A small excerpt from today’s translation
செப்டம்பர் மாதம் ஒரு ராத்திரியில் லந்தன்பத்தேரிக்கு முன்னால் கிடக்கும் காயல் பரப்புக்கு மேலும், போர்ட் கொச்சிக்கு வரம்பு கட்டும் கடலுக்கு மேலும் விரியும், பருவமழை துடைத்து வைத்த கொச்சியின் ஆகாயம் தீப்பிடித்தது. கரையில் இருந்தும், கப்பல்களில் இருந்தும் தொடர்ந்து சுடப்பட்ட, புகைத் தடம் கிளப்பி உயரப்பாயும் ட்ரேசர் புல்லட் வெடிகுண்டுகள் வானத்தில் சற்று நேரம் அசங்காது நின்று, பச்சையும், சிவப்பும், மஞ்சளும் கலந்த வெளிச்சத்தைச் சுற்றும் பரப்பின. கரையோர பீரங்கிப் படையின் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் வானத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தன. அவற்றிலிருந்து வெளிவந்த வெப்பமான, வெளுத்த, வெளிச்சம் மிகுந்த கோளங் கள் மேற்கே தொடுவானத்தில் பல சூரியோதயங்களை உருவாக்கின.
விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளின் சத்தம் தவிர அந்த நாட்களில் நான் விமானத் தாக்குதல் பற்றி எச்சரிக்கை தரும் சைரனின் ஒலியையும் முதல் தடவையாகக் கேட்டேன். எரணாகுளம் நகரசபை அலுவலகத்திலும், உயர்நீதி மன்றத்திலும், கப்பல்களிலும் என்று பல இடங்களிலும் இந்த அபாய அறிவிப்பு சைரன்கள் நிறுவப்பட்டிருந்தன. விமானத் தாக்குதல் பற்றிய முன்னெச்சரிக்கை தரும் இந்த சைரன்கள் அவசரத்தோடு அலறும். அப்போது கொச்சியில் விளக்குகள் அணைக்கப்படும். அப்பூப்பன் ரேடியோவை அணைப்பார். அதன் சிறு வெளிச்சமும் அபாயகரமானது. பரங்கி ஜபக்கூடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பது நிறுத்தப்பட்டது. “ஒரு சின்ன வெளிச்சம் தெரிஞ்சா போதும்”, அப்பூப்பன் சொல்வார். “எதிரிகளோட விமான பைலட் அந்த இடத்து மேலே குண்டு போட்டுடுவான். பீடி கூடப் பத்த வைக்கக் கூடாது”.
விமானப் படையெடுப்பு அபாயம் தீர்ந்ததென்று அறிவிக்கும் சைரன் ஒலி, ஆசுவாசமாக, மெதுவாக வேறே ராகத்தில் ஒலிக்கும். அப்பூப்பன் உடனே ரேடியோவை ஆன் செய்வார். அதற்கப்புறம் தான் லந்தன்பத்தேரியில் வேறு வெளிச்சங்கள் பிரகாசமாகக் கிளம்பி வரும்.
மூன்று வருடங்கள் முன்பு சீனாவோடு நடந்த யுத்தத்தில் பெருமையும், ஆயிரக் கணக்கான சதுரமைல் நிலமும் இழந்த இந்தியா, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் புறமாக, குஜராத்தில் இருக்கும் சதுப்பு உவர்மண் பூமியான ரான் ஆஃப் கட்ச் பிரதேசத்தில் பாகிஸ்தானை வீரமாக எதிர்த்துப் போரிட்டது. சீனப் போருக்கு அப்புறம், திரைப்படக் கொட்டகைகளில் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் திரையிடப்படும் செய்திப் படங்களில் அபூர்வமாகவே நேரு காட்டப்பட்டார். நேரு வரும் காட்சி இருந்தால் அது பார்க்கிறவர்களைத் துக்கப்படுத்தியது. நேரு மறைந்த பிறகு பிரதமரான லால்பகதூர் சாஸ்திரியை நியூஸ் ரீல்களில் பார்த்த ஜனங்கள் சிரித்து, கூச்சல் போட்டார்கள்.
ஓங்குதாங்காக இருந்த நேருவைப் பார்த்துப் பழகியிருந்த மக்களுக்கு, ஐந்தே அடி உயரமுள்ள, கார்ட்டூன் படத்தில் வரும் டொனால்ட் வாத்து போல தத்தித் தத்தி நடந்த சாஸ்திரி பழகவில்லை. அப்போதுதான் ரான் ஆஃப் கட்சிலும், சாம்ப்பிலும் இந்தியா பாகிஸ்தானை பெரும் தோல்வியடையச் செய்த செய்திகளை நாங்கள் பத்திரிகைகளில் படித்தோம். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்து போரில் ஈடுபடுத்திய போர் விமானங்களை, அம்பாசிடர் காரை விட அளவு குறைந்த இந்திய நாட் விமானங்கள் துரத்தியடித்து, சாஸ்திரியை உயரமான பிரதமர் ஆக்கின. நியூஸ் ரீல்களில் பிரதம மந்திரி சாஸ்திரி காட்சியளிக்கும்போது, எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் அவர் முதல் தடவையாகத் தோன்றும் காட்சியின்போது ரசிகர்கள் உற்சாகமாகக் கைதட்டுவது போல் சாஸ்திரிக்குக் கரவொலி எழுப்பினார்கள்.
‘Lanthan Batheriyile Luthiniyakal’ – N.S.Madhavan – being translated into Tamil by Era.Murukan – ‘பீரங்கிப் பாடல்கள்