள் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது தரையைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். ஏதாவது பாடும்மா என்று சொன்னதும் நன்னு பாலிம்ப பாட வேணும்.
எல்லோரும் இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்.
சங்கரனை விட்டு விட்டு அவர்கள் முன்னேற, அவன் திடுக்கிட்டு எழுந்து கண் திறந்தான்.
ஒரு நிமிடம் கூடக் கடந்திருக்கவில்லை. வசந்தி இன்னும் தலையில் கொண்டை ஊசியைச் செருகி முடிக்கவில்லை
பகவதிப் பாட்டியோடு கூட, யார் அவர்கள் எல்லாம்?
எல்லோரையும் சங்கரனுக்குத் தெரியும். அவர்கள் ஒவ்வொருவரின் முகமும் பேச்சும் நடப்பும் அவன் அறிந்தவை.
ஒரு டம்ளர், அரை டம்ளர், ஒரு வாய் காப்பி மட்டும் கிடைத்தால்.
யாரோ பக்கத்தில் வந்து நிற்கிற சத்தம். பக்க வாட்டில் கருப்பு குடை துருத்திக் கொண்டு தெரிந்தது.
காப்பிக் கடை காணிச்சுத் தரேன், வாங்க.
தோளில் குடையோடு வந்தவன் சங்கரனிடம் சொன்னான்.
சங்கரன் நிமிர்ந்து பார்த்தான். நடுவயதுக்கும் மூப்புக்கும் நடுவே நிற்கிறவன். நல்லவன் என்று உருவத்தில், நிற்பதில், நீட்டிய கரத்தில் தெரிகிறது. இருந்தாலும், இந்த மலையாளிகள்.
இல்லே, நானே பார்த்துக்கறேன்.
சங்கரன் வேண்டாமென்றான்.
சாமுவுக்கு காசு தரண்டா. சாமு சாது. நீங்க ஒரு காப்பி குடிக்கும்போது சாமுவுக்கு ஒரு சாயா சொல்ல மாட்டீங்களா?
சாமு யார்?
சங்கரன் கேட்டான்.
நான் தான்.
அவன் குடையை வாள் போல் பிடித்தபடி சொல்ல சங்கரன் சிரித்தான்.
சிரிக்கிற நேரம் சார் பார்க்க வெள்ளைக்கார ப்ரபசர் வைத்தாஸ் சார் போல.
சாமு கூட்டிக் கொண்டு போன இடம் சுத்தமாக இருந்தது. காப்பி நன்றாக இருந்தது.
மலையாளப் பெயர்ப் பலகையைப் படிக்க முயற்சி செய்து தோற்ற சங்கரனிடம் சாமு சொன்னான் –
இது ஏகாம்பர ஐயர் ஓட்டல். மூணு தலைமுறையா இருக்கு.
சங்கரன் கேட்டுக் கொண்டான்.
இந்த ஊர், தெருக்கள், காற்று, வெளிச்சம், மனுஷர்கள், சுற்றுப் புற விருத்தாந்தம், பேசும் குரல்கள், நல்லதும் துர்கந்தமாகவும் வாடை, காப்பி அடிநாக்கில் மிச்சம் வைத்துப்போன சுவை.
எல்லாமே அவனுக்கு ஏற்கனவே பழக்கமானவை. இந்தத் திருப்பம், இந்தத் தெரு முனை, இந்தத் தரிசு, எல்லாம் தான். பூட்டியிருந்த, சிதிலமான ஒரு கட்டிட வாசலில் சற்றே நிற்கிறான்.
தே-ஜா-வு.
வசந்தியிடம் சொன்னான்.
ஏற்கனவே பார்த்த, அனுபவப்பட்டது தான் எல்லாமும்.
இது பாசகம், அதாவது சமையல் செய்யற தமிழ் பிராமணக் குடும்பம் வீடு வச்சிருந்த இடம். மூணு சகோதரர்கள், மூணு சகோதரிகள்.
தெரியும்.
சங்கரன் அவசரமாகச் சொன்னான்.
அப்போ, சார் வைத்தாஸ் மாஷுக்கு உறவு தானே?
சாமு கேள்விக்குப் பதிலை எதிர்பாராமல் நடக்க ஆரம்பித்தபடி சங்கரனையும் வசந்தியையும் தன்னோடு வரும்படி கை காட்டினான்.
எங்கே?
மேல்சாந்தி மனைக்கு. அவர் வீட்டம்மா நேற்றே உங்களை எதிர்பார்த்தாங்க.