ராமோஜியம் – இறுதி அத்தியாயத்தில் இருந்து – மீண்டும் கும்பகோணம் – 1947 – புயலுக்குப் பின்

நாங்கள் சந்நிதிக்குள் நுழைகிற வரை புதுசாகக் கல்யாணம் ஆனபோது இருந்ததுபோல் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தோம். முகத்தில் முறுவலும், சந்தோஷமும், பரஸ்பர அன்பும், நேசமும், நம்பிக்கையும் குடிகொண்டிருந்ததை நான் அவள் முகத்திலும் அவள் என் முகத்திலும் கண்டு பரவசப்பட்டோம்.

“வரல்லே போலேருக்கு.. அப்படியே போய்ட்டேளோன்னு பாத்தேன்”, பட்டாச்சாரியர் வெளியே வந்தபோது கோவில் மணி முழங்கியது.

நான் ‘ரத்னா சதயம்’ என்று சொல்ல, ரத்னா ரகசியமாக என் பெயரை ‘ராமோஜி ராவ் அச்வதி’ என்று சொன்ன இனிமைக்கு ஈடேது.

வேண்டாம் வேண்டாம் என்று அன்போடு மறுத்தாலும் அதை விடக் கூடுதல் பிடிவாதத்தோடும் பிரியத்தோடும் பட்டாச்சாரியார் மடைப்பள்ளியில் இருந்து, நைவேத்தியமான மிளகுப் பொங்கலையும் தோசையையும் வாழை இலைக் கீற்றில் வைத்து மேலே சுதேசமித்திரன் பேப்பரால் பொதிந்து கொடுத்தார். தேங்காய், பழம் பிரசாதம் வேறு.

“பெருமாள் பிரசாதம். சர்க்கார் பத்து அவன்ஸை எட்டு அவன்ஸா குறைச்ச அரிசி ரேஷன் அவருக்கு அப்ளை ஆகாது.. உலகளந்த பெருமாள்.. கெஸ்ட் கண்ட்ரோலும் நோ.. தாராளமா சாப்பிடுங்கோ”.

பட்டாசாரியார் சர்க்கார் ஊழியனை சஞ்சலப்படுத்தினார். ஒரு வார்த்தை என்றால் ஒரு வார்த்தை நான் பேசவில்லையே. பேசுகிற மாதிரியா நான் நடந்து கொண்டிருக்கிறேன்? ரத்னா இன்னம் கொஞ்சம் வைதிருக்கலாம்.

கும்பேசுவரர் கோவிலும் அங்கிருந்து சாரங்கபாணி கோவிலும் போனோம். வழியில் ஒரு கடையில் நன்னாரி சர்பத் சாப்பிட்டோம்.

அந்தக் கடையைக் கவனித்து வந்த இளைஞன் எந்த நிமிடமும் டீ ஆபீசர் சார் என்று கையசைத்து அருகில் வருவான் என்று ரத்னாவிடம் ஒரு ரூபாய் பந்தயம் கட்டினேன்.

கடைசி வரைக்கும் வரவே இல்லை. பொறுக்காமல் தம்பி எந்த ஊர் நீங்க என்று கேட்டே விட்டேன்.

”புதுக்கோட்டை சார்”.

நான் ரத்னாவிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். ரெண்டு அடி போயிருக்க மாட்டோம், பின்னால் குரல். அந்தப் பையன் தான் –

”டீ சார்.. சௌக்கியமா இருக்கீங்களா? ஞாபகம் இருக்கா? பத்து வருஷம் முன்னாடி துக்காம்பாளையத் தெருவிலே டீ கொடுத்து.. நான் துரைசாமி .. ”

ஓடி வந்து, என் கையைப் பற்றிக்கொண்டு வாத்சல்யத்தோடு சொன்னான்.

”சந்தோஷம் ஏம்பா இது நினைவு வர கொஞ்சம் நேரம் ஆச்சு போல”.

”யார் சொன்னது? நீங்க கோவில்லே இருந்து வரும்போதே யார்னு தெரிஞ்சுடுத்து. அக்கா தான் ஜாடை காட்டி அப்புறம் பேசுன்னுட்டாங்க.. உங்களுக்கு தெரியாது.. பனிரெண்டு வருஷம் முந்தி.. அப்போ தெருவிலே எங்க எல்லோருக்கும் நீங்க ஹீரோ, அக்கா ஹீரோயின்..”

ரத்னா அடக்க முடியாமல் சிரிக்க அவனும் நானும் கையோடு கை என்று உயர்த்தித் தட்டிக் கொண்டோம்.

இந்த மகிழ்ச்சியைக் கொடுத்த துரைசாமிக்கு நன்றி சொல்லிக் காசு கொடுக்க, வாங்க மாட்டேன் என்று அவன் உறுதியாகச் சொல்லிவிட்டான்.

இந்தக் கணங்கள் எனக்கும் ரத்னாவுக்கும் சொந்தமானவை. அவள் இல்லாமல் இதெல்லாம் நடந்திருக்குமா? ரத்னா இல்லாத கும்பகோணத்தில் எனக்கு என்ன வேலை? ஒரு பலகீனமான நேரத்தில் அவளை எப்படி மறந்தேன்? ஒரு நேரமா,எத்தனை தடவை வேலி தாண்டியிருக்கிறேன்.

பகல் பனிரெண்டு என்று கடியாரம் கையில் நேரம் சொல்ல, ராமாராவ் மாமா வீடு. ரத்னா மட்டன் பிரியாணியை ஒரு கை பார்க்க, நான் எதிரே உட்கார்ந்து தேங்காய்ச் சாதத்தை சாம்பார் தோய்த்து உண்டு கொண்டிருந்தேன். கோவில் பிர்சாதமாகக் கொண்டு வந்தது எல்லாம் ராமாராவ் மாமாவுக்கு.

சாப்பிட்டு விட்டு சர்வே எடுப்பு, மாமாவோடு.

உதாரணம்,

”டீ போட பால் தினம் சப்ளை செய்த கோனார் எப்படி இருக்கார்?”

”அவர் பாம்பேயிலே பிள்ளையோட சௌகரியமா இருக்கார்”.

”அவர் பையன்?”

”பாம்பேயிலே டைப்பிஸ்டா இருக்கான்”.

”எதிர்வீட்டு மாமா, மாமி?”

”மூணு பெண்ணையும் பாம்பேயிலே கல்யாணம் செஞ்சு கொடுத்திருக்கா. வருஷத்துலே மூணு மூணு மாசம் ஒவ்வொருத்தி வீட்டிலேயும், அக்டோபர்லே இருந்து டிசம்பர் இங்கே சொந்த வீட்டுலே.. ஒவ்வொருத்தியும் கம்பெனி உத்தியோகம் ஸ்டெனோவாக, மாப்பிள்ளைகள் பெரிய கம்பெனிகளிலே ஆபீசர்கள்..”

”கிழக்கே அடுத்த வீட்டில் ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர்?”

“ஜாகை எல்லாம் பம்பாய்லே. அவர் பிள்ளை..”

”ஸ்டெனோ, டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலே”. நான் நடுவில் புகுந்தேன்.

”கரெக்டா சொன்னியேடாப்பா” என்று மாமா அவரை விடப் பழைய பனை ஓலை விசிறியால் காற்றை விரட்டிக்கொண்டு சொன்னார்.

பம்பாய்க்கும் கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவுக்கும் காலம் காலமாக ஓர் உறவு இருக்கிறது. இங்கே குழந்தையாக ஜனிக்கும்போதே பிட்மனின் ஷார்ட் ஹேண்ட் புத்தகத்தைக் கையில் தொட வைத்துத்தான் பெயர் வைக்கிறார்கள். இந்தத் தெருவிலிருந்து பச்சை ட்ரங்க் பெட்டிக்குள் வைத்த டைப்ரைட்டிங் ஹையர், ஷார்ட் ஹாண்ட் லோயர் சர்ட்டிபிகேட்களோடு பம்பாய் போனவர்கள் பலருக்கும் விக்டோரியா டெர்மினஸை அடுத்து, ஃபோர்ட் பகுதியில் கம்பெனி உத்தியோகம். தாதர், மாடுங்காவில் ஒற்றை அறை குடித்தனம். அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறது போல.

நானும் ரத்னாவும் கல்யாணம் ஆனதுமே பம்பாயில் குடித்தனம் வைத்திருந்தால் எனக்குப் புவனாவைத் தெரிந்திருக்காது. குற்ற உணர்ச்சி அவ்வப்போது எட்டிப் பார்க்கவும் வழியில்லாமல் போயிருக்கும். .

திங்கள்கிழமை காலையில் டாக்சி எடுக்கலாம் சென்னை போக என்று சொன்னால் அதெல்லாம் வேஸ்ட், ரயில் காத்தாடிட்டுப் போறது என்று அதைப் புறம் தள்ளி விட்டார் ராமாராவ் மாமா. காற்றாடிப் போவது என்றால் காலியாகப் போவது என்று அர்த்தம் கொள்ள வேணும்.

சாயந்திரம் அறையில் இருக்கும்போது ரத்னா கேட்டாள்

”கும்பகோணத்தில் சினிமாவுக்கு போய்விட்டு வந்தால் என்ன? நாம் இங்கே மாய்ந்து மாய்ந்து காதலித்துக் கொண்டிருந்த போது சினிமா எதுவும் போனதில்லை. அப்போது தியேட்டர் இருந்ததாகக் கூட நினைவு இல்லை. இப்போது ஒன்றுக்கு ரெண்டாக தியேட்டர் இங்கே உண்டாம். சினிமா பார்த்து வரலாம், வாங்க ராவ்ஜி. எனக்கு சினிமா போகணும். முறுக்கு திங்கணும்.. ”

குழந்தை போன்ற இவளையா நான் ஏமாற்றி வேறு சம்பந்தம் வைத்துக் கொண்டேன்? யார் தவறு அது? புவனாவிடம் நான் இது தப்பு என்று எடுத்துச் சொல்லியிருக்க வேண்டாமா?

லாட்ஜ் பையனிடம் என்ன சினிமா ஆடுது என்று நான் கேட்க ரத்னா சிரிக்க ஆரம்பித்தாள்.

”ஆடலேன்னா பார்க்க மாட்டீங்களா? நடந்தா, உக்கார்ந்தா, பேசினா சினிமா இல்லையா?”

பையனுக்கு எதுவும் புரியாமல் விழிக்க, இன்னொரு லாட்ஜ் பையன்,

“சார் டிக்கெட் வாங்கிட்டு வந்து தரட்டா?” என்று உதவிக்கு வந்தான்.

” டயமண்டு கொட்டகையிலே வசந்தா நடிச்ச படம் வளையாபதி”.

ரத்னா என்னைப் பார்த்து சிரித்து, ராவ்ஜி, வசந்தாவாம் என்றாள்.

”வசந்தாவுக்கு என்மேல் பயம் உண்டாகி இருக்கும். ஒரு தெலக்ஸ் புவனாவே ஆயுசுக்கும் போதும்” என்றேன் அவளிடம் மராட்டியில்.

ரொம்ப நல்லது சார் என்றாள் அவள்.

இன்னொரு தியேட்டரில் விகட யோகி ஆடுது. பையன் சொன்னான்.

அதையே பார்ப்போம் என்றேன்.

முகம் அலம்பி பளிச்சென்று உடுத்தி வெளியே வந்தபோது பையன் டிக்கட்களோடு வந்திருந்தான்.

”பர்ஸ்ட் க்ளாஸ் தான் சார், துண்டு எடுத்துப் போங்க..”

”எதுக்குப்பா துண்டு? பிழியப் பிழிய அழப் போறோமா? விகட யோகி அழ வைக்க மாட்டாரே?”

”இல்லே சார், மூட்டைப் பூச்சி இருந்து உக்கார்ற இடத்திலே கடிக்கும். ரொம்ப இல்லே.. ஒரு குஷன் சேர்லே ஒண்ணு ரெண்டு .. சேர்லே துண்டை போட்டுட்டு உக்காரணும்..”

மூட்டைப்பூச்சிகளின் இனப் பெருக்கம், பெருகுதல் பற்றி தெரிந்தவனாக அந்தப் பையன் ”நான் மூட்டைப் பூச்சி தொந்தரவே இல்லாமத்தான் சினிமா பார்க்கிறது” என்றான். ஆமா, தரை டிக்கட்டு எடுத்து மணல்லே உட்கார்ந்து பார்த்தா எந்தப் பூச்சி வரும்?

தியேட்டருக்கு நேரத்தில் போய்ச் சேர்ந்தோம்.

பக்திப்பாடல்கள் வரிசையாகப் போட்டார்கள். அதிலும் ஏ.டி.சுல்தான் பாடிய ’சிந்தானந்தத்தை நேசி’ இஸ்லாமியப் பாடல் மூன்று முறை போட்டார்கள். நம்ம கரீம் பாய் தியேட்டர் என்று பக்கத்து சீட்டில் இருந்த பெரியவர் சொன்னார்.

என்னோடு டீ கொடுத்த பையன்கள் அல்லாத நடுவயது ஆசாமிகள் ஆப்பரேட்டர், தியேட்டர் மேனேஜர், டிக்கட் கிழிப்பவர்களாக இருந்த தியேட்டர் அது. கரிம் பாய் படம் ஆரம்பித்தபோது உள்ளே ஒரு ரவுண்ட் வந்து ’எல்லோரும் சௌக்கியம் தானே.. படத்தை சந்தோஷமா பாருங்க’ என்று வாழ்த்துகிறவராக அரையிருட்டில் நகர்ந்து போனார்.

என்னை மட்டும் ”நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு சினிமா ஒரு கேடா?” என்று முறைத்துப் போனார் அவர்.

ராச்சாப்பாடாக மங்களாம்பிகாவில் சப்பாத்தி குருமா. அந்த ருசிக்கு அடிக்கோடிட்டுக் காட்ட ராத்திரி பத்து மணிக்கு அருமையான பில்டர் காபி.

ராத்திரி, நான் தப்பு செய்து மன்னித்து விடப்பட்டவன் மனநிலையில் சும்மா கட்டிலில் உட்கார்ந்து கதவையே பார்த்துக் கொண்டிருந்தேன். ரத்னாவைத் தொடக்கூட எனக்கு அருகதை உண்டா என்று கூசினேன்.

எவ்வளவு பெரிய குற்றத்தை எப்படி எளிதாக எடுத்து, அதையும் கடந்து அடுத்த வினாடிக்குள் போய் விட்டாள்.

என்ன தேடி நான் புவனாவைத் தொட்டு அவள் உடலோடு கூட இயங்கினேன்? விலக்கப்பட்ட கனியை அனுமதி இல்லாத தோட்டத்தில் புகுந்து உண்ணும் குறுகுறுப்புக்காகவா? ரத்னாவை எப்படி படுக்கையில் இனி சந்திப்பேன்? நின்றும் அமர்ந்தும் நடந்தும் சந்திப்பதை விட கிடந்து சந்திப்பது சிரமமானது என்று பட்டது.

அவள் ராத்திரியில் பல் துலக்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க மனதில் ஒரு இன்ப அதிர்ச்சி. அந்த சமிக்ஞை எனக்குப் பத்து வருடப் பழக்கம். நானும் பல் துலக்க அவள் எதிர்பார்த்ததைப் பார்வை கட்டளையிட்டது. அப்புறம்? காலையில் புத்துணர்ச்சியோடு எழுந்திருந்தோம்.

Excerpts from my forthcoming novel RAMOJIUM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன