எழுதி வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து ஒரு பக்கம்
”லண்டன்லே உடுப்பி காப்பி ஓட்டல் இருக்குமா? சீரியஸாத்தான் கேக்கறேன்” கல்பா ஆர்வத்தோடு கேட்டாள். “ஈஸ்ட் ஹாமில் ஒண்ணு இருக்கு. ஆனால் இத்தனை காலையிலே திறந்திருக்குமான்னு தெரியலே” ப்ரபசர் சொன்னார்.
“ஏன் அப்படி? ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அங்கேயும் இருக்குமே” கல்பா கேட்டபோது இருக்கலாம் என்று தோன்றியது.
“இதுக்காக ஈஸ்ட் ஹாம் போகணுமா?”
பிஷாரடி நைட்ஸ்பிரிட்ஜிலிருந்து திரும்பி காரை மெதுவாக ஓட்டியபடி கிளஸ்டர் வீதியின் இரண்டு பக்கமும் பார்த்தபடி வந்தார்.
“தா இவிடெ சாயாக்கடை உண்டு” பச்சை மலையாளத்துக்கு அவர் சந்தோஷமான நேரம் என்பதால் இங்கிலீஷில் இருந்து மாறியதாக கல்பா ஊகித்தாள்.
ப்ளாட்பாரத்தை ஒட்டி ஒடுக்கமான கடை. வாசலில் சாக்பீஸால் எழுதிய பலகை. காரனேஷன் காஃபி ஹவுஸ். அடுத்த பலகை நாலு வரி எழுதி இருந்ததை கண்ணாடி இல்லாமல் படிக்க முடியவில்லை. கல்பா இரைந்து படித்தாள் – இன்று பத்தாம் ஆண்டுவிழா. காபி ஆர்டர் செய்தால் டோநட் ஒன்று இலவசமாகத் தரப்படும்”
சாப்பிட்டுப் போகலாம் சார், வாங்க. கல்பா காரை நிறுத்தப் போவது போல் சைகை காட்ட, தெரு ஓரமாக நிறுத்தினார் பிஷாரடி.
காரனேஷன் சாயா கடையில் நாலைந்து பேர் டோநட்டைப் பிய்த்து காபியில் நனைத்துத் தின்று கொண்டிருந்தார்கள். சுமாரான ஒரு பெஞ்சில் உட்கார்ந்து முன்னால் மேஜையில் காபியும் டோநட்டும் வரக் காத்திருந்தார்கள் கல்பாவும் பிஷாரடியும். பஞ்ச கச்சமும் முன் குடுமியும் நெற்றியில் சந்தனமுமாக அவரை ஒரு வினாடி நின்று பார்த்துப் போனவர்கள் அதிகமாகிக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று உயர்ந்து ஒலித்த ஒரு குரல் கேட்டது. மன்றாடும் தீனமாக சத்தம் அது. “எனக்கு டோநட் தரலே”
முகத்தில் மூன்று நாள் தாடியோடு நடுத்தர வயசுக்காரன் ஒருத்தன் காப்பி ஹவுஸ் செர்வர் பெண்ணிடம் புகார் செய்து கொண்டிருந்தான்.
“அரை மணி நேரமா இங்கே இருக்கீங்க. வந்ததுமே டோநட்டை உங்களுக்குக் கொடுத்து நீங்களும் சாப்பிட்டாச்சு. இப்போ காப்பியும் ஆச்சு. எழுந்து நடையக் கட்டுங்க”
“எனக்கு டோநட் கொடுக்கலே” சின்னப் பையன் மாதிரி அந்த மனுஷர் அடம் பிடித்தார்.
இன்னொரு நிமிடத்தில் டோநட் தராவிட்டால் தரையில் விழுந்து புரண்டு அழுவார் என்று கல்பாவுக்குத் தோன்ற பிஷாரடி சார் காதில் சொன்னாள் –
நாம் வேணும்னா இன்னொண்ணு கொடுக்கச் சொல்லிட்டு காசு தரலாமா?
இல்லே கல்பா. அவன் தெருமுனையிலே பிச்சை எடுக்கற கிழக்கு ஐரோப்பிய அகதி. பிச்சையா ரொட்டி, டோநட் கொடுத்தா வாங்க அவனோட சுய கௌரவம் இடம் தராது.
இப்ப என்ன செய்ய? கல்பா கேட்டாள்
பேசாமா சாப்பிட்டு எழுந்து போகறதுதான்.
கல்பா கொஞ்சம் குரல் உயர்த்தி அந்த கிழக்கு ஐரோப்பா காரனைக் கூப்பிட்டாள்.
வாங்க, டோநட் நல்லா இருக்கு. எங்களோடு பங்கு போட்டுக்குங்களேன். ”
அவன் முகம் மலர நன்றி சொல்லி பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தான். அவன் மேல் தீர்க்கமான மிளகு வாடை அடித்தது.
Pic courtesy Caffe Forum Gloucester Road London