நாவல் ‘ராமோஜியம்’ நிறைவு பெறுவது இப்படித்தான்

காலையில் குக்கரை எடுத்து வரும்முன் குடையைத் தோளில் மாட்டியபடி வந்த எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடு, ”வீட்டுக்குள் எர்த் செக் பண்ணிட்டீங்களா? ப்ளக் பாயிண்ட் எல்லாம் சரியா இருக்கா? பவர் சாக்கெட் லோடு தாங்குமான்னு பார்த்தாச்சா? பார்க்காம குக்கரை ஆன் பண்ணினா ப்யூஸ் போயிடுமே” என்று தொழில் வார்த்தைகளை சரமாரியாக உதிர்த்தார்.

”நாயுடு, அதெல்லாம் ஷோரூம் காரங்க பார்த்துப்பாங்க. வந்து பார்த்துட்டு ஏதாவது சொன்னா நாம மாத்திக்கலாம்” என்று நைச்சியமாகச் சொன்னேன்.

”சரி என்னமே சொல்றீங்க.. நல்லா நடக்கட்டும் .. தச்சிலாவை பார்த்தேன்.. உங்களை ரொம்ப விசாரிச்சதா சொல்லச் சொன்னா” என்று ரத்னா முன்னிலையில் சகஜமாகச் சொல்லி காப்பி குடித்துப் போனார். ஒரு வழியாக உருவாகவிருந்த சிறு சூறாவளியைச் சமாளித்தேன்.

பத்தரை மணிக்கு ஷோரூம் காரர்கள் வந்து எலக்ட்ரிக் குக்கரை எங்கே வைக்கிறது என்று கேட்டது முதல் ஆபீஸில் எனக்கு ஃபோனில் தொடர்ந்து நியூஸ் வந்துகொண்டே இருந்தது.

சமையல்கட்டில் நிறுவ கஷ்டம் என்பதால் கூடத்தில் புத்தக அலமாரியை நகர்த்தி வைத்து விட்டு அங்கே எழுதும் மேசையைப் போட்டு அதன்மேல் குக்கர் அமர்ந்ததாகத் தகவல்.

”ப்ளக் பாயிண்ட் சரியா இல்லையாம். இப்போதைக்கு போட்டிருக்காங்க. நாளைக்கு வந்து வேறே ஒண்ணு மாட்டிடுவாங்களாம்”.

”பத்து நிமிஷத்திலே அரிசி வெந்துடுத்து.. சாம்பார் அஞ்சு நிமிஷத்திலே ரெடி. அப்பளம் பத்து நிமிஷத்திலே ரெடி. ”

கிண்டி ரேஸில் முந்தி வரும் குதிரை பற்றி மைக்கில் அறிவிக்கிறது போல் தகவல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆபீஸில் மின்சாரம் இல்லாமல் வியர்த்து விறுவிறுத்து, தலைவலி பற்றிப் படர்ந்து கொண்டிருந்தது எனக்கு.

சாயந்திரம் வீட்டுக்கு வந்தபோது வாசலில் புவனாவின் கார் நிற்பதைக் கண்டேன். என்னைப் பார்க்க வந்தாளோ? ரத்னாவையா?

ரத்னாவும் புவனியும் சகல சந்தோஷத்தோடும், நிம்மதியோடும், ஆர்வத்தோடும் கதவைச் சார்த்தி வைத்து விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

”என்னங்க, புவி எனக்கு சிங்கப்பூர்லே என்ன வாங்கிட்டு வந்திருக்காங்க பாருங்க..”

பார்த்தேன். புடவைகள். செண்ட். சாக்லெட்.

“ரொம்ப நல்லது மை டியர் லேடீஸ். புவனா தேங்க்ஸ் அண்ட் வெல்கம் ஹோம்.. எனக்கு தலைவலி அதிகமா இருக்கு .. கொஞ்சம் காப்பி கிடைக்குமா?”

யாரோடும் பேசாமல் ஒரு முப்பது நிமிடம் படுத்து எழுந்திருக்க வேணும்போல் இருந்தது.

”இப்போதான் காப்பி போட்டேன். நாங்க குடிச்சு, பாக்கி இருக்கு. கொஞ்சம் ஆறிப் போயிருக்கு. ஹீட்டர்லே சூடாக்கித் தரேன்”.

ரத்னா பெருமையோடு காட்டிய ஹீட்டரை அல்லது குக்கரை பார்த்தேன்.

அவள் உள்ளே போனபோது புவனியின் கண்கள் என்னை ஊடுருவிப் பார்த்தன. எனக்கு அதன் அர்த்தம் தெரியும். அந்த உறவு இனி இல்லை என்று அவளிடம் எப்படிச் சொல்லப் போகிறேன்? எப்போது சொல்லப் போகிறேன்?

”அப்புறம் முக்கியமான விஷயம் ஒண்ணு..”

சொல்லியபடி அவள் மறுபடி என்னைப் பார்த்தாள். உள்ளே இருந்து காபிப் பாத்திரத்துடன் வந்த ரத்னாவையும் அவள் பார்வை ஆட்கொண்டது.

”சுவிட்ச் போடணுமா? நான் போடறேன் அக்கா”

கைப்பையில் இருந்து எதையோ எடுக்கப் போன புவனா அதை மீண்டும் உள்ளே வைத்தபடி எழுந்தாள். அவளைக் கையமர்த்தி நான் பண்றேன் என்று நடந்தாள் ரத்னா.
குக்கர் மேல் காபி பாத்திரத்தை ரத்னா வைத்து ப்ளக்குக்கு அடுத்திருந்த சுவிட்சை ஆன் செய்தாள்.

ஓவென்று பெருஞ்சத்தம். ரத்னா தலை சுவரில் பலத்த சத்தத்தோடு முட்ட விழுந்து கிடக்க, ப்ளக் பாயிண்டில் வெளிச்சம். ஃப்யூஸ் போய் வீட்டில் இருட்டு.
ரத்னா ரத்னா என்று சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல் பிதற்றியபடி நின்றேனே தவிர அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

அடுத்த பத்தாம் நிமிஷம் கேளப்பன் ஃபோனில் பேசி நாயர் டாக்டரை உடனே வரச் சொன்னார்., தொடர்ந்து, ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ண,
மின்சார இலாகாவுக்கு ஃபோன் பண்ண என்று அவரும் விலாசினியும் பரபரப்பாகச் செயல்பட, நானும் புவனாவும் மலங்க மலங்க விழித்தபடி ரத்னா பக்கத்தில் நின்றோம்.

அவளுக்கு நினைவு இருந்தது. என்றாலும் தலையில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்ததைத் திகிலுடன் பார்த்தோம்.

”ரத்னாக்கா கண்ணைத் திறந்து பாருங்க..” புவனா திரும்பத் திரும்ப கூப்பிட்டாள்.

நாயர் டாக்டர் வந்து உடனே ஆம்புலன்சும் வர, அடுத்த பத்து தினம் ஆஸ்பத்திரி, வீடு, ஆஸ்பத்திரி, வீடு என்று பரபரப்பாகப் போனது.

ரத்தச் சேதம் என்பதால் ரத்னாவின் ப்ளட் க்ரூப் ரத்தமான ஏபி பாசிடிவ் உடனே வேணும் என்று ஆஸ்பத்திரியில் சொல்லிக் கேட்டார்கள். ஏபி பாசிடிவ் அங்கே யாருமில்லை என்று ஒருவர் ஒருவராக டெஸ்ட் பண்ணித் தெரிந்தது.

நிமிஷாம்பாளையும், கற்பகாம்பாளையும், கருக்காத்த நாயகியையும் ரத்னாவுக்கு உடனே குணமடைய ஆஸ்பத்திரியில் ரத்னா பெட் பக்கம் நின்று நான் உருகிப் பிரார்த்தனை செய்தபோது புவனாவும் சேர்ந்து கொண்டாள்.

கூட்டம் போட வேண்டாம் என்று டாக்டர் என்னை மட்டும் வெளியே போகச் சொன்னார். கேளப்பனும் விலாசினியும் அங்கே பொறுமையாகக் காத்திருந்தார்கள். மனிதர்கள். மனதில் கசடில்லாதவர்கள்.

ஓ பாசிட்டிவ் ஆன நான் ரத்தம் தர முன்வந்தேன்.

”கொஞ்சம் வெயிட் பண்ணலாம் சார்.. ரத்தப் போக்கு நின்னிருக்கு.. ஏபி பாசிடிவ் அதுக்குள்ளே கிடைக்குதான்னு பார்க்கலாம்.. மத்த ஆஸ்பத்திரிகளுக்கும் ஃபோன் போட்டிருக்கார் டாக்டர் நாயர்”

அப்போது லாபரட்டரியில் புவனாவும் ஏபி பாசிடிவ் என்று அறிவித்தார்கள். நான் ரத்தம் தர்றேன் ரத்னா அக்காவுக்கு என்று உடனே முன்வந்தாள் புவனா.

அந்த நீண்ட இரவு முடியும்போது ரத்னா ரத்தம் செலுத்தப்பட்டு, ரத்தப்போக்கு நின்று போய், இனி அபாயமில்லை கட்டத்துக்கு வந்திருந்தாள். அந்த ராத்திரியிலும் டாக்டர் லட்சுமி வந்து பார்த்து விட்டு கவலைப்பட ஒன்றுமில்லை என்று நல்ல வார்த்தை சொல்லிப் போனாள்

ரத்தம் கொடுத்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புவனா, ரத்னா கர்ப்பம் தரித்ததை டாக்டர் லட்சுமி சொல்லக் கேட்டு நிறைவாகச் சிரித்தாள். என் கையை ஆதரவாகப் பிடித்துக் குலுக்கி கைசேர்த்து வைத்துக் கண்களை மூடிக்கொண்டாள். மெல்ல விடுவித்துக்கொண்டு வாசலுக்கு வந்தேன்.

ரத்னாவுக்கோ, வயிற்றில் கருவுக்கோ எந்த பிரச்சனையுமில்லாமல் அவள் ஒரு வாரத்தில் படிப்படியாகக் குணம் அடைந்தாள்.

முத்தியால் நாயக்கன் தெரு முழுக்க, கஸ்தூர்பா மாதர் சங்கத்தில் எல்லோரும் என்று ஆஸ்பத்திரிக்கு வந்து ரத்னாவின் நலம் விசாரித்துப் போனார்கள். சீஃப் சூபரிண்டெண்டெண்ட் பந்துலு சார் கூட வந்திருந்தார்.

வந்தவர்களில் ஒருவர் மணவாள நாயுடு.

”ஏன் சார் கழுதையா கத்தினேன் எர்த் சரியாக்கணும்.. ஒழுங்கா கனெக்ஷன் கொடுக்கணும்னு.. யாரோ உட்டாலக்கடி வேலை பார்த்து தங்கச்சி உசிரையே வாங்கறமாதிரி போச்சு பாருங்க..” என்றார் நாயுடு. அவர் டை கட்டி பேண்ட் போட்டு, இப்படி வேட்டி சட்டையில் வராமல் இருந்தால் அவர் சொன்னதைக் கேட்டிருப்பேனோ என்னமோ.

ரத்னா டிஸ்சார்ஜ் ஆகி வருவதற்குள் புவனாவிடம் என் முடிவைச் சொல்ல மாம்பலம் போனேன். அவளிடம் நான் எதுவும் சொல்வதற்குள், எல்லாம் அக்கா டிஸ்சார்ஜ் ஆகறபோது பேசலாம் என்று சொல்லி விட்டாள்.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தது புவனாவின் காரில் தான். ஓட்டி வந்தவள் புவி தான்.

வீட்டுக்குள் ரத்னாவை இன்னும் ஒரு வாரம் படுக்கையில் இருக்கச் சொல்லிக் கட்டுப்பாடு உள்ளதால், கவனித்துக் கொள்ள டெல்லியில் இருந்து பீமாராவும், சுமித்ராவும் நாளை வர இருக்கிறார்கள்.

இன்று ராத்திரி நானும் இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்தாள் புவனா. பலகீனமான ரத்னாவும் நானும் அவளைக் கட்டாயப்படுத்தி அனுப்ப முற்பட்டோம்.
”இருங்க.. ஏன் ராம் என்னை அனுப்பறதிலேயே இருக்கே.. நான் ஒண்ணு கொடுக்க வேண்டியிருக்கே..”

அவள் கைப்பையில் இருந்து ஒரு உறையை எடுத்தாள்.

”அடுத்த மாசம் எனக்கு கல்யாணம்.. பம்பாய் படம் சிங்கப்பூர்லே ஷூட் பண்றோமே அந்தப் படத்தோட டைரக்டர் தான் ப்ரைட் க்ரூம்.. அவசியம் ரத்னாக்காவோட வரணும்.. நான் கொடுக்கற முதல் இன்விடேஷனே இதுதான். அடுத்து தான் பந்துலு அம்மாஞ்சிக்கும் காளிங்க ரத்னம் சாருக்கும் தரணும்..”

பத்திரிகையை எடுத்து என்னிடம் நீட்டினாள். ரத்னா படுக்கையில் உட்கார்ந்தபடியே பத்திரிகையை வாங்கிப் படிக்க முற்பட்டவள் உறங்கிப் போனாள்.

“அப்போ அப்போ தூங்கிடுவாங்க.. ப்ராப்ளம் இல்லே.. சரியாயிட்டிருக்காங்கன்னு அர்த்தம்” என்று சொல்லியிருந்தார் டாக்டர்.

புவனா வெளிநடையில் எனக்காக நின்றாள்.

”ராம், ரத்னாவோட அந்தரங்கமா இருக்கறபோது இதை நினைச்சுக்க. என் ரத்தம் அவளுக்குள்ளே ஓடுறது.. அந்த வேளையிலே நினைவு வந்துட்டே இருக்கட்டும்..இது நிலையான உறவா இருக்கட்டும்.. நம்ம மாதிரி திடீர்னு வந்து திடீர்னு உச்சம் தொட்டு திடீர்னு ஒண்ணும் இல்லாம போயிடாது.. எனக்கும் நம்ம ஒரு வருட உறவு மறக்காது.. நடுவிலே உன் கிட்டே சொல்லாமலேயே உன்னோட மகனையோ மகளையோ கலைச்சுட்டேன்.. பம்பாய் போய்ட்டு வந்துட்டிருக்கறது இதுக்கெல்லாம் சவுகரியமா இருக்கு.. போகட்டும், அதோட தம்பியோ தங்கச்சியோ இங்கே ரத்னாக்கா வயித்திலே நல்லா இருக்கட்டும், நல்லா பிறந்து விழுந்து நல்லா வளரட்டும்.. இனிமேல் கலைக்க எல்லாம் தேவை இல்லே.. இனி ரவீந்தர், அதான் என் உட் பி கணவர் மட்டும் தான், நான் மட்டும் தான்… அவனுக்கு உன்னை பாக்கணும்னு ஆசை.. சீக்கிரம் ஒருநாள் கூட்டி வரேன்.. ரத்னா அக்காவை பார்க்க வருவேனில்லே.”.

எனக்கு பதில் பேச நேரம் கொடுக்காமல் புவனா வாசல் படிக்கட்டு இறங்கினாள்.

”புவி புவி புவி..”

நான் அவள் பின்னால் போனேன்.

”ஆமா, புவி புவி புவி இல்லே ரத்னா ரத்னா ரத்னா இதைத் தவிர வேறே எப்படி ரியாக்ட் பண்ணுவே நீ? சந்தோஷமா இரு.. நல்லா சாப்பிடு.. நல்ல ஃபில்டர் காப்பி குடி.. சதா கிண்டலும் கேலியுமா பேசு.. நல்லா இரு.. வரட்டா..” காரைக் கிளப்பினாள்.

தெலக்ஸ் புவனா போய்விட்டாள்.

தொலைபேசி மணி அடிக்கும் சத்தம். எடுத்து ஹலோ என்றேன். அந்தப் பக்கம் யாரும் பேசவில்லை. மனக் குமைச்சலோடு ரத்னா என்று அழைத்தபடி உள்ளே போனேன்.

(Excerpts from my forthcoming novel RAMOJIUM)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன