An excerpt from my forthcoming novel MiLAGU
முந்தாநாள் நடுராத்திரி கூடத்திலே தரையிலே பத்தமடைப் பாய் விரித்து சின்னதா ரெண்டு தலைகாணி தலைக்கு ஒண்ணு காலுக்கு ஒண்ணுன்னு வழக்கம்போல் வச்சு தூங்கிண்டிருந்தேன். தலைமாட்டுலே கொஞ்சம் தள்ளி சுவர்லே குழிச்ச மாடப் புறையிலே அகல் விளக்கு ராத்திரி முழுக்க சின்னதாக இருந்தாலும் நந்தாவிளக்காக, வெளிச்சம் வந்துண்டே இருக்கறது எல்லா வீட்டிலும் ராத்திரி நடவடிக்கை ஆச்சே. இல்லேன்னா தேளும், ஜலமண்டலியும், பூரானும் செவியனும் வீட்டுக்குள்ளே ராத்திரி வந்து ஜீவிதத்தை நரகமாக்கிடுமே. இத்தனை ஏன், நீர்ப் பாம்பு கூட நல்ல பாம்பு மாதிரி நீளமாக சுருண்டு மேலே ஏறப் பார்க்குமே இருண்ட ராத்திரியிலே.
என்வீட்டு மாடப்புறை தீபம் திடீர்னு அணைஞ்சு இலுப்பெண்ணெய் வாடை. கூடவே எனக்கு தெரிந்த, ஆரம்ப காலத்திலே என்னை அவளோடு முயங்க ரோகிணி அனுமதித்தபோது அவள் காது மடல்லே, இடுப்பிலே இருந்து வந்த ரோகிணி வாடை.
நான் எழுந்திருக்காமல் படுத்துண்டே இருந்தேன். எனக்கு ரொம்ப அருகே அவளோட ஸ்தன வாசனை. அது தனியான மனுஷத் தோல் வாசனை. அடைச்சு அடைச்சு வச்சு மேல் பிரதேசத்துலே இருந்து கிளம்பற அந்த வாடை இல்லாம சிருங்காரம் சரி பாதியாக் குறைஞ்சிடும். கடும் ஜலதோஷமான போது ஏனோதானோன்னு கலவி பண்ற மாதிரி.
ஆக முந்தாநாள் ராத்திரி என்மூக்கு பக்கம் அவளோட பயோதர வாடை நெருங்க, ரொம்ப நாளைக்கு அப்புறம், மாரை பிடிச்சு ரமிக்க ஏற்பாடு பண்ணிண்டிருந்தேன். ஆனா, அவள் கை நீண்டது என் தலைக்குக் கீழே இருந்து தலைகாணியை உருவ. நானும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் தலைகாணியை விட்டுக் கொடுத்துட்டேன்.
சாகசி, தலைப் பக்கம் இருந்ததை எடுத்த மாதிரி கால் பக்கம் வச்சிண்டிருந்ததையும் பிடுங்கிண்டுட்டா. ரெண்டையும் என் முகத்திலே வச்சு மூச்சு முட்ட வச்சு நான் இப்படி அப்படி அலைபாய்ந்து சுவாசிக்க கஷ்டப்பட்டதை மீறி ரெண்டு மூக்குத் துவாரத்தையும் கையாலே வேறே அடச்சுண்டு என்னை பிணம் ஆக்கறதுக்கான முஸ்தீபுகளிலே இருந்தாள்.
ஓஓஓஓஒ. நான் சுவாசத்துக்காக சத்தம் போட்டேன். அவள் சட்டுனு என் பக்கம் உக்காந்து, விளக்கு அணைஞ்சு போச்சு. நீங்க துர்ஸ்வப்பனம் கண்டு கத்திக்கிட்டிருக்கீங்க. எழுந்து தண்ணீர் குடிச்சுட்டு தூங்குங்க. இல்லேன்னா தலைகாணி ரெண்டையும் சாப்பிட்டுடுவீங்க என்றாள் சிரித்தபடி.
அவள் இதை என் முகத்தைத் தடவிக்கொண்டு சொல்ல, நான் விளையாட்டாக அவளுடைய கொங்கைகளைப் பற்றினேன். கையை விடுவித்துக் கொண்டு பஞ்சுத் தலைகாணி இல்லே இதை பிய்ச்சா ரத்தம் தான் வரும் என்று சொன்னபடி கலகலவென இன்னொரு தடவை சிரித்தாள்.
கனவா, நினைவா என்று புரியாமல் நான் கிடந்த அந்த நிமிஷம் மகத்தானது. ரெண்டுக்கும் இடைப்பட்ட சில வினாடி நேரத்திலே தொங்கிக்கொண்டு இருந்தபடி முழு உறக்கத்துக்கு நழுவிப் போனேன்.
என் உள் மனதுக்குத் தெரிந்தது, அவள் என்னை சுவாசம் திணற வைத்துக் கொல்ல முயன்றாள். கனவாக இருக்கலாம் என்று ஒரு மனம் சொல்ல, அப்படியே எடுத்துக்கொண்டு விடிந்து குளித்துவிட்டு இட்டலி தின்ன படுக்கையை சுருட்டி வைத்து விட்டு குளியலறைக்குப் போனேன்.
pic Sun rise in North Karnataka
ack karnataka.com