ராமோஜியம் நாவல் – இறுதி அத்தியாயத்தில் இருந்து – ராமோஜி ரத்னாவின் நீதிமன்றத்தில்

”கல்யாணம்னு நான் பத்திரிகை வச்சா வரமாட்டீங்க ரெண்டு பேரும், உங்க கல்யாணத்துக்கு அழைக்க மாட்டீங்க.. நல்லா இருங்கப்பா”. நான் ராஜுவிடம் சொன்னேன்.

”சே அப்படியெல்லாம் இல்லே.. நீ வீடு மாத்தி யாருக்குமே புது அட்ரஸ் சொல்லலியே.. ”

”சரி, சண்டை அப்புறம் வச்சுக்கலாம்.. கோவிலுக்குப் போய்ட்டு வந்துடறோம்” என்று நானும் ரத்னாவும் கிளம்புவதற்குள் ராஜு வீட்டுக்குள் ஓடிப் போய் தன் விசிட்டிங்க் கார்டை எடுத்து வந்து கொடுத்தான்.

குடந்தை என்று தமிழிலும் கும்பகோணம் என்று இங்கிலீஷிலும் ஊர்ப்பெயர் சொன்ன விசிட்டிங் கார்ட் அது. சட்டை இல்லாமல் துண்டைப் போர்த்திக் கொண்டு ஆலய தரிசனத்துக்குப் போவதால், ரத்னாவின் கைப்பையில் பத்திரமாக அதை வைத்தேன்.

நேரம் இருந்தா சாயந்திரம் வா என்று கூப்பிட்டான் ராஜு.

”நீ தனியா அங்கே இருக்கறதைப் பார்க்கறதை விட, துக்காபாளையத்தெரு வந்துடு, ராமாராவ் மாமா வீட்டுலே சந்திக்கலாம்” என்றேன். பார்க்கலாம் என்றான்.

பட்டுக்கோட்டையிலே பத்து மணிக்கு ஒரு கூட்டம் இருக்கு என்றான் அடுத்து.

”இலக்கியக் கூட்டமா?”

”இது வார்த்தை நெசவு இல்லே. பட்டு நெசவு”.

”நீ நெசவு செய்யற எழுத்துக்காரனா, எழுதற பட்டு நெசவாளனா?”

”அது தெரிஞ்சா, ரெண்டுலே ஒண்ணை விட்டுடுவேனே..”

ராஜு உருவம் மட்டுமில்லை, சட்டென்று எழுத்து பிறந்து வருவது போல பேசுவதிலும் பத்து வருடம் பின்னால் தான் உறைந்து போயிருக்கிறான்.

வழியில் தரையில் இரு புறமும் பரவி மணத்துக்கொண்டு மருக்கொழுந்து கொத்துக்கொத்தாகக் கிடந்தது. பூஜைக்கான தாமரைப் பூக்களும் துளசியும் குவித்து வைத்த குன்றுகள் போல். பொலபொலவென்று துளசிக் கற்றை ஒன்று தரையில் உருள, அதைக் காலில் படாமல் ஜாக்கிரதையாக எடுத்து ஓரமாக வைத்தேன்.

துளசியையோ மருக்கொழுந்தையோ மிதிக்காமல் ஈரம் பூண்டு கிடக்கும் மண்ணையே பார்த்து மயங்கியபடி நடந்தேன்.

சுருதியோடு இழைந்து ”கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய்” என்று முதல் வரியை ஒருவர் பாட, “உண்டவாயன் என்னுள்ளம் கவர்ந்தானை” எனக் கூட்டமாக அடுத்த வரியைப் பாட, பாசுர இசை காற்றில் மிதந்து வந்தது.

”இதென்ன சிவன் கோவில்லே இருந்து பாசுரம் கேக்கறது?”

பக்கவாட்டில் ரத்னாவைப் பார்த்தேன். அவள் முகத்தில் அபூர்வமான ஒரு முழுச் சிரிப்பு. கொஞ்சம் கள்ளத்தனம் கலந்ததோ அறியேன்.

”பாசுரம் கேட்டால், சிவன் கோவிலுக்குப் போகல்லேன்னு அர்த்தம். பெருமாள் கோவிலுக்குப் போய்க்கிட்டிருக்கோம்னும் அர்த்தம்”. நடந்தபடி சொன்னாள்.
கும்பேஸ்வரர் கோவில் தானே போகப் புறப்பட்டோம்?

முதல் டிகாஷன் இறக்கிக் கலந்த பில்டர் காபி வாசனை, பூ வாடையோடு போட்டி போட்டுத் தெருவில் கவிந்தது.

”சக்ரபாணிப் பெருமாள் கோவிலுக்குப் போய்ட்டு கும்பேசுவரர் கோவில் போகலாம். மைத்துனனை முதல்லே பார்த்தா சிவன் கோபிச்சுக்க மாட்டார்”.

ரத்னா கோவில் கோபுரத்தைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள்.

“கும்பகோணம் உன்னோட ஊர். நீ சொல்றது தான் இப்போ நான் கேக்கறது”.

அவள் விரலைப் பற்றிக் கொள்ள முயன்று தோற்றுப் போனேன். செல்லமாக விடுவித்துக் கொண்டு புடவைத் தலைப்பில் கையை மறைத்து மெதுவாக, கம்பீரமாக நடக்கிறாள் ரத்னா. கூடவே காவலனாக நானும்.

”ஏன் திடீர்னு வீபுதிப் பட்டையை நாமமாக்கிட்டே?” கேட்டேன். அறியாவினா.

ரத்னா பதில் சொல்வதற்குள் உள்ளே போய்க் கொண்டிருந்த பட்டாசாரியார், ‘பின்னே, பெருமாளா சும்மாவா? இந்த ஊரே முன்னூறு வருஷம் முந்தி பட்டை நாமத்தை பரக்க சாத்தி போய்ண்டு வந்துண்டிருந்த ஊராக்கும்” என்று உற்சாகமாகக் கூறியபடி போனார்.

”ஆமா நீங்க விட்டா பேனையே பெருக்கி பெருமாளாக்கிடுவீங்களே”. பூக்கடைக்காரர் சிரித்தபடி பட்டாசாரியாரிடம் உடனடி பதில் தந்தார்.

கும்பகோணத்தில் அழகான ஒரு காலை நேரம். நெருங்கி வந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு தினத்தில் தேச சுதந்திரம் கிடைக்கப் போகிற நல்ல நேரம் இது. பலநூறு வருஷம் முந்தைய சைவ வைணவ மோதலை உலையூதி இப்போது இங்கே நெருப்புப் பூக்க வைக்கக்கூடாது. இரண்டு உள்ளங்கையாலும் வாயைப் பொத்திக்கொண்டு பட்டாசாரியாரிடம் ஜாடை காட்டினேன். ஓ மீதி ரெண்டும் நாங்க தானா என்று குரங்கை அபிநயித்துச் சிரித்தார் அவர்.

”நன்னா இருங்கோ. நன்னா இருங்கோ”

பெரியவங்க ஆசிர்வாதம் என்று கை கூப்பினேன்.

”சாமி, நீங்க போங்க, நாங்க வந்துக்கிட்டே இருக்கோம்” ரத்னா குரல் அவரைப் பின் தொடர்ந்தது.

வட்ட மண்டபம் கடந்து பெருமாள் சந்நிதி போகும் பிரகாரம். மேலே இருந்து சக்ரபாணி சாவி கொடுத்து இயக்கியது போல் கால்கள் தன்னிச்சையாக நகர்ந்தன. நான் நேரே நடக்க, ரத்னா புறங்கையை மறித்து நீட்டினாள்.

”நம்ம இடத்துக்குப் போக வேண்டாமா?” கெஞ்சுதலும், பிடிவாதமுமான குரல் அது.

”நீ கேட்டு வேணாம்னா சொல்லப் போறேன்? வா”.

எனக்கு முன்னால் அங்கே வந்து ஓரமாக அமர்ந்து என் கையைத் தன் கையில் பிடித்து இரு கரங்களாலும் மூடி வைத்துக் கொண்டாள் ரத்னா.

”அவ்வளவு பத்திரமா நீ வச்சுக்க வைர மோதிரம் வரிசையா போட்டிட்டிருக்கலே, வெறும் கை தான் இது ரத்னா. திருத்துழாய் வாசனை லேசா வரும்.. கடைத்தெருவிலே துளசியை ஓரமா எடுத்துப் போட்டது”.

”துளசி வாசம் எப்பவும் அடிக்கட்டும். கோவில் வாசனை வரட்டும். என் வாசமும் இருக்கட்டும். வேறே எதுவும் வேணாம்”.

அவள் கெஞ்சுவதுபோல், ஆனால் தீர்மானமாகச் சொன்னாள்.

”இந்தக் கைக்கு வேறே வாசம் தெரியாது.. பெருமாள் சொல்லலியா?”
செல்லமாகக் கன்னத்தில் தட்டிக் கேட்டேன்.

”புவனாவை இப்படி செல்லமா தட்டி ரத்னா பாவம், அவ வழியிலே போக வேணாம்னு சொல்ல மாட்டீங்களா ராவ்ஜி?”

உறைந்து நின்றேன்.

சட்டென்று விஷயத்துக்கு வந்து விட்டாள். தினமும் எதிர்பார்த்திருக்கும் பேச்சு இது. என்றாவது வெடிக்கும் என்று எதிர்பார்த்தேன். இன்றைக்கு கும்பகோணத்தில் நான் ரத்னாவின் நீதிமன்றத்தில் நிற்கிறேனா?

கும்பகோணத்துக்கு, சக்ரபாணிப் பெருமாள் கோவிலுக்கு அவள் என்னைக் கூட்டி வந்தது இதற்குத்தானா?

அவளுக்கு என்ன தெரிந்திருக்கும்? யாரெல்லாம் சொல்லியிருப்பார்கள்? எதை எல்லாம் கற்பனை செய்து கொண்டிருக்கிறாள்? என்னை என்ன செய்யப் போகிறாள்?

வயிற்றில் என் குழந்தையைச் சுமந்திருக்கிறவள், நெஞ்சில் என் செயலால் மாறாத துக்கத்தையும், அதிர்ச்சியையும், வேதனையையும் சுமந்து இருப்பாள்.

அவளை எத்தனை நாள் மனம் நோக எல்லாம் உள்ளே புதைத்து வைத்து இயல்பாக நடமாட வைத்தேன், இனியும் எத்தனை நாள் இப்படி வைப்பேன்?
.
தப்பு செய்தவன் நான். என் தலை குனிந்தே இருந்தது.

”துக்காம்பாளையத் தெருவிலே ரெண்டு பேரும் இருந்த போது முதல்லே பார்த்து பேச இடம் கொடுத்தவர் இந்த சக்ரபாணிப் பெருமாள். அதுவும் இந்தத் தூண். நம்ம காதலையும், எதிர்பார்ப்பையும் ஒரு சொல், ஒரு முணுமுணுப்பு, ஒரு சிரிப்பு, ஒரு மௌனம் விடாம கேட்டு, சத்தமில்லாமல் நம்ம சந்தோஷத்திலேயும் துக்கத்திலேயும் பங்கெடுத்த நம்ம சகா. பெருமாள் நம்மோட பேசணும்னா, நம்ம பிரச்சனையிலே தீர்ப்பு சொல்லவோ, சாட்சிக்கு நிற்கவோ செய்யணும்னா, இந்தத் தூண்லே தான் வருவார். அதுலே உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?” அவள் விசாரித்தாள்.

இல்லை என்றேன் அவசரமாக. அவள் தூணையே பார்த்தபடி இருந்தாள்.

”உள்ளே இருக்கறவர் நரசிம்மர் இல்லையே?”

நான் சிரிக்க முயற்சி செய்தபடி கேட்டேன். பரிதாபமாகத் தோற்றேன்.

”நீங்க ஹிரண்யகசிபுவாங்கறதைப் பொறுத்து அது, கண்ணா. சொல்லுங்க..”

”என்ன சொல்லணும் அன்பே?”

”எப்போ இருந்து இதெல்லாம்?”

”எதுன்னு சொன்னா, எல்லாம் தெரிஞ்சா, எப்போன்னு சொல்லலாம் செல்லம்”

”இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே.. கொஞ்சல்லாம் இங்கே. மிஞ்சல் அந்தப் பொண்ணு கிட்டேயா?”

”நான் எப்பவாவது .. அவ .. அவங்க வீட்டுக்கு பந்துலு சார் கூட போய் பேசிட்டு இருப்பேன்.. ”

”மாகாளிக்கிழங்கு..”

”அவ்வளவுதான்.. நீ வாங்கிக் கொடுத்ததை கொண்டு போய்க் கொடுத்தோம் பந்துலு சாரும் நானும். அவரோட அத்தங்கா அந்தப் பொண்ணு தெரியுமோ?”

”பந்துலு சார் கூட வராம எங்கேயும் போக மாட்டீங்களோ? முக்கியமா மாம்பலம். அதுவும் புது மாம்பலம்..”

”இல்லேம்மா, எப்பவாவது நம்ம கம்பவுண்டர் கிட்டே நாயர் டாக்டர் சொன்னபடிக்கு மருந்து வாங்கிட்டு வர்றபோது அந்தப் பொண்ணுக்கு.. அம்மாவுக்கு … மூட்டு வலிக்கு.. கம்பவுண்டர் கிட்டே கேட்டு ..”

”உடும்புத் தைலமா?:

”அப்படின்னா என்ன தைலம்னே தெரியாது”.

”தெரியாமலா தியாகராய நகர் முழுக்க உடும்புத் தைல வாசனையை பூசி வச்சுட்டு வந்தீங்க? ஏன் இப்படி அல்பமா நடந்துக்கறீங்க?”

”இல்லேம்மா..”

”ஓ திரும்ப அம்மா.. வயசாயிடுச்சு எனக்கு.. சின்னப் பொண்ணு, சினிமாக்காரி, பளிச்சுனு இருக்கா.. திருவிளக்கு வேண்டாம் நியான் விளக்கு இவளே போதும்னு இடம் மாறியாச்சா..”
தலையைக் கவிழ்ந்து நின்றேன். ஏதாவது மலைமேல் இந்தக் கோவில் இருந்தால் சாடிப் பாய்ந்து கீழே குதித்திருப்பேன்.

“அப்படி என்ன உடம்பு கொண்டா கொண்டான்னு கேக்குது? அந்த சதை அவ்வளவு பிடிச்சு, இந்த உடம்பு வேண்டியிருக்காம போச்சா?. அந்த எச்சில் இதைவிட இனிக்க ஆரம்பிச்சுதா? அந்த உடம்பு நாத்தம் லகரி ஏத்தி பிடிச்சுப்போய், இது வேண்டாம போச்சா?

தன் இடுப்புக்குக் கீழே அவசரமாகக் கைசுட்டிக் காட்டி, கண்ணில் வழிந்த கண்ணீரை உடனே துடைத்துக் கொண்டாள்.

நான் பேசாமல் நின்றேன். அவமானத்தோடு நின்றேன்.

”காலையிலே.. மத்தியானம்.. சாயந்திரம் நாலு மணிக்கு.. உடம்பு கேக்கறது எல்லாம் உடனுக்குடன் கிடைக்கும் ஒரே இடம் புது மாம்பலம். அப்படித்தானே? கேட்டுத் தொலச்சிருந்தா நான் மாட்டேன்னா சொல்லியிருக்கப் போறேன்.. இல்லே சொல்லியிருக்கேனா எப்பவாவது?”

”மஞ்சள் பத்திரிகைன்னா கொஞ்சம் இருந்தாலும் ரொம்ப பெரிசா பூதக்கண்ணாடி வச்சு பெருசாக்கி எழுதிடுவான்.. அதை எல்லாம் நம்பிக்கிட்டு உட்கார்ந்திருந்தா..”

“அப்போ கொஞ்சம் இருக்கு தானே. எவ்வளவு அந்தக் கொஞ்சம்னு தயவு செய்து சொன்னா, அதிகம் என்னன்னு கணக்கு போட்டுப் பார்த்துக்கலாம்”.

”ஒரு பேச்சுக்காக சொன்னேன் ரத்னா.. அதைப்போய்..”

”ராவ்ஜி, ஓய் ராவ், சக்ரபாணி கோவில் பிரகாரத்துலே அவர் வந்து இருக்கற தூணோடு தூணா இருக்கோம்.. பொய் எதுவும் சொல்லாதீங்க.. உங்களுக்கும் தெலக்ஸ் புவனாவுக்கும் உங்களுக்கும் புவனிக்கும் உனக்கும் புவிக்கும் என்னடா உறவு? எத்தனை நாளா இந்த அசிங்கம் நடக்குது? என்ன செய்ய உத்தேசம் இனிமேலே? உன்னைப் பற்றி நினைக்கலேன்னா சரி, அவளைப் பற்றியும் நினைக்க வேண்டாம்.. என்னைப் பற்றி நினைச்சீங்களா?”

நான் தூணை வெறித்துப் பார்த்தபடி இருந்தேன். நரசிம்மம் வரட்டும்.

”அவளுக்குத்தான் புத்தி இல்லே, உனக்கு எங்கடா போச்சு? இதுக்கா இந்த கும்பகோணம் மண்ணுலே என்னைச் சுத்தி சுத்தி வந்து காதலிச்சே? எங்கிட்டே என்ன இல்லேன்னு அவ கிட்டே போய் நின்னே? சொல்லுங்க ராவ்ஜி”

தப்புதான் தப்புதான் தப்புதான்

சட்டென்று என் கையைப் பற்றி அவளுடைய அடிவயிற்றில் வைத்தாள். உள்ளே அசைவைக் கற்பனை செய்து மெய்மறந்தேன்.

”போய பிழையும் புகுதருவான் நின்றனவும் இந்த வயிற்றுச் சூட்டினில் தூசாகும். தூசாகட்டும். ”

அவள் குரல் பிரகார விதானத்தைத் தொட்டுக் கீழே இறங்கிக் கவிந்தது.

”இவள் மேலே சத்தியமா சொல்லுங்க ராவ்சாகிப்.. என்ன பார்க்கிறீங்க? இது நம்ம மகள் தான்.. என் வலியை இவளும் வாங்கிக்கறா. ரொம்ப புரண்டு கஷ்டப்பட்டு கஷ்டப்படுத்தறதில்லே என் பொண்ணு.. ஆனா இந்த மனசோட துன்பத்தை அவ வாங்கிக்க முடியாதே.. சொல்லுங்க..”

நான் தூணைப் பிடித்தபடி சக்தியெல்லாம் இழந்த பேடியாக நின்றேன்.

”சொல்லுங்க ராவ்ஜி .. இனிமேல், இந்த நிமிடத்தில் இருந்து நான் என் ரத்னாவைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் தொட மாட்டேன்… ரத்னாவுக்கு மனசாலே கூட துரோகம் நினைக்க மாட்டேன்.. என் மகள் மேல் சத்தியம்..”

நான் அதேபடி சொல்லத் தொடங்க, என் மனைவி பிரகாரத் தூணை அணைத்துப் பிடித்தபடி அடக்க முடியாமல் அழுதாள்.

பிரகாரம் சுற்றி வந்த வடக்கத்திய கோஷ்டி ஒன்று கொஞ்சம் தொலைவும் அண்மையுமாக நின்று பார்த்தது. அந்தக் குடும்பத்தில் ரத்னா வயதுப் பெண் ஒருத்தி இன்னொரு தூணைக் கட்டிப் பிடித்து அழத் தொடங்கினாள்.

நான் நிதானமாக ரத்னா சொன்னதைத் திரும்பச் சொல்லி முடிக்க மனம் லேசானதாக இருந்தது. இனி அது அப்படியே இருக்கட்டும். இரண்டு பேருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன