கோழி மாமிசத்தில் பிரட்ட மிளகு விழுதை எடுத்தாள் கஸாண்ட்ரா.
நல்ல வாடை இல்லையா? குசினிக்குள் எட்டிப் பார்த்த பெத்ரோ துரை விசாரித்தார்.
நல்ல வாடைதான். ஆனால் கோழிக்கு இந்தக் காரம் போதாது. வெங்காயமும், வற்றல் மிளகாயும் சேர்த்து அரைத்த விழுது பூசி எண்ணெயில் பொறிக்க வேண்டிய மரியாதைக்குத் தகுந்தது கோழி மாமிசம்.
கஸாண்ட்ரா மாமிசத்தில் மசாலா சேர்த்துப் பிரட்டியபடியே சொன்னாள். எதிராளியைக் கீழே வீழ்த்தி தோளை இறுக்கிப் பிடித்துப் பிசையும் மல்லன் போல் கோழி மாமிசத்தைக் கால்களுக்கு இடையே போட்டுக் கொண்டு இரண்டு கரங்களிலும் தோள் தசைகள் இறுகித் திரண்டு வர கைகளுக்கு பின்னால் பெருத்த மார்பகங்கள் பிதுங்கி காட்சி கொடுத்து நிற்க மாமிசம் பாகம் பண்ணினாள் கஸாண்ட்ரா.
சரி அப்படியே செய்துவிடேன் என்றபடி வாசலுக்கு நடந்தார் பிரபு. அப்போ மிளகு அரைத்து வைத்த விழுது? கஸாண்ட்ரா அழகாக சந்தேகம் கேட்டாள்.
வாசலில் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு அவசரமாக உள்ளே வந்து கஸாண்ட்ராவிடம் ஏதோ ரகசியமாகச் சொல்ல அவள் சீயென்று முகம் வலித்துச் சிரித்தாள். இன்றைய நாள் இப்படியே போகட்டும் என்று பெத்ரோ வாசலுக்கும் நடைக்கும் இடையே சற்றே நடந்தார்.
அப்படியே சருவப் பானையில் வென்னீர் போட்டு வை நான் வந்து ஸ்நானம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தபடி தெருவில் இறங்கினார். சட்டென்று இப்படி தெருவில் நடந்து எல்லோரும் எல்லா இயக்கமும் எப்படிப் போகிறது என்று தெரிந்து வைத்துக் கொள்ள அவருக்கு நிறையவே ஆர்வம் உண்டு.
தெருவின் ஓரத்தில் குத்த வைத்து உட்கார்ந்து முட்டைகளை பிரம்புக் கூடைகளில் வைத்து விற்கிற கிருஷ்ணப்பா அவர் கண்ணில் முதலில் பட்டான். பெத்ரோவின் மாளிகைக்கு நேர் எதிரே தெரு ஓரமாக உட்கார்ந்திருந்தவனுக்கு மேலே ஒரு பிரப்பங்குடை நிழல் பரப்பிக் கொண்டிருந்ததைக் கண்டார். அதன் மேல் இருந்து தண்ணீர் வடிந்தபடி இருக்க, கிருஷ்ணப்பா கீழிலிருந்து கையில் செப்புக் கிண்டியோடு வெளியே வந்து கையளவு நீரை குடைமேல் விசிறி அடிக்க, சுகமான வாசனை குளிர்ச்சி பகர்த்தி வந்து நின்றது.
ஓ கிருஷ்ணப்பா அதென்ன அபின் கலந்த தண்ணீரா? முட்டை விற்க அபின் எதற்கு? பெத்ரோ கேட்க, இல்லை பிரபோ என்று அவசரமாக மறுத்தான் கிருஷ்ணப்பா.
இது வெட்டிவேர் கலந்த தண்ணீர். ஒரு பலா இலை மடக்கு நிறைய ஏலமும் கலந்து தெளித்தேன். வெய்யிலுக்கு இதைவிட வேறே விமோசனம் இல்லை பிரபு. முகத்திலிருந்து வியர்வை ஆறாகப் பெருகி வடிந்தாலும் மலர்ச்சியோடு சொன்னான் கிருஷ்ணப்பா.
நீ கோழிமுட்டை மட்டும் விற்றே எத்தனை நாள் கஷ்டப்படப் போகிறாய்? வான்கோழி வைத்துப் பராமரித்து அதன் முட்டைகளையும் விற்கலாமே? இந்தியர்கள் வாங்குகிறார்களோ என்னமோ, ஹொன்னாவரில் இருக்கப்பட்ட போர்த்துகீசியர்கள் ஒருத்தர் விடாமல், நீ என்ன விலை சொன்னாலும் கொடுத்து வாங்கிப் போய் சமைத்து உண்பார்களே.
வழக்கமாகச் சொல்கிற யோசனை தான். புதிதாக முதல் தடவை சொல்லும் உற்சாகத்தோடு அவர் சொல்ல, கை கூப்பி நன்றி சொன்னான் கிருஷ்ணப்பா.
அந்தப் பறவையை வளர்ப்பது பற்றி ஒன்றும் இல்லை பிரபோ. வாய்க்குக் கீழே சவ்வு தொங்கிக் கொண்டு அலைகிற அவற்றைப் பார்க்கத்தான் குமட்டலாக இருக்கிறது. அந்த முட்டைகளின் வாடை வேறே.
அவன் வழக்கமான பதில் சொன்னான்.
அதெல்லாம் பணத்தின் வாடை. பிடிக்காமல் எப்படி காசு சேரும் என்றார் பெத்ரோ. கிருஷ்ணப்பா வெகுளியாகச் சிரித்தான்.
நான் அடுத்த முறை லிஸ்பனில் இருந்து திரும்பும்போது உனக்காக ஒரு பத்து வான்கோழிகளைக் கொண்டு வருகிறேன். பத்து வான்கோழி ஏற்றினால், இங்கே வந்து சேரும்போது அதில் இரண்டு மிஞ்சினால் அதிசயம் தான். அந்தக் கோழிகள் நீ சொன்னபடி வசீகரமாக, நறுமணம் வீசும் முட்டை பொறிப்பதோடு நல்ல நிறமாகவும் இருக்கும். சரிதானா? பெத்ரோ நடந்தார்.
பிரபோ, அப்போ இருபது கோழி கொண்டு வர முடியுமா? கிருஷ்ணப்பாவின் உற்சாகமான குரல் அவருக்குப் பின் கேட்டதை ரசித்தபடி போனார் அவர்.
பிடவை விற்கும் சந்திரய்யா கடை வாசலில் நின்று சந்திராரே என்று கொஞ்சம் குரல் உயர்த்தி அழைத்தார் பெத்ரோ. பளிச்சென்று கண்ணில் படும் பட்டுப் பிடவைகளும் தமிழ்ப் பிரதேசத்தில் தறி நிறுத்தி நெய்து அனுப்பிய நூல் பிடவைகளும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடை அது. முறுக்கி நிறுத்திய சில பிடவைகள் கடைக்குள் நீளமான இரும்புக் கம்பி பொருத்திய மரக் கட்டைகளிலிருந்து தொங்கவிட்ட பூமாலைகள் போல் தொங்கிக் கொண்டிருந்தன. வெப்பக் காற்று மட்டும் இல்லாமல் இருந்தால் அந்தக் கடையே சொக்க வைக்கும் வர்ணக் களேபரமும், சாயம் தோய்த்த புதுத்துணி வாசனையுமாக வேறு உலகத்தைச் சித்தரித்திருக்கும். சந்திரய்யா எங்கே? ஒய் சந்திரய்ய-ரே.
கடைக்குப் பின்னால் தரையில் சம்மணம் கொட்டி இருந்து அவசர அவசரமாக கம்பங்களி உருண்டையை வாயில் இட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சந்திரய்யா எழுந்து எச்சில் கையோடு ஓடி வரத் தயாராக, “ஒண்ணும் அவசரம் இல்லே, சாப்பிட்டு வா. நான் சும்மா வேடிக்கை பார்க்கத் தான் வந்தேன்” என்றபடி புடவை அடுக்கிய அலமாரிகளைப் பார்வையிட்டார் பெத்ரோ. ஒரே ஒரு அலமாரியில் மயில்கண்ணும் பட்டையாக நீலமும் பச்சையும் சரிகையும் கரையாகக் கொண்ட வேஷ்டிகளும் மேல் துண்டுகளும் அடைத்திருக்க, மீதி நான்கு அலமாரி முழுக்க விதவிதமான பிடவைகள், கச்சுகள்.
சந்திரய்யா மெல்லச் சாப்பிட்டு வரட்டும். பெத்ரோ ஒரு அலமாரிக்குள் கை நீட்டி அங்கே வைத்திருந்த பட்டுக் கச்சைகளில் மேலே இருந்ததை எடுத்துப் பிரித்தார். இந்தத் துணி அதி சீக்கிரம் துணையொன்றைப் பெறப் போகிறது என்று நினைத்துப் பார்க்க துணி என்றும் பார்க்காது அதன் மேல் பொறாமை எழுந்தது. போன வருடம் தீபாவளிக்காக வேலைக்காரர்களுக்கு பிடவைகளும் வேட்டி அங்கவஸ்திரங்களும் பெத்ரோ வாங்கும்போது எப்படியோ கூடுதலாக ஒரு கச்சும் வந்துவிட்டது. அதை எடுத்து வைத்துக் கொண்டு மரியாவிடம் அன்போடு அன்றைய ராத்திரி அதை அணியச் சொன்னார் பெத்ரோ.
உமக்கு என்ன கிறுக்கா பிடித்தது, ஓலா சென்ஹோர் பெத்ரோ. அழகாக லிஸ்பனிலும் கிராமப் புற போர்ச்சுகல்லிலும் என் போன்ற பேரிளம் பெண்கள் உடுத்துவது போல் நீளப் பாவாடையும் மேற்சட்டையும் உடுத்தி நான் பாட்டுக்கு அங்குமிங்கும் போய் வந்து கொண்டிருக்கிறேன். கச்சு உடுத்தணுமாமே. அதை உடுத்தி பின்னால் இறுகிக் கட்டுவதற்கு யாரைத்தேட? உம்மைக் கட்டச் சொன்னால் இன்று பூரா அதை செய்து கொண்டிருப்பதாக சாக்கு சொல்லி வேறேதாவது பண்ணிக் கொண்டிருப்பீர். சரி நானே கட்டிக் கொண்டு கடைத்தெரு போனால் எதிர்பார்க்காத நேரத்தில் இந்தக் கச்சு கழன்று விழுந்து உலகுக்கெல்லாம் பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டும். தேவையா எனக்கு இது? தேவையா உமக்கு அதில் வரக்கூடிய துக்கமும் அவமானமும்.
கஸாண்ட்ராவை கச்சு உடுக்கச் சொன்னாலென்ன? கோழி சமைக்கட்டும், அப்புறம் உடுக்க, எடுக்கச் சொல்லலாம்.
பெத்ரோ திரும்பி நடப்பதற்குள் சகல மசாலாவும் வெங்காயமும் மணக்க சந்திரய்யா வேஷ்டியில் கையை ஒற்றிக்கொண்டு வெளியே வந்தார்.
மன்னிக்கணும், காலையில் வெறும் வயிற்றோடு கடை திறக்க வந்து விட்டேன். இப்போது பசியெடுத்து வீட்டிலிருந்து சோறும் மீனும் வரவழைத்துச் சாப்பிட்டேன் என்றார் மன்னிப்புக் கேட்கும் குரலில்.
என்ன மீன் சாப்பிட்டீர்கள் என்று விசாரித்தார் பெத்ரோ. அந்த மீன் வாடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததைக் கவனித்தார் அவர்.
இதுவா, இன்னும் கூட அடுக்குப் பாத்திரத்தில் உண்டே என்று உள்ளே போய் எடுத்து வந்து காட்டினார். இது இன்னொரு மீன் வகை. செம்மீன். மலையாள பூமியான கொச்சியில் இருந்து, சரியாகச் சொன்னால், குட்டநாடு கடல் பிரதேசத்து வாய்க்கால் விளைச்சல். ராட்டு என்று தமிழர்கள் சொல்வது. அனுப்பி வைக்கட்டுமா என்று அன்போடு கேட்டார் சந்திரையா.