An excerpt from my forthcoming novel MILAGU
போயிடாதீங்க மாப்பிள்ளை, இனிப்பு கொஞ்சம் மெல்ல எடுத்துவரச் சொன்னேன்.
கேலடி பேரரசர் வெங்கடப்ப நாயக்கர் கடைவாயில் வடிந்த எச்சிலை அவசரமாகத் துடைத்தபடி, ஒக்க மோதிசூரு லட்டு தீஸுகுரா என்று யாருக்கோ கட்டளையிட்டார். பில்கி அரசர் திம்மராஜு மனதுக்குள் ஆவலை மடித்து வைத்தார்.
இனிப்பு எப்பவும் கடைசியிலே தான் சாப்பிடுவான் வெள்ளைக்காரன். அப்போ தான் அளவுக்கு மேலே தின்னாம அளவா தின்னலாம். பாரு ரெண்டு பேருக்கும் மதுமேகம் இருக்கு. ஒரு லட்டு தான் எடுத்து வரச் சொன்னேன்.
வெள்ளித் தட்டில் கொஞ்சம் பெரிய மோதிசூர்லட்டு உருண்டை ஒன்று முத்து முத்தாக பூந்தி புத்தம் புதியதாக உருட்டிப் பிடித்து சுடச்சுட வந்தது.
அதுவும் சரிதான் மாமனாரே. ஆளுக்கு பாதி உதிர்த்து தின்னலாம்.
பாதியா? சொன்னா கேளுங்க மாப்ளே. ஏற்கனவே உப்புசம் கண்ட வயிறு. சரிக்கணும். கட்டுப்பாடா கால்வாசி எடுத்துக்கும். நான் மீதியை வச்சுக்கறேன். நாளைக்கே வேறே எதாவது மொகலாய் ஹல்வா கிடைச்சா அப்போ நானே வந்து பாதியை உமக்கு ஊட்டி விடச் சொல்றேன். மிட்டாய்க்காரி மாட்டேன்னு சொல்வாளா என்ன?
அப்ப கால்வாசிதானா மாமனாரே. உங்க பங்கு லட்டுலே பதிச்சிருக்கிற நாலு முந்திரிப்பருப்பை அதோடு சேர்த்து எனக்கு சாப்பிட கொடுங்களேன். மாமனார் பெயர் சொல்லி சாப்பிடுவேனில்லே.
சரி எடுத்துக்கோ. நீ கேட்டு மாட்டேன்னு சொல்லியிருக்கேனா எப்பவாவது? லட்டு பங்கு போடப்பட்டது. ஜெருஸுப்பாவின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டது.
வெத்தலை போட்டு சுதி ஏத்திக்கிட்டு போகலாம் என்று நாயக்கர் யாரையோ வெற்றிலைச் செல்லத்தைக் கொண்டுவரச் சொன்னார்.
நீர் வெத்தலெ போடுவீரா? திம்மராஜுவை ஒரு உபசாரத்துக்குக் கேட்டார்.
இல்லே மாமனாரே, நீங்க எடுத்துக்குங்க.
திம்மராஜுவின் எதிரே அமர்ந்து தாம்பூலம் தரிக்கலானார் வெங்கடப்பநாயக்கர்.
சரி, மாமனாரே. எல்லாம் சரிதான். இப்போ இதிலே இடிக்குற பெரிய சமாசாரம் சென்னபைரதேவியம்மா இன்னும் சக்தியா அரசாட்சி செஞ்சுக்கிட்டிருக்காங்க. வயசைச் சொல்லி, அதாவது அறுபத்தைந்து வயசிலே பதவி இறங்கணும்னு காரணம் சொன்னா.
திம்மராஜு பாதி வாக்கியத்தில் நிறுத்தினார்.
நல்லாத்தான் சொல்றே போ. எனக்கு அறுபத்தொன்பது வயசு ஆகிடுத்தேன்னு கேட்கறியா?
அது நான் சொல்லலே மாமனாரே. நீங்க இன்னும் நூறு வருஷம் கேலடி மகா அதிபதியாக இப்போது போல் எப்போதும் துருவ நட்சத்திரமா ஒளிவீசிக்கிட்டிருக்கணும் என்று இருகை உயர்த்தி வணங்கினார் திம்மராஜு.
நீ ஒண்ணுப்பா இன்னும் நூறு வருஷம் இருந்தா கடல் ஆமை மாதிரி மெதுவா அசைஞ்சுதான் போய்க்கிட்டிருக்கணும். மக்கள் ரெண்டு பேரும் சேர்ந்து பதவி கையில் வாங்கற நாளுக்கு காத்துக்கிட்டிருக்கேன்.
அவர் சொல்லும்போது வெங்கடப்பாவுக்கும் மிளகு ராணிக்கும் என்ன வித்தியாசம், வெங்கடப்பா மகன்களுக்கும் நேமிநாதனுக்கும் என்ன வித்தியாசம் என்று திம்மராஜு நினைத்துப் பார்த்தார்.
அது வேறே இதுவேறே திம்மா. திம்மராஜு மனதில் ஓடுவதை சரியாக நாடி பிடித்தவராக பேச ஆரம்பித்தார் வெங்கடப்பா.
அது என்ன வித்தியாசம்னா அங்கே பொம்பளை தேசம் இங்கே ஆம்பளை ராஜ்ஜியம். உனக்குத் தெரியாததில்லே. ஆம்பளை ராஜ்ஜியத்திலே இப்படி வந்து போய் பேசி பேசி இன்னும் கொஞ்சம் பேசி வெளியேறி முற்றுகையிட்டு மறுபடி பேச வகை இருக்கான்னு பார்த்துக்கிட்டு நின்னு மெல்ல சத்தமில்லாத யுத்தம் வராது. அடுத்த நாட்டுக்கு கைமாற நூறு பேர் வேணும். கொடுங்க. காசு தர்றேன் ரெண்டு வாரத்திலே வெளிநாட்டில் இருந்து படை வரும். எப்படியும் வந்துவிடும். வந்ததும் உங்க ஆள்படைகளை திருப்பி அனுப்பிடறேன். இப்படி எந்த போரும் நடந்ததில்லே. ஒரு சின்ன நிலப்பரப்புக்கு உரிமை போராட்டம்னாலும் ஆயிரம் ஊரை, கிராமத்தை, வயல்வெளியை அடக்கிய பூமிக்கு உரிமை கேட்கறதாக இருந்தாலும் சிரத்தையும் வேகமும், செய் அல்லது செத்து மடின்னு ஆவேசமுமாக சிப்பாய் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து ஒற்றைப் படையாக யுத்தம் செய்யணும்.