An excerpt from my forthcoming novel MILAGU
“என்றால், நேமிநாதனிடம் சொல்லுங்கள்- அவர் வந்து கலந்து கொள்ளாமல் இந்த பேராயம் பாதி கிழித்த பட்டுத்துணியாகத்தான் தென்படுகிறதென்று. இனிவரும் கூட்டத்தில், அப்படி ஒன்று இருந்தால், அவர் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நான் அதற்குள் இறந்துவிட மாட்டேன் என்று நம்புகிறேன்”.
மிளகுராணி வாழ்க என்று அவை முழுக்க முழங்கியது. அம்மா நீங்கள் ஒரு நூறும் இன்னொரு நூறும் காண்பீர்கள். சற்று ஓய்வெடுத்துக் கொண்டால் போதும். அரசாட்சி வேலைப் பளுவைக் குறைத்துக் கொள்ளுங்கள் என வேண்டிக் கேட்கிறேன். வகுளன் அன்பு தென்படும் குரலில் சொன்னான்.
விழித்துக் கொண்டே உறங்கி, பணி புரிந்துகொண்டே ஓய்வெடுத்துப் பழகியவள் நான். என் உடல்நலத்தில் உங்கள் உண்மையான அக்கறைக்கு நான் நன்றி சொல்கிறேன். வெளிப்படையாக ஓய்வு எடுக்க தருணம் தோன்றும்போது நானும் கிடந்து எழுவேன்.
சென்னா சொல்லிக்கொண்டு போக, வைத்தியர் இடை மறித்தார். நான் ஜெருஸூப்பாவின் அடிப்படைக் குடிமகனாக, அரசு அதிகாரியாக, அரசி அவர்களின் நெடுங்காலம் நலம் பேணும் வைத்தியனாகக் கண்டதை ஓரளவாவது நாட்டு நலன் முன்வைத்து இங்கே இந்த பேராயம் அவையில் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
வேண்டாம் என்று கை உயர்த்தினாள் சென்னபைரதேவி. வைத்தியர் கூட்டத்தில் நடுவில் நடந்து போய் நின்றார். மகாராணி வருத்தம் தொனிக்கும் குரலில் பிரலாபித்தாள் – சொன்னால் கேட்காத பிள்ளைகள் நீங்கள் என்று இன்னொரு முறை நிரூபணமாகிறது; நடக்கட்டும் என்றாள்.
வைத்தியர் குரலைத் தாழ்த்திப் பேசத் தொடங்கினார் -இது அரசியாருக்கு அந்தரங்கமானது என்றாலும், மருத்துவத் தொழில் அந்தரங்கப் பகிர்வு தவிர்த்தல் நெறிமுறையோடு ஒத்து சேராமல் போனாலும், தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதால் இந்த அவையில் பகிர வேண்டிப் போனது. அரசியாரின் ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருக்கிறது. மற்றும் வயிற்று நோய் அவரைப் படாத பாடு படுத்துகிறது. அவருக்கு உடனே தீர்க்கமான ஓய்வு கிட்டாவிட்டால் நாம் நம் அன்புக்குரிய மகாராணியை. சரியான வார்த்தை தேடித் தோற்று பாதியில் நிறுத்தினார்.
வகுளாபரணன் வணங்கிச் சொன்னான் – அப்படி இருக்க ஓய்வு எடுக்க மாட்டேன் என்று ஏன் இந்தப் பிடிவாதம்?
இதுவரை வாய் திறக்காமல் இருந்த நஞ்சுண்டய்யா பிரதானி மகாராணியை வணங்கிச் சொன்னார் – கொஞ்சம்போல் களைத்து, மற்றபடி சுறுசுறுப்பாக ஓடியாடுகிறவரை உடனே படுத்து நித்திரை போகச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறது போல் இருக்கிறது வைத்தியரும் வகுளரும் செய்வது. மகாராணி பதவி துறக்க வேண்டும் என்று நீங்கள் வேண்டுகிறீர்கள். சுற்றி வளைத்துப் பேசுவது இதுதான். இல்லை என்று நேமிநாதரோ அவருடைய, எல்லாம் தெரிந்த பிரதிநிதியாக வேடமிட்டு வந்த நண்பர் வகுளரோ சொல்லட்டும் பார்ப்போம். உங்கள் பகல்கனவு ஒருபோதும் நிறைவேறாது. நீங்கள் அரசாளத் தொடங்கினால். அரசவைக் கூட்டம் மிட்டாய்க்கடையில் தான் நடக்கும். நேமிநாதர் ஆள மாட்டார். வேறு யாரோ பூமாலை கைக்கொண்ட குரங்காக ஜெர்ஸூப்பாவின் ஆட்சியை நிர்மூலமாக்கி கிடைத்தவரை லாபம் என்று சுருட்டவும் செய்வார்கள். உங்கள் கோரிக்கைக்கு அரசியார் செவிசாய்க்க வேண்டாமென்று கோருகிறேன்.
pic a medieval surgeon
ack en.wikipedia.org