an excerpt from my ready-to-be-published novel MILAGU
அப்படியாக அலோபதி அறுவை சிகிச்சை நடத்தி சங்கரனின் நாசியைச் சரிபண்ணலாம் என்ற முடிவுக்கு மறுபடி வந்தாகி விட்டது. இந்த மாதிரி அறுவைசிகிச்சை நடத்த புது டில்லி லாஜ்பத் நகர் பகுதியில் பிரபலமான மருத்துவ மனையில் கௌரவ சர்ஜனாக இருக்கும் சுக்தேவ் சாமிநாதன் பெயர் பெற்றவர் என்று தெரிய வந்தது. அவர் மகப்பேறு மருத்துவரும் கூட.
அதென்ன பெயர் சுக்தேவ் சாமிநாதன் என்று விசாரிக்கத் தெரிய வந்த மேலதிகத் தகவல் இது – கடந்து போன தலைமுறையில் அதாவது 1940களில் மதறாஸில் இருந்து உத்தியோகம் தேடி வந்து ஆஸ்பத்திரி கிளார்க் ஆக வேலை கிடைத்து, நாளடைவில் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி பாஸ் பண்ணி சவுத் ப்ளாக்கில் லோயர் டிவிஷன் கிளார்க் ஆன சாமிநாதன் பக்கத்து சீட் அமர்ஜீத் கவுரைக் காதலித்து சீக்கிய மதத்துக்கு மாறி அவளைக் கல்யாணம் செய்து கொண்டு பெற்ற பிள்ளை சுக்தேவ் டாக்டரானாராம்.
எது எப்படியோ இருக்கட்டும், சுக்தேவ் அரை மணி நேரத்தில் சங்கரனின் நாசியைச் சரி பண்ணுவதாகச் சொல்லி ஆபரேஷன் தியேட்டரில் சங்கரனுக்கு அனஸ்தீசியா மயக்க மருந்து கொடுத்துப் படுக்க வைத்திருந்தார்கள். அவ்வேளையில் சர்ஜன் ஆபரேஷனுக்காக உள்ளே காலடி எடுத்து வைக்க, மின்சாரம் நின்று போனதாம்.
சகுனம் சரியில்லை என்று வசந்தி கருத, அன்றைக்கு முழுக்க மின்சாரம் வராத தினமாகப் போய், ஜெனரேட்டரும் வேலை செய்யாமல், அறுவை சிகிச்சையை வேறொரு நாளுக்கு மாற்றி வைக்கத் தீர்மானமானது.
அது போன வாரம் நடந்த சம்பவம். அன்று அனஸ்தீசியா ரொம்பவே பிடித்துப் போனது சங்கரனுக்கு. மயக்கத்தில் இருந்தபோது நாள் முழுக்க ரோஜாச் செடிகள் இரண்டு பக்கமும் அணிவகுத்த தோட்டத்து வழியில் அவற்றின் நறுமணத்தைத் தீர்க்கமாக முகர்ந்தபடி நடந்து போய்க் கொண்டே இருக்கும் காட்சி மனதை அமைதியாக வைத்திருந்ததாகச் சொன்னார் அந்த மயக்கம் நீங்கியதும்.
தெரிசாவுக்கும் அவருக்கும் முப்பது வயது குறைவாக, அவர்கள் கைகோர்த்து, அந்தத் தோட்டத்தில் மல்லிகைக் கொடிகளின் பின்னே அணைத்து இதழ் சேர்த்து, குறுமணல் காது மடல்களில் ஒட்டக் காதல் புரிந்த அனுபவம் ரசமாக இருந்தாலும், வசந்தி சங்கரனிடம் ரகசியமாகச் சொன்னதோடு சரியான கேள்வியும் கேட்டாள் –
பாவாடைப் பாப்பாவோடு க்லோரொஃபார்ம் க்ரீடையா கனவெல்லாம்?
ஒண்ணுமில்லே, ப்ளேன்லே போற கனவு. அதுலே முட்டிண்டு வந்தாலும் ஒண்ணுக்கு போகாம அடக்கிண்ட மாதிரி இருந்தது.
மனசறிந்து பொய் சொன்னார் சங்கரன். அப்புறம் அன்பு மனைவியை எல்லா பிரியத்தோடும் கௌரவத்தோடும் நடத்தும் மோஸ்தரில் சொன்னது இது –
உன் கண்ணுக்கு எல்லாம் பட்டுடறது. படாம இருந்தா நான் செக்ரட்டரியாக ரிடையர் ஆகியிருக்க முடியாது. சங்கரனுக்கு தீர்க்கமான முன்நோக்கு உண்டுன்னு ரெண்டு மத்திய அமைச்சர்கள் சொன்னாளே அந்த முன்நோக்கு எப்படி கிடைச்சது? என் வசந்தி கற்றுக் கொடுத்த யோகாசனத்தால் வந்த ஒண்ணாச்சே.
வசந்தி கையைப் பிடித்துக் கொண்டு நாத்தழதழக்கச் சொன்னார் சங்கரன்.
முன்னோக்குன்னா என்ன வசந்தி கேட்டாள்.
தூரதிருஷ்டி ஃபோர்ஸைட். Foresight.
அது உங்களுக்கு இருக்காமா?
இல்லையா பின்னே?
யார் சொன்னா உண்டுன்னு?
ஒண்ணுக்கு ரெண்டா செண்ட்ரல் மினிஸ்டர்ஸ்.
அங்கேயும் ஒண்ணுக்கா? வசந்தி அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.
வாயிலும் மூக்கிலும் சேர்த்துக் கட்டிய மெல்லிய துணி சர்ஜிகல் மாஸ்க் surgical mask அவிழ்ந்து தரையில் விழ, சங்கரன் ஓவென்று சிரித்தார்.
சங்கரன் கேட்டதெல்லாம் தினசரி ஒரு வேளையாவது அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உடம்பில் மயக்க மருந்து ஏற்றிவிட வேண்டும். அப்புறம் சங்கரனுக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது. யாருக்கும் எந்தக் கஷ்டமும் இருக்காது.
ஆனால் என்ன செய்ய? சர்ஜன் அதெல்லாம் தர முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் லேசான மயக்கம் தரும் மாத்திரைகள் இரண்டு அட்டை கொடுத்து தினம் ஒண்ணு முழுங்குங்கோ. அதுக்கு மேலே கூடாது. ஹிண்டுலே ஆபிசுவரி வந்துடும் என்று எச்சரித்து விட்டுப் போனார்.
வாசலில் வசந்தி அவரைத் துரத்தி வந்து தாழ்ந்த குரலில் சொன்னாள் – என்ன டாக்டர் அவர் தான் கேட்கறார்னா நீங்க தூக்க மாத்திரை கொடுத்துட்டேளே.
கவலையே படவேணாம். நான் கொடுத்தது வெறும் லிவ்-52 தான். அட்டையிலே வச்சு வந்தது. காலம்பற சங்கரன் சார் பிரச்சனை இல்லாமல் டாய்லெட்டுலே போய் உட்காரலாம் என்றபடி வசந்தியின் நல்மதிப்பில் நான்கைந்து படி மேலே ஏறி நின்று அந்தாண்டை நடந்து போனார்.
வசந்திக்குக்கூட சங்கரனுக்கு நாசி ஆபரேஷன் செய்யக் காத்திருக்கிற நாட்களாக எல்லா நாளும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
சங்கரனுக்கு தூக்க மாத்திரையோ லிவ் 52ஓ கிடைக்க நிம்மதியாக உறங்குவார். பாவாடைப் பாப்பா அவரோடு கலப்பாளோ என்னமோ, விரைத்துக் கிடந்தாலும் படுக்கையை நனைக்க மாட்டார் சங்கரன். சாப்பாடு கட்டு எதுவும் மூக்கிலோ வாயிலோ இல்லாமல் கொஞ்சம் போல் உள்ளே போகும். ஆனால் இன்றைக்கு ஆபரேஷனுக்கு நாள் குறித்துவிட்டார்கள்.
காலை ஏழு மணிக்கே கரண்ட் நிற்பதற்கு முன் அறுவை சிகிச்சையை நடத்தினார்கள். சங்கரனின் மகள் பகவதி, அவருடைய மனைவி வசந்தி, அப்புறம் மைத்துனர் என்று மருத்துவமனை வருகையாளர் இருக்கைகளை நிறைத்துவிட்டிருந்தார்கள். சாரதா தெரிசா முன்னால் வந்து உட்கார்ந்திருந்தாள். ராத்திரி தூங்கவே இல்லேடி என்று வசந்தியிடம் சொன்னாள் அவள். இப்போ கொஞ்சம் கண்மூடித் தூங்கப் பாரேண்டி என்றாள் வசந்தி. வாடி போடி உறவு சக்களத்திகளுக்குப் பிடித்திருந்தது.
மூக்கை அப்படியே சூர்ப்பனகைக்கு லட்சுமணன் அறுத்த மாதிரி அறுத்துடுவா. உள்ளே அழுக்கு, கல்லு இருந்தா எடுத்து க்ளீன் பண்ணி தச்சுப் போட்டுடுவா என்று தலைமை சர்ஜனாக சங்கரனின் மைத்துனர் பஞ்சாபகேசன் என்ற பஞ்சு அவுன்ஸ் கிளாஸில் அறிவு வழங்கிக் கொண்டிருந்தார் சகலருக்கும்.
ஒரு மணி நேரத்தில் ஆப்பரேஷன் முடிந்தாலும் அனஸ்தீசியா இன்னும் சக்தியாகச் செயல்பட்டதால் சங்கரன் நிம்மதியாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்தார்.