ஹொன்னாவரில் இருந்து ஜெருஸோப்பாவைத் தொடாமல் கோகர்ணம் வழியாக ஐந்து மணி நேரப் பயணம். ’கெலடிக்கு. வரப் போகிறேன்’ என்று வெங்கடப்ப நாயக்கரிடம் முன்கூட்டிச் சொல்லி அனுப்பவில்லை. பயணம் வைத்ததும் அதை உடனே நாயக்கரிடம் சொல்லச் செய்தி கிரகித்து அனுப்பும் ஒற்றர் படை கெலடி அரசருக்கு உண்டு என்பதை அவன் அறிவான்.
வரப் போகிறேன் என்ற செய்தி அதிகாரம் தொனிக்கும். அல்லது நேரத்தை யாசிக்கிறதாக இருக்கும். ‘புறப்பட்டேன், வந்து சேர்ந்தேன், பேசி முடித்தேன், விரைந்து புறப்பட்டு ஊர் சேர்ந்தேன், அடுத்த வேலையைக் கையில் எடுத்தேன்’ என்று செயல்படலே சரியான அணுகுமுறை என்று ரோகிணி தலையணை அரசியல் மந்திரம் ஓதியிருந்தாள் நேமிநாதனின் காதில். காது என்று இருட்டில் அவள் அனுமானித்த இடத்தில்.
என்ன, சொன்ன நேரத்தில் கிளம்ப வேண்டும் என்பதில் தான் சுணக்கம் உண்டானது. காலை உணவு அருந்தாமலேயே புறப்பட்டு விட்டான் நேமிநாதன்.
கோகர்ணம் கடந்து கெலடிக்குப் போகும் பாதையில் இல்லாத உணவகங்களா? விஜயநகரம் செழித்து வளர்ந்து தேய்ந்த இந்த இருநூற்று சில்லறை வருட காலத்தில் சோறு விற்பது சகஜமாகி விட்டிருந்தது.
பிடவை, வேட்டி, காய்கறி, பால் விற்கிற மாதிரி வழியில் ஒரு உணவு விடுதி. நேமிநாதன் யாரென்று அறிந்த உடமையாளரும் இருந்தார். இளம் வயது. பரபரப்போடும் உற்சாகத்தோடும் அவனைப் பார்த்து வணங்கி, மிளகு அரசர் வாழ்க என்று முழங்கினார்.
அங்கே உணவு செய்து கொண்டிருந்த ஏழெட்டு இளைஞர்கள் உடனே நேமிநாதனைச் சூழ்ந்து கொண்டு மிளகு அரசர் வாழ்க என்றும் நாளை அரசர் நேமிநாதர் வாழ்க என்றும் உற்சாகமாக எச்சில் கையோடு முழங்கினார்கள்.
அலை வந்த திசை மாறி இருக்கிறது என்றுபட நேமிநாதன் அவர்களைப் பார்த்துக் கையசைத்து உப்பிட்டும் தோசையும் கிடைக்குமா, நான் கொஞ்சம் விரைவாகப் பயணம் போய்க்கொண்டிருக்கிறேன் என்று விடுதிக்காரரிடம் தெரிவித்தான்.
ஒரு குழப்பமும் இல்லை, இன்னும் ஐந்து நிமிடத்தில் கிடைக்கப் பண்ணுவேன் என்று தேவதா பிரேமையும் மரியாதையுமாக அறிவித்தான் விடுதிக்காரன். தோசை செய்ய நேரமாகுமென்றால் வேணாம் என்று சிரித்தபடி சொன்னான் நேமிநாதன். ஒரு குழப்பமும் இல்லை என்று இரண்டாம் தடவையாகச் சொன்னான் மலையாளி விடுதிக்காரன். வாழை இலையை வெள்ளித் தட்டில் வைத்து, சுடச்சுட அதன் மேல் இரண்டு தோசைகளை வைத்து, தேங்காய்த் துவையலும் புளி இஞ்சியும் தொடுபண்ணியமாகப் பக்கங்களிலிட்டுக் கொண்டு வந்து, பெரும் மரியாதையோடு நேமிநாதன் முன் வைத்தான அவன்.
அடடா எவ்வளவு ஸ்வாதும் நிறமும் கொண்ட சூடான தோசைகள். நன்றி நண்பரே. ஆனால் உப்பிட்டுவை விட்டுவிட்டீரே என்று சிரித்தான் நேமிநாதன்.
உண்டே ஐயா என்று கரண்டி கொண்டு ஒரு தோசையைத் திருப்பித் திறக்க உள்ளே உப்பிட்டு ஒரு கையளவு பரத்தியிருந்தது. இதென்ன உப்பிட்டு உள்ளிட்ட தோசையா என்று சந்தோஷத்தோடு கேட்டான் நேமிநாதன். ஆம் என்று குஷியாகச் சொன்ன விடுதிக்காரன் ஒரு காசும் வாங்க மாட்டேன் என்று சொல்லி வழியனுப்பினான்.
கையலம்பி வந்த மற்ற வாடிக்கையாளர் இளைஞர்களும் மிகுந்த நம்பிக்கையும் சாதிக்கப் போகும் தீவிரமுமாக மிளகு சக்ரவர்த்தி வாழ்க என்று ஒரு தோசை தின்னும் நேரத்தில் அரசனை சக்கரவர்த்தியாகப் பதவி உயர்த்தி வாழ்த்தி முழங்க, நேமிநாதனின் சாரட் ஊர்ந்து வேகம் கொண்டது.