புதிது – எழுதிவரும் நாவல் ‘மிளகு’ – சிறு பகுதி- ஆசாரமல்லாத காகிதம்

Excerpts from the novel MILAGU I am currently writing – தற்போது எழுதிவரும் நாவல் மிளகு-வில் இருந்து ஒரு சிறு பகுதி (draft awaiting editing)
————————————————————————————————–

திருவாளர் பெத்ரோவின் இரட்டைக் குதிரை வண்டி மிர்ஜான் துறைமுக நகர் கடந்து, மிர்ஜான் கோட்டைக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது காலை எட்டு மணி என்று அதிர்வேட்டு போட்ட சத்தம் காதில் விழ தன் கால்சராய் கடியாரத்தை எடுத்து மணி பார்த்தார். எட்டு அடிக்க இன்னும் பத்து நிமிடம் இருந்தது.

என்றால் என்ன? கோட்டையில் அதிர்வேட்டு போட்டு முரசறைந்து தெரியப்படுத்தும் சத்தம் உத்தியோகபூர்வமானது. மற்றவர்கள் யாராக இருந்தாலும் அதன்படி தான் செயல்பட வேண்டும். பெத்ரோ இன்று சென்னபைரதேவி மகாராணியை அலுவல் நிமித்தம் சந்திக்க வேண்டியது காலை எட்டு மணிக்கு. அது ஏழு மணி ஐம்பது நிமிடம் என்று சரியான நேரம் இருந்தாலும் தாமதமாக வந்திருக்கிறார் பெத்ரோ என்பது சூழ்நிலை நிஜம்.

அவசரமாக சாரட்டை விட்டு இறங்கி பட்டுத் துணியால் அழகாகப் பொதிந்து கட்டிய பெட்டியை ஜாக்கிரதையாகக் கையில் சுமந்தபடி அவர் ஓட்டமும் நடையுமாக முன் மண்டபத்துக்குள் நுழைந்தார். இன்றைக்கு சந்திக்க வேண்டிய மற்றவர்கள் அங்கே திரளாகக் காத்திருப்பார்கள். கூட்டத்தில் இருப்பவர்களின் அந்தஸ்து விவரம் கருதி யார் முன்னால் போக, பின்னால் யார் அடுத்துப் போகவேண்டும் என்பதெல்லாம் தீர்மானித்து கோட்டை உத்தியோகஸ்தர் உள்ளே அழைத்துப் போவார். எப்படியும் அரை மணி நேரத்தில் இருந்து பகல் ஒரு மணி வரை காத்திருக்க வேண்டி வரும். சீக்கிரம் மகாராணி திருமுன்பு காட்சி கிடைத்து சகல மரியாதையோடும் உரையாடி பதினொரு மணிக்கு வீடு திரும்பினால் கஸாண்ட்ரா அப்புறம் அவள் சமைத்த கோழி மாமிசம். இரண்டுக்கும் நடுவிலே குளிக்க வேண்டியிருந்தால் அதற்கு ஒரு அரைமணி நேரம். எல்லா சுகமும் விதித்தபடி கிட்டி பிற்பகல் சுகமாக உறக்கம். பெத்ரோவின் நாற்பது வயது உடம்பு நேரம் காலம் இடம் எதுவும் லட்சியம் செய்யாமல் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டது.

இதென்ன, முன் மண்டபத்தில் யாரும் காத்திருக்கக் காணோமே.

பெத்ரோவுக்கு உடனடியாக உறைத்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஆச்சே. மிக முக்கியமான சந்திப்புகள் மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அடுத்த தினங்களுக்கு ஒத்திப் போட்டுவிடுவாள் சென்னபைரதேவி மகாராணி என்று. இந்தச் சந்திப்பு நீண்டு போகும் முக்கியமான நேர்காணலாக இருக்கக் கூடும் என்று நினைக்கும்போதே தான் இதற்காக தயாராக வந்திருக்கிறோமா என்று பெத்ரோவுக்குத் தோன்றியது. போர்ச்சுகல் அரசரின் விசேஷ பிரதிநிதி ஆன பெரேராவை வாவா என்று தாம்பூலம் வைத்து இந்தியர்கள் அழைக்கிறார்கள் என்றால் ஏதோ பெரிய விஷயம் தான். கோழிக்கறியும் கஸாண்ட்ராவும் காத்திருக்கட்டும். நல்லபடி இந்த சந்திப்பு முடிந்து அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.

துபாஷி நஞ்சுண்டய்யா சந்தனம் மணக்க வந்து முன் மண்டபத்தைக் கடந்து போகிற போக்கில் பெத்ரோவைப் பார்த்துப் புன்சிரித்துப் போனார். அவர் புன்சிரிப்போடு இருந்தால் விஷயம் சந்தோஷகரமானதாகத்தான் இருக்கக் கூடும். துபாஷிக்கு முன்கூட்டியே அடிப்படை நிலை ஆவணங்களும், நடவடிக்கைக் குறிப்புகளும் பகிரப்படும் என்பதை கேட்டறிந்திருக்கிறார் பெத்ரோ. வணிகம், முக்கியமாக மிளகு, ஏல வணிகம் பற்றிய பேச்சு வார்த்தைகளின்போது இது இன்னும் அதிகம்.

உள்ளே இருந்து கோட்டை மூத்த பிரதானி வந்து பெத்ரோ முன் குனிந்து வணங்கி ஷேமலாபம் கேட்டார். அவர் பெத்ரோவின் மாளிகை இருக்கும் தெருவில் தான் வசிக்கிறார். ஷேமலாபம் தினசரி பார்க்கும்போது பரிமாறிக் கொள்வது அவர்களுக்குள் நடப்பு என்றாலும் மரியாதை நிமித்தம் கோட்டை உத்தியோகஸ்தராக இன்னொரு தடவை கேட்டுச் சொல்லியானது.

அரண்மனை கடியாரத்தை அரசியின் பிறந்த நாளுக்காக நல்ல நேரம் காட்ட ஜோசியர் யோசனைப்படி பத்து நிமிஷங்கள் முன்னாலாக்கித் திருப்பி வைத்தோம். பஞ்சாங்கப்படி கணிக்கப்படும் நேரமும், ஐரோப்பிய நேரமும் ஒரே படி இருக்க ஒரு முயற்சியாக சூர்யோதம் இரண்டு நாளாக ஐரோப்பிய நேரப்படி ஆறு மணி முப்பது நிமிடம். கவனித்திருப்பீர்களே? உங்கள் கால்சராய் கடியாரத்தைத் திருத்தி வைத்துக் கொண்டீர்களோ?

இல்லை என்றார் பெத்ரோ. போர்ச்சுகல் அரசருக்குச் சொல்லாமல் காலம், இடம் எதுவும் மாற்றமாட்டார் அவர். அதுவும் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டி இங்கே பணி நிமித்தம் வந்திருக்கும்போது. எனினும் நஞ்சுண்டையா துபாஷி பஞ்சாங்கம், ஜோசியம் இப்படியான விஷயங்களிலும் நல்ல புலமை மிக்கவர். அவர் சொல்வது ராணியம்மா சொல்வது போன்றதாகும்.

அனுமதி கேட்டு எங்கள் பேரரசருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன் நஞ்சுண்டய்யா அவர்களே. வந்ததும் என் கடியாரத்தில் நேரத்தை மாற்றிவிடுவேன். பெத்ரோ நம்பிக்கை துளிர்க்க வரவழைத்துக்கொண்ட உற்சாகத்தோடு சொன்னார்.

ராணியம்மா சற்றே சுகவீனம் அடைந்திருக்கிறார். அரண்மனை வைத்தியர் தகுந்த மருந்து குளிகைள் உண்ணவும் பருகவும் தந்து குணமடையச் செய்தபடி இருக்கிறார். இன்று முழுவதும் ஓய்வு தேவை என்றான் வைத்தியன். எனினும் உங்களுக்கு சந்திக்க ஏற்கனவே ஒப்புதல் தந்துவிட்டதால் இந்த சந்திப்பை சுருக்கமானதாக நிகழ்த்தி தகவல் பெற, வழங்க மகாராணியார் விருப்பம் தெரிவிக்கிறார்.

அப்படியே ஆகட்டும். என் நன்றி மகாராணி அவர்களுக்கு.

வாருங்கள், உள்ளே போகலாம் என்று அழைத்துப் போனார் பிரதானி நஞ்சுண்டையா. சந்தனத்திலேயே சதா மூழ்கி இருப்பாரோ என்று பெத்ரோவின் நாசி கேட்டது. இந்தியர்களுக்கு சந்தனத்தில் அப்படி என்ன பெருவிருப்பம் என்று அவருக்குப் புரியவில்லை தான்.

அழகான ஜரிகை, பல நிறப் பட்டுத்துணி, தந்தப் பலகை கொண்டு இழைத்து, தைத்து, பளபளப்பாக்கி பன்னீரும் சந்தனம் ஊறிய நன்னீரும் கொண்டு அவ்வப்போது சுத்தமாகத் துடைத்து வைத்திருந்த அரச ஆசனத்தில் சென்னா தேவி அமர்ந்திருந்தார். போர்த்துகீஸ் தேசப் பிரதானி முழங்காலில் இருந்து தேவாலயத்தில் வணங்குவது போல் வணங்கினார். அது இந்திய வழக்கம் இல்லை. எனினும் அவர் வணங்கியது மகாராணிக்குப் பிடித்திருந்ததாக சென்னபைரதேவியின் முகக் குறிப்பு சொன்னது. பெத்ரோ வணங்கி எழுவதற்குள் மகாராணி தன் வலது கையைபெத்ரோவின் முகத்தை நோக்கி நீட்டினாள். இது இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத அசல் ஐரோப்பிய மரியாதை செலுத்துதலின் இறுதிக் கட்டம் என்பதை சென்னபைரதேவி அறிந்திருந்ததோடு இன்றைக்கு முதல் முறையாகப் பரீட்சித்துப் பார்க்கத் திருவுள்ளம் கொண்டதாகத் தெரிய பெத்ரோவுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

அரசியின் கையை மெதுவாகப் பற்றி மரியாதையோடு முத்தமிட்டு தலை வணங்கவே, அவள் கையைப் பின்னால் எடுத்துக் கொள்ளும் முன் ஒரு பெண் ஊழியத்தி வெண்மையான பட்டுத் துண்டும் வெளிர் பருத்தித் துணிச்சவுக்கமும் கொண்டு கையை சுத்தப்படுத்தியது பெத்ரோவுக்கு சற்றே சினத்தை ஏற்படுத்தியது. அவருடைய வாயும் முத்தமும் இங்கே இருக்கும் ஒருத்தரை விடாமல் அதிக சுத்தமானது என்பதில் நம்பிக்கை உண்டு அவருக்கு. மரியாதை செலுத்தும் ஐரோப்பிய சடங்கை இந்திய முறையில் தீட்டு பார்த்து சுத்தப்படுத்தும் அந்தத் துணியால் துடைப்பது இன்னும் சில காலத்தில் இந்தப் பிரதேசம் எங்கும் பரவலாக வந்து சேரலாம்.

மகாராணியின் கரங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று வாதம் புரிய பத்து காரணங்கள் இருக்கலாம். ஆனால் சுத்தப்படுத்திக் கொண்டே ஆகவேண்டும் என்று மகாராணி நிபந்தனை வைக்க நிச்சயம் ஒரே ஒரு காரணம் போதும் – பெத்ரோவும் மற்ற எல்லா ஐரோப்பியர்கள் போல் காலைக்கடன் முடித்து இலை, தழை, வைக்கோல், இப்போது எங்கும் பரவி வரும் குண்டி துடைக்கும் காகிதம் இதிலெல்லாம் இஷ்டம்போல துடைத்துப் போட்டுவிட்டு வருகிறவர். நாள் கணக்காக தண்ணீர் காணாத பிருஷ்டங்கள் அவருடையவையும். மகாராணி கொலு இருக்கும்போது திருமுன்னர் இப்படியான அசுத்தங்களோடு ஒருத்தரை எவ்வளவு பெரிய மனுஷராக இருந்தாலும் அனுமதிப்பது ஆசாரஹீனம் ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன