புது நாவல் – ராமோஜிகளின் கதை – அத்தியாயம் 2 பகுதிகள்

புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 2 பகுதிகள்
இரா.முருகன்

1944 டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை

அவள் தேவையில்லாமல் கண் சிமிட்டினாள். அதுவும் சரியென்று பொங்கலில் ஒரு தேக்கரண்டி வாயில் அண்ணாந்து போட்டுச் சுவைத்தபடி எழுந்து போய் வாசல் கதவை மூடிவிட்டு வந்தேன்.

“இதெதுக்கு இப்போ கதவடைச்சு பகல்லே ப்ளாக் அவுட்? இலவசம்னா எந்த நேரத்திலேயும் கேட்குமா?”. அவள் என்னைத் தள்ளி விட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து வாரப் பத்திரிகை படிக்க ஆரம்பித்தாள்.

நான் எச்சில் கையோடு ஊஞ்சலில் அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். பொங்கலில் உப்பு தூக்கலா இருக்குமே என்றாள் துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸ் போல. வாஸ்தவம் தான். தானம் வந்த பொங்கல் என்றாலும் உப்பு உரைப்பு சரி பார்க்கத் தோன்றாதோ. நாலு கவளம் விழுங்கி ஏகத்துக்கு உப்பேறிய இதைச் சாப்பிடும் சிரமத்திலிருந்து ரத்னாபாயை விடுவிக்கப் பார்த்தேன். அவளோ பொங்கல் வாடையை முகர்ந்தே அது எந்த விதத்தில் குறைச்சலானது என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள். சந்தோஷமாக இருந்தது.

என்ன படித்துக் கொண்டிருக்கே? கேட்டபடி அவள் தோளுக்கு மேலே தலை வைத்துப் பார்த்தேன். வியாசர் விருந்தில் கீசக வதம்.

ராஜாஜி வியாசர் விருந்தை இன்னும் முப்பது வருஷம் பரிமாறினாலும் ரத்னாபாய் பயபக்தியோடு தினம் குளித்து, தூய்மையாக உடுத்தி காலை சாப்பாட்டுக்கு முன் பரவசம் எய்தி ஊஞ்சலிலோ இல்லை சமையலறை தரையில் மனைப் பலகை இட்டோ பத்திரிகையோடு உட்கார்ந்து படிக்கத் தவற மாட்டாள்.

”ராஜாஜி சாத்வீகமான சாது மனுஷர். நீ சுந்தரியான, சாத்வீகமும் சாந்தமும் கொண்ட குல ஸ்திரி. இருட்டில் ஒரு ஜீவனை வதம் செய்வதைத் தத்ரூபமாக விவரிக்கும் இந்தக் கொலைச் சிந்து வகை கீசக வதம் உப கதையில் உங்களுக்கு அப்படியென்ன ஓர் ஈர்ப்பு?”

நான் அவள் இடுப்பை வளைத்தபடி கேட்க, அழகாக அழகு காட்டியபடி நகர்ந்து உட்காரப் பார்த்தாள். அவள் தலையில் செருகியிருந்த கொண்டை ஊசி தளர்ந்து என் கையில் விழுந்தது.

அதுவும் நல்லது தானென்று எடுத்து உடனே காது குடைய ஆரம்பித்தேன். அப்போது தான் இவளிடம் சொல்ல வேண்டிய தலை போகிற தகவல் இருக்க அதைச் சொல்லாமல் இத்தையும் அத்தையும் சொத்தையாக இவளிடம் பகிர்ந்து கொள்கிறோமே என்று நினைப்பு வந்து அந்த வினாடியே செயல்படச் சொல்லி புத்தி விரட்டியது.

“ரத்னா, ப்ரிய சகி, விஷயம் தெரியுமோ” என்று ஆவலுடன் விசாரிக்க, என்ன விஷயம்? பெங்கால் கெமிக்கல்ஸ் கொண்டை ஊசி பண்ணுவதை நிறுத்திக் கொண்டார்களா? என்று பதில் கேள்வி கேட்டாள் ஆரணங்கு. பெங்கால் கெமிக்கல் கம்பெனி கொண்டை ஊசி உற்பத்தி செய்கிறார்கள் என்ற தகவலே எனக்குப் புதுசு. போகட்டும்.

இன்னும் நெருங்கி வனப்பான காது மடலில் படிந்திருந்த சுகமான கூந்தல் தைல நறுமணம் நுகர்ந்தபடி, “நானும் ஏ.ஆர்.பி வார்டன் ஆனேன்” என்று பெருமையோடு அறிவித்தேன்.

என் கையில் இருந்து கொண்டை ஊசியைப் பிடுங்கி பக்கத்தில் வைத்தாள். இடுப்பில் செருகியிருந்த அட்டையிலிருந்து இன்னொரு கொண்டை ஊசி எடுத்துத் தலையில் செருகிக் கொண்டு, “ஏ ஆர் பி வார்டன்னா குறுக்கே வார் வச்ச காக்கி ட்ரவுசரும் வாயிலே விசிலுமா சதா இருப்பீங்களா” என்று கேட்டாள். மாட்டேன் என்றேன்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை சர்க்கார் உத்தியோகத்துக்கு எப்படி போவீங்க இங்கே நிஜாரோட சுத்திட்டிருந்தா?”. அவள் கேட்டது நியாயமான கேள்விதான். உரிமையோடு அவள் தோளை இறுகப் பற்றி விவரம் சொல்ல ஆரம்பித்தேன்.

”கொஞ்சம் இருங்க. அடுப்பிலே ரசம் ஈயச் சட்டியில் பொங்கிடும். அணைச்சுட்டு வரேன். கை விலகலாம். இது தோள் இல்லே”. ரத்னாபாய் ஓட்ட ஓட்டமாக சமையல் கட்டுக்கு ஓடித் திரும்பி வந்தாள்.

”இது கௌரவ உத்தியோகம். கோட்டையிலே குமாஸ்தா வேலை மாதிரி இல்லே. நீ உன் சிநேகிதிகள் நாலு பேர் கிட்டே பெருமையோட சொல்லலாம். அந்தஸ்து அபரிமிதமா கூடிவிடும்”.

ஐந்து நிமிஷம் ஏ ஆர் பி வார்டனின் உத்தியோகம் பற்றி சுருக்கமாக அவளுக்கு வகுப்பெடுத்தேன். ”நீயே பார்த்து பார்த்து தெரிஞ்சுக்கலாம். உத்தரவு நாளை, மறுநாள் வர்றது வரட்டும். அதுக்கு மிந்தி, இன்னிக்கு ராத்திரி முன்னோட்டமா நானும் நாயக்கரும் ரவுண்ட்ஸ் போகலாம்னு இருக்கோம். என்னோட யோசனைதான்” என்றேன்.

புருஷன் யுக புருஷனானதில் குபீரென ஏற்பட்ட முகம் கொள்ளாத சந்தோஷத்தோடு என் பிடியிலிருந்து விலகி மறுபடியும் சமையல்கட்டுக்கு ஓடினாள். பத்து நிமிடத்தில் திரும்புவதற்குள் அவள் படித்துக் கொண்டிருந்த வாரப் பத்திரிகையைப் புரட்டினேன். சிசுக்களின் ஈரல் குலைக்கட்டி குணமாக ஜம்மியின் லிவர் க்யூர், தரமான நரசூஸ் காப்பி, நடிகை சோபனா சமரத் சதா உபயோகிக்கும் லக்ஸ் சோப் என்று விளம்பர மயம்.

“இன்னும் சாதம் வெந்து தணியலையா?” நான் ஊஞ்சலை விட்டு எழுந்தபடி கேட்க, திரும்பிய ரத்னாபாய் தரைக்கு இழுத்து சுவரில் மரப்பாச்சி மாதிரி என்னைச் சார்த்தி வைத்து அவளும் பக்கத்தில் உட்கார்ந்து, “பாயசம் காய்ச்ச ஏற்பாடு செய்துவிட்டு வந்தேன்” என்றாள்.

இந்த பாயசம் காய்ச்சுவது அவளுடைய அவுரங்காபாத் தமிழில் கொஞ்சம் நாராசமாக ஒலிப்பது. அவள் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் பேசாத அவுரங்காபாத் சிறு நகரத்தில் தான். வீட்டுக்குள் நூறு வருடம் புராதனமான தமிழ் புழங்க, என்னைக் கல்யாணம் செய்தபோது மூக்குப் பொடியோடு அந்தத் தமிழும் இங்கே நுழைந்தது. இப்போதெல்லாம் பண்டிகை, நல்ல நாள், திருநாளுக்கு நானும் பாயசம் காய்ச்சத்தான் சொல்கிறேன்.

”என்ன விசேஷம் பாயசம் காய்ச்ச?”, நான் விசாரிக்க, “நீங்க சொன்னதுதான். கௌரவம் வந்து சேர்ந்ததே” என்றாள்.

மல்லிப்பூ போல சாதம், கிள்ளிப்போட்ட இஞ்சியும், பறித்துப் போட்ட கொத்தமல்லியும் அரிந்து போட்ட பச்சை மிளகாயும் துருவிப் போட்ட தேங்காயுமாக துவையல், முருங்கைக்காய் சாம்பார், தக்காளி ரசம், பால் பாயசம், கெட்டித் தயிர், பப்படம், அவியல், உருளைக்கிழங்கு பொடிமாஸ், நல்லெண்ணையில் பொரித்த கிடாரங்காய் ஊறுகாய், என்று கோலாகலமாகப் பசியாறினேன். முருங்கைக்காய் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன். ரத்னாபாய் கேட்கிற வழியாக இல்லை. ஏ ஆர் பி வார்டனை அது ஒன்றும் செய்யாது என்ற நம்பிக்கையாக இருக்கலாம். செய்தால் தான் என்ன என்ற வீம்புமாக இருக்கக் கூடும்.

ஞாயிற்றுக்கிழமைக்கான பகல் சாப்பாடு முடித்து சுடச்சுட ஒரு பெரிய தில்லி டம்ளர் நிறையப் பால் பாயசமும் குடித்து எழுந்தேன்.

நான் கோட்டை லைபிரரியில் படித்த இங்க்லீஷ் நாசுக்கு, நாகரிகங்கள் பற்றிய புத்தகம் நினைவுக்கு வர, சமையலறை வெளியே நிலைப்படி தலையில் இடிக்காமல் குனிந்து, கதவுக்கு அந்தப் பக்கம் கையில் ஊறுகாய் ஜாடியோடு நின்ற ரத்னாபாயிடம் போஜனத்துக்காக நன்றி சொன்னேன் –

“தன்னந்தனியாக இத்தனையும் அருமையாக சமைத்திருக்கே. இதுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்லப் போறேன்னு தெரியலே. உன் கைக்குத் தங்க வளையல் போடலாம்.இப்போதைக்கு ஒர் தேங்க் யூ சொல்லிக்கறேன். வளை, கடையிலே பத்திரமா இருக்கட்டும்” என்றபடி அவள் கையைப் பிடித்துக் குலுக்கினேன். எப்படியும் அடுத்த மாதம் அவளுடைய ஜன்ம தினத்துக்கு இங்க்லீஷ் பாணியில் ஒரு பவுன் நெளி மோதிரமோ பொன் வளையலோ போடத் திட்டமுண்டு. அவளிடம் இப்போது சொல்லக் கூடாது.

“பாயசத்துக்கு நன்றி கிடையாதா?” அவள் மாடப்பிறையில் இருந்து பொடிமட்டையை எடுத்து ஒரு சிட்டிகை அள்ளி உறிஞ்சிவிட்டுக் கண் கலங்க என்னைக் கேட்டாள். ’அமிர்தம்’ என்றபடி தோள் துண்டில் அவள் மூக்கைத் துடைத்து விட்டு, முத்தமிடப் போனேன். ‘அந்தப் பெண்பிள்ளையை நீங்க மறக்க மாட்டீங்களே’ என்று கையைத் தள்ளினாள் ரத்னாபாய்.

அமிர்தா பாய் என் முறைப்பெண். என்னை விட பத்து வயசு பெரியவள். ஹனம்கொண்டாவில் அழுக்கு கோட்டு தரித்த ஒரு டெபுடி தாசீல்தாரின் பெண்டாட்டியாக, நாலு பெண்களுக்குத் தாயாக மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள். இத்தனை தள்ளி இருந்தாலும் அவள் அவ்வப்போது safe ஸேப் என்று ஓரத்தில் எழுதி போஸ்ட் கார்ட் போட்டு அது வந்து சேர்ந்த இரண்டாம் நாள் கிழிபட்டுக் குப்பைக்குப் போய்விடும். ரத்னாபாய் கைவேலை அல்லாமல் வேறு என்ன?

அமிர்தா பாய் ‘போன வாரம் முழுக்க எனக்கும் இவருக்கும் வயிற்றில் வாயுத் தொந்தரவு அதிகமாகி கஷ்டப்பட்டோம்’ என்று போஸ்ட் கார்டில் எழுதி, நடுராத்திரியில் சத்தமான அதிர்வேட்டு போட்டியில் ஈடுபடும் சதி-பதி விஷயம் தெரிவித்தால், மூக்கைப் பிடித்தபடி அந்தத் தபால் அட்டையைக் கிழித்து அப்பால் போடாமல் வேறு என்ன செய்ய?

ஊஞ்சலில் படுத்தபடி பத்திரிகையைப் புரட்டினேன். ஏதென்ஸில் தேச பக்த கிரேக்க இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். நேச நாடான இங்கிலாந்தின் படையைத் துப்பாக்கியை உயர்த்த வைத்து, பிரதமர் சர்ச்சில் கிரேக்க உயிர் வாங்கிய அந்த அட்டூழியத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது சுகமாகக் பகல் உறக்கம் தழுவிக் கொண்டது.

எழுந்த போது நடுப்பகலுக்கு மேல் ஒரு மணி ஆகியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை தான் அதற்காக இப்படியா ஒரு ராட்சசத் தூக்கம்? ரத்னாபாய் ஊஞ்சலை ஆட்டியபடி என் தொடையில் கிள்ளிப் போனாள். வாசலில் ஏதோ சத்தம்.

வாசலைப் பார்க்க, காலையில் மங்கலமான தாள வாத்தியம் முழக்கி என்னை எழுப்பிய திருவனந்தபுரம் பிள்ளையாண்டான்கள் ரெண்டு பேரும் உள்ளே வந்தார்கள். அப்போதுதான் கவனித்தேன், அவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உருவம் அமைந்த ரெட்டைப் பிறவிகள் என்று.

என்ன விஷயமாக வந்தார்கள் என்று தெரியாமல் அவர்களை வரவேற்று உட்காரச் சொன்னேன். “இல்லை, இன்னொரு நாள் சாவகாசமாக வருகிறோம். இப்போ சினிமா போகணும், அதுக்குள்ளே ஒரு சின்ன உபகாரம்” என்றார்கள் இருவரும்.

திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் இன்னும் ஒரு மணி நேரத்தில் பகல் காட்சியாக பக்த மாலி. நல்ல நல்ல பாட்டுக்கள் இருக்காம்.

“மாஸ்டர் மாதவ் கேட்டிருக்கீங்களா? ஹீரோ”.

அவர்கள் விசாரிக்க உள்ளபடிக்கே தெரியாது என்றேன். அடுத்து மிஸ் நளினி தெரியுமா, ஹீரோயின் என்றார்கள். சினிமா போகிற வழக்கம் இல்லாததால் இந்த மாதிரி தகவல் எல்லாம் பிரயத்தனப்பட்டு அறிந்து மனசில் சேர்த்து வைப்பதில்லை என்று அதையும் கடந்து போனேன்.

“சரி, போய் நல்லா ரசிச்சு பாத்துட்டு வாங்க. ஒரு டம்ளர் காப்பி சேர்க்கச் சொல்லட்டா?” என்று நான் உபசாரமாக விசாரிக்க, ரத்னாபாய் சமையல்கட்டில் இருந்து சுட்டெரிப்பது போல் பார்த்ததை ஒரு வினாடி கண்டேன். அதானே, பாயசம் காய்ச்சி பால் எல்லாம் செலவாச்சு. இனி சாயந்திரம் வைக்கோல் கன்றுக்குட்டியோடு பால்காரன் மாட்டை ஓட்டி வந்து வாசல் விளக்குத் தூணில் கட்டிக் கறந்தால் தான் உண்டு. அது சாயந்திரம் நாலுமணிக்கு அல்லவோ?

“எங்க அம்மாவனுக்கும் ஏ ஆர் பி வார்டன் உங்க மாதிரியே கௌரவ உத்தியோகம் வந்திருக்கு இல்லியா? அவர் கிட்டே பேண்ட், அரைக்கை ஸ்லாக் சட்டை இப்படி உத்தியோக உடுப்பா எதுவும் இல்லே. வித்வான் ஆச்சே, வேட்டி, ஜிப்பா தான் இதுவரை உடுத்தது. இன்னிக்கு ராத்திரி ஏ ஆர் பியா சுத்தி வர, வேஷ்டி சரிப்படுமா?”

இரட்டையரில் ஒருத்தர் பாதியும் மற்றவர் மீதியுமாகச் சொல்லி என் முகத்தைப் பார்த்தார்கள். சின்னதோ பெரிசோ பிரச்சனை தான். இதுக்கு ராமோஜியும் ரத்னாபாயும் என்ன மாதிரி தீர்வு காண வேணும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்ற யோசனையில் ‘இதோ வர்றேன்’ என்று சமையல் கட்டுக்கு நடந்தேன்.

“எனக்கு தையல் தெரியும்தான். ஆனா, ஏ ஆர் பி யூனிபாரம் எல்லாம் அப்படி ஒண்ணு இருந்தா, எனக்கு தைக்கத் தெரியாது. அதுவும் இன்னிக்கு ராத்திரி போட்டுக்க யட்சன் யாராவது சிநேகிதமில்லாம முடியாது. நாயக்கர் இன்னிக்கு வேஷ்டி கட்டிக்கிட்டு வார்டனா சுத்தி வரலாம்னு போய்ச் சொல்லுங்க”.

சமையலறை மந்திரத்தை மனதில் உருவேற்றி கூடத்துக்கு வந்தபோது பசங்கள் நின்றிருந்தார்கள். “ஏ ஆர் பி வார்டன் யூனிபாரம்” என்று நான் ஆரம்பிக்க, “அப்படி ஒண்ணு இங்கே மட்டுமில்லே, இதுக்கெல்லாம் ஊற்றுக்கண் ஆன இங்கிலாந்துலே கூட இல்லே” என்று ஒரே குரலில் முழங்கினார்கள்.

“அம்மாவன் கிட்டத்தட்ட உங்க உயரம், பருமன். ஆகவே, புதுசா தைச்சு வச்ச, நல்ல துணியால் ஆன உங்க பேண்ட், சட்டை ஒரு ஜதை கொடுத்தீங்கன்னா. அதுக்கு பர்த்தியா ஒரு கஞ்சிரா உங்களுக்குத் தர அவர் தயாரா இருக்கார். அவரே கேட்டிருப்பார். லஜ்ஜை. வேறு ஒண்ணுமில்லே. ஒரு இடுப்பு வாரும் கொடுத்தா நல்லா இருக்கும்”.

நான் ரொம்ப நாளாக பஜனை கோஷ்டி தளவாடங்களில் கைத்தாளம், கஞ்சிரா என்று வாங்கி வைத்துக்கொள்ள பிரயத்னப் பட்டுக்கொண்டிருந்தேன். ரெண்டு வருஷம் முந்தி, மோர்சிங்க் ஒன்று ரொம்பப் பழையதாகக் கிடைத்தது. ’ஊர் எச்சில் எல்லாம் சேர்ந்து ஊறியிருக்கும். அதை வாயிலே வச்சு குஷியாக ஞ்ஜஞ்ஜஞ்ஜ என்று வாசிச்சுட்டு என்னோட படுக்க வர வேணாம்’. நிர்த்தாட்சண்யமாக ரத்னாபாய் சொன்னதால் மோர்சிங்க் கனவுகள் கரைந்து போயின.

அற்ப விலையில் ஜால்ரா வாங்க நினைத்தபோது ஊரிலிருந்து வந்திருந்த என் மாமனார் ‘அதான் கல்யாணமான எல்லா ஆண்களும் பெண்டாட்டிக்கு அடிக்கிற ஜிங்சிங் இருக்கும்போது இன்னொரு ஜால்ரா எதுக்கு என்று எகத்தாளம் பண்ண என் மாமியாரால் சுட்டெரிக்கப்பட்டுத் அவருடைய தாலியின் பலத்தால் மறு உயிர் பெற்றார். இப்போது அதெல்லாம் கடந்து திடீரென்று ஒரு கஞ்சிரா என் கையில் தவழ ஒரு சந்தர்ப்பம்.

நான் மறுபடி உள்ளே போய் எட்டிப் பார்க்க, ரத்னாபாய் சமையல்கட்டுக்குள் மெழுகுசீலை தலையணை வைத்து தரையில் படுத்து உடனே நித்திரை போயிருந்தாள்.

நல்ல சமயம் நழுவ விடக்கூடாது என்று அடிமேல் அடியெடுத்துப் போய் அலமாரியைத் திறந்து தீபாவளிக்குத் தைத்த இரண்டு செட்டில் ஒரு ஜதை உத்தியோக உடுப்பை எடுத்து வந்து முந்தாநாள் சுதேசமித்திரனில் ’காங்கிரஸ் யூனியன்களில் கம்யூனிஸ்ட்களை சேர்க்கக் கூடாது’ என்று சொல்லும் பக்கத்தில் மடித்து மூடித் தானம் செய்தேன். தானம் என்ன, கஞ்சிரா வந்தால் பண்ட மாற்று.

பக்த மாலி பார்த்து விட்டு வீட்டுக்குப்போய் துணியை நாயக்கர் அம்மாவனிடம் கொடுத்து விட்டு ராத்திரி செகண்ட் ஷோ காட்சிக்கு வெலிங்டன் தியேட்டரில் சாந்தா ஆப்தே நடித்த இந்திப் படம் காதம்பரி பார்த்துவிட்டு நாளைக் காலையில் திருச்சி போய் ஒரு வாரத்தில் திரும்பும் திட்டம் ரெட்டையர்களுக்கு என்று அறிந்தேன். என்னமாக துடிப்பாக சஞ்சரிக்கிறார்கள்! திருச்சியில் என்ன ஜோலி? பள்ளிக்கூட அரங்கில் நவாப் ராஜமாணிக்கம் நாடகமாம். ஐயப்பன். நாயக்கர் மருமகன்கள் அவ்வப்போது நாடகக் கம்பெனி டேரா போடும் ஊருக்குப் போய் நடித்துக் கொடுக்கிற வழக்கமுண்டாம்.

இந்த நடித்துக் கொடுத்தல், நடத்திக் கொடுத்தல் எல்லாம் கொஞ்சம் கூடுதல் கம்பீரமானவை. நடித்தேன் என்றால் போனேன், நடித்துவிட்டு வந்தேன் அது மட்டும் தான். நடித்துக் கொடுத்தேன் என்றால், நாடகக் கம்பெனி, ரசிகர்கள் எல்லோரும் ’நீங்க வந்து நடித்தால் தான் நாடகம் சோபிக்கும்’ என்று வேண்டி, கெஞ்சி, கொஞ்சி வரவேற்று, நடித்த பிறகு ஏகோபித்துப் பாராட்டிப் பிரியாவிடை கொடுக்கும் தோதில் இருக்குமோ.

அவர்கள் வாசல் படி இறங்கும்போது என்ன கதாபாத்திரமாக நடிப்பீர்கள் என்று கேட்டேன். ஒரு தகவலுக்காகத்தான்.

”ஐயப்பன் புலிமேல் வரும்போது நாங்களும் வருவோம்”

“புலி மேலேயா?”

“இல்லை, தெருவிலே ஓடுவோம். பயந்த முகபாவம் காட்டணும். ஓடியும் ஆகணும். ரொம்ப ஓடினா மேடைக்குக் கீழே விழுந்துடுவோம். ஒவ்வொரு ஊர்லே ஒவ்வொரு விதமா ஸ்டேஜ். கவனமா இருக்கணும்”.

பிரமாதம் என்று வழி அனுப்பும்போது இவர்களை நம்பி குமஸ்தன் காகர்லா பக்தவத்சலம் வீட்டுக் கன்னியர் பார்வை தானம், சொல் தானம், வாழ்க்கை தானம் என்று ஏதும் அவசரப்பட்டு ஈயக்கூடாதே என்று கவலை உண்டானது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோட்டையில் சர்க்கார் உத்யோகஸ்தன் ராமோஜி வீட்டில் வெங்காய, வாழைக்காய் பஜ்ஜி சிற்றுண்டியாகக் கடந்து போவது வாடிக்கை. ராமோஜியான நான் இப்போது ஏ ஆர் பி வார்டனும் கூட என்பதாலோ என்னமோ வாழை இலையில் இனிப்போடு ஆரம்பமானது. குளுகுளுவென்று லேசான மஞ்சள் பூத்த சிவப்பு நிறத்தில், நெய் மினுமினுத்து, வறுத்துக் கலந்த முந்திரிப் பருப்பும், உலர்ந்த திராட்சையும் கண் முழித்துப் பார்க்க, அளவாக சர்க்கரை கலந்து அற்புதமாக ரத்னாபாய் கிண்டிச் சுடச்சுட பரிமாறிய ரவாகேசரி அது. தொடர்ந்து பஜ்ஜி தினுசுகளோடு அவல் உப்புமாவும் ஒரு கிண்ணத்தில் இருந்தது. இத்தனையும் தின்று ராத்திரி என்னத்தை ரவுண்ட் போகிற வேலை பார்க்கிறது? அப்புறம், அது என்ன மூணு ஐட்டம்?

”ரெண்டு உத்தியோகமாச்சே. அதான் மூணு பலகாரம்” என்றாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன