Excerpt from my forthcoming novel Ramoji
மயில் குயிலாச்சுதடி அக்கச்சி
சூப்ரண்டண்ட் பந்துலு சார் சுமாராகப் பாடக் கூடியவர் என்று கோட்டையில் பரவலாகப் பரவிய தகவல். அவர் பாட்டுப்பாட கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவறவிட மாட்டார். கோட்டையில் பிரிட்டீஷ் சக்கரவர்த்தி படம் போட்ட உறையில் வந்த சர்க்குலர், பைல்களுக்கு மஞ்சள் குங்குமம் தடவி பூஜையில் வைக்கும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்தில் ஒரு மன்னர் வாழ்த்து, ஒரு தெய்வ வாழ்த்து என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர் நின்றபடிக்கே கச்சேரி செய்யும்போது கவர்னர் ஆர்தர் ஆஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப் துரை கூட ஐந்து நிமிடம் எட்டிப் பார்த்துவிட்டு, தொன்னையில் கொண்டக்கடலை சுண்டல் வாங்கிக் கொறித்துக்கொண்டு போகாமல் இருக்க மாட்டார்.
எனினும் பந்துலு சார் சர்க்கார் அதிகாரி என்பதால் தொடர்ந்து சங்கீத சேவையாகப் பாட, பாட்டு கிளாஸ் எடுக்க என்று அவருக்கு வாய்ப்புகள் கிடைந்தால், அவற்றை மடைமாற்றி அவருடைய மனைவி பக்கம் திருப்பி விடக் கூடியவர் என்றும் தெரிந்து வைத்திருக்கிறோம். அந்தம்மா இவரை விட இசையில் பெரிய கை. கான சரஸ்வதி.
காசு எல்லாம் ரெண்டாம் பட்சம், இருபதாம் பட்சம். பெயர் வந்தாலே போதும். பன்னிபாய் என்ற அந்த முப்பத்தைந்து வயது ஸ்திரி பாடினால் உலகமே உறைந்து விடும் என்றும் கேள்வி. மேலும் அவள் கீதம் பாடி சந்தோஷவதியானால், பாட ஏற்பாடு செய்த நல்லோர் மேல் சூபரிண்டெண்ட் கடாட்சம் தற்காலிகமாவது விழ வாய்ப்புண்டு.
எல்லாம் சரியாக ஒன்றோடொன்றாக சங்கிலிப் பிணைப்பில் வந்து சேர, என் வீட்டுக் கூடத்தில் விரைவில் பாட்டு கிளாஸ் ஆரம்பமாகப் போகும் செய்தியை சூப்ரண்டண்ட் சாரே எனக்கு அறிவித்தார்.
“வரும் ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுலே பாட்டு கிளாஸ்னு பன்னிபாய் சொன்னா. உபசாரம் பற்றி எல்லாம் எந்த சந்தேகமும் இல்லே. உங்க கிரஹ மகாராணி ரத்னாபாய் அதுக்கு எல்லாம் குறைச்சலே வைக்க மாட்டாங்கன்னு தெரியும். தெரிவிக்க வேண்டிய சம்பிரதாயத்துக்காக உம்ம கிட்டே சொன்னேன்” என்று அதிசயமாக என் தோளில் தட்டிச் சிரித்தார்.
அவர் தன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி பெருமையோடு என்னைப் பார்த்துத் தொடர்ந்தார் –
”உங்க பேட்டைப் பெண்கள் இன்னும் ரெண்டே மாசத்திலே நந்தன் சரித்திரக் கீர்த்தனை, தியாகராஜ க்ருதிகள், ராம நாடகம் இப்படி பெரிய உருப்படிகளை சுலபமா பாடப் போறாங்க. அப்படியே ஒண்ணு ரெண்டு தேசபக்தி கானங்களும் பாடக் கத்துப்பாங்க”.
எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. நல்ல நல்ல தேசபக்திப் பாட்டுகள் எத்தனையோ உண்டே. அவற்றைச் சொல்லித் தரலாமே. அதென்ன பத்தோடு பதினொன்றாய் ஒண்ணு ரெண்டு பாட்டு மட்டும்?
பத்துக்கு நாலு பழுதில்லை. கற்றுக் கொள்ளட்டும் ரத்னாபாய். இல்லாவிட்டால் தெருவில் உச்சிப் பகலில் எங்கேயோ கடையில் முழங்கும் ரிக்கார்டில் ‘பண்டித மோதிலால் நேருவைப் பறிகொடுத்தோமே’ என்று கே.பி. சுந்தராம்பாள் தேம்புவது, அவர் கஸ்தூர்பா மரணம் பற்றி, ‘உமை மறந்திடப் போமா’ என்று பிரலாபித்துப் பாடுவது, கதர்க்கொடி கப்பல் காணுதே என்று விஸ்வநாத தாஸ் ஹார்மோனியத்தோடு சேர்ந்து ராகம் இசைப்பது இப்படியானதெல்லாம் கூட தேசபக்தி கானம் என்று ரத்னாவும் இன்ன பலரும் தப்பு அர்த்தம் செய்து கொள்கிறார்கள். நானே இதெல்லாம் தேசபக்தி கானமா என்று அவ்வப்போது குழம்புவது உண்டுதான்.
சூப்பரிண்டெண்ட் என்னை அவர் அறையின் மின்சார விசிறி ஸ்விட்சை போடும்படி சைகை காட்டியபடி தொடர்ந்தார், ”உங்க வீட்டம்மா சுஸ்வரமா, பாவத்தோடு பாடப் போறாங்க, நீங்க வேணும்னா ஓரமா நின்னு கைத்தாளம் போடலாம். பாடுவீங்களா?”.
’மயில் குயிலாச்சுதடி அக்கச்சி’ என மாண்டு ராகத்தில் சன்னமாகப் பாடியபடி மின்விசிறிக் காற்றில் சுகப்பட்டு அமுத்தலாகச் சிரித்தார். “பாடுவீரா?” என்று கண்கள் பிரகாசிக்க என்னைக் கேட்டார்.