கும்பகோணம் ஸ்டேஷனில் போய் நேரே ரெண்டு செகண்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கினேன். ஃபார்ஸ்ட் பேசஞ்சர் ரயில் கிட்டத்தட்ட காலியாகவே வந்தது. ரெண்டாம் வகுப்பில் எங்களைத் தவிர யாருமில்லை.
ஃபாஸ்ட் பாசஞ்சர் என்றால் என்ன என்று டிக்கெட் சோதிக்க வந்த டிக்கெட் இன்ஸ்பெக்டரைக் கேட்டேன்.
”ஒரு ஸ்டேஷன் விட்டு ஒண்ணு இப்படி நின்னு போனா ஃபாஸ்ட் பேசஞ்சர் சார், எல்லா ஸ்டேஷன்லேயும் நின்னா வெறும் பேசஞ்சர். எங்கேயும் நிக்க மாட்டேன்னு சொல்லிட்டு கிராசிங்க், செக்கிங், ட்ராக் ரிப்பேர்னு எல்லா ஸ்டேஷன்லேயும் நின்னு, நடுவிலே அங்கங்கே பொட்டல்லேயும், அத்துவானக் காட்டிலும் நின்னு நின்னு வந்தா எக்ஸ்பிர்ஸ்” என்றார் அவர்.
சாயந்திரம் ஐந்துக்கு மறுபடி சென்னை எழும்பூர்.
சொல்ல விட்டுப் போனது. வண்டி புறப்படும்போது விட்டோபா அவசரமாக வண்டியோடு ஒரு நிமிடம் ஓடி வந்து அவுட்டரில் வண்டி சிக்னலுக்கு நிற்கத் தாவி ஏறி ஒரு நிமிடம் பேசி இறங்கிப் போனார். ஏப்ரலில் மகனுக்குக் கல்யாணத்துக்கு அழைக்க மெட்றாஸ் வரும்போது மீதி பேசலாமென்றார்.
நாளைக்கு எலக்ட்ரிக் குக்கர் வாங்கலாமா? ரத்னாவைக் கேட்டேன்.
செவ்வாய்க்கிழமை வேண்டாம். நாளை மறுநாள் வாங்கலாம் என்று சொல்லி விட்டாள் ரத்னா.
புதன்கிழமை.
ஃபோர்ப்ஸ் அண்ட் கேம்பெல் கம்பெனிக்கு ஃபோன் செய்தால் எங்கே கிடைக்கும் என்று தெரியும் என காலை ஆபீசுக்குக் கிளம்பும் அவசரத்தில் கேளப்பன் சொன்னார். அப்படியே பேசலாம் என்று தீர்மானித்தோம்.
ஜோசியர் வீட்டில் டெலிஃபோன் லைன் சரியில்லாவிட்டால் டெலிபோன் பூத்தில் போன் செய்து தகவல் கேட்க ரத்னா ஆவலாக இருந்தாள்.
ஆபீஸ் போய் வேலையை ஆரம்பித்திருக்க மாட்டேன். அதற்குள் என் சூப்பரிண்டெண்ட்டெண்ட் மேஜையில் ஃபோன் அடித்தது. நான் எடுக்க, ரத்னா.
”டெலிபோன் டிபார்ட்மெண்ட்காரங்க வந்திருக்காங்க உடனே வந்துட்டு போங்க.. ஜோசியர் வீட்டிலே இருந்து தான் பேசறேன்”.
”நான் சூபரின்டெண்ட்டெண்ட்’மா.. சும்மா வரமுடியாது”
“இதை வந்தவங்க கிட்டே சொல்லுங்க.. ஃபோன் வைக்க முடியாதுன்னு போயிட்டா என்னை குற்றம் சொல்லக் கூடாது அப்புறம்” ரத்னா பயமுறுத்தினாள்.
வீட்டுக்கு அவசரமாகத் திரும்பி வந்தேன்.
”சார் ராமோஜி ராவ் புத்து ராவ்..” கொண்டு வந்த காகிதத்தை என்னிடம் கொடுக்கும்போது டெலிபோன்காரர்களில் ஒருத்தர் கேட்டார்.
”புத்து ராவ் இல்லேப்பா.. பத்து ராவ்..”
“நீங்க ஒரு ராவோ பத்து ராவோ, ஒரே ஒரு டெலிபோன் கனெக்ஷன் சாங்க்ஷன் ஆகியிருக்கு சார்.. எங்கே வைக்கணும் சொல்லுங்க”.
அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு நான்கு இலக்க எண்ணை எனக்குச் சொந்தமாக்கி, டெலிபோனை இயங்க வைத்து, கையில் பத்து ரூபாயும் பெற்று டெலிபோன் டிபார்ட்மெண்ட்காரர்கள் போனார்கள்.
ரத்னா முதல் டெலிபோன் செய்ய உத்தேசித்தது மயிலாப்பூர் கபாலீஸ்வரன் கோவிலுக்கு. கோவிலில் டெலிபோன் இருக்குமா என்று எனக்கு சந்தேகம் வரவே, அடுத்து ஜோசியர் வீட்டுக்கு ஃபோன் செய்ய உத்தேசித்தாள். அங்கே லைன் டெட் ஆக இருக்கக் கூடும்.
”வேறு யாருக்கு போட?” ரத்னா கேட்டாள்.
”எங்கள் ஆபீஸ்”. அமுத்தலாகச் சொன்னேன்.
நான் டெலிபோனில் பேசி, ஆபீசுக்கு லீவு போட்டு விட்டேன் சௌகரியமாக டெலிபோன் வேலை முடிந்தால் போதுமா. டெஸ்ட் பண்ண வேண்டாமா?
”எலக்ட்ரிக் குக்கர் கம்பெனி போர்ப்ஸ் அண்ட் கேம்பெலுக்கு போன் பண்னலாமே” என்றேன் ரத்னாவிடம். புது டெலிபோன் வந்தவர்களுக்கு ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை யாருக்காவது நம்பர் சுழற்ற அடங்காத ஆர்வம் வருவது போல் ரத்னாவும் உடனே தொலைபேச முற்பட்டாள்.
நிசப்தம் அந்தப் பக்கம். இரண்டு நிமிடம் பொறுக்கச் சொல்லி இரண்டு டெலிபோன் எண்களைக் குறித்துக் கொள்ளச் சொன்னதை உடனே கடைப்பிடித்தாள் ரத்னா.
மவுண்ட் ரோடில் ஆயிரம் விளக்கு மசூதி பக்கம் ஒரு கடையும், ஹிக்கின்பாதம்ஸ் அருகே இன்னொன்றும் ஹீட்டர் விற்கின்றனவாம். ரட்டன் பஜாரில் இன்னொன்று உண்டாம்.
“அது ஏன் பத்திரிகையிலே எலக்ட்ரிக் குக்கர் விளம்பரத்தை இவ்வளவு கோரமா படம் போட்டு வெளியிடறீங்க? வாங்கணும்னு நினைக்கறவங்களையும் வாங்க விடாம துரத்திடும்… அதுக்கு பதிலா புதுசா சினிமா ஸ்டார் படமும் பக்கத்திலே குக்கர் படமும் போட்டுப் பாருங்க.. நம்ம தெலக்ஸ் புவனா மாதிரி அழகான நடிகை படம் போட்டா விற்பனை பிச்சுக்கிட்டு போகும்.. செய்யறீங்களா?”
இலவச விற்பனை ஆலோசனை தந்த மனநிறைவோ, அல்லது பக்கத்தில் நின்ற என்னைக் கிண்டல் செய்த நிறைவோ, அவள் கண்கள் சிரித்தபடி இருந்தன. இருக்கட்டும். ரத்னா மகிழ்ச்சியாக இருந்தால் போதும்.
டாக்சி வைத்துக்கொண்டு மவுண்ட் ரோடு கிளம்பி விட்டோம். வாசல் கதவைப் பூட்டி, ஒரு தடவைக்கு நாலு தடவையாக நான் பூட்டை சரிபார்த்து விட்டு வந்தபோது, கதவையே தூக்கிப் போயிடலாமே என்றாள் ரத்னா.
ஹிக்கின்பாதம்ஸ் பக்கத்துக் கடையில் எட்டு குக்கர்கள் வைத்திருந்தார்கள். நிறைய விற்கிறது என்றார்கள். இது ஒரு குக்கர் இருந்தால் போதும், விறகு, மண்ணெண்ணெய், ரம்பத்தூள் என்று எந்தச் செலவும் இல்லை என்று விளம்பரம் போல் சொன்னார்கள். ’விறகு லாபம் சமய லாபம் பண லாபம் வறுக்கிறது வேகவைக்கிறது பொறிக்கிறது எதுவும் ஒரு செகண்டில் செய்யலாம்’ என்று விற்பனையாளரான பாதித் துரைகள் நாட்டியமாடினர்.
”விலை நாற்பத்து மூணு லெஸ் இருபது பெர்செண்ட் டிஸ்கவுண்ட் போக முப்பத்துநாலரை ரூபாய் தான் .. கொள்ளை மலிவு.. போனால் வராது”
கொத்தவால் சாவடிக்கு டை கட்டிக் கூட்டி வந்தமாதிரி ரெண்டு கடையிலும் எலக்ட்ரிக் குக்கருக்கு கூவல்.
வீட்டுக்கு கொஞ்சம் போல பக்கம் என்று ஹிக்கின்பாதம்ஸ் கடையில் குக்கர் வாங்கியானது.
”சார், டெஸ்ட் பண்ணி வீட்டுலே டெலிவரி பண்றேன். நாளைக்குக் காலை பத்து மணிக்கு மேலே ஆளனுப்பறேன். அவர் எலக்ட்ரிக் குக்கர்லே சமைக்க டெமான்ஸ்ட்ரேஷன் கொடுப்பார்”.
பணம் கட்டிய ரசீதோடு வீடு வந்தபோது இதில் எத்தனை கலர் வரும் என்று கேட்க மறந்து போச்சே என்றாள் ரத்னா. ஃபோன் எதுக்கு இருக்கு?
இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் நினைவு வர, ரசீதில் ஷோரூம் டெலிபோன் நம்பர் பார்த்து டெலிபோன் செய்யும்போது, அமர்க்களமான மேட்டிமைக் களை ரத்னா முகத்திலும் குரலிலும் வந்திருந்தது.
”ஒரே கலர் தான் இருக்கு மேடம், நீலமும் வெள்ளையும் கலந்தது. ஓகே மேடம், காலையிலே போன் பண்ணிட்டு வரோம். சரி மேடம், உங்க டெலிபோன் நமபர் கொடுங்க. சரி மேடம், தேங்க்ஸ் மேடம்.”
இத்தனை ’மேடம்’ அவளுக்கு மரியாதை சூட்ட டெலிபோனில், அதுவும் ரெண்டே நிமிடத்தில் வந்து சேர்ந்ததை ரத்னா வெகுவாக ரசித்தாள்.
நான் நாளைக்கு குக்கரை இயக்கி வைக்கும்போது எலக்ட்ரீஷியனை வரச் சொல்லணுமா என்று கேட்க போன் செய்தபோது, ”வேணாம்யா நாங்களே பாத்துப்போம்” என்று யாரோ என்னை அய்யா விளியில் குறிப்பிட்டது நெஞ்சை ரணமாக்கியது. ரத்னாவுக்காகப் பொறுத்துக் கொண்டேன்.
என்னமோ நினைத்துக் கொண்டது போல புவனி வீட்டுக்கு சும்மா போன் செய்து பார்க்கச் சொன்னேன் ரத்னாவை. ஒரு புன்சிரிப்பு. நளினமாக விரல்களை நீட்டி எண்ணைச் சுழற்ற அவள் முகத்தில் பெரிய சிரிப்பு.
”புவனா.. நல்லா இருக்கீங்களா?… நம்ம வீட்டுலே இருந்துதான் பேசறேன் .. புது டெலிபோன் வந்திருக்கு நம்பரை குறிச்சுக்குங்க.. எட்டு ஆறு… சிங்கப்பூர் எல்லாம் எப்படி இருக்குது? நம்ம சாப்பாடு கிடைக்குதா? கும்பகோணம் போய்ட்டு வந்தோம்.. ராவ்ஜி கிட்டே பேசறீங்களா?”
ஃபோனை என்னிடம் கொடுத்து விட்டு ஒரு வினாடி என்னையே பார்த்திருந்தாள். நான் ஹலோ என்று சொல்ல, அவள் உள்ளே போனாள். அந்த நாகரிகம் என்னை நெகிழச் செய்தது.
”புவனி .. சிங்கப்பூர் என்ன ஆச்சு?” புவியை விசாரித்தேன்.
”பாதி ஷெட்யூல் முடிச்சாச்சு. ஹீரோவுக்கு காய்ச்சல் வந்து.. அது டைபாயிட்னு இப்போ தான் தெரிஞ்சுது. பம்பாய்லே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அட்மிட் பண்ணியிருக்காங்க.. ஷூட்டிங் கான்சல். இன்னிக்கு மதியம் தான் வந்தேன்”.
சட்டென்று குரல் தாழ்த்தினாள்.
”ராம், ஒண்ணு பேசலாமா?”
”நானே பேசணும்னு இருந்தேன்..” என்றேன்.
”ராத்திரி பத்து மணிக்கு ஃபோன் செய்யட்டா..?” எனக் கேட்டாள்.
“இல்லே நாள் நாளைக்கு ….”. மென்று முழுங்கினேன்.
போன் அந்தப் பக்கம் டொக்கென்று வைத்த சத்தம்.
”என்ன, புவி பேச மாட்டேனுடுத்தா ராஜா?” ரத்னா தோசை வார்த்தபடியே கேட்டாள். “பாவம், அலைச்சல்லே இருந்திருப்பா.. ரெஸ்ட் எடுக்கட்டும்..
“ஜோ பஜோ ஹரி கோ சதா” என்று சமையலறையில் இருந்து ரத்னா குரலில் மராத்தி அபங்க் பொங்கிப் பிரவகித்து வீட்டை நிரப்ப, எல்லாம் மறந்தேன்.
Excerpts from my forthcoming novel RAMOJIUM