An excerpt from my forthcoming novel MILAGU
சென்னாவுக்கு அரசவை வரவேற்பு அளித்தபோது மாலை ஆறு மணிக்குக் கூட்டம் முடித்துத் திரும்ப பல பிரதானிகள் மும்முரமாக இருந்தார்கள்.
சிறுத்தைப் புலி நடமாடும் ராத்திரியாம். ஊருக்குள் சிறுத்தை வருமோ. சென்னா கேள்விக்கு ஒரே பதில் வந்தது. அவர்கள் ஓரிருவரைத் தவிர கெருஸொப்பாவில் வசிக்கவில்லை. ஹொன்னாவரில் வீடும் மாளிகையுமாக இருப்பவர்கள். ஒருவர் கோகர்ணத்திலிருந்து வந்தவர்.
இத்தனை பேர் ஹொன்னாவரில் இருந்து கெருஸொப்பாவை நிர்வகிக்க முயற்சி செய்வதை விட, சென்னாவுக்கு யோசனை தோன்றியது கெருஸொப்பாவின் அரசவை ஹொன்னாவருக்கு வேண்டாம், அப்பாவுக்குப் பிடித்த அகநாசினிக் கரையில் அமைத்தால் என்ன?
அரண்மனையும் அரச மாளிகையும் அமைக்கலாம். குதிரை லாயமும், தெப்பக்குளமும், உத்தியோகஸ்தர்களின் இல்லங்களும் அமைக்கலாம். இதெல்லாம் பாதுகாப்பாக ஒரு கோட்டை எழுப்பி உள்ளே இருக்கட்டுமே.
அப்படித்தான் ஹொன்னாவருக்கு இடப் பெயர்ச்சி, அதன் பக்கத்தில் அகநாசினிக் கரையில் கோட்டை கட்டி அங்கே குடிபுகுதலாக கனவு மெய்ப்படலானது. வரைபடத்தோடு கட்டடக் கலைஞர்கள் வந்தபோது பௌர்ணமிக்கு முந்திய ஏறக்குறைய முழு நிலவு தினத்தில் அவர்களோடு கட்டமைப்பை விவாதித்துக் கொண்டிருந்தாள் சென்னா.
காலருகே ஏதோ சில்லென்று தொட்டுப் போக, ஓரமாக எரிந்து கொண்டிருந்த தீவட்டியைக் கவிழ்த்துப் பார்க்க, அங்கே ஒரு நல்ல பாம்பு படம் எடுத்திருந்தது. எல்லோரும் விலகிப் போங்கள் என்று கட்டளை இட்டாள் சென்னா.
பாம்பைப் பேச்சில் சுமந்து போகும்போது மறுபடி காலில் சிலிர்ப்பு. இன்னொரு பாம்பு. அகநாசினிப் பெருக்குக்குச் சற்று மேற்கே கொஞ்சம் நீரிலும் மிகுதி நிலத்திலுமாக அமைத்த கல்லும் களிமண்ணும் சேர்த்து கைதேர்ந்த சிற்பிகள் வனைந்த கோட்டை போலத் தோன்றும் பரந்து விரிந்த பாம்புப் புற்று.
இப்படி இருக்கணும் நாம் அமைக்கப்போகும் கோட்டை. பாம்புகள் புற்றில் மறைய அவற்றுக்கு தொல்லை இல்லாமல் கோட்டை உருவானது. நதிப் பெருக்கைச் சற்றே திசை திருப்பி பாம்புப் புற்று நதிநீரில் நனையவே வேண்டாமல் வைத்து அருகே ஆலமரமும் புற்றோடு ஒட்டி வந்தபோது சென்னா தன் கோட்டையில் குடிபுகுந்திருந்தாள். மிர்ஜான் கோட்டை என்று பெயரும் அந்த நேர்த்தியான கோட்டைக்குக் கொடுத்திருந்தாள் அவள்.
குடிபுகுந்த திதியும் அதன் வருடாந்திர கொண்டாட்டமும் ஒவ்வொரு ஆண்டும் நிலவு பௌர்ணமிக்கு அருகே செல்லும்போது கொண்டாடப்படும் என்று அறிவித்ததோடு ஒரு வருடாந்திர நினைவுகூடத் தவறாமல் கோலாகலமாகக் கொண்டாடி வந்தாள் சென்னாவும்
அரசவை, நாடு ஆதரிக்க, போன வருடம் முழுப் பௌர்ணமி நேரத்தில் இந்தக் கொண்டாட்டம் வந்தபோது சென்னாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
முழுநிலவு அடுத்து கொஞ்சம் ஒளியும், மேல்பரப்பும் உதிர்த்து உதிர்த்து அமாவாசையன்று நிலவில்லா வானத்தில் கொண்டு போய் நிறுத்தும் நிலை அவளுக்குப் பொறுக்க முடியாமல் ஏனோ போனது.
முழுநிலவு கொண்டாட்டத்துக்கு அப்புறம் கோட்டை தினமும் இரவும் இல்லாமல் போனது.
கெலடி நகர அரண்மனைக் கைதிக்கு கோட்டையும் கொத்தளமும் ஏது? சோற்றுத் தட்டும், நீருக்குக் குவளையும் கல் படுக்கையில் காடாத் துணி விரித்து வராத உறக்கத்தைப் புரண்டு வரவழைக்க முயற்சியும் ஜன்னல் வழியே நிலவு சாட்சி இருக்க இதோ போய்க் கொண்டிருக்கிறது.
கோட்டை அமைத்துக் குடியேறியபோது உள்ளே பாம்புகளும் தேளும் ஆயிரம் கால் உடைத்த பூரான்களும் எலிகளும் உள்ளே நுழையாமல் இருக்க, வெளிக்கோட்டைச் சுவருக்கு அடுத்து உள்சுவர் அதேபடி உருவாக்கி நிறுத்தி நடுவில் சிறு அகழியில் கல்லும் மண்ணும் கனத்த பாறையுமாகத் தடுப்பு உண்டாக்கிய வடிவமைப்பைப் பாம்புப் புற்றில் இருந்து தான் கற்றாள் சென்னா.
கெருஸொப்பா அரசு மாளிகையில் இருந்து மிர்ஜான் கோட்டையில் குடிபுகத் தேவையான தளவாடங்களோடு புறப்பட்டதும் ஒரு அபூர்ண நிலவு நாளில் தான்.
பகல் முழுவதும் அந்த ஆண்டு விளைந்த மிளகுக்கு விலை நிர்ணயம் செய்யும் அமர்வில் இருந்து நிர்ணயித்து மாலை ஆறு மணிக்கு மிர்ஜான் போவதற்கு முன் தோன்றியது சென்னாவுக்கு –
ஏன் கெருஸொப்பாவில் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மிர்ஜான் போக வேண்டும்? அங்கே ஒரு இல்லம் இங்கே ஒரு மாளிகை என்று இரண்டும் இருக்கட்டுமே என்று தோன்ற அத்தியாவசியமான உடுப்புகளும் மருந்துகளுமாக மிர்ஜான் புறப்பட்டாள் சென்னா.
கெருஸொப்பா அரச மாளிகை தோட்டத்தில் எட்டிப் பார்த்து விட்டு கோச் ஏற நினைத்தாள் சென்னா. ஏனென்று தெரியாது வேறு யாருக்கும்.
அவளுக்கு மட்டும் மனதில் இன்னும் பசுமையாக இருந்தது வரதன் அன்பு செலுத்தி, வருகிறேன் என்று சொல்லி வராமல் போன நினைவு அது. வரதன்.
பதினைந்து வயதில் கெருஸொப்பா அரண்மனை வளாகத்தில் போர்த்துகீஸ் மொழியும் இங்க்லீஷும் சொல்லித்தர வந்த தமிழன் வரதன் பற்றிய நினைவுகள். இருபத்தைந்து வயதும் ஆறடிக்கு மேலும் அரையடி உயரமுமானவன்.
சென்னா ஒரு மகாராணி என்று வகுப்பு எடுக்கும் முன்பும், வகுப்பு முடிந்த அப்புறமும் எல்லா மரியாதையும் செலுத்துவான் வரதன். வகுப்பு ஆரம்பித்து விட்டாலோ?
நினைவுகளின் ஒழுங்கு குலைந்த ஊர்வலம்.
“சென்னா, இன்னொரு தடவை கொட்டாவி விட்டால் அரண்மனைத் தோட்டத்தை இரண்டு தடவை காலில் செருப்பில்லாமல் சுற்றி ஓடிவர வேண்டியிருக்கும்” கண்டிப்பான ஆசிரியனாக வரதன் சொல்லும் நினைவுகள்.
வகுப்பு நடக்கிறது. சென்னா வரதனை விழுங்கிவிடுவது போல் பார்த்தபடி இருக்க, வரதன் பார்வை நொடிக்கொரு தடவை அவளுடைய கருவண்டுக் கண்களைச் சந்திக்கின்றன. மீளமுடியாமல் துடிக்கின்றன. இனிய நினைவுகள் அவை. மிக இனியவை.
நினைவுகள் ஓடின.
வகுப்பைக் கவனிக்காமல் நேரம் கடத்துகிறேனா? சரி ஆசிரியரின் தண்டனை நேரம் இது. தோட்டத்தைச் சுற்றி ஓடி வருகிறேன்.
சிட்டுக்குருவியாக ஓடிய நினைவுகள்.
பத்து நிமிடம் பத்து யுகமாக வரதனுக்கு நகர்ந்திருக்கும். என்ன ஆனது சென்னாவுக்கு? மகாராணி எங்கே? நடுநடுங்கி வெறும் உபாத்தியாயன் வரதன் தோட்டத்துக்கு இட்டுச் செல்லும் ஒழுங்கையில் நடக்கத் தொடங்குகிறான் சென்னாவைத் தேடி. மாலை மயங்கிவரப் பாதை இருண்டு வருகிறது. ஒரு திருப்பத்தில் வரதன் மேல் பூக்குவியல் ஒன்று விழுகிறது. அவனை இறுக அணைக்கும் கரங்கள் சென்னாவின் பூங்கரங்கள்.
அவனைத் தரைக்கு இழுக்கும் வலிமை வாய்ந்த கரங்கள் அவை. வரதன் தன்னை இழக்கிறான். சென்னாவின் செவ்விதழ்களில் முத்தமிட்டுப் பற்றிக்கொள்கிறான். கைகள் ஊர்கின்றன. நிலைக்கின்றன. மறுபடி ஊர்கின்றன.
யாரோ கோல்விளக்கோடு தொலைவில் கதவு திறந்து வருகிறார்கள். சென்னா விலகிக் கொள்கிறாள். கற்றுத்தந்த மாணவி முன்னே நடக்க, கற்ற உபாத்தியாயன் தொடர்கிறான்.
ஒருவரை ஒருவர் துரத்தி யார் எங்கே என்றே தெரியாது நினைவுகளின் ஊர்வலம் நின்று விட்டது.
வரதன் மதுரை யுத்தத்துக்குப் போகாமல் இருந்தால்? கல்யாணம். குழந்தை பிறப்பு. பிள்ளை வளர்த்தல். மகனுக்குத் திருமணம். மகளுக்குத் திருமணம். பேரக் குழந்தை பிறப்பு. ஓய்வு கொள் சென்னா.
அதெல்லாம் அவளுக்கு விதிக்கப்பட்டதில்லை. மிளகுராணியாகப் பட்டம் சூடப் போகிறாள். எல்லாத் துயரமும் பொறுத்து நல்லாட்சி தருவாள் மாநிலத்துக்கு. அதற்காகப் படைக்கப்பட்டவள்.
சென்னா தோட்டத்தில் இருந்து மாஞ்செடி ஒன்றைப் பத்திரமாக எடுத்துக்கொண்டு தளர்ந்து நடந்து வருகிறாள்.
மிர்ஜான் கோட்டையில் பதியனிட வேண்டும். அன்பையும், நினைவையும் மகிழ்ச்சியையும் தான் பதியனிட முடியாது. அபூர்ண நிலவு வந்த இரவில் நெடுநேரம் சிறுத்தை நடமாடும் சாலையில் சென்னாவும் காவலர்களும் மிர்ஜான் நோக்கிப் போன நினைவுகள்.
விடிகாலையில் அவள் மிர்ஜான் கோட்டையில் பிரவேசித்தபோது கெருஸொப்பா மகாராணியாக மட்டும் இருந்தாள் சென்னா.
நினைவுகளின் ஊர்வலம் அடுத்த பாதைக்கு நீண்டு நடக்கிறது
உத்தரகன்னடப் பெருநிலத்தில் கெருஸொப்பா நகரப் பிரதேசம் ஆளும் சாளுவ வம்ச மகாராணி சென்னபைராதேவிக்கு தங்களுக்குள் பிரியத்தோடு மிளகு ராணி பட்டம் அளித்து அழகு பார்க்கிற பரங்கியர்கள் நினைவு வருகிறார்கள்.
இங்கே மிளகும் லவங்கமும் ஏலமும் வாங்க வந்து கொண்டிருக்கும் அவர்களுடைய மாபெரும் வணிகம் சென்னா இல்லாமல் ஒரே நாளில் ஓய்ந்து போய் நின்று விடும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
அறுபதை எட்டிய சென்னா முகத்தைச் சுவரை நோக்கித் திருப்பிக் கொள்ள நினைவுப் பிரவாகம் கரை புரண்டு போகிறது.
அறுபதாம் வயதின் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக தலை சுற்றலும், நாவில் கசப்புப் படுதலும், சதா தொல்லை கொடுக்கும் மலச்சிக்கலும் அதன் காரணமாக வயிற்றில் வாயு பூரித்து வீர்த்திருப்பதுமான நினைவுகள். மாதவிலக்கு மனமும் உடம்பும் சார்ந்த கடுமையாக பிரச்சனையாகத் துன்பம் நினைவு வருகிறது.
இன்னும் எத்தனை காலம் இந்தத் துன்பத்தோடு இங்கே சிறகு முறிந்து கிடக்க வேண்டும்? மனதில் வணங்கிக் கேட்டாள் சென்னா. ஆதிநாதரில் தொடங்கி, மஹாவீரர் வரையான இருபத்து நான்கு சமணத் தீர்த்தங்கரர்கள் வரிசையை மனதில் உருப்போடத் தொடங்கினாள்.
படுக்கை ஓரத்தில் வெறுந்தரையில் கண்மூடி அமர்ந்தபடி. ஒவ்வொரு தீர்த்தங்கராக மனதில் அழைத்து அவர்களின் திவ்ய ரூபத்தை அகக்கண் குளிரப் பார்த்து மனதால் வணங்கி இருக்க, நினைவுகள் ஓய்ந்தன. மகிழ்ச்சியில்லை. துக்கமில்லை. துன்பமில்லை. இன்பமில்லை.
ஓம் நமோ அரிஹண்டானம்
ஓம் நமோ சித்தானம்
ஓம் நமோ யரியானம்
ஓம் நமோ உவாஜ்ஜயானம்
நவ்கார் மஹாமந்திரத்தை வெற்று மனம் சொன்னது. சென்னபைராதேவி மிளகுராணியின் கண்கள் மெல்ல மூட, உதட்டில் ஒரு புன்னகை. அவள் இல்லாமல் போயிருந்தாள்.