5)
ஞாயிற்றுக் கிழமையும் பவுர்ணமியும் சேர்ந்து வந்தது விசேஷம். சீத்துவின் அம்மா அப்படித்தான் சொன்னாள். அவனுடைய ரெண்டு அக்காக்களையும் காலை ஐந்து மணிக்கே எழுப்பி விட்டாள்.
“பெண் குழந்தைகள் எண்ணெய் குளி நடத்தி பசுவன் கரைக்க கோலாட்டம் போட, பட்டாமணியம் வீட்டிலே ஆளுக்கு ஆழாக்கு செக்கெண்ணெய் கொடுக்கறா. ரெண்டு பேரும் போய் வாங்கிண்டு வந்துடுங்கோ. நாலு நாளைக்கு சமையலுக்காச்சு”.
அவள் சொல்லி முடிக்கும் முன் சின்னக்கா, ”ஏம்மா தேய்ச்சு குளிக்க, எண்ணெய் கொடுத்தா சமையலுக்கு பதுக்கணும்கறியே” என்று பாதி சிரிப்பாகவும் மீதி வேதனையாகவும் கேட்டாள்.
“பசுவனுக்கு அரைப் படி எண்ணெயாமே, சீத்துவை பாத்திரம் எடுத்துண்டு போகச் சொல்லு” என்று நாகுப்பாட்டி சொல்லி விட்டுப் போனாள்.
அரைப்படி எண்ணெய் கொட்டி வைக்க வீட்டில் தகுந்த பாத்திரம் இல்லாததால் அடுத்த வீட்டில் வாங்கி சீத்துவுக்குப் பின்னால் குஞ்சரன் திருப்தியாக நடந்து போனார்.
சீத்துவின் இடது கை ஆள்காட்டி விரல் அதிகமாக வீங்கி இருந்ததால் கொஞ்சம் பெரிய துணியாக குஞ்சரனின் பழைய வேட்டியில் இருந்து கிழித்துச் சுற்றிக் கொண்டு போனான்.
”அது என்னடா கையிலே பெரிய பேண்டேஜ் போட்டிருக்கே” என்று ஞாயிற்றுக்கிழமை பேப்பரோடு தன் வீட்டு வாசலில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்த டாக்டர் கேட்டார்.
“ஒண்ணுமில்லே டாக்டர் மாமா; எங்கேயோ இடிச்சுண்டுட்டேன்”.
யட்சி வந்து மேலே உரசினால் வலி எதுவும் இல்லாமல் போகும். வருவாளோ. தூங்கிண்டே நடக்காதேடா என்று கூட வந்த அக்கா ரெண்டு பேரும் அவனை முன்னால் தள்ளியது அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
”ஆளாளுக்கு ரெண்டு முட்டைக்கரண்டி தான் நல்லெண்ணெய் தரச் சொல்லி தாக்கீது. தலையைக் காட்டுங்கோ. எண்ணெய் வச்சுண்டு மீதியை கை கால்லே தடவிண்டு போங்கோ”.
ரெண்டு அக்காவும் கெஞ்சிய கெஞ்சலில் பட்டாமணியம் காரியஸ்தன் அவர்கள் இரண்டு பேருக்கும் ஆளுக்கு அரை உழக்கு எண்ணெய் வார்த்தான். பசுவனுக்கு ஸ்பெஷலாக ஒரு படி எண்ணெய் கிடைத்தது. உலகமே காலடியில் அடக்கிய மாதிரி குஞ்சரன் மமதையோடு நடந்தார். ரெண்டு பெண்களின் கல்யாணம் நடப்பது இனி எளிது.
தேய்த்துக் குளித்த எண்ணெயும் சீயக்காயும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஸ்நானப் பொடியும் மணக்க பெண்டுகள் பஜனை மடத்துக்கு வந்தபோது வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
மந்தகதியில் கோலாட்டம் நகர, வக்கீல் மாமி சொன்னாள் –
“இன்னிக்கு ராத்திரியோட முடிச்சு ஏறக் கட்டிக்கறோம்டீ பொண்டுகளா ஞாபகம் இருக்கோன்னோ? முளைப் பாலிகை கரைச்சு அதோடு கூட பசுவன் பசுவும் கன்னும் தொப்பக்குளத்திலேயோ ஊருணியிலேயோ கரைச்சு வந்தா அடுத்த வருஷம் தான் இனி கோலாட்டம் கொண்டாட்டம் எல்லாம். அப்போ நான் இருக்கேனோ, நீங்க அவளவள் கல்யாணம் ஆகி எங்கே இருக்கேளோ, பட்டணத்திலே படிக்க போயிட்டேளோ, பிள்ளைத் தாச்சியோ, வேறே ஊருக்கு மாத்திண்டு குடும்பமே போறதோ, நமக்கு அதொண்ணும் இப்போ முன்கூட்டியே தெரியாது. இன்னிக்கு கோலாட்ட ஜோத்தரை. சந்தோஷமா கோலாட்டம் அடிச்சு ராத்திரி மழைக்கு முந்தி வீட்டுக்குப் போகணும். அவ்வளவுதான். நிச்சயம் மழை பெய்யும். சந்தோஷமா கோலே ந கோலே கோலே ந கோலேன்னு அடிச்சு அழைச்சா எப்படி பெய்யாம போவான் வருண பகவான்?. வாங்கடி குட்டிகளா பாம்பு கோலாட்டம் போடலாம்”.
ஏற்ற இறக்கத்தோடு அந்த நாற்பது வயசு ஸ்திரி பேசியபோது அவள் கண்கள் ஒளிர்ந்ததை சீத்து கவனித்தான். நான் இருப்பேனா அடுத்த ஜோத்தரைக்கு என்று யட்சியிடம் கேட்க வேண்டும் அவனுக்கு. அவள் இருப்பாள்.
பதினோரு மணிக்கு காப்பி கொடுத்து, வீட்டில் போய் கால் அலம்பிண்டு வர்றதுன்னா பெண்டுகள் போகலாம் என்று ஜோசியர் மாமி அறிவித்தாள். ”கால்லே வென்னீர் கொட்டிண்ட மாதிரி ஓடி வர வேணாம். மத்தக் காரியம் இருந்தா பண்ணிட்டு வரலாம்” என்றாள் வக்கீல் மாமி. போன மாதம் கல்யாணம் ஆன அச்சாபீஸ் பரமேஸ்வரன் மனைவி ஸ்ரீலட்சுமி தெம்பாகக் கிளம்ப, ”வேண்டாம்டீ; அது ராத்திரிக் கந்தாயம்; இப்போ வேண்டாம்; சொன்னாக் கேளு” என்றாள் முகத்தை சீரியஸ் ஆக வைத்துக்கொண்டு. சிரிப்பு அலை அலையாக எழுந்திருக்க, என்ன விஷயம் என்று புரியாமல் சீத்துவும் உரக்கச் சிரித்து வைத்தான்.
”உனக்கு ஒருதடவை தனியாகச் சொல்லணுமாடா, மூத்திரம் போறதுன்னா போய்ட்டு வந்துடு. அப்புறம் ரெண்டு மணிக்கு தான் ஆட்ட கிளாஸ் விடும்”.
மாமி சீத்துவின் காதைத் திருகிக் கொண்டு சொன்னபோது அவள் தலைமுடியில் அரப்புப்பொடி வாடை அடித்தது. காது மடலில் எண்ணெய் மினுமினுத்தது. அந்தக் காதை உதட்டில் வைத்து மெல்ல வேண்டும் என்று சீத்துவுக்குத் தோன்றியது.
போகும்போது யட்சி சொன்னது மறக்காமல் இருந்தது. தத்தம்மா சரிதம். அது தானா? ஏதோ ஒன்று.
வக்கீல் வீட்டில் சாத்தி வைத்த அறைக்குள் கட்டுக் கட்டாக புத்தகங்கள் இருப்பதாக ஒரு நினைப்பு. தத்தம்மா சரிதம் இருக்கக் கூடும் அங்கே. வீட்டுக்குப் போகும் வழியில் வக்கீல் வீட்டுக்குள் பூஞ்சிட்டாக உள்ளே போனான் சீத்து. வக்கீல் காமிரா உள்ளில் உட்கார்ந்தபடிக்கே தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் வேறு யாரும் இல்லை. சீத்து சாத்தி வைத்த அறைக் கதவைத் தள்ள அது திறந்து கொண்டது. எலி வாடையும் மூஞ்சூறு வாடையும் மூக்கைக் குத்தியது.
சட்டென்று அந்த துர்வாடை மகிழம்பூவும் தாழம்பூவும் மாறி மாறி அடிக்கும் வாசனையாக மூக்கில் பட்டது. செண்ட் பாட்டில் உடைந்து தரையில் கிடந்து அள்ளி அள்ளிக் கண்ணாடிச் சில் இல்லாமல் வழித்து கையிடுக்கில் பூசிக் கொண்ட பெரிய பஜார் ஜவுளிக்கடைக்காரரின் நினைவு கூடவே வந்தது. இது ஜவுளிக்காரர் இல்லை. ஒரு பெண்ணின் மணக்கும் வாசம். சீத்துவுக்கு அது தெரியும். இந்த அறையில் யட்சி வந்திருக்கிறாளா? வக்கீல் வீட்டில் அவளா?
அறைக் கோடியில் இருந்த ஜன்னல் சற்றே திறந்து சன்னமான கீற்றாக வெளிச்சம் எட்டிப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்டது. பிரம்மாண்டமான பானைகளும், கரண்டிகளும், மரப் பெட்டிகளில் இன்னும் அதிகம் வெங்கலப் பாத்திரங்களும் அடைத்த இடம். சுவரில் மங்கிய கண்ணாடிச் சட்டத்துக்குள் யட்சி படம். சுவரை ஒட்டிப் போட்டிருந்த பழைய தேக்குக் கட்டிலின் மேல் கருப்பு வெல்வெட் துணி விரித்து, தலகாணி போட்டிருந்தது. தென்னை ஓலை விசிறி ஒன்று படுக்கைக்குப் பக்கத்தில் தரையில் கிடந்தது. அதன் பக்கத்தில் பெரிய வெங்கலப் பாத்திரம் முன் எப்போதோ குடிநீர் வைத்ததாக இருக்கலாம் என்று சீத்துவுக்குத் தோன்றியது.
வாவா பசவா வாவா வாவா. பாட்டு சத்தம். யட்சி குரல் இது. எங்கே அவள்? சீத்துவின் விரல் உச்சத்தில் வலித்தது. யட்சி உறிஞ்சினால் வலி நிற்கும். அவள் பக்கத்தில் படுத்திருந்து பசுவனைச் சுற்றி நின்று இந்தப் பெண்டுகள் சொல்லும் அரைகுறை வாக்கியங்களில் புரியாமல் போனதைக் கண்டுபிடிக்க வேண்டும். யட்சிக்கு அதெல்லாம் நிச்சயம் தெரிந்திருக்கும்.
”இது ஏன் இங்கே உன் ஃபோட்டோ படம் மாட்டியிருக்கு”? சீத்து யட்சியைக் கேட்டான்.
”ஃபோட்டோ இல்லே. வரைஞ்ச படம்”.
எதுக்கு வரையணும்?
“இருநூறு வருஷம் முந்தி ஃபோட்டோ கிடையாதே. அதான்”.
இங்கே ஏன் வைக்கணும்?
“இது என் வீடு. இங்கே இல்லாமல் வேறே எங்கே வைக்க?” யட்சி எதிர்க்கேள்வி கேட்டாள். மஞ்சள் வெய்யில் கோபுரமும் மண்டபமுமாக விரியும் உலகத்தில் அந்தப் படத்தை மாட்டி வைக்க இடம் இல்லையா? கேட்க நினைத்தான். யட்சி மறுபடியும் பாடினாள்.
”பாலும் பெருகிக் குடங்கள் நிறைய பசுவா பசுவய்யா
கோலும் அடித்து கூடியே ஆடினோம் பசுவா பசுவய்யா”
எங்கே அவள்?
கட்டிலில் உட்கார்ந்திருந்த யட்சி பாடியபடி மல்லாக்கக் கவிழ்ந்தாள். அவள் கண்கள் சுழன்று அவனை நோக்கின. பாடும்போது மின்னல் வெட்டியது போல் பற்கள் வெண்மையாகப் பிரகாசித்து அவனை அருகே அழைத்தன. என்னவாவது பேச வேண்டும் என்று சீத்துவுக்குத் தோன்றவே கோலாட்டப் பாட்டு என்றான்.
“அதுக்கென்ன இப்போ”.
“நீ கேட்டிருந்தியே. அதை எடுக்கத் தான் இங்கே வந்தேன்”.
“சரி, அதுக்கென்ன இப்போன்னு சொன்னேன்” என்றபடி கண்ணுக்குத் தட்டுப்படாமல் அவனை இழுத்துப் படுக்கையில் சரித்தாள். விரல் உச்சத்தில் வலித்தது. அவள் வாயிலிட்டுச் சுவைத்தாள். சந்தோஷமாக இருந்தது அந்தப் பரவசம் பல மடங்கு பொங்கிப் பெருகி அலையடித்து வெள்ளமாகப் புரண்டு வர அவன் ஒரு துரும்பாக அடித்துச் செல்லப்பட்டான்.
யட்சி எங்கே இருக்கே?
“இருநூறு வருஷமா இங்கே தான் இருக்கேன். வக்கீலுக்கு நான் கொள்ளுப்பாட்டி எள்ளுப்பாட்டி உறவு. என்னை விடப் பத்து வயசு குறைவான பிள்ளையோட இங்கே தேக சம்பந்தம் வச்சுண்டதாலே இங்கேயே பிடிச்சு வச்சு தாழ்ப்பாள் போட்டு பூட்டிட்டா. அன்னிக்கும் கோலாட்ட ஜோத்திரை. அவன் பசுவன். நான் தான் அவனை இங்கே கூட்டிண்டு வந்தேன்”.
அப்புறம் என்ன ஆச்சு?
”அவனை துரத்தி விட்டுட்டா. என்னை இங்கே நாள் கணக்கா பூட்டி வச்சு உடம்பும் மனசும் ரோகம் பிடிச்சுப் போய்ச் சேர்ந்தேன். இன்னும் அந்த மோகம் மாறாம அலையறது இங்கே இருந்தபடித்தான். கோலாட்ட ஜோத்திரையும் பசுவனும் இன்னும் இஷ்டம். வாடா பசுவா, வந்து படு”.
அவன் திரும்ப பஜனை மடத்துக்குப் போனபோது நாற்காலியில் களிமண் பசு பொம்மையை வைத்து சுற்றி வந்து அந்தப் பெண்கள் ரம்மியமாகக் கோலாட்டம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
கன்றுக்குட்டியைத் தொட்டான் சீத்து. அது முட்ட வந்தது. கையை மேலே உயர்த்தி வைத்துக் கொண்டான்.
”தூங்கிட்டு வந்தியா? அதுவும் சரிதான். ராத்திரி ரொம்ப நாழிகை செல்லும். பசுவை எடுத்து வச்சுட்டு நாற்காலியிலே உட்காரேன். உன் கிட்டே என்ன கஷ்கத்திலே திடீர்னு தாழம்பூ வாசனை வருது அதுவும் நடுப்பகல்லே. ஜாக்கிரதை இந்த வாசனையைப் பிடிச்சுண்டு பாம்பு வந்து ஆடப் போறது.” குரல்கள். சிரிப்பு.
”கூடவே இவனுக்கும் ஒத்தை கோல் கொடுத்து பாம்புக் கோலாட்டம் போடச் சொன்னாப் போச்சு”. மேலும் குரல்கள். அலையடிக்கும் அடுத்த சிரிப்பு.
பகல் ரெண்டு மணி. ஓயாமல் பேசி, சிரித்து, ஆடிப் பாடி பகல் சாப்பாட்டுக்கு பஜனை மடத்திலேயே ஏற்பாடு ஆகியிருந்ததால் சந்தோஷமாகக் கோலாட்டம் போட்டபடி காத்திருந்தார்கள்.
சீத்து வீட்டுக்கு ஓடி அப்பா குடிதண்ணீர் ஊருணியில் இருந்து கொண்டு வந்திருந்த குடம் நீரைக் கொல்லைப் பக்கம் கொண்டு போய்ப் பழைய பித்தளைப் பாத்திரத்தில் மொண்டு தலையில் விட்டுக் கொண்டு குளித்தான். இடதுகை ஆள்காட்டி விரல் சர்க்கரை வள்ளிக்கிழங்கைச் சுட்டதுபோல் வீங்கி மினுமினுக்க, முழங்கை வரை மின்னிக்கொண்டிருந்தது. தலை சுற்றியது சீத்துவுக்கு. கோலாட்டம் முடித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, டாக்டரிடம் போய், ஊசி குத்தினாலும் பரவாயில்லை என்று வலியைப் பொறுத்துக் கொண்டு குணப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.
கஷ்கத்தில் தாழம்பு வாடை போக மொண்டு மொண்டு ஊற்றி அது போதாதென்று பட துணி துவைக்கும் சவுக்காரத்தை துவைக்கும் கல்லின் மேல் இருந்து சுரண்டி எடுத்துப் பூசிக் குளித்தான். இடது கை ஆள்காட்டி விரல் வலிக்கவில்லை என்றாலும் கையை ஜாக்கிரதையாக உயர்த்தி வைத்தபடி குளித்தான். அவனைப் பசியும், பஜனை மடத்தில் விதவிதமான சித்ரான்னமும், இனிப்பும், அப்பம், வடையும் இழுக்க ஓடினான்.
”பாவம் குழந்தை நாள் பூரா பசுவன் வேலை பார்க்கறான். உடம்பெல்லாம் என்னமா வலிக்கும் தெரியுமா? நான் அவன் வயசிலே இருந்தபோது நஞ்சைவிளை கிராமத்துலே நாலைஞ்சு வருஷம் பசுவனா இருந்திருக்கேன். உக்காந்து உக்காந்து அலுத்து, அப்பப்போ கோலிக்குண்டு விளையாடப் போயிடுவேன். முதுகிலே போட்டு விளையாட்டை பாதியிலே நிறுத்தி இழுத்துண்டு போய் எங்கப்பா உட்கார்த்தி வச்சுடுவார். அழுதா குஞ்சாலாடு கொடுப்பா. அப்பா தொடையிலே கிள்ளி அழ வைப்பார். அவருக்கு லாடு வேண்டியிருக்கும்”. குஞ்சரன் காலையில் சீத்து அனுப்பி வைத்த வடை ஒன்றை விண்டு வாயில் போட்டபடி சொன்னார், அவன் ஓடுவதைப் பார்த்து.
உனக்கு கையிலே சொம்பு குத்தி வீங்கினதோ? யட்சி உன்னைக் கட்டிண்டு படுத்திருந்தாளோ?
அப்பாவைக் கேட்க வேண்டும் போல் இருந்தது சீத்துவுக்கு. அது எதுக்கு?
இன்றைக்குத்தான் வள்ளிசாக நூறு ரூபாய் தரப் போகிறதாகப் பேசிக்கொண்டார்கள். அது தவிர பர்ஃபி, குஞ்சாலாடு, காரபூந்தி, தேங்குழல் என்று பாத்திரம் பாத்திரமாக சீத்துவிடம் கைமாறப் போகிறது.
சாயந்திரம் எல்லாப் பெண்களும் பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை கட்டி, தலையில் கொழும்புத் தேங்காய் எண்ணெய் தேய்த்து நேர் வகிடெடுத்துச் சீவி, கோலாட்டக் கோல்களை அலம்பித் துடைத்து, பஜனை மடத்துக்கு ஒன்று இரண்டாக மொத்தம் இருபத்தெட்டுப் பேர் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஆளுக்கு ஒரு ரூபாயாவது பசுவனுக்கு ஆசீர்வாதப் பணம் தருவார்கள். அது ஒரு முப்பது ரூபாயாவது குறைந்த பட்சம் தேறும். அவன் ரெண்டு டிராயர் வாங்கிக் கொள்வான். அக்காக்களுக்கு நூல் புடவை வாங்கித் தருவான். யட்சிக்கும்.
யட்சி ஜோத்திரை முடிந்து போய்விடுவாளோ? புடவையை யாரிடம் தருவது அப்போ? அந்தக் கவலையை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போதாவது இவர்கள் கோலாட்டம் போடும் பசுவன் பாட்டுக்கெல்லாம் தலை அசைத்து முகத்தை சந்தோஷமாக வைத்துக்கொண்டு எல்லோரோடும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க வேண்டும்.
பெட்ரோமாக்ஸ் விளக்குகளைச் சுமந்து கொண்டு கூட்டத்தின் முன்னால் இருவரும் பின்னால் இருவரும் நடந்துபோக, நாகசுவர கோஷ்டி ஆனந்த பைரவியிலும் மாண்ட் ராகத்திலும் வாசித்துக் கொண்டு போக, தொடர்ந்து இரண்டு நீள வரிசையாகக் கோலாட்டம் அடிக்கும் பெண்கள் ஆடியபடி போனார்கள். நடுவில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் பசுவன் இடது கையை உயர்த்திப் பிடித்தபடி சிரித்துக் கொண்டு, தலையாட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். ஃபோர்ட் கார் ஓட முடியாமல் ரிப்பேர் ஆனதால், சைக்கிள் ரிக்ஷா கடைசி நிமிடத்தில் ஊர்வலத்துக்கு வந்துவிட்டது.
கோலே கோலே கோலேனா கோலே
பசுவா பசுவா பசுவா பசுவய்யா
அதி மனோகரமாக ஆடிப் பாடி வந்தார்கள் அந்தப் பெண்கள். கை வலிக்க கை உயர்த்தி உடம்பைக் குலுக்கி பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் தகுந்தபடி அசைந்து வந்தான் பசுவன். என்ன நினைத்தானோ, ரிக்ஷாவில் இருந்து கீழே குதித்தான். கோலே கோலே கோலே கோலே. அவனும் பாடினான். ஆடாமல், கோலாட்டக் கழிகளோடு நடந்து வந்த ஒருத்தியிடமிருந்து அவற்றைப் பறித்து தாளம் தவறாமல் கோலாடி வந்தான். ”ஜோத்திரை வேண்டாம்டா, பம்பரக் குத்து வெளையாடலாம்” என்று சிவராமனும் மற்ற பையன்களும் பம்பரமும் சாட்டையுமாக சைக்கிள் ரிக்ஷாவுக்குக் குறுக்கே வந்தார்கள். கோவில் வாசலில் கோலாட்ட ஜோத்திரை ஊர்வலம் கடந்தபோது அந்தப் பெண்கள் அத்தனை பேரும் யட்சியாகி விட்டார்கள். அவர்கள் இடுப்பில் முண்டு உடுத்து சீத்து போட்டிருந்தது போல ஒரு சரிகைத் துணியைத் தோளில் இறுக்கமாகப் போர்த்தி ஆடினார்கள். நாதசுவரக் கோஷ்டி திரும்பத் திரும்ப இங்கிலீஷ் நோட் வாசிக்க பெட்ரோமாக்ஸ்கள் மங்கி ஒளிர அவர்கள் எல்லோரும் கோலாட்டம் அடித்து ஒருசேரப் பாடினார்கள்.
கோலேனா கோலே கோலேனா கோலே
சீத்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் தேரடிப் படியேறி உள்ளே போனார்கள்.
ராத்திரியிலும் மஞ்சள் வெயில் மசமசவென்று காய்ந்த அந்த மணல் பரப்பில் அவர்கள் வரிசையாக கோலாட்டம் போட்டு வர, சடசடவென்று நெருப்புக்கோழிகளாகித் தலையை மணலில் புதைத்து நின்றார்கள். சீத்துவை அவர்கள் மணலுக்குள் இருந்து கூப்பிட்டார்கள்
பசுவா பசுவய்யா வாவா பசுவா பசுவய்யா
சீத்து தோளில் போர்த்திய ஜரிகைத் துண்டைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டான். அவன் ஆடிக்கொண்டே கருப்பன் சந்நிதிக்குள் புகுவதை எல்லோரும் பார்த்தார்கள். இடதுகை ஆள்காட்டி விரல் அவன் கரத்தில் இருந்து பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்ததையும் அப்புறம் வீங்கி விடர்த்து அது தேரடி இருட்டில் விழுந்ததையும் கூடப் பார்த்தார்கள். அது கையில் முளைத்த இன்னொரு நீண்ட குறி போல இருந்ததாக எல்லோரும் ரகசியம் பேசிக் கொண்டார்கள்.
பசுவனை அப்புறம் எங்கும் காணோம். அன்று இரவு இடி இடித்து மின்னல் வெட்டிப் பெருமழை பெய்தது. ஊரே தாழம்பூ மணத்த ஈரமான ராத்திரி அது.
(நிறைவு)
இரா.முருகன்