ராமோஜியம் – பின்கதை

இன்னும் இருக்கா, இவ்வளவுதானா? யட்சன் கேட்டான்.

எழுதிக் கொண்டே போனால் நிகழ்ந்து கொண்டே இருக்கும். எங்கேயாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? நான் பதிலுக்குக் கேட்டேன்.

எழுத ஆரம்பித்த ராமோஜி இல்லையே முடிக்க வந்திருப்பது? நியாயமான கேள்வி அவன் பின்னும் கேட்டது.

ஏற்கனவே சொன்னேனே.

இருநூறு வருஷத்தில் பத்து ராமோஜிகளாவது பிறந்து சுவாசித்திருக்கலாம. அடுத்த ராமோஜிகள் வந்து கொண்டிருக்கலாம். எல்லோருடைய ராமோஜி கதைகளும் ஒன்றாக, இது என் ராமோஜியம்.

நான் கேட்டது, பார்த்தது, கேட்டவர்களும் பார்த்தவர்களும் சொல்லக் கேட்டது என்று கலந்து வந்தது ராமோஜியம். சரித்திரப் புத்தகம் மாதிரி காலம் வரிசையாகக் கடந்து போகும் வருஷங்களாக வரவில்லை இது.

நடந்ததும் நடக்காததும் எதெல்லாம் எனக் கேட்டால் எதுவும் தீர்மானமாகச் சொல்ல முடியாது. ஆனாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு ராமோஜி உண்டு.

அப்படியே ஆகட்டும், பின்கதை சொல்லும் நேரம் இது. வா.

யட்சன் நாவல் மரக் கிளையில் ஆடியபடி அழைத்தான். கையில் பளபளவென்று நேர்த்தியான ஆரன்முள உலோகக் கண்ணாடி ஒன்றைப் பிடித்திருந்தான் அவன். காலக் கண்ணாடியாம். என்ன ஆனது என்று ஊகம் செய்ய வேண்டாமாம். கண்ணாடி சொல்லி விடுமாம் ஒரு நொடியில்.

தேவைப்பட்டால் கண்ணாடி பார்க்கலாம் என்று பிடுங்கி வைத்தேன். நினைவை அசை போடுவதை விடவா கண்ணாடியில் காலம் பார்ப்பது சுவாரசியமானது?

பட்டணம் பொடி ராமோஜி ராவ் தமிழக மாவட்டம் ஒன்றுக்கு உதவி மாவட்ட ஆட்சியாளராக உத்தியோகம் பார்த்து, இந்திரா காந்தி எமர்ஜென்சியை பிரகடனம் செய்த அதே தினம் ரிடையர் ஆனார்.

நெருக்கடி நிலைமையை எதிர்த்து யாராவது பேசிவிடுவார்கள் என்ற பயம் காரணமாகத் தனக்கு வழியனுப்பு விழா எதுவும் நடத்த வேண்டாம் என்று சொல்லி விட்டார் அவர்.

சர்க்கார் மாறலாம், சர்க்கார் உத்தியோகஸ்தர் எப்போதும் சர்க்காரின் பிரதிநிதி. சர்க்காரை எதிர்க்கும் பேச்சு, எழுத்து, செயல் எதையும் ஆதரிக்கக் கூடாது என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்த ராமோஜி ராவ்ஜி 1997-நவம்பர் மாதத்தில் தன் எண்பதாம் வயதில் லண்டனில் இயற்கை எய்தினார். முதுமை சம்பந்தமான நோய்க் காரணங்களால் நிகழ்ந்த மரணம் அது.

ராமோஜி ராவ் தன் நாற்பத்தைந்தாம் வயது வரை பல இடங்களில் தொடுப்பு ஏற்படுத்தி வைத்திருந்ததாக ரகசியம் பகிரும் நண்பர்கள் கூட்டத்திலும், ஆபீசில் மதிய உணவு முடிந்து கடலை உருண்டை சாப்பிட்டபடி நிற்கும் முன்னாள் சக அதிகாரிகள் கூட்டத்திலும் கிசுகிசுக்கப்பட்டார்.

அதில் சரிபாதி உண்மையும் மீதி பொய்யும். உதாரணம் லண்டன் ஹைட் பார்க்கிலும் பிக்கடெலியிலும் ராமோஜி ராவ், மாஜி நடிகை தெலக்ஸ் புவனாவோடு கை கோர்த்துக்கொண்டு சுற்றித் திரிந்ததாக வந்த செய்திகள்.

ராமோஜி ராவின் பிரியத்துக்குரிய மனைவி ரத்னா பாய் தன் கணவர் இறப்பதற்கு நான்கு மாதம் முன் தன் எழுபத்தேழாவது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார்.

ராமோஜி ராவ் – ரத்னா பாய் தம்பதிகளின் ஒரே மகள் சுவதந்திரா தேவி. மகளோடு அவர்கள் லண்டன் நைட்ஸ்பிரிட்ஜ் பகுதியில் வசித்து வந்தார்கள்.

சுவதந்திரா தேவி பிரபல பிரிட்டீஷ் டெலிவிஷன் நட்சத்திரம் சர் ஜேம்ஸ் ராபர்ட்சனின் மனைவியாவார். ‘நிமிஷா’ என்ற பெயரில் டார்ஜிலிங் டீ இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிறுவனத்தை லண்டனில் நடத்தி வருகிறார்.

சுவதந்திரா தேவியின் குடும்ப நண்பரும் பழம்பெரும் தென்னிந்திய சினிமா நடிகையுமான தெலக்ஸ் புவனி பங்கு பெற்று வெற்றிகரமாக நடந்து வரும் பிரிட்டீஷ் வர்த்தக நிறுவனம் நிமிஷா.

தமிழிலும் இந்துஸ்தானியிலும் தலா பத்து சினிமா படங்களில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்ற புவனலோசனி என்ற புவனா தன் கணவரோடு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தது இங்க்லீஷ் படத்தில் நடிக்க இல்லை.

சினிமா அலுத்துப் போச்சு என்று ஃபிலிம் ஃபேர் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த ஜனவரி 1949-இல் லண்டனில் அவளுக்கு ராயல் ஆல்பர்ட் ஹாலில் பொறுப்பாளராக உத்தியோகம் கிடைத்தபோது.

தெலக்ஸ் புவனாவின் கணவன் முன்னாள் சினிமா டைரக்டர். லண்டன் சௌத்ஹாலில் இந்தியக் கைவினைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த அவன், புவனிக்கு விவாகரத்து அளித்து விட்டு வேறு கல்யாணம் செய்து கொண்டு மேன்செஸ்டரில் செட்டில் ஆகிவிட்டான்.

புவனி தாம்பத்தியம் அலுத்துப் போனதாகப் பேட்டி அளிக்கவில்லை என்று யட்சன் அறிவிக்கிறான்.

விலாசினி நாயர், கேளப்பன் நாயர் தம்பதிகள் மத்திய அரசு தொல்பொருள் இலாகாவிலும், தில்லி வானொலி நிலையம் மலையாள ஒலிபரப்பு பகுதியிலும் அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்று தில்லிக்குக் குடிபெயர்ந்தது சுதந்திரம் கிட்டியதற்கு அடுத்த ஆகஸ்டில். கேரள சமாஜத்தில் 1997 வரை சுறுசுறுப்பாக இயங்கிய இந்தத் தம்பதி அதற்கடுத்த ஆண்டு கேரளத்தில் குட்டநாடு பிரதேசத்தில் அம்பலப்புழைக்கு வெகு அருகே உள்ள ரம்மியமான கிராமமான தகழிக்குக் குடிபெயர்ந்ததாக யட்சன் அறிவித்தான்.

புரசைவாக்கத்தில் பிரசித்தி பெற்ற இடந்தலை மிருதங்க வித்வான் வேலப்ப நாயக்கர் பெண் பாடகிகளுக்கு மட்டும் பக்க வாத்தியம் வாசிப்பதாக உறுதி செய்துகொண்டு ஒரு இருபது வருஷம் சிறப்பாக டிசம்பர் சங்கீத சீசனில் மின்னி, சினிமாவிலும் இசை அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டபடி அடக்கியும் குமுறியும் வாசித்து கலைமாமணி விருது வாங்கினார். பத்மஸ்ரீ விருதுக்கு சிபாரிசு அனுப்பப்பட்ட வருடம் அதற்கு முன் இயற்கை எய்தினார். அவருடைய முட்டை ஏஜன்சி இரண்டே வருடத்தில் ஊற்றி மூடப்பட்டது என்று யட்சன் அறிவித்தான்.

சீஃப் சூப்பரிண்டெண்ட்டெண்ட் பந்துலு ராஜமுந்திரியில் ரெவின்யூ டிவிஷனல் சீஃப் ஆபீசராக பதவி வகித்து ஓய்வு பெற்று சென்னை தியாகராய நகரில் சிருங்கேரி மடம் அருகே வீடு வாங்கி செட்டில் ஆனது 1962-ஆம் வருடம் பக்தவத்சலம் முதலமைச்சரான காங்கிரஸ் அரசு வந்தபோது.

அதற்கு இரண்டு வருஷம் கழித்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அவர் வீட்டில் கல் வீசப்பட்டது. அப்போது அவர் இந்திப் பிரசார சபையில் இந்தி பிரசாரகராகக் கௌரவப் பணி புரிந்து வந்ததாகவும், அதை அப்புறம் நிறுத்தி வைத்ததாகவும் யட்சன் அறிவித்தான்.

ரத்னா பாயின் சகோதரன் பீமா ராவும் மனைவி சுமித்ராவும் கொழும்புவுக்கு இடம் மாற்றி விட்டார்கள். அங்கே ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் பொறுப்பாசிரியராக பீமா பதவி ஏற்றபோதே எண்பது வயதில் விருப்பமிருந்தால் பதவி ஓய்வு பெறலாம் என்று சொல்லி விட்டார்களாம். சுமித்ரா இலங்கை வானொலியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்று விட்டாள். எண்பது வயதுக்கு மேல் இன்னும் தினமும் ஆபீஸ் போகிறார் பீமாராவ் என்று யட்சன் அறிவிக்கிறான்.

அவர்களின் மகள் பூர்ணா, டாக்டர் பூர்ணா ராவ்-சாட்டர்ஜி ஆனாள். குழந்தை மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்று கரோல்பாகில் குழந்தைகள் மருத்துவமனை திறந்திருக்கிறாள் அவள். கைராசி டாக்டர் என்ற பெயர் வாங்கிய பூர்ணாவின் மருத்துவமனையில் கூட்டம் அலைமோதுகிறது. அவளுடைய கணவர் டாக்டர் ரோபின் சாட்டர்ஜி பெயர் பெற்ற நுரையீரல் சிகிச்சை நிபுணர். யட்சன் அறிவிப்பது இது.

விட்டோபா 1960-இல் டீ ஏஜென்சியை நிர்வகித்தபடி, தொண்டையில் புற்றுநோய் கண்டு காலமானார். குடும்பம் பம்பாய்க்கு, அவர் மகனோடு குடிபெயர்ந்தது என்று யட்சன் அறிவிக்கிறான்.

முத்தியால் நாயக்கன் தெரு ஐயங்கார் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் 1980-களின் நடுவாந்திரம் வரை சக்கைப்போடு போட்டது. அப்புறம் உலகம் முழுக்க, புரசைவாக்கம் முழுக்க, பெர்சனல் கம்ப்யூட்டர் வந்து டைப்ரைட்டர்களுக்கும் பிட்மென் சுருக்கெழுத்துக்கும் நிரந்தர ஓய்வு கொடுத்து விட்டது.

டைப் பழக யாருமின்றி, தூசி படிந்த டைப் ரைட்டர்களின் முன்னே உட்கார்ந்து டைப் படிக்கப் போட்டிருந்த மர ஸ்டூல்கள், உடம்பு சூடு இல்லாமல் குளிர்ந்து போயிருந்தன.

பழைய ஹால்டா, ரெமிங்க்டன் டைப்ரைட்டர்களை இன்ஸ்டிட்யூட்டில் இருந்து வாரி எடுத்துப் போட்டு ஒரு மாட்டு வண்டி ஊர்ந்து போனதைத் தெருவில் யாரும் கவனிக்கவே இல்லை என்று யட்சன் அறிவித்தான்.

ராமோஜி ராவ் சென்னையில் வசித்த முத்தியால் நாயக்கன் தெருவில் மார்கழி மாதக் காலை திருப்பாவை அனுசந்தான பஜனை கோஷ்டி நாலு வீதி பாசுரம் பாடிச் சுற்றிவருவது நின்று போய் ஐம்பது வருடத்துக்கு மேலாகிவிட்டது. தெருவெல்லாம் குழி வெட்டி கேபிள் பதித்துக் கொண்டிருப்பதால் நடக்கவே கஷ்டமாக இருப்பதாகத் தெரிகிறது என்றான் யட்சன் காலக் கண்ணாடியைப் பார்த்தபடி.

விருந்தினர் கட்டுப்பாடு சட்டம், ஊரடங்கு உத்தரவு, உணவுப்பொருள் ரேஷன் எல்லாம் சரித்திரப் புத்தகத்துக்குள் போனதாக எழுத ஆரம்பித்தபோது யட்சன் கையைப் பிடித்து இழுத்து, பொறு என்றான்.

எழுது என்று யாராவது சொல்லக் காத்திருக்கிறேன்.

. (நிறைவு)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன