An excerpt from my forthcoming novel MiLAGU
”அரசுத் தரப்பில் பேரிழப்பு என்பதோடு எனக்கு தனிப்பட்ட முறையில் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் இழப்பு மிங்குவின் இறப்பு”
சென்னபைரதேவி சொல்லும்போதே குரல் நெருடியது. வைத்தியர் நிமிர்ந்து பார்த்தார். நடுங்கும் குரலில் சொன்னார் அவர் –
”அந்த விசுவாசம் மிக்க ஊழியை இறந்திருக்க வேண்டாம். அந்தக் கலந்துரையாடல் நடத்த வேண்டாம் என்று இங்கே இருக்கும் பலரும் சொன்னதைக் கேட்டிருந்தால். மிங்கு இன்னும் இருந்திருப்பாள். அப்படி நடக்க வேணும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எனில் அப்படி நடக்கலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும், முக்கியமாக மகாராணிக்கு மனதில் எழுந்திருக்கலாம். அந்தக் குரல் கேட்டு நடந்திருக்கலாம். வாய்க்கவில்லை”.
வைத்தியர் மேலே பேச முடியாமல் வாயைத் துண்டால் பொத்திக்கொண்டு குலுங்கி விம்மினார். சென்னபைரதேவியின் அணுக்கத் தொண்டராகவும் அவளுடைய உடல்நலம் பற்றி உரிமையோடு கட்டுப்பாடு விதித்து ராணியிடமே கண்டிப்பாகப் பேசக்கூடியவருமான பைத்யநாத் வைத்தியர் முதல்தடவை ராணியை விமர்சனம் செய்த பொழுது அது.
தலையை அசைத்தபடி வைத்தியரைப் பார்த்த ராணியின் பார்வையில் நீயுமா வைத்தியா என்ற தீனமான விசாரிப்பு அப்பட்டமாக எழுதியிருந்தது.
வைத்தியர் மகாராணியின் கண்களை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தார். அவரால் கோபப்பட முடியவில்லை. சென்னா நிறுத்தாமல் ஒரு நிமிடம் இருமிவிட்டு கையில் வைத்திருந்த துணியால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். வைத்தியர் கண்கள் கசியத் தொடங்கின. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவர் வகுளன் அருகே நின்றார். தொடர்ந்து கனைக்கிற குதிரைகளின் சத்தம் பூசி வந்த ராத்திரி இன்னும் நீண்டது.
அம்மா, நேமிநாதர் சார்பில் நான் இந்தக் கூட்டத்தில் பங்கு பெறுகிறேன்.
வகுளன் அறிவித்ததைத் தலையைச் சற்றே சாய்த்துக் கேட்டபடி இருந்தாள் சென்னா. தக்க பதிலை யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று உள்ளங்கையில் குவிந்த விழிகள் வெளிப்படுத்தின.
பிரதிநிதியை அனுப்பி அவர் வராமல் போனதற்கு என்ன காரணமோ?
வகுளனை கூர்மையாகத் துளைத்தெடுக்கும் சற்றே சத்தம் ஓங்கிய குரலில் கேட்டாள் சென்னா. வகுளன் இதை எதிர்பார்த்தவனாக சாந்தமாகச் சொன்னான் – வரமுடியாத சூழ்நிலை. வந்தால் உயிருக்கு அபாயம் நேரலாம் என்று நினைக்கிறோம்.
சென்னா உடனே எழுந்து நின்றாள். இரண்டு கையும் விரித்துக் காட்டி வகுளனிடம் அதிகாரம் மிளிரும் குரலில் சொன்னாள் –
இப்படி ஒரு எண்ணத்தை மனதில் வைத்திருக்கும் நீங்கள் என்னைப் பற்றியும் அறிந்தவர் இல்லை. நேர்மையான அரசியலில் நம்பிக்கை வைத்தவரும் இல்லை என்று எனக்குத் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. இத்தனை வருடம் இந்த அவையில் இருந்தும், நான் மதிப்பு வைக்கும் இளம் நண்பராக இருந்தும் சென்னாதேவி என்ற பிற உயிர்க்குத் துன்பம் நினைக்காத சமணத்தியை நீங்கள் அறியாமல் போனது என் குற்றம் தான். வாள் வீசத் தெரிந்த சமணத்தி நான். எங்கு வாளோங்குவது, எங்கே நாவோங்குவது என்று இந்த அறுபத்தேழு வயதில் நன்றாகவே உணர்ந்தவள். அதுவும் என் பிரியமான மகன் மேல், என்னோடு பேச வந்தவன் மேல், என் இன்னொரு மகனான உங்கள் மேல் ஆயுதம் வீசிக் கொலைப்படுத்த என் மதமும் சொல்லவில்லை நான் அறிந்த ராஜாங்க நெறிமுறையும் கூறவில்லை, அடிப்படை மனிதாபிமானமும் கற்றுத்தரவில்லை. நேமிநாதரை வரச்சொல்லுங்கள். அவருடைய உடலுக்கும் உயிருக்கும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இன்னும் சந்தேகம் என்றால் வாளும் துப்பாக்கியும் ஏந்திய இரு நபர் காவலர் கூட்டத்தோடு வரட்டும். நான் உங்களை, நேமிநாதரை நம்புகிறேன். என் உடலும் உயிரும் உங்களிடம் எந்த இடருமின்றிப் பாதுகாப்பாக இருக்கும் என்றறிவேன்.
வகுளன் வானை நோக்கி இரு கரமும் உயர்த்திக் கூறினான் – அம்மா உங்கள் மனதை அறியாமல் நான் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். நான் பேசியது ஒரு பார்வைக் கோணத்தை இங்கே தரவே. குழந்தைகள் மேல் சினம் கொள்ளும் தாயை நாங்கள் அறிவோம். சிசுவதை செய்யும், அதுவும் தம் மக்களையே வதம் செய்யும் தாயை நாங்கள் பார்த்ததில்லை.
pic a medieval doctor examining a patient
ack historyextra.com