இலக்கிய நிகழ்வு, நாடக விழா என்று பாரதி மணி அவர்களோடு கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் அவ்வப்போது சந்தித்து அளவளாவி இருக்கிறேன். அவருடைய புகைக்குழலில் எழும் மிதமான புகையிலை வாடையாகத்தான் அவரை நினைவு வைத்திருக்கிறேன்.
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது கோவையில் அளிக்கப்பட்ட விழாவில் அமர்வுகளுக்கு இடையே நிறைய உரையாடினோம். வண்ணதாசனுக்கும் வண்ணநிலவனுக்கும் சாரல் விருது சென்னையில் வழங்கப்பட்டபோது பேசியது படமாக நினைவு இருக்கிறது.
இந்திரா பார்த்தசாரதி அவர்களைச் சந்தித்து உரையாடியபோது ஒரு முறை சொன்னார் –
என் ‘மழை’ நாடகம் தில்லியில் அரங்கேறியபோது (பாரதி)மணி தான் கதாநாயகன், அவருடைய would-be மனைவி தான் கதாநாயகி. நாடகம் அரங்கேற்ற நேரத்தில் கல்யாணமும் நடந்தது. அப்புறம் அந்த நாடகத்தை வெவ்வேறு நடிகர்கள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க மேடையேற்றிய போதெல்லாம், நிஜ வாழ்க்கையிலே அந்த ஜோடி கல்யாணம் செய்துகொண்டது நடந்தது.
ஆரம்பித்து வைத்தவர் பாரதிமணி அவர்கள்!
மியான்மார் அதிபர் (தற்போது ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டவர்) Aung San Suu Kyi முதல் தில்லி சுடுகாட்டு ஊழியர்வரை அவருடைய தொடர்பு வட்டத்தில் எத்தனை எத்தனை மனிதர்கள்.
அவர் எழுதினார் –
//
தில்லி போனபுதிதில், ஒரு தடவை என் நண்பரின் சடலத்துடன், இறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய க்யூவில் நின்றிருந்தேன். என் முறை வந்ததும், தூங்கிவழிந்துகொண்டிருந்த வயதான சிப்பந்தி, ‘க்யா நாம் ஹை? என்றார். என் பெயரைச்சொன்னேன். ‘பாப் கா நாம்?’ என் தந்தையின் பெயரைச்சொன்னேன். ‘உமர்?’. என் வயதைச் சொன்னேன். ப[த்]தா?என் விலாசத்தை பின் கோடு சகிதம் ஒப்பித்தேன். அவரது அடுத்த கேள்வி: ‘உன் பெயரென்ன?’ என் பெயரைத்தானே சொன்னேன் என்று சற்று உரக்கக்கூறினேன். ‘முட்டாள்,நான் செத்தவரின் பெயரைத்தான் கேட்டேன். நீ என்ன அட்வான்ஸ் புக்கிங் பண்ணறியா? பேட்டா! உனக்கு இங்கே வர இன்னும் நிறைய நாளிருக்கு. என் வயதும் உனக்குச்சேரட்டும்!’ என்று ஆசீர்வதித்தார்! ஆக என் பெயர் நிகம்போத் காட்டில் ஏற்கனவே பதிவாயிருக்கிறது!
//
அஞ்சலி செய்யப்பட வேண்டிய இறப்பு என்பதை விட, கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை பாரதிமணி அவர்களுடையது. சென்று வாருங்கள் மணிசார்!