என் ’வாழ்ந்து போதீரே’ நாவல் -சில பகுதிகள்
உடம்பு சொடுக்கெடுத்து விட்டது போல் இருந்தது. ராஜாவுக்கு நடக்க நடக்கக் கம்பீரம் கூடிக் கொண்டு வந்ததேயல்லாமல் இம்மியும் அது இறங்கவில்லை. மணக்க மணக்க எல்லாத் தைலத்தையும் சுடச் சுடக் கலந்து உடம்பெங்கும் நீவி நாலைந்து ராட்சதர்கள் மரியாதையோடு உடம்பு பிடித்து விட்டு எதிர்பார்க்காத நேரத்தில் அவரைப் புரட்டிப் போட்டு முதுகில் ஏறி நின்று திம்திம்மென்று குதித்துக் கும்மாளமிட்டு இறங்கிப் போக எழுந்து உட்கார்ந்தது முதல் உடம்பில் ஒரு வலி, நோவு, பலகீனம் எதுவுமில்லாமல் போனது.
அபீசீனியாவில் இருந்து வந்த ஒரு உடம்பு பிடிக்காரனும் அவனோடு வந்த பொம்பிளையும் அரண்மனைக்கே வந்து இப்படி மணிக் கணக்காக உடம்பு பிடித்து விட்டார்கள். ராணி தாய்வீடு போயிருந்த நேரம் அது. அபீசீனியாக்காரிப் பொம்பளை மட்டும் ராஜாவோடு இருந்து கள்ளுத் தண்ணி போல போதையேற்றிச் சிரிக்க, ராஜா சமர்த்தாக உறங்கிப் போனார் அன்று.
இங்கே பெண் வாசனையே கிடையாது. ஆவி பறக்க, மலையாளத்தில் பேசியபடி காய்ச்சிய எண்ணெயை அறை வாசலில் வைத்து விட்டு வேஷ்டி கட்டிய இளம்பெண்கள் நகர, மல்லர்கள் தான் எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தியது. ரெண்டு பொற்காசுகளை ராஜா ஆயுர்வேத வைத்தியனுக்கும், பிரித்துக் கொள்ளச் சொல்லி இன்னுமொரு காசை இந்த மல்லர்களுக்கும் தர, அவர்கள் காட்டிய சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை.
ஒரு பெரிய சீனப் போத்தல் நிறைய இன்னும் ஒரு வருஷம் ராஜா பூசிக் கொள்ள மூலிகை எண்ணெய் அன்பளிப்பாகக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். நாசித் துவாரத்திலும் ஆசனத் துவாரத்திலும் தினம் ஒரு துளி தொட்டு வைத்தால் ஒரு சுகக்கேடு அண்டாதாம். அரைக்குக் கீழே முன்னாலும் வைத்துக் கொண்டால் சகல சுகமும் சித்திக்குமாம். என்ன, நாள் முழுக்க அங்கே எரிச்சல் கொஞ்சம் போல் இருக்கலாம். அது எதுக்கு இழவு.
புஸ்தி மீசைக் கிழவன் வைத்தியசாலையைச் சுற்றிப் பறந்தபடி ராஜா இதை சேடிப்பெண்ணுக்கு எங்கெல்லாம் தடவலாம் என ஆலோசனை சொன்னான். போடா வக்காளி என்று ராஜா மிதமாக அவனைக் கடிந்து கொள்ள, என் மத்த இடத்து மசுரே போச்சு என்று சிரித்துக் கிழவன் கோலாகலமாக மிதந்தான்.
வைத்தியசாலை வாசலில் அரண்மனை ஜோசியர் தரையில் பரத்திய மண்ணில் வேப்ப மரக் குச்சி கொண்டு ஷட்கோண யந்திரம் நிறுத்துவதன் நுட்பங்கள் குறித்துப் பேச சுற்றி ஏழெட்டுப் பேர் நின்று சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஜோசியர் அறிவுஜீவியாகக் காட்சி அளிப்பது மனதில் பட, ராஜா மனதில் தேவையில்லாத அசூயை எழுந்தது.
கேணையன் நாமக்கார அய்யன் சோழியை உருட்டிப் போட்டுக் காசு பார்க்கக் கிளம்பிட்டான். நம்ம மீசையான் வேறே ஒய்யாரமா அங்கே இங்கே சாடறான். இவனுகளோட என்ன எழவுக்குடா நான் கூட வரணும்?
அவர் பார்வை பனியன் சகோதரர்களைத் தீய்க்க அவசரமாகத் தேடத் தெரு வளைந்து வலது வசம் திரும்பி மேற்கு திசையில் நீளும் வீதியில், வாசலில் கூரைக் கொட்டகை போட்ட கட்டிட வாசலில் அவர்கள் நின்றிருந்தார்கள்.
மரமேஜை போட்டு அங்கே நாலைந்து பேர் உட்கார்ந்து காகிதங்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னால், ஒருத்தன் பிருஷ்டத்தை ஒட்டி அடுத்தவன் என்ற கணக்கில் சர்ப்பமாக வளைந்து மனுஷர்கள் வரிசையாக நின்றார்கள். கும்பினி உத்தியோகஸ்தர்கள் வரி வாங்கவோ புதுச்சேரியில் பிரஞ்சுக் காரர்களோடு யுத்தம் செய்ய ஆள் எடுத்து அனுப்பவோ ஏற்படுத்திய இடம் என்று ராஜாவுக்குத் தோன்றியது. பக்கத்திலே கெந்தி நடந்து வந்த புஸ்தி மீசைக் கிழவன் இல்லையெனத் திடமாக மறுத்தான். நடக்க வேணாம், தரையை ஒட்டிப் பிருஷ்டம் படப் பறந்து செல்லடா கொசுவே என கேட்டுக் கொண்டால் வெகு இஷ்டமாகச் செய்வான்.
இவங்க எல்லாம் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள். வெள்ளைக்காரன் சர்க்கார் இல்லே இப்போ நடக்கிறது. நம்மாளுங்க தான். ஆட்ட பாட்டமா நாலு நாள் வைபோகம் நடத்தி வெள்ளைக்காரனும் அபீசினியக் கருப்பனும் வந்து பார்த்து சந்தோஷப்பட ஏற்பாடு. இங்கே நிக்கறவன் எல்லாம் ஆடவும் பாடவும் வந்தவனுங்க. நேரம் ஒதுக்கச் சொல்லி காகிதத்துலே மனு கொடுக்கறாங்க.
என்ன தான் இளக்காரம் செய்தாலும் புஸ்தி மீசையானுக்கு இருக்கும் கற்பூர புத்தி தனக்கு இல்லை என்பதை ராஜா மனசார அங்கீகரித்தார். அது கிழவன் மேல் நொடி நேர அபிமானமாக மலர்ந்தது. அதுக்குக் காசா பணமா செலவு?
மாமா, எல்லாம் சரிதான். நம்ம களவாணிப் பயலுக அங்கே என்னத்துக்கு நிக்கறாங்க? உங்களையும் என்னையும் சப்ஜாடா ஒரு வெலை பேசி இங்கே சர்க்காருக்கு வித்துட்டுப் போகலாம்னு யோசிக்கறானுங்களோ?
செஞ்சாலும் செய்வானுக மாப்ளே. சூதானமா நடந்துக்கறது நல்லது. உனக்கு உடம்பு வேறே இப்போ சொடுக்கெடுத்து விட்டுட்டான் மலையாளத்தான். இவனுகளோட போனா, மலையாளச்சி மாரைக் காட்டறேன் மத்ததைக் காட்டறேன்னு பெரிசா கருங்குழியிலே உன் தலையை நுழைச்சு விட்டுடுவானுங்க. அவமானம் எல்லாம் உனக்குத்தான் அப்புறம். உஷார்.
தான் கொஞ்சம் தாழ்ந்தாலும் உலகை ரட்சிக்க வந்த அவதாரம் போல உதடு வீங்கி நான்நான் என்று நிற்கிற கிழவனை போடா பருப்பே என்று மனதில் திட்டியபடி ராஜா அந்தக் கொட்டகைக்குள் நுழைந்தார்.