அரசூர் வம்சம் நாவலில் வைகை நதி (அரசூர் நான்கு நாவல் வரிசை)

சுந்தர கனபாடிகள் வைகை நதியோடு போய்க் கொண்டிருந்தார்.

சுத்த ஜலம் பிரவாகமாக இரு கரையையும் அடைத்துக் கொண்டு நுங்கும் நுரைப்புமாகப் பொங்கி வழிந்து ஓடியதன் சுவடுகள் ஈர மணலில் அழிந்தும் அழியாமலும் தடம் விரிக்க, வற்றி இளைத்துப் போன நதி சின்னச் சாரைப் பாம்பாக சலித்துக் கொண்டே அசைந்து போனது.

கரையோரம் வெகுதூரம் போய், புதர் மறைவில் பிரம்ம செளசம் முடித்துக் கால் கழுவிக் கொள்ள வந்தபோதே நதியடி மணலை நாட வேண்டிப் போனது.

நதியெல்லாம் தெய்வம். இப்படி பிருஷ்டம் சுத்தப்படுத்தவா பகவான் அதுகளைப் படைத்து விட்டிருக்கிறான் ? ஜீவாத்மா பரமாத்மாவில் கலக்க விரசாகப் போவது போல் அதெல்லாம் சமுத்திரத்தைப் பார்க்க ஓடிக்கொண்டே இருக்கின்றன. இந்த வைகை மட்டும் கொஞ்சம் விதிவிலக்காக, கிராமதேவதைக்கு நேர்ந்து கொண்ட மாதிரி எங்கேயோ கண்மாயிலோ ஏரியிலோ போய்க் கலக்கிறதாம்.

சுந்தர கனபாடிகளுக்கு பூகோளம் தெரியாது. நாணாவய்யங்கார் சொல்லி நேற்றைக்குக் கேள்விப்பட்டதுதான். வேதபாடசாலையில் அதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறதில்லை. ருத்ரமும் சமகமும் ரிக்கும் யஜூரும் தான் அங்கே நாள் முழுக்க. கனபாடிகள் சாம வேதியான காரணத்தால் அவருக்கு உபரியாக அந்த அத்தியாயனமும் உண்டு.

ஓலைச் சுவடியில் கிரந்த எழுத்தில் எல்லாம் இருக்கும் என்றாலும் யாரும் சுவடியைத் திறந்து வைத்துக் கொண்டு கற்பிப்பதுமில்லை. கற்றுக் கொள்வதுமில்லை. காதால் கேட்க வேணும். மனதில் கிரகித்து வாங்கிக் கொள்ள வேணும். அப்புறம் பல தடவை உரக்கச் சொல்லிப் பழக வேணும்.

பிரம்மஹத்தி. உஷஸ்னு உன் நாக்கெழவுலே வராதா ? தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க. உசஸ்ஸாமே. சவண்டிக்கு ஒத்தனாப் போறதுக்குக் கூட ஒனக்கு யோக்கியதை இல்லை.

சுந்தர கனபாடிகள் சிரித்துக் கொண்டார். அடித்தும், தலைமயிரும் தலைக்குள்ளே இருக்கப்பட்ட மூளையும் எல்லாம் வெளியே தெறித்து விழுவது போல் அப்பளக் குடுமியைப் பிடித்து இழுத்துத் தரையில் மோதியும் பாடசாலையில் அவருக்கு சாமவேதம் கரைத்துப் புகட்டிய ஈஸ்வர ஸ்ரெளதிகளின் சவண்டிக்கு ஒத்தனைப் பிடிக்க மழைநாளில் அவர் தான் பல வருஷம் முன்னால் காடு மேடெல்லாம் திரிந்து நடக்க வேண்டிப் போனது.

முழங்காலையும் மறைத்து இடுப்பு வரை ஆழத்துக்கு நீர் உயர்ந்த இடத்தில் கொஞ்சம் நின்றார் சுந்தர கனபாடிகள்.

இதுக்கும் மேல் இங்கே தண்ணீரை எதிர்பார்க்க முடியாது. நாலு முழுக்குப் போட்டு விட்டுக் கரையேற வேண்டியதுதான்.

நர்மதே சிந்து காவேரி.

குளித்து வந்து வீபுதிச் சம்படத்தைத் திறந்து குழைத்து நெற்றியிலும் மாரிலும் தோளிலும் பூசிக் கொண்டார். இப்படியே ஈர வஸ்திரத்தை உலர்த்தியபடிக்கு மணல் வெளியில் ஏகாங்கியாக நிற்க மனதுக்கு ரம்மியமாக இருந்தது. அடிக்கிற காற்றில் பூவாக அது உலர்ந்ததும் பஞ்ச கச்சமாக உடுத்திக் கொண்டு மீனாட்சி சுந்தரேசுவரர்களைப் பார்க்க நடையை எட்டிப் போட வேண்டியதுதான்.

நடந்து நடந்து நடந்தே தான் ஜீவிதம் முழுக்கப் போய்க் கொண்டிருக்கிறது. தர்ப்பைக் கட்டைத் தூக்கிக் கொண்டு அக்கம் பக்கம் ஏழு கிராமம் புஞ்சைக் காட்டு வரப்பில் நடக்க வேணும். சீத்தாராமய்யன் பிதாவுக்கு புரட்டாசி திரிதியையில் திதி. குத்திருமல் நோக்காட்டோடு திண்ணையே கதியாகக் கிடந்து உயிரை விட்ட சிவராமனைப் பெற்றவளுக்கு மார்கழி பிரதமையன்று வருஷாந்திரம். சோமசுந்தரமய்யன் பெண்டாட்டி சிவலோகம் புறப்பட்டுப் போய்க் கல் ஊன்றிக் காரியம் செய்ய மூணாவது நாள்.

யாருக்கு நினைவு வருகிறதோ இல்லையோ சுந்தர கனபாடிகள் சகலமான சாவுகளையும் அது கழிந்து போய்ப் பல வருஷம் ஓடின பிறகும் நினைவு வைத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. சாவோடு சம்பந்தப்பட்ட கிரியைகளைச் செய்விக்கக் கால் தேயச் சகல திசையிலும் ஓடி நடக்க வேண்டியிருக்கிறது.

இந்த நடை நிற்கும்போது அவருக்காகச் சாப்பிட ஒத்தனைத் தேடி யார் நடப்பார்களோ தெரியவில்லை. அதுவரை தர்ப்பைக் கட்டும் மடிசஞ்சியில் ஒற்றை வாழைக்காயும் அரிசியும் உளுந்தும் பயறும் தலையில் எள்ளுமாகக் கால்நடைதான்.

சதாசிவ பிரம்மேந்திரர் போல் நடந்து கொண்டே, பாடிக் கொண்டே சன்னியாசியாகப் போய்விட்டால் என்ன ? எதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலைப் படாமல், வருத்தப்படாமல்.

வைகைக் கரையில் தானே அவர் கையை வெட்டி எறிந்தார்கள் ? ராஜாவின் அந்தப்புரத்துக்குள் சுய நினைவு தப்பிப்போய், இடுப்பில் துணி இல்லாமல் ஈசுவர தியானத்தில் திளைத்துப் பாடிக் கொண்டே நுழைந்த குற்றத்துக்கான தண்டனை இல்லையோ அது ?

அது என்ன பாட்டு ? மானச சஞ்சரரே. சம்ஸ்கிருதம் தான். சுந்தர கனபாடிகளுக்குக் கரைத்துப் புகட்டியிருக்கிறார்கள். மானச சஞ்சரரேக்கு அப்புறம் அடுத்த அடி என்ன ?

அமாவாசைத் தர்ப்பணம் செய்ய எள்ளோடும் தண்ணீரோடும் இரைத்து விடும் மந்திரம் தான் நாக்கில் சட்டென்று வருகிறது.

திவசப் பிராமணனாகவே ஜீவிதம் முடியப் போகிறது.

தீபாவளிக்குக் கோடி வஸ்திரம் உடுத்தியானதும் அதை அவிழ்த்து வைத்து விட்டுத் ஊரோடு தர்ப்பணம் செய்யப் பவித்திரம் மாட்ட ஓட வேண்டி இருக்கிறது.

நவராத்திரிக் கொலுவுக்கு மூச்சு வாங்க சேந்தியிலிருந்து பொம்மைப் பெட்டியை இறக்கும்போது யாராவது போய்ச் சேர்ந்து தகனத்துக்கு வரச் சொல்லி வாசலில் வந்து நிற்கிறார்கள்.

விஷ்ணு இலையில் அப்பமும் எள்ளுருண்டையும் சரியாக வேகாத சாதமுமாக ஹோமப் புகை சுற்றி வரும் வீடுகளுக்குள் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு தட்சிணையோடு திரும்பி வந்ததும் ராத்திரி சாப்பிடாமல் படுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மோர்க்களி சாப்பாட்டில் சேர்த்தி இல்லை, சத்து மாவு உருண்டை ராத்திரி பட்சணம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று மற்ற வைதீகர்கள் சமாதானம் சொன்னபடி ராத்திரி ஏதேதோ சாப்பிடுகிறது போல் சுந்தர கனபாடிகளால் முடியாது. திவசத்துக்கு இறங்கி வந்தவர்கள் யாருடைய பித்ருக்களாக இருந்தாலும் இங்கே எல்லாம் முடித்து விட்டுப் போனவர்கள். இல்லை, அவசர அவசரமாக போதும் போயிடு என்று அனுப்பப் பட்டவர்கள். அவர்களின் பிரதிநிதியாக எள்ளைத் தலையில் போட்டுக் கொண்டு பூணூலை வலம் இடமாகத் திருப்பி மாட்டிக் கொண்டவன் கொடுக்கும் மரியாதைகளை ஏற்றுக் கொள்கிற வைதீகன் சுந்தர கனபாடிகள்.

அவர்கள் சார்பாகத் தான் அப்பமும் வடையும் மிளகுக் கறியும் மற்றதும். அது கழித்தால், ராத்திரி போஜனம் செய்யக் கூடாது என்று எழுதாத விதி. மீறிப் பண்ணினால், அந்த ஆத்மாக்கள் பசியோடு அலையும் என்றார்கள் பாடசாலையில் அவருக்குக் கற்பித்தவர்கள்.

ஒரு சத்து மாவு உருண்டை இன்னொருத்தனை, அவன் உயிரோடு இருக்காவிட்டாலும், பட்டினி போடும் என்றால் சுந்தர கனபாடிகளுக்கு அது வேண்டாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன