An excerpt from my forthcoming novel MILAGU
ஏமாற்றத்தோடு நடு ராத்திரியில் மைதானத்துக்குத் திரும்பிய கெலடிப் படையினர் மைதானத்தை அடுத்த கோவில் தெருவில் பெரிய வீட்டில் விளக்கு ஒளியும் மனுஷ நடமாட்டமும் இருப்பதைக் கவனித்து அங்கே போக முற்பட்டார்கள்.
மஞ்சு மஞ்சு என்று கூவியபடி வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த ரோகிணி ஓட்டமும் நடையுமாக ஒவ்வொரு அறையிலும் மஞ்சுநாத்தைத் தேடினாள்.
அவனுக்குத் தெரிந்த இடம் என்பதால் வேறு எங்கேயும் யாரும் தட்டுப்படவில்லை என்றால் இங்கே தான் வந்திருப்பான் என்ற அவளுடைய அனுமானம் தவறிப் போக வெளியே தெரு முனையில் கெலடிப் படை வரும் சத்தம்.
பேய்மிளகைக் கையில் அறுக்காமல் தூவிக்கொண்டு தன் கோச்சு வண்டியில் தாவி ஏறி வேகமாகக் குதிரைகளை இருட்டு கவ்விய பாதையில் செலுத்திக்கொண்டு விரைந்தாள்.
துறைமுகம் நோக்கி சீரான வேகத்தோடு சென்று கொண்டிருந்த கோச் அதுவரை பின் தொடர்ந்தவர்களை உதறிவிட்டு குண்டும் குழியுமான பாதையில் அச்சு கடகடக்கப் போய்க் கொண்டிருந்தது.
நங்கூரம் பிணைப்பு அகற்றிப் பயணப்படத் தயாராக இருந்த சிறு கப்பல் அவளுக்காகக் காத்திருந்தது. கெருஸொப்பாவில் இருந்து பனாஜி, அங்கிருந்து சூரத், சூரத்தில் இருந்து லிஸ்பன் போக ஒவ்வொரு கட்டம் பயணமும் திட்டமிட்டிருந்தாள் ரோகிணி.
மஞ்சுநாத் காணாமல் போனதுதான் எதிர்பார்க்காத துக்கமாக அவளைப் பீடித்தது. நடு இரவில் கவனத்தைக் கவராமல் சிறு கப்பலில் கெருஸொப்பா துறைமுகத்தில் இருந்து புறப்படும் முன் அவளுக்கு நப்பாசை. மஞ்சு வீடு திரும்பியிருப்பானா என்று. ஓடோடி வந்து அவனைத் தேடி ஏமாற்றம் மனதை முழுவதுமாக ஆக்கிரமிக்க அவள் சிறு கப்பல் கரையோடு தொட்டு நிற்கும் கடல் பாலத்தில் நடந்து கப்பல் நுழைவுவெளியில் நின்றாள்.
அவள் பெட்டிகள் ஒவ்வொன்றாகக் கப்பலில் ஏற்றப்பட கப்பல் தரையில் சாய்ந்து படுத்து வானத்தை நோக்கினாள். நட்சத்திரம் ஏதுமின்றி வெளிர் சாம்பலும் கறுப்புமாக இருந்தது ஆகாயப் பரப்பு.
நேமிநாதன், பரமன், பெத்ரோ, சென்னபைராதேவி, திம்மராஜு என்று முகங்களின் அணிவகுப்பு. நேமிநாதன் ஆவியாக மிதந்து வந்தான்.
உடை உடுத்திய ஆவி. ரோகிணி மகன் மஞ்சுநாத்தைத் தேடினாள். கூட்டத்தில் அவன் இல்லை. தேடிக் களைத்து அவள் கிடந்தபடி பாட ஆரம்பித்தாள் ஆராரோ ஆரிரரோ ஆரடிச்சார் சொல்லியழு. மஞ்சுநாத் அப்பா அப்பா என்று கூப்பிடும் குரல் அலைகளின் வெற்று ஆரவாரத்தில் மங்கி மறையக் கப்பல் நகர்ந்தது.