என் அரசூர் நான்கு நாவல் வரிசையில் இறுதி நாவலான ‘வாழ்ந்து போதீரே’- நூலில் இருந்து
வழக்கு முத்தச்சி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்.
ஆலப்புழ – அம்பலப்புழ டவுண்பஸ் படிக்கட்டில் பல்லி போல தொங்கிக் கொண்டு நின்ற க்ளீனர் பையன் சத்தமாக அறிவித்துச் சிரித்தான்.
பஸ் இங்கே ஒரு அஞ்சு மினிட் நிக்கும். தோச, பரிப்பு வட, சாயா, மலையாளத்திலே தெறி பறைய, தமிழ்லே கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட வசதி எல்லாம் உண்டு மான்ய மகா ஜனங்களே. வழக்கு முத்தச்சிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.
அவன் அறிவிக்க, திலீப் அதிசயமாகப் பார்த்தான். மற்ற பயணிகள் குலுங்கிச் சிரித்தபடி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல கடைக்கு ஏக காலத்தில் நடந்து பரிப்பு வடையும் சாயாவும் உடனே விளம்பித் தரும்படி கோரினார்கள். கடைக்குப் பின்னால் தொலைவில் ஆங்காங்கே செடிகளுக்கும் புதர்களுக்கும் இடையில் குத்தி இருந்து சிறுநீர் கழிக்கும் வாடை இங்கே முகத்தில் குத்தத் தொடங்கி இருந்தது.
மிஞ்சிப் போனால் பத்து நிமிஷமோ, பதினைந்து நிமிஷமோ பிடிக்கும் இந்தப் பயணத்தை அரைமணி நேரமாக்கிய மகானுபாவன் யார் என்று திலீப்புக்குத் தெரியவில்லை.
உலகத்தோடு ஒட்டி செயல்பட, திலீப்பும் ஒரு கயிற்றைப் பற்றி. பற்றி? ஓரமாக உட்கார்ந்து மூத்திரம் போக வேண்டும். அவன் அவசரமாக இறங்கினான்.
சாப்பாட்டுக்கடைவாசலில் கால் நீட்டி இருந்த முத்தச்சி அவனைப் பார்த்ததும் தள்ளாடி எழுந்து அவனைக் கும்பிட்டாள்.
திருமேனி எனக்கு உடனே சாவு வர ஆசீர்வாதம் பண்ணு. ஜீவிதம் மதியாயி.
திலீப் சொன்னான் – அதது அதது நடக்கற நேரத்தில் நடக்கும். நான் திருமேனி இல்லே பாட்டி. பம்பாய் கி சோக்ரா. சின்னப் பையன்.
அவன் சட்டைப் பையில் இருந்து பர்ஸை எடுத்தான்.
இது திட்ட இல்லே, பாட்டித் தள்ளை. வாழ்த்த. நுங்கம்பாக்கம் நீலகண்டய்யர் சம்சாரம் கற்பகம்மாள் இன்னும் இருக்கபட்ட காலம் சௌக்கியமாக கழிந்து தூக்கத்திலேயே சொர்க்கம் போய்ச் சேரணும். தூக்கம்னா மலையாளத்திலே வேறே தானே. அது வேணாம். உறக்கத்திலேயே. உறங்கியே மெல்ல போகட்டும்.
கிழவி திருதிருவென்று விழித்தாள். பிரியமாகக் காசு கொடுத்து ஒருத்தரை வாழ்த்தச் சொன்னது அவள் ஆயுசிலேயே இதுதான் முதல் முறை.
வாய் கோணி, கண் நிலைக்க அவள் வெற்றுவெளியில் கைகளை நீட்டிப் பரத்தினாள். சுழலில் அகப்பட்டு வெள்ளப் பெருக்கத்தில் அடித்துப் போகப்படும் போது சின்னச் செடியையோ மிதக்கும் மரக் கட்டையையோ பற்றியபடி நீந்திக் கரை சேர்ந்து உயிர் பிழைக்கச் செய்யும் கடைசி முயற்சி போல அவள் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள். இதுவரை கற்றது எல்லாம், பேசியது எல்லாம், சபித்தது எல்லாம் பிரயோஜனப் படாதவை என்று ஆக, இன்னொரு தடவை முதலில் இருந்து தொடங்கி, புதிய ஒரு மொழியில் எழுத்தெண்ணிப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவளாக அவள் தெரிந்தாள். நீட்டிய கைகள் நீட்டியபடி இருக்க அவள் மெல்ல எழுந்தாள். ஓவென்று அழுதபடி திலீப்பின் கையைப் பிடித்துக் கொண்டாள் –
நாயனே, எனக்குத் தெரியாது. யாரையும் வாழ்த்த எனக்குத் தெரியாது.
சொல்லியபடி அவன் கையில் அவனிடமிருந்து வாங்கிய ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு அவள் தள்ளாடித் தள்ளாடி நடந்து போய்விட்டாள். பஸ் திரும்பக் கிளம்பும் போது யாருமே எதுவுமே பேசவில்லை.
கிழவியைச் செயலில்லாமல் நான் ஆக்கி விட்டேனா? புதுசாகக் கவலைப் பட ஆரம்பித்தான் திலீப். எதிர்பார்க்க, கரிசனம் காட்ட, பயம் விலக எவ்வளவோ இருக்க, இந்த வயசான பெண்பிள்ளை எங்கே இதற்கு நடுவே வந்தாள். அவளுக்கு ஏதும் கயிறுகள் இல்லை. அவள் நினைத்தபடி நினைத்த இடத்தில் நினைத்த நேரம் கோலூன்றி நடுங்கும் கால்களை ஊன்றி ஆட முயலலாம். திட்டாமலேயே உயிர் வாழ முடியாதா என்ன? வாழ்த்தாமல் இத்தனை வருடம் வாழ்ந்தவளுக்கு அது என்ன கஷ்டம்? ஆனால் வருமானத்துக்கு என்ன செய்வாள்? திலீப் அவளை மறுபடி சந்திக்கும்போது ஐந்து ரூபாய் கொடுப்பான். அவனால் முடிந்தது அதுதான்.
என்னால் முடிஞ்சது இதுதான். இந்த சம்பளம் தான் திலீப்.
பிஸ்கட் சாஸ்திரி நேற்றைக்கு அவனிடம் சொன்னார். இன்னும் இருநூறு ரூபாய் சம்பளம் உயர்த்தித் தர முடியுமா என்று அவர் சந்தோஷமும் சாந்தமுமாக இருந்த நேரத்தில் விசாரித்தான் திலீப்.
உங்க பெரியம்மா இப்போதைக்கு வர மாட்டா. டாக்டரேட் வாங்கிட்டா. மற்ற நாட்டு பல்கலைக் கழகத்திலே எல்லாம் பேசக் கூப்பிடறா. பிரிட்டன் முடிச்சு பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அப்புறம் நடாஷா மூலமா சோவியத் யூனியன் பிரயாணம். அப்படி மெகா பெரிய சுற்றுப் பயணத் திட்டம். அவா வர வரைக்கும் இங்கே உனக்கும் வேலை இல்லே. எனக்கும் கிடையாது. சியாமளா வந்து கவர்மெண்ட் நிதி கையிலே கிடைக்க இன்னும் குறைஞ்சது மூணு மாசமாவது ஆகும். அதுவரை தண்டச் சம்பளம் தான் நமக்கு. எப்படி ஏத்தித் தர?
பஸ்ஸில் இருந்து இறங்கி வழக்கு முத்தச்சியிடம் காசு கொடுத்து பிஸ்கட்டைப் பிய்த்தெறியச் சொல்லலாமா என்று ஒரு நினைப்பு.
பிழைத்துப் போகட்டும். திலீப் படிப்புக்கு இந்த வேலை கிடைத்ததே ஆச்சரியம். பிஸ்கட் சாஸ்திரி அவனை இரைந்து பேசி எடுத்தெறிந்து இதுவரை வேலை வாங்கியதில்லை. ஆனால் நக்கலாக ஒரு சிரிப்பு அவரிடம் உண்டு. ட்ரங்குப் பெட்டிக்குள் ஷார்ட் ஹேண்ட் லோயர், டைப் ரைட்டிங் ஹையர், எஸ் எஸ் எல் சி சர்ட்டிபிகேட்டுகளுடனும், உள்ளூர் ஹெட்மாஸ்டர் கொடுத்த ரென் அண்ட் மார்ட்டின் இலக்கணப் புத்தகத்தை விட்டு இம்மியும் வழுவாத இங்கிலீஷில் நன்னடத்தை சர்ட்டிபிகேட்டுடனும் மதராஸ் செண்ட்ரல் ஸ்டேஷனில் ரயிலேறி, வடக்கே தில்லி, கிழக்கே கல்கத்தா, மேற்கே பம்பாய் என வேலை தேடிப் போய் வெற்றி கண்டு நிலைத்தவர்களின் தேகத்தில் ஊறி வரும் அந்தண எள்ளல் அதுவென்று திலீப்புக்குத் தெரியும். அத்தனை படித்த அவன் அப்பாவும் பெரியப்பாவும் கூட அந்த மனநிலையில் ஊறியவர்கள் என அவன் அறிவான்.
தியேட்டர் வாசலில் பஸ்ஸை நட்ட நடு ரோடில் நிறுத்தி, சகாவே அடிச்சுப் பொளி என்று பஸ் டிரைவரும் க்ளீனர் பையனும், விசில் ஊதாமல் காத்திருந்த கண்டக்டரும் திலீப்பை உற்சாகப்படுத்தி இறக்கி விட்டு பஸ் நகர்த்திப் போனார்கள். இந்த எட்டு மாசப் பழக்கத்தில் அவன் கிட்டத்தட்ட நூறு மலையாளி இளைஞர்களுக்கு நல்ல சிநேகிதனாகி விட்டான். கோவில் போகிற வழியில் ஒரு வினாடி புன்சிரித்துப் போகிற தலை குளித்த, உதடு பெருத்த மலையாளி தேவதைகளும் அதில் உண்டு. இன்னும் ஒரு வருஷம் எல்லோர் புண்ணியத்திலும் இங்கேயே குப்பை கொட்டினால் அவனுக்காகவே பஸ் விடுவார்கள். அந்த சுந்தரிகள் ஏட்டா என்று விளித்துக் கைகோர்த்து வருவார்கள்.
அடி செருப்பாலே.