கட்டுமரம் அலையில் மிதந்தும் அதோடு தாழ்ந்தும் உயர்ந்தும் அனுசரித்துப் போவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு சமுத்திரப் பரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமைல் இப்படியே சமாதானமாகப் போனால் கப்பல் வந்துவிடும்.
கப்பல் பாட்டுக்கு அங்கே வெள்ளைக்காரத் திமிரோடு, கருப்பு நாயே என்னடா துறைமுகம் வச்சு முடியைப் பிடுங்குறே எம்புட்டு நேரமா நிக்கறேன். எவனாவது வந்து மரியாதை செஞ்சு கும்பிட்டு விழுந்தீங்களாடா என்று நீள உயர நிமிர்ந்து நின்று விசாரித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் வந்தாலும், இறங்கிக் காலில் கரை மணல் ஒட்ட நடந்தாலும், வியர்வை மின்னும் நாலு கருப்புத் தோளில் பல்லக்கு ஏறிக் கெத்தாக நகர்ந்தாலும், மனுஷ நெரிசல் அடர்த்தியாகக் கவிந்த பாதையில் குதிரைக்கும், எதிர்ப்படுகிற கருப்பனுக்குமாகச் சவுக்கைச் சுழற்றி வீசி சாரட்டில் ஓடினாலும் வெள்ளைத் தோலுக்குள்ளும் வெளியிலும் பிதுங்கி வழிகிற திமிர் அது.
வாராண்டா வாராண்டா வெள்ளக்காரன்
வந்தாண்டா வந்தாண்டா *யோளி
பக்கத்துக் கட்டுமரத்தைச் செலுத்துகிறவன் பாடுகிறான். சுலைமான் அவன் அம்மாளையும் அக்காவையும் தீர்க்கமாக வைகிறான். பாடினவனும் மற்றவர்களும் ஏகத்துக்குச் சிரிக்கிறார்கள். சங்கரனுக்கும் சிரிப்பு முட்டிக் கொண்டு வருகிறது. பளிச்சென்று முகத்தில் அறைகிறதுபோல் தண்ணீரை வீசிப் போகிறது வந்த அலையொன்று. சுலைமான் திரும்ப வைகிறான். தமிழில் இருக்கப்பட்ட வசவு எல்லாம் போதாதென்று இந்துஸ்தானியிலும் திட்டுகிறான். அதில் நாலைந்து கேட்க ஏக ரசமாக இருக்கிறது சங்கரனுக்கு. வைத்தி சாரோ அந்தத் தெலுங்கு பிராமணனோ இங்கிலீசில் தஸ்ஸு புஸ்ஸு என்றால் இந்துஸ்தானியில் மனதுக்குள்ளாவது திட்டிக் கொள்ளலாம்.
ஊரில் கொட்டகுடித் தாசிக்கு இந்துஸ்தானி குருட்டுப் பாடமாகத் தெரியும். அவளுக்கு வெண்பாவும், தரவு கொச்சகக் கலிப்பாவும், விருத்தமும் கூட இயற்றத் தெரியும். கூளப்ப நாயக்கன் காதல் பாட்டுக்கு அபிநயம் பிடிக்கத் தெரியும். புகையிலை போடமாட்டாள். போட்டால் பல் கருத்துப் போய் தொழில் நசித்து விடும் என்ற பயமாம். சங்கரன் கடையில் அவளுக்கு வாங்க ஒன்றும் இல்லை. வாங்காட்டப் போறது. சுவர் கே பச்சே அப்படான்னா என்ன ?
அய்யரே, ஒரு சிமிட்டா பொடி மூக்குலே தள்றியா ?
சுலைமான் தந்தத்தால் ஆன சம்புடத்தைக் காற்றுக்கு அணைவாகக் கைக்குள் வைத்துத் திறந்தபடி கேட்டான்.
பெண்பிள்ளைகள் இதைப் போடுவாங்களோடா சுலைமான் ?
அய்யரே, உனக்கு என்ன எப்பப் பாத்தாலும் அங்கேயே போவுது புத்தி ?
சுலைமான் அவன் பிருஷ்டத்தில் ஓங்கித் தட்டினான்.
மூணு மணி நேரத்துக்குள் கருத்தானைவிட நெருக்கமான சிநேகிதனாகி இருந்தான் சுலைமான். பணம் புரளும் சீமான் என்பதாலோ என்னமோ அவனையறியாமலேயே அதட்டலும், கிண்டல், கேலியுமாகப் பழகக் கை வந்திருந்தது. கருத்தான் ஒரு எல்லைக்கு மேல் போக மாட்டான். அவனுடைய அய்யர் சாமி அழைப்பு சங்கரனுக்குப் பாதுகாப்பாக இருந்தது. சுலைமானுக்கு அவன் வெறும் அய்யர்தான். சீக்கிரமே டேய் சங்கரா என்றும் கூப்பிடக் கூடும். சங்கரனை விடப் பத்து மடங்கு காசும் பணமும் கப்பலில் வரும் வருமானமும் அவனுக்கு ஆகிருதியைக் கூட்டிக் காட்டுகிறது.
அவன் வாப்பா தஸ்தகீர் ராவுத்தருக்கும் தான்.
விசாலமான வீட்டு வாசலிலே குரிச்சி போட்டு உட்கார்ந்து வெற்றிலைக்குள் புகையிலையோ வேறு எதோ கலந்து சுருட்டிக் கிராம்பு வைத்து அடைத்த பொட்டலத்தைச் சதா மென்று படிக்கத்தில் துப்பிக்கொண்டு இருந்த அவர் பார்வையில் சங்கரன் பட்ட கொஞ்ச நேரத்திலும் பணத்தைப் பற்றித்தான் பேசினார்.
மதுரைப் பட்டணத்திலே, திருச்சிராப்பள்ளியிலே, தஞ்சாவூரிலே, புதுக்கோட்டையிலே எல்லாம் பாக்குச் சீவல் விற்கவும், வாசனை விடயம் விற்கவும், மூக்குத்தூள் போல் சீக்கிரமே பிரக்யாதி ஏறிக் கொண்டிருக்கிற இலைச் சுருட்டு விற்கவும் யாரெல்லாம் கிளம்பி இருக்கிறார்கள். அவர்களின் பணம் வந்த விதம், அவர்களுக்கு எங்கெல்லாம் வைப்பாட்டிமார், எப்படிச் செலவாகிறது பணம் அந்த விஷயமாக, எவ்வளவு அண்டஞ் சேர்கிறது என்று பட்டியல் ஒப்பித்தபடி, பக்கத்தில் நிரம்பி வழிகிற படிக்கத்தில் துப்பியபடி இருந்தார் அவர்.
வீட்டுக் கூரை மேலும், மேல்தளத்திலும், வாசல் முகப்பிலும் சுவாதீனமாகப் பறந்து கொண்டிருந்த புறாக்கள் மேலே எச்சம் இடாமல் தோளை அப்படியும் இப்படியும் நகர்த்திக்கொண்டு அவன் மரியாதைக்கு இதைக் கேட்டுக் கொண்டிருந்க, மாடிக்குப் போன சுலைமான் கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி சங்கரய்யரே சங்கரய்யரே என்று உரக்க விளித்தான்.