பெரு நாவல் ‘மிளகு’ – A levitating hermit and a plunderer

Excerpt from my forthcoming novel MILAGU

அடுத்த தெருவில் தேளோ பாம்போ தட்டுப்படும் முன்னால் மரக்கட்டைகளும் கயிறுகளும் மரப்பெட்டிகளும் இல்லாததை அவசரமாகச் சோதித்தார்கள். திண்ணையில் நின்று கதவை உடைக்கும்போது ஏற்கனவே திறந்திருந்த கதவு வழியாக உள்ளே இருந்து வவ்வால்களும் ஆந்தை ஒன்றும் நான்கு மெலிந்த பாம்புகளும் அவசரமாக வெளியே வந்தன.

இந்த வீட்டையும் நிராகரித்து கெலடிப் படையினர் வெளிவந்தபோது எதிர்வீடு ஒரு கல்லோ மண்ணோ இல்லாமல் இருந்ததைப் பார்த்து இங்கே இருந்து அங்கே நாய் மாதிரி ஓடினார்கள். கதவைத் திறக்க முயல அது திறப்பேனா என்று மூடியே கிடந்த்து.

ஆனால் நிலையில் இடித்தபோது உத்திரத்தில் அது பிரதிபலித்து, உத்திரத்தில் இருந்து பேய்மிளகு ஒரு பெரிய கொடியாகத் தரைக்கு அங்கிருந்து தழைந்து வந்து இடித்த வீரனின் தலையில் அப்பிக்கொண்டது.

இது வெறும் பேய்மிளகு இல்லை, நிசமாகவே பேய் பிடிச்ச சமாச்சாரம் தான் என்று கூக்குரலிட்டபடி அந்த வீட்டையும் விட்டுப் போகத் திரும்பினார்கள்.

நிமிடத்துக்கு நிமிடம் சூறையாட எதுவும் கிட்டாத கெலடி படையின் கோபமும் வெறுப்பும் பயமும் கூடிக்கொண்டு வரும்போதுதான் கெருஸொப்பாவின் முக்கியமான சாராய வியாபாரி விதிவசத்தால் அவர்களிடம் மாட்டிக்கொண்டு நூறு போத்தல் சாராயத்தைக் கொடுத்துத் தொலைத்தார்.

போன வாரம் முழுக்க கெருஸொப்பாவே தோற்கும் துக்கத்தில் இருந்ததால் ஒருத்தர் முகத்தில் சிரிப்பில்லை. அவர்களை ஆறுதல் படுத்த அத்தனை சாராயத்தையும் வாங்கிக் குடித்துத் தீர்த்து விட்டதால் மிச்சம் இவ்வளவுதான் என்று விவரிக்கப்பட்டதை கெலடிப் படை நம்பாவிட்டாலும் பெரிய பாட்டில் நூறு சாராயம் மணக்க மணக்கக் கிடைத்தது அவர்களுக்கு சந்தோஷம் கொடுத்தது.

வெங்கடலட்சுமணனிடம் சாராயத்தைக் கொடுத்துத் தெரு வர்த்தமானமெல்லாம் சொன்னபோது அவன் இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற முகத்தை வைத்துக்கொண்டு சொன்னது –

அட முட்டாள்களா, பேய் மிளகு விதைத்த வீடு என்றால் கவனமாக இருக்க வேண்டியது தான். ஆனால் தேளும் பாம்பும் அடைத்த வீட்டிலிருந்து ஏனடா ஓடிவந்தீர்கள்? ஒரு முறை தேள்கள் வெளியே வந்திருந்தால் அவை மறுபடி மரப் பெட்டிக்குள் போகுமோ? மறுபடி அந்த வீட்டுக்குப் போயிருந்தால் மகராஜர்கள் நீங்கள் வரப்போவதை எதிர்பார்த்து சோறோ ரொட்டியோ வைத்து விட்டுப் போனது கிட்டியிருக்குமே என்று பாதி கிண்டலும் மீதி வெறுப்புமாகக் கேட்டான்.

அவர்கள் திரும்பப் போகிறேன் என்று கிளம்ப, கெலடி இளவரசர் கூறியது-

போன தெருவில் மீண்டும் போக இனி நேரம் இல்லை. விடிந்ததும் கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் கெருஸொப்பாவின் தற்போதைய நிலையைப் பார்வையிட வருகிறார். கொஞ்சம் உறங்கிக் காலையில் அணிவகுத்து நில்லுங்கள்.

சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் எதிரே மைதானத்து மையத்தில் சதுர்முக  பஸதி அவர்கள் கண்ணில் பட்டது.

வடக்குவாடி சாமியார் மடம் போல இருக்கு. உத்திரணிக் கரண்டி கூட தங்கத்திலே செய்து வச்சிருப்பாங்க.

உற்சாகமாக அந்தப் படை சதுர்முக  பஸதிக்குப் போக அதன் நான்கு கதவுகளும் உள்ளிருந்து இறுக அடைத்துக் கொண்டன. நூறு பேர் வாசல் கதவைத் தட்ட நான்கு கதவுகளின் அருகே நின்றாலும் திண்ணைகள் இருப்பது அவர்கள் கண்ணில் இருந்து மறைந்திருந்தது.

திண்ணையில் களைத்து  உறங்கிய மஞ்சுநாத்தையும் கண்மூடி மௌனமான தியானத்தில் கல் படுக்கைக்கு ஒரு அங்குலம் உயர மிதந்தபடி இருந்த நிர்மல முனிவரையும் அவர்கள் பார்க்கவில்லை.

நக்னதை மறைத்த வாழை இலையை இடுப்பில் போர்த்திப் புலன்களைக் கூர்மையாக்கி கதவுகள் திறக்காமல் தடுத்தபடி நிர்மல முனிவர் மிதந்து கொண்டிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன