”உங்களுக்கு பந்துலு சார் தான் தெரியும்.. எனக்கு அவரோட ஒய்ஃபையே தெரியும்.. அந்த பூலோக சுந்தரி, பந்துலு சாரோட அத்தங்கா, மசக்கை வந்த கர்ப்பிணிப் பொண்ணு மாதிரி மாகாணி ஊறுகாய் வேணும்னு பந்துலு சார் வீட்டம்மா கிட்டே ஆசைப்பட, இவங்க என்னை வண்டிச் சத்தம் கொடுத்து கூட்டிக்கிட்டு முந்தாநாள் கொத்தவால் சாவடியிலே காய் வாங்க போனாங்க.. நான் தான் செலக்ட் பண்ணி பேரம் பேசி வாங்கிக் கொடுத்தேனாக்கும்..”
அவள் மாடப்புரையிலிருந்து ஒரு சிமிழை எடுத்து சிட்டிகை ஆபீசர்ஸ் பொடியை அள்ளி சாவதானமாக நாசியில் ஏற்றி என்னைத் தும்ம வைத்தாள். நல்லதிலும் நல்லதான மூடில் இருந்தாள் ரத்னா.
வத்தல்குழம்பு பிசைந்து சாதம் சாப்பிட்டு முடிப்பதற்குள் போனேன் வந்தேன் என்று ஜாக்கிரதையாக ஆர்வமே இல்லாமல் பந்துலு கூப்பிடப் போனவனாக தெலக்ஸ் வீட்டு நிலவரங்களை ஏனோ தானோ என்று ஜாக்கிரதையாக விவரித்தேன்.
நேர்லே பார்க்க ரொம்ப சுமார் தான், கொஞ்சம் படகாமணி மூஞ்சி, தேங்காய்துருவி மாதிரி முன்பல்லு என்று நாலைந்து தடவை சொல்ல, கூட ஒரு ஸ்பூன் பசுநெய் அகஸ்மாத்தாக விழுகிற மாதிரித் தட்டில் விழுந்தது.
ரசம் சோறு சாப்பிடும்போது தெலக்ஸ் இத்தனை முட்டாளாக, நம் தெரு ராமண்ணா ஜோசியரிடம் கேட்காமல் பாத்ரூம் கூட போக மாட்டாளாம் என்று எள்ளி நகையாடினேன். வயசுப் பெண்ணைப் பற்றி, கௌரவமான உத்யோகத்துலே இருக்கற சர்க்கார் ஆபீசர் விடலைத் தனமா பேசறது தப்பு என்று சேம்சைட் கோல் போட்டாள் ரத்னா. பொறுத்துக்கொண்டு சிரித்தேன்.
தயிர் சாதத்துக்கு ரெகுலர் பரிவார தேவதையான நார்த்தங்காய் ஊறுகாயோடு ஜாடியின் முகத்தில் வெள்ளைத்துணி சுற்றி இறுக்க மூடிய பரணியில் இருந்து கிளைத்து விட்டு அள்ளிய மாவடு ஊறுகாயும் கிடைத்தது. ”நேரம் ஆகிட்டு இருக்கு, ஆபீஸ் போற உத்தேசமே இல்லியா?” என்று ஊறுகாய் ஜாடியை கட்டவிழ்த்துத் திறக்க ரத்னா வழக்கமாக யோசிப்பது போல் இன்று யோசிக்கவில்லை.
சாப்பிட்டு முடித்து ரத்னா கை நீட்ட பற்றிக் கொண்டு எழுந்து கை அலம்பி ஆபீஸ் உடுப்புகளை அணிந்து என்னமோ தோன்ற கோட்டையும் மாட்டிக் கொண்டேன்.
”இன்னிக்கும் சோப்பழகி தரிசன யோகம்னு ராமண்ணா ஜோசியர் உங்களுக்கு சொல்லியிருக்காரா?” கிண்டலும் இன்னொரு சிட்டிகை பொடியுமாக ரத்னா கேட்டாள். அவளிடம் தெலக்ஸ் நம்ம வீட்டுக்கு வரப்போவது பற்றிச் சொல்லி விடலாமா என்று யோசித்தேன். வேண்டாம், ரொம்ப சந்தோஷமான மனநிலை ரொம்ப கோபமாக மாற ஒரு நிமிடம் தான் ஆகும். சாயந்திரம் திரும்பி வந்து சொல்லலாம்.
”இந்தாங்க, மூணு பாக்கெட்டா எலுமிச்சம்பழ சாதமும், புளிசாதமும், தயிர்சாதமும் இந்தப் பைக்குள்ளே வச்சிருக்கேன். ஜவ்வரிசி வடகமும் பொறிச்சு கட்டி வச்சிருக்கேன். வேஸ்ட் பண்ணாம சாப்பிடுங்க. சோப்பி நினைப்பிலே திங்க மறந்துட்டு வந்து நிக்காதீங்க.. வரும்போது சாப்பாட்டு ஏனத்தை மறக்காம எடுத்துக்கிட்டு வந்திடுங்க, என்ன?”.
திடீர் துணிச்சல் வர, நான் செருப்பில் கால் நுழைக்கும்போது சொன்னேன் =
“தெலக்ஸ் புவனா ஜோசியரை பார்க்க செவ்வாயன்னிக்கு வர்றேன்னு சொல்லிச்சு.. அன்னிக்கு நம்ம வீட்டிலே சத்யநாராயணா பூஜை நீ வச்சிருக்கியே அதைச் சொன்னேன்.. சத்யநாராயண பூஜையா, பாக்கணுமேன்னுச்சு.. வாங்களேன்.. ஜோசியர் வீட்டுக்கு பக்கம் தான் நம்ம வீடுன்னேன்.. சரின்னுச்சு”.
ரத்னா ஏகப்பட்ட வியப்போடு என்னைப் பார்த்தாள். திட்டு நிச்சயம் என்று நான் நினைத்து முதுகைத் திருப்பிக் கிளம்பப் படியில் அடியெடுத்து வைத்தேன்.
”நம்ம வீட்டுலே சத்யநாராயண பூஜை வர்ற புதன்கிழமைதான் வச்சிருக்கு.. செவ்வாயும் இல்லே வெறும் வாயும் இல்லே” என்று என் வாயில் தாம்பூலத்தைத் திணித்து அனுப்பினாள் அவள்.
தெருமுனையில் ட்ராம் சத்தம். நம்ம தோஸ்த் கோடி வீட்டு கண்ணாயிரம் தான் கண்டக்டர். நிறுத்தி ஏற்றிப் போய்க் கோட்டையில் இதமாகப் பதமாக இறங்க வைத்தார்.
தெலக்ஸிடம் சத்யநாராயண பூஜை சம்பந்தமாக வேறு என்ன சொல்லலாம் என்று யோசித்ததை அப்போதைக்கு மனதில் இருந்து அகற்றி வைத்து ஆபீசுக்குள் நுழைந்தேன். சாயந்திரம் வரும்போது கட்டாயம் ஜோசியர் ராமண்ணாவிடம் தெலக்ஸ் விஜயம் பற்றிச் சொல்லி வைக்க நிச்சயம் செய்து கர்ச்சீபில் முடிச்சுப் போட்டு பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன்.
சுறுசுறுப்பாக ஆபீஸில் மொத்த வேலையையும் நானே செய்து தீர்க்க வேண்டும் என்று உற்சாகமும், சொல்லொணா வலிமையும் எனக்குள் பிரவாகமாகப் பெருக்கெடுத்தது.
வீரய்யா கொட்டாவி விட்டபடி வந்து அப்படியே நடை தளர்ந்து சல்யூட் வைக்க, காலை நேரத்திலே என்ன சோம்பல்.. சடசடன்னு உற்சாகமா வேலை ஆரம்பிக்க வேணாமா என்று கடிந்து கொண்டேன்.
”எங்கே சார்.. ராப்பூரா தூக்கம் கிடையாது.. பக்கத்து வீட்டு நரசய்யா அவசரமா அக்கா வீட்டுக்கு, பெஜவாடா போயிருக்கான்.. என் பொண்டாட்டி தனியா இருக்கா.. பாத்துக்கடான்னான்..”
நான் கலவரமடைந்து வீரையாவை சுபாவப்படி வேலை செய்யச் சொல்லி அனுப்பினேன்.
அந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் மாங்குமாங்கென்று ஒட்டடை அடித்து, ரத்னாவின் கையிலிருந்து பக்கெட்டைப் பிடுங்கி கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் பிடித்து வீடு நெடுக அலம்பி விட்டு, ஜன்னல், கதவு எல்லாம் தூசி போகத் துடைத்து வைத்தேன். தாறுமாறாகக் கிடந்த தினப் பத்திரிகை, மாத இதழ்கள், வாராந்தரிகள் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கண்மறைவாக அடுக்கி வைத்தேன். பாரதியார் கவிதைகள், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கவிதைகள், கம்பராமாயணம் என்று புத்தகங்களைப் பார்த்துப் பார்த்துப் பொறுக்கி ஹாலில் புத்தக ஷெல்பில் வைத்தேன். திகம்பர சாமியார் பின் வரிசைக்குத் தள்ளப்பட்டார். கருங்குயில் குன்றத்துக் கொலையும் பின்னால் மறைந்து கொண்டது.
ரத்னாவின் பட்டணம்பொடி அடைத்த ஜாடி, குட்டி ஜாடி, இத்தணூண்டு பீங்கான் செப்பு, தந்தப் பேழை, சந்தனமரச் சிமிழ், தங்கச் சம்புடம், வெள்ளிப் பெட்டி, வாழை மட்டை என்று சகலமான பொடிப் பொக்கிஷங்களையும் அவளிடம் கெஞ்சிக் கூத்தாடி எடுத்துப்போய் பூஜை அறையில் ஓரமாக வைத்தேன்.
பூஜைக்கு வைத்திருந்த சிவன், ராமன், கிருஷ்ணன் எல்லாரும் சரமாரியாகத் தும்ம ஆரம்பித்தார்கள்.