கம்ப்யூட்டர் அறையில் லேப்டாப்பை இயக்கியபடி ”உனக்கு ரொம்ப சிம்பிள் ஆக ஆப்ஷன்ஸ் ட்ரேடிங் சொல்லித்தரேன், வா”, என்றான் மருது.
இரு வரேன் என்று உள்ளே ட்ராவல் பையோடு போய், நைட்டி அணிந்து வந்தாள் கல்பா. நைட்டி அணிந்த தேவதைகளின் ஆராதக தெய்வம் போல் இருப்பதாக மருது சொல்ல, போடா என்றாள் சீரியஸான முகத்தோடு.
”ஷேர் மார்க்கெட் பரிபாஷையிலே call கால் என்றால் கூப்பிடறது இல்லே வாங்கறேன்னு அறிவிக்கிறது. Put புட் அப்படீன்னா வைக்கறது இல்லே. விற்கறேன்னு அறிவிக்கறது. Option Seller ஆப்ஷன் செல்லர் ஒரு நிறுவனம் அல்லது தனி மனிதர். எனக்கு call option அல்லது put option விற்பவர்.
Call கால் ஒப்பந்தத்தை ஆப்ஷன் செல்லர் கிட்டே இருந்து நான் வாங்கினால், எதிர்காலத்துலே ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட தேதியிலே அல்லது அதுக்கு முந்தி, அவர் ஒப்பந்தம் போட்ட அதே விலைக்கு அதே அளவு அந்த பொருளை எனக்கு விற்கச் சொல்லி அவரை நான் கேட்கலாம். எனக்கு அப்படி விக்கறது அவர் கட்டாயம் செய்தாக வேண்டியது.
Put புட் ஒப்பந்தத்தை ஆப்ஷன் செல்லர் கிட்டே இருந்து நான் வாங்கினால், எதிர்காலத்துலே ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட தேதியிலே அல்லது அதுக்கு முந்தி, அவர் ஒப்பந்தம் போட்ட அதே விலைக்கு, அதே அளவு, அந்த பொருளை என்னிடம் இருந்து வாங்கச் சொல்லி அவரை நான் கேட்டால், வாங்கறது அவர் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை.
அதே நேரத்திலே, ஆப்ஷன் வாங்கின நான் ஆப்ஷன் செல்லர் கிட்டே ஒப்பந்தப்படி வாங்கணும் அல்லது விற்கணும் அப்படின்னு கட்டாயம் இல்லை. ஆப்ஷன் வாங்கினவன்கிற உரிமை எனக்கு இருக்கு. ஆனால், அந்த ஒப்பந்தப்படி செயல்படணும்னு கட்டாயம் ஏதும் எனக்குக் கிடையாது.
கால் ஆப்ஷன் ஒன் மந்த் நூறு கிலோ பெப்பர் Call option one month one hundred kilos pepper at $1000 அப்படீங்கறது மிளகு விலை ஏறிட்டு இருக்கும்போது சகாய, ஒப்பந்த விலைக்கு அது கிடைக்க வழி செய்யும். மார்க்கெட்டுலே மிளகு விலை $1000-க்கு மேலே போனால், நான் $1000-க்கு எனக்கு விற்கச் சொல்லி ஆப்ஷன் செல்லரை அழைக்கலாம். அது $1000—க்குக் கீழே மார்க்கெட்டுலே போயிட்டிருந்தா, நான் சும்மா இருந்துடலாம்.
அதே மாதிரி புட் ஆப்ஷன் ஒன் மந்த் நூறு கிலோ பெப்பர் put option one month one hundred kilo pepper at $1000 அப்படீங்கறது மிளகு விலை சரிந்து வரும்போது வெளி மார்க்கெட் நிலவரத்தை விட அதிகமான ஒப்பந்த விலையான $1000-க்கு அவன் என்னிடம் இருந்து வாங்கிக்கொள்ள வழி செய்யும். இதுதான் ஆப்ஷன் வர்த்தகத்தோட சாறு”. கல்பா கைகூப்பி ’குரு’ என்று வணங்கினாள்.
மருது சிரித்தபடி ”ஆப்ஷன்லே ஒரு சுவாரசியமான விஷயம் என்னன்னா எந்தப் பொருளோட விற்பனை, வாங்குதலுக்கு எவ்வளவு விலை கைமாற்றணும் என்று ஆப்ஷன் காண்ட்ராக்ட் போடறோமோ அந்த தேதியும் விலையும் தான் முக்கியம். பொருள் கைமாற வேண்டாம். அதைவிட முக்கியம், சொன்னேனே, வாங்கவோ விற்கவோ ஆப்ஷன் வாங்கினால், நமக்கு வாங்கவோ விற்கவோ உரிமை கிடைக்கிறது. ஆனால் செய்தாகணும்ங்கிற கட்டாயம் எதுவும் இல்லை. கமோடிட்டி என்ற பொருட்கள் வைத்து, உதாரணத்துக்கு மிளகு – பெப்பர் ஆப்ஷன் என்றால் நான் வீட்டுலே மிளகு மூட்டை வாங்கி அடுக்கி வச்சு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்ய, வாங்க மண்டிக்கடை நடத்த வேண்டாம். ஆப்ஷன் செல்லரோடு ஒண்ணுக்கு மேற்பட்ட பரிவர்த்தனை இருக்கும்ங்கிறதாலே, அவர் எனக்கு எவ்வளவு தரணும் நான் அவருக்கு எவ்வளவு தரணும்னு நிலுவைத்தொகையை அப்போ அப்போ தீர்மானிச்சுக்கிட்டு வர்த்தகம் நகரும். நீ ட்ரை பண்ணி பாரு கல்பா. ஒரு தடவை ஆப்ஷன் காண்ட்ராக்ட் உள்ளே போய்ட்டா திரும்பவே மாட்டே என்றான் மருது.
“நீ என்ன பொருளுக்கு எல்லாம் ஆப்ஷன் காண்ட்ராக்ட் வர்த்தகம் பண்ணிக்கிட்டிருக்கே மருது?
”மிளகு மட்டும்தான். அதுவே சாகரம்”.
option trading on laptop
ack with thanks thebalance.com