ராமோஜியம் நாவல் – இறுதி அத்தியாயத்தில் இருந்து – கும்பகோணம் 1947 – மீண்டும் காமாட்சி ஜோசியர் தெருவில்

வலது புறம் காந்தி பூங்கா திருப்பத்தில் பரபரப்பாக ஒரு இட்லிக்கடை பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. வரிசையாக அடுப்பில் வைத்த இட்லி கொப்பரைகளைத் திறக்க நீராவி வாடையோடு, கமகமவென்று உளுந்தும் அரிசியும் கலந்து மல்லியப்பூ இட்லி வாசம். வயிற்றையும் வாயையும் நாசியையும் சுண்டி இழுத்தது அது. கடை நடத்தும் இடம் வெகு சுத்தமாக இருந்தது. தட்டுகளும் பாத்திரங்களும் கூட.

சாப்பிட்டுப் போகலாமா ரத்னாவைக் கேட்டேன். வாங்கிட்டு போயிடலாமா என்று அவள் கேட்டாள்.

”தெருவிலே ஓரமா பெஞ்ச் போட்டு உட்கார்ந்து சாப்பிட கஷ்டமா இருக்கா?”

”ஹய், எனக்கென்ன கஷ்டம். நம்ம ஊரு நம்ம பசங்க”. அவள் எனக்காக இப்படி ஓர் இடத்தில் ராச்சாப்பாடு சாப்பிட வருவது இதுவே முதல் தடவை.

”சைவம் தானே?”

அடுத்த பெஞ்சுக்கு இட்லி கொண்டுபோன பையனைக் கேட்டேன். சந்தேகமே வேணாம் சார், முழு சைவம் தான் என்றான்.

ரத்னாவும் நானும் லாட்ஜ் அறைக்குத் திரும்பி ராத்திரி வெகு நேரம் எங்கள் கும்பகோண நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தோம். அடுத்து சாவகாசமாக ஒன்றுகலந்து சேர்ந்திருந்தோம்.

வீட்டில் கூட அபூர்வமாக வாய்க்கிற நிதானமான, இயற்கை கற்பித்தபடி இயங்கும் கூடல் அது. ரத்னாவை டாக்டர் லட்சுமி சொன்னபடி ஜாக்கிரதையாகக் கையாண்டேன். ரொம்ப பயப்பட வேண்டாம் என்று ரத்னாவே சொன்னாலும் என் ஜாக்கிரதை உணர்ச்சி எனக்கு. நடுராத்திரிக்கு கூர்க்கா விசில் கேட்டபடி உறங்கப் போனோம்.

காலை ஆறரை மணிக்கே மங்களாம்பிகாவில் வெண்பொங்கலும், தோசையும், உளுந்து வடையும், காரமான மிளகாய்ச் சட்னி முதல் சாதுவான பருப்புத் துவையல் வரையும், அடர்த்தியான சின்ன வெங்காய, தக்காளி சட்னி ரகங்களும், கூட அதிரடியாக, ஈடு இணையில்லாத ஒரே ஒரு வெங்காய சாம்பாருமாக தெருவே அதிர ஞாயிற்றுக்கிழமை சாப்பாட்டுக் கூட்டம்.

“கோவிலுக்கு போய்ட்டு வந்து சாப்பிடலாம்” என்றாள் ரத்னா.

“வயித்தை காயப்போட வேணாம்னு டாக்டர் லட்சுமி சொல்லியிருக்காங்களே, நினைவு இருக்கில்லே?” என்று கேட்டேன்.

சாப்பிட்டு விட்டு கும்பேசுவரர் கோவிலுக்குப் புறப்பட்டோம். தெருக்கள் எல்லாம் காலை நேரத்துக்கான இயல்பான தோற்றம் திரும்பி வர, ராத்திரி செய்துகொண்ட அழகான, குரூபமான ஒப்பனைகள் கரைய வந்த மாற்றம் அது. எல்லாத் தெருவும் அழகாக இருந்தது. எந்தத் தெருவும் எங்களுக்குப் பழக்கமானதாக இல்லை.

“குட் மார்னிங் டீ சார்”.

மடத்துத் தெருவில் குழந்தையைத் தோளில் சுமந்து எதிர் வீட்டுச் சுவரில் வரிசையாக வந்தமர்ந்த மைனாக்களை வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தவன் என்னைப் பார்த்துக் கையசைத்தான்.

அவன் பெயர் எனக்குத் தெரியாது. என் பெயர் தெரிந்திருக்காவிட்டாலும் என்னைப் பார்த்தால் நிஜமான சந்தோஷத்தை அடைகிறான் அவன். அவனுடைய பிள்ளைப் பிராயத்தின் ஒரு கணத்தை மீண்டும் வாழ்ந்து மகிழும் நிலை அது. பள்ளிக்கூட ப்யூனை, ஸ்கூலில் சொல்லிக் கொடுத்த வாத்தியாரை பார்க்கிற மகிழ்ச்சி போல இது. நல்ல விதமாக எழுந்து வருவது. நல்லது நினைக்கச் செய்வது. நினைவுகளை ராமோஜியும் போற்றுவான்.

“தம்பி, நல்லா இருக்கீங்களா? சாரி பெயர் மறந்துட்டேன்”.

பெயர் சொன்னான். கை குலுக்கினோம்.

“ஹைஸ்கூல்லே ஹையர் செகண்டரி டீச்சரா இருக்கேன்.. அதே கோடி வீடுதான் சார்.. வாங்க”

இன்னொரு தடவை பயணம் வைக்கும்போது வருவதாகச் சொன்னேன். எப்போதோ அடுத்த விசிட்.

“டீ சார் எப்படி இருக்கீங்க?”

பட்டை ஃப்ரேம் மூக்குக்கண்ணாடி போட்ட லுங்கிக்காரன் வழிமறித்தான். ஒல்லியான உருவம். நல்ல உயரம்.

“ஓ பிரமாதம்.. நீ.. நீங்க?” வழக்கம்போல் குழம்பி நின்றேன்.

“ரொம்ப நல்லா இருக்கேன். நான் ராஜு. கோபுவோட பிரண்ட். மறந்துட்டியா ராமோஜி?”

தூக்கி வாரிப்போட்டது. நன்றாக உற்றுப் பார்த்தேன். ராஜுவே தான். பனிரெண்டு வருஷ காலம் அவன் முகத்தில் எந்த மாறுதலையும் உண்டாக்கியதாகத் தெரியவில்லை. எனக்காவது அங்கங்கே தலையில் இளநரை கண்டிருந்தது. இவன் தலை கருகருவென்று இன்னும். உடம்பு என்னமோ அன்று கண்ட மேனிக்கு, காலேஜ் படிக்கிற பையனாக பூஞ்சையாகத்தான் இருந்தது. எப்படி இவன் காலத்தை நிறுத்தி வைத்தான்?

”சிதம்பரத்திலே இருந்து குடும்பத்தை இங்கே குடியமர்த்தியாச்சு. குடும்பத் தொழில் தான் செஞ்சிக்கிட்டிருக்கேன்..”

என்ன குடும்பத் தொழில் என்று அவன் சொன்னதாக நினைவு இல்லை. குடும்பம் பற்றி கோபு பேசியதில் நூறில் ஒரு பங்கு கூட ராஜு பேசியதில்லை. ராகம், இசை, இலக்கியம் இதுதான் பேசப் பிடித்த விஷயங்கள் ராஜுவுக்கு.

”இன்னும் அப்படித்தான் இருக்கு. என்ன, கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க… எழுத, படிக்க, கச்சேரி ரேடியோவிலே கேட்கக் கூட நேரம் கிடைக்க மாட்டேங்குது.. தொழில் மும்முரம்.. வேலை பார்க்கறவங்களை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கணும். ஆமா, பட்டுத் தறி நாலு போட்டு ஓடிட்டு இருக்கு.. குலத்தொழில் கல்லாமல் பாகம் படும்னு பழம்பாட்டு இருக்கு..எனக்கு பட்டு நெசவு குலத்தொழில்.. நீ மராட்டித் தமிழன்னா நான் சௌராஷ்ட்ர தமிழன்”.

ரத்னா கேட்டாள் –

”ஏன் அண்ணா, வீட்டிலே எங்கே இருக்காங்க? பெயர் என்ன? கோவிலுக்கு போய்ட்டு வரும்போது வந்து பார்க்கலாமா? சும்மா அஞ்சு நிமிஷம் ..”

”தங்கச்சி நீ கேட்டு நான் மாட்டேன்னா சொல்வேன்.. ஒரே சங்கடம்.. அவ .. என் ஒய்ஃப்.. ரோகிணின்னு பேரு … அம்மா வீட்டுக்கு போயிருக்கா.. நாலாவது பிள்ளை பிரசவ நேரம்..”

நான் அந்தக் குடும்பஸ்தனை ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

ராஜுவுக்கு என்னைப் பற்றி, புவி பற்றித் தெரிந்திருந்தால் என்னையும் ஆச்சரியத்தோடு பார்த்திருப்பான்.

”கல்லுளி மங்கன் மாதிரி இருக்கான், சினிமா ஸ்டாரோடு ரிலேஷன்ஷிப் வச்சிருக்கான்..நல்லா இருடா.”

என்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தால் மனதுக்குள் சொல்லியிருப்பான்.

கோபு எங்கே இருக்கான் என்று கேட்டேன். பம்பாயிலே ஒரு கம்பெனியிலே அசிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜராக இருக்கிறானாம். ஒரு பெண்குழந்தை. மனைவி ஸ்டெனோகிராபராக ஆபீஸ் போகும் கன்னடத்துப் பெண்ணாம்.

ஒரு வினாடி மௌனமாக இருந்துவிட்டு ராஜு சொன்னான் –

”சொன்னா நம்ப மாட்டே.. கங்கா சாயல்லே அச்சு அசலா அப்படியே இருக்கா தேஜஸ்வி, கோபு பெண்டாட்டி.”

இதற்குத்தான் ஆசைப்பட்டானா கோபு?

Excerpts from my forthcoming novel RAMOJIUM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன