பெரு நாவல் ‘மிளகு’ – The vaulted treasure and a nest of scorpions

An excerpt from my forthcoming novel MILAGU

சதுர்முக  பஸதியின் வெளித் திண்ணைகள் நான்கு பக்கக் கதவுகளையும் ஒட்டி உயரமும் தாழ்வுமாக சாய்ந்து நிறுவப்பட்டிருந்தன. கதவை உள்ளே இருந்து திறந்ததும் வலமும் இடமும் நிற்கும் திண்ணைகள் இவை.

வழிப்போக்கர்கள் வாசலுக்கு வந்து, கதவு அடைத்திருந்தாலும் திண்ணையில் நீட்டிப் படுத்து ஓய்வு கொள்ளலாம். கதவுக்கு வலமும் இடமும் திண்ணை இருப்பதால் இரண்டு வழிப்போக்கர்கள் ஒவ்வொரு கதவையும் ஒட்டிப் படுத்துக் கிடந்து ஓய்வு கொள்ள முடியும்.

ஓய்வு எடுப்பவர்கள் படுக்க மெல்லிய துணி போல் வழுவழுவென்ற தரை வாய்த்தவை திண்ணைகள். படுத்திருந்து துயில் கொள்ள வருகிறவர்களுக்கு இலவம்பஞ்சுத் தலையணை தர முடியாவிட்டாலும், காரையும் செங்கலும் கருங்கல்லும் பளிங்குக் கல்லும் வைத்துத் திண்ணை உருவாக்கியபோதே தலைமாட்டிலும் கால்மாட்டிலும் தலையணைபோல் உருவாக்கி வைத்த கட்டடக் கலைஞர்களைப் படுத்து ஓய்வெடுக்க வருகிறவர்கள் சிலாகித்து நன்றியும் சொல்லிப் போவதுண்டு.

அந்தத் திண்ணை ஒன்றில் ஒரு சிறுவன், வயது ஐந்து காணும், சந்திரனைப் போன்ற முகவிலாசம், மலர்த்திய கண்களையும் கடந்து  தெரிய நித்திரை போயிருக்கிறான். சற்றே களைப்பு தென்பட்டாலும் ஆழ்ந்து உறங்கும் சிறுவன் சிறு மலர் உதிர்ந்து நந்தவனத்தில் யார் காலும் படாமல் கிடப்பது போல் ஆழ்ந்த துயிலில் இருக்கிறான்.

அவனுக்கு எதிர்த் திண்ணையில் ஒரு பெரிய வாழை இலையை இடுப்புக்குக் கீழே போர்த்தி சமண திகம்பர முனிவர் துயில் கொண்டிருக்கிறார். நிர்மல முனிவர் அவர். சிறுவன் மஞ்சுநாத்.

வெகு அண்மையில் சதுர்முக  பஸதி வாசலில் நூறு இருநூறு பேர் வந்து உள்ளே புக முயன்றதன் மௌன சாட்சிகளாகத் தரையில் செருப்புக் கால்களில் ஒட்டி வந்த களிமண்ணும்  பஸதித் தோட்டத்தில் வீழ்ந்து கிடந்த கொழிந்த இலைச் சருகுகளும் அங்கே இங்கே காற்றுக்குப் புரண்டு கொடுத்துக்கொண்டு கிடக்கின்றன.

இரண்டு நாட்டுச் சாராய போத்தல்கள் தக்கை மூடித் திண்ணையில் முனிவருக்கு அருகே நின்று கொண்டுள்ளன.  பஸதி உள்ளே அமைதியும் தூய்மையும் ஒளி சிதறிப் பிரதிபலிக்கின்றன. சுவரில் நகராமல் பார்த்துக் கொண்டிருக்கும் மரப்பல்லியைத் தவிர உள்ளே உயிர் அடையாளமில்லை.

கெருஸொப்பாவை ஆக்கிரமித்த கெலடி சாம்ராஜ்யத்தின் மன்னர் வெங்கடப்ப நாயக்கரின் படைப் பிரிவு அவருடைய புத்திரன் வெங்கடலட்சுமணன் தலைமையில்   சூறையாடியபோது அவர்கள் கோவில்களிலும் பிரார்த்தனைக் கூடங்களிலும் கடந்து வந்து கொள்ளை அடித்துச் சுருட்டி எடுத்துத் திரும்பும் உத்தேசத்தோடுதான் வந்தார்கள்.

நடு ராத்திரிக்கு வீட்டுக்குத் திரும்பிய சாராய வியாபாரியைப் பிடித்து  கடையை வலுக்கட்டாயமாகத் திறக்க வைத்து உள்ளே இருந்த வெகு சொற்பமான சாராயத்தைப் பறித்து ஓவென்று குரலெழுப்பிச் சாத்தானின் மக்களாக அந்தப் படை வரும் என்று எதிர்பார்த்து சாராயக்கடையில் நூறு போத்தல் சாராயம் மட்டும் வைத்திருந்தது.

மீதி? இரண்டு நாள் முன்னே கெருஸொப்பா குடிமக்கள் எல்லோரும் மலிவு விலைக்கு வாங்கிக் குடித்துத் தீர்த்தாகி விட்டது.

தெருவிளக்குகள் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை எரிய முடியாமல் திரி வைக்கும் முனைகளிலும், எண்ணெய் நிற்கும் விளக்குக் குமிழ்களிலும் கவனமாகப் பிளந்து வைக்கப்பட்டிருந்த மாடங்கள் கெலடிப் படை நகர்வதைப் பாதித்தன.

எஜமான்.

கெலடிப் படையில் வந்த ஒருத்தன் சவக்கு சவக்கு என்று வெல்லம் தின்றபடி வெங்கடலட்சுமணனிடம் உரிமையோடு அழைத்தான்.

என்னவே. அதென்னவே வாயில் அருவதா சருவதா ஏதாவது அரைபோட்டுக்கிட்டிருக்கீர்? வெங்கட லட்சுமணன் விசாரித்தான்.

போன தெருவில் வெல்ல வியாபாரி வீட்டில் ஓலைப் பாயில் காய வைத்திருந்த வெல்லத்தை வழித்து எடுத்து வாயில் போட்டது இன்னும் கரைய மாட்டேன் எங்குது என்று பின்னும் வேகமாக மென்றான்.

கூப்பிட்டேரே, என்ன வேண்டியது?

எந்த வீட்டிலும் தங்கமும் வெள்ளியும் கிடைக்கிற மாதிரி தெரியவில்லை. பேசாமல் மைதானத்தில் கிடந்து உறங்கிக் காலையில் கெலடி போய்விடலாமே. நேரமும் நள்ளிரவாகி விட்டதே.

அவன் கரிசனமாகச் சொன்னான்.

தெருமுனையில் பெரிய வீடு இடிபாடுகளுக்கு நடுவே நிற்பதைக் கண்டு முன்னால் கையில் கடப்பாரையோடு ஓடியவன் சற்று நிதானித்து இந்த வீட்டில் ஏதாவது கிடைக்கும் என்று ராப்பிச்சைக்காரன் போல் சொல்லி அங்கே நூறுபேர் இருந்த அவன் அணியை நடத்திப் போனான்.

வாசலில் பேய்மிளகுக் கொடி இல்லாமல் வாசல் படிகளில் மரக்கட்டைகள் இரண்டு கிடந்தன. அவற்றைக் கடந்து வாசல் முற்றத்துக்கு அவன் நடந்தபோதுதான் கவனித்தான், படியின் குறுக்கே அந்த மரக்கட்டைகள் வலிந்து செருகப்பட்டிருந்ததை.

நகர வேணாம் என்று கையை மேலே தூக்கி எச்சரித்தபடி மேல்படிக்குத் தாவிக்குதித்தபோது கீழ்ப்படியில் சுமாரான சத்தத்தோடு வெடி வெடித்த ஒலி. படிக்கட்டுகளே தனியாகி நகர, கீழே வைத்திருந்த பழைய மரப்பெட்டியில் இருந்து தேள்கள் வெளியேறி ஊர்ந்தது அந்த அரையிருட்டில் பூதாகாரமாகத் தெரிய அந்தப் பெரிய வீட்டை விட்டு, அந்தத் தெருவையே விட்டு விலகி ஓடினார்கள் சூறையாட வந்த கெலடிப் படையினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன