அச்சுதம் கேசவம் நாவல் கிட்டத்தட்ட முதற்பாதி முடிந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அரசூர் வம்சம், விஸ்வரூபம் என்ற இதற்கு முந்தைய ‘அரசூர் நாவல்கள்’ இரண்டிலும் இல்லாத சற்றே மாறுபட்ட கதையாடல் அச்சுதம் கேசவம் புதினத்தில் கையாளப்பட்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட கதை இழைகள் மற்ற இரண்டிலும் உள்ளது போல இதிலும் உண்டு. எனில், ஒவ்வொரு இழையிலும் அவ்வப்போது நிலவும் காலத்தின் ஒரு சிறு பகுதிக்கான நிகழ்வு விரிவாகச் சொல்லப்பட்டு ஒரு implied sequencing நிலைநிறுத்தப் படுகிறது.
’தியூப்ளே வீதி’ பயோபிக்ஷன்-நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் தன்னளவில் முழுமையடைந்ததாகவும் சேர்த்து வாசிக்கும்போது ஊரும் சூழலுமாக இன்னொரு பரிமாணம் எழுப்பக் கூடியதாகவும் இருக்கிற fragmented narrative உத்தியை, எளிமையான கதைக் களன் காரணமாக முழுமையாகக் கையாள முடிகிறது. எனில், அச்சுதம் கேசவம் பல தளங்களில் இயங்குவதால் மிக்க கவனத்தோடுதான் இங்கே அதைப் பயன்படுத்த முடியும்.
எழுதியவரை எனக்குத் திருப்தியே. எழுத இருப்பதும் அதே படிதான்.
Arasoor Trilogy – அரசூர் மூன்று நாவல்கள் வரிசையில், அச்சுதம் கேசவம் படிக்க மற்ற இரண்டு நாவல்களையும் ஏற்கனவே படித்திருக்க வேண்டுமா என்று அவ்வப்போது நண்பர்கள் கேட்பது உண்டு. பதில் – அப்படித் ‘தயார்ப் படுத்திக் கொள்ளுதல்’ எதுவும் வேண்டியதில்லை. தன்னளவில் ஒவ்வொரு புதினமும் முழுமையானது.
படித்திருந்தால், சில சிறு பாத்திரங்களை deja vu ’தேஜா உ’வாகவோ நனவிடை தோய்ந்தோ சந்திக்கக் கூடும் என்பது உண்மையே. உதாரணத்துக்கு, அச்சுதம் கேசவம் அத்தியாயம் 40 – நேற்று எழுதியது – பகுதியில் காரோட்டி வரும் பனியன் சகோதரர்கள், பின்சீட்டில் உட்கார்ந்திருக்கும் வயதான நரைமீசை கனவான் – இவர்கள் அரசூர் வம்சத்திலிருந்து வருகிறவர்கள்!
—————————————-
ஒரு வெண்பா – இரண்டு நண்பர்களுக்கு வாழ்த்து !
ஓவியம் – கேசவ்; அச்சுதம் கேசவம் நாவல்
’அச்ச(து) ஒடித்த அருகம்புல் ஆசியால்,
நச்சென்(று) இராமு நெடுங்கதை, -’’அச்சுதம்
கேசவம்’’ வெற்றிகொள், கேசவ்கை பற்றிடும்,
பேசும் பிரஷ்ஷினைப் போல்’’….கிரேசி மோகன்….
நன்றி மோகன்!