திலீப ராவ்ஜி தன் காலை நடைப் பயிற்சியிலிருந்து திரும்பி வந்தபோது வீட்டு முன்பில் போட்டிருந்த தோட்டத்தில் ஒரு பசுமாடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தோட்டத்தை கிட்டத்தட்ட தின்று தீர்த்திருந்தது அந்த மாடு. பசு மட்டுமில்லை. கூடவே ஒரு கிழட்டுக் காளையும் மேய்ந்து கொண்டிருந்தது. மாஞ்செடி பதியம் போட்டது, மூலிகை வளர்த்த புதர்வெளிகள், மல்லிகைக் கொடி என்று எல்லாவற்றையும் இந்தக் கால்நடைகள் வேட்டையாடிக் கொண்டிருந்தன.
சாப்பிட்டு முடித்து இரண்டு மாடுகளும் வயிற்றுப் பசி தீர்ந்து உடல் பசி முன் எழ, திலீப ராவின் தோட்டத்தில் கேளிக்கை நடத்த முற்பட்டன.
வாக்கிங்க் ஸ்டிக்கை ஆயுதம் போல் சுழற்றிக்கொண்டு வீட்டுக் காம்பவுண்டுக்குள் வேகமாக நுழைந்தார் திலீப ராவ்ஜி. உள்ளே அவர் மனைவி அகல்யாம்மா கொம்பு முளைத்த காதலர்களுக்கு முன் பக்தியும் மரியாதையுமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டார். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் கணத்துக்காக அவள் காத்துக் கொண்டிருப்பதாக திலீப ராவுக்குப் பட்டது.
“அகிலா, உனக்கென்ன ப்ராந்தா? அது ரெண்டும் வேறே லோகத்துலே சஞ்சரிச்சுண்டிருக்கு நீ என்னடான்னா முன்னாலே நின்னு கை கூப்பிண்டு இருக்கே. முட்டிடுத்துன்னா?”
“அது ஏன் முட்டும்?”
”நீ சுகப்படறபோது அது வந்து பார்த்தா சும்மா இருப்பியா?” ராவ் உதட்டைக் கடித்துக் கொண்டு விஷமமாகச் சிரித்தார். அகிலா பாய்ந்து வந்து அவர் கையிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கைப் பிடுங்கி அவர் முதுகில் ஒரு போடு போட்டாள்.
”கிழவரே, உமக்கு வெக்கம் மானம் எதுவும் கிடையாது. அறுபத்தைஞ்சு வயசிலே சிருங்காரம் கேட்கறது. என்னை விட்டுடுங்கோ”
விட்டுடுங்கோன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ளே போறியே? யாரை விட, யாரைப் பிடிக்க?
ராவ் இன்று முழுக்க விளையாட்டுப் பிள்ளையாகத் தன்னை உணர்ந்து உற்சாகம் கொப்பளிக்க நின்றார்.
“இருங்கோ, ஒரு தீபாரதனை எடுத்துடறேன் ரெண்டையும். நம்மாத்துக்கு வந்த தேவதையும் தேவ புருஷனும் இந்த ரெண்டு உசுரும்”
நிஜமாகவே நீ ஸ்க்ரூ கழண்டு போயிட்டே போ. ரிடையர் ஆனதும் பென்ஷன் மட்டும் வரலே. கெக்கெபிக்கெ நம்பிக்கை எல்லாம் வந்து சேர்ந்தாச்சு.
காளை சரிதான் போடா என்று அமர்க்களமாக ராவ்ஜியைப் பார்த்தபடி நடந்து போக, பசு பின்னாலேயே மீதிச் செடிகொடிகளை மேய்ந்தபடி நடந்தது.
“வாக்கிங் போயிட்டு வரேன்னு போனது ஆறு மணிக்கு. வந்திருக்கறது வெய்யில் உரைக்கற எட்டு மணிக்கு. ராவ்ஜி நீர் வாக்கிங் போனீரா வடசேரிக்காவிலே தொடுப்பு எவளையாவது பார்க்கப் போனீரா?” அகல்யா சிரிப்பை ஜாக்கிரதையாக மறைத்து அவரை முறைத்தாலும் அப்படியே இருக்க முடியவில்லை.
“ஒருநாள் இல்லேன்னா ஒருநாள் பாரும். நான் உம்ம பின்னாலேயே வந்து கையும் களவுமா உம்மைப் பிடிக்கத்தான் போறேன்.”.
அகல்யா சொல்லி முடிக்கும்முன் திலீப ராவ்ஜியைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
“அகில், இந்த வயசுலே நான் நிஜமாவே கட்டில் போட்டு சர்க்கஸ் பண்ண முடியும்னு நினைக்கறியா? ஏதோ காலம்பற மலச்சிக்கல் இல்லாமல் சரசரன்னு வெளிக்குப் போனா சுபதினம், மதியச் சாப்பாட்டுக்கு பசி எடுத்தா நல்ல நாள், ஜலதோஷம் பிடிக்கலேன்னா அதிர்ஷ்ட தினம் அப்படி தள்ளிண்டிருக்கேன். சுகம் கொண்டாடறது எல்லாம் பேச மட்டும் தான்”.
“நீரா, இந்த வயசிலும் துள்ளிக் குதிக்கற யுவன் நீர். எங்கே, பிடியும் பார்க்கலாம்”
அகல்யா வீட்டுக்குள் பூஞ்சிட்டாக ஓடினாள். திலீப ராவ் அவள் பின்னால் ஓடி கதவில் மோதிக்கொண்டு ஸ்தம்பித்து நின்றார்.
கதவு பூட்டியிருந்தது.
திலீப ராவ்ஜியின் கண்கள் நனைந்தன. அகல்யா அங்கே இல்லை. பசுவும் இல்லை. காளையும் இல்லை. தனி வீடும் இல்லை. இரண்டு படுக்கை அறை, சமையல்கட்டு, முன்னறை என்று அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு. பூட்டிய கதவு நிஜம்.
மூன்று மாடி படியேறி வந்த களைப்பும் படபடப்பும் சற்றே தீர மூச்சு வாங்கியபடி நின்றார் திலீப ராவ்ஜி. லிப்ட் வேலை செய்கிறதுதான். உடல் பயிற்சியாக படிகளில் ஏற, இறங்கத்தான் அவருக்குப் பிடித்திருக்கிறது.
அகல்யா திரும்பி வராமல் போய்ச் சேர்ந்து இன்றைய திதியோடு ஐந்து வருடமாகி விட்டது. என்றாலும் மனமும் உடலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. வலிய வந்து மேலே ஏறிப் படர்ந்து நினைவை ஆட்கொண்ட தனிமை உள்மனதுக்குள் புகுந்து நிதர்சனமானதாக உறைய இன்னும் நாள் செல்லலாம். எல்லா எதிர்பார்ப்புகளோடும் அகல்யாவின் அணைப்பில் பத்திரமாகச் சுருண்டு கிடப்பதாக பழைய நினைவும் கனவு மேலெழுந்த பகுதி பிரக்ஞை நிலையும் விளையாட்டுக் காட்டுகின்ற நேரங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.