நாவல் இரா.முருகனின் அரசூர் வம்சம் (அரசூர் நான்கு நாவல் வரிசையில் முதல் நூல்)
ஏகக் கோலாகலமாகக் கிளம்பினார்கள் சங்கரனுக்குப் பெண் பார்க்க.
மொத்தம் இரண்டு கோஷ்டி. கல்யாணி அம்மாளின் ஒன்று விட்ட சகோதரன் கச்சேரி ராமநாதய்யர், ஜோசியர் நாணாவய்யங்கார், சுப்பிரமணிய அய்யரின் அம்மான்சேயான அறுபது வயது கரம்பக்காடு கிருஷ்ணய்யர் (உத்தியோகம் சுகஜீவனம்), அய்யரின் அத்தான் பிரம்மஸ்ரீ சுந்தர கனபாடிகள், இவர்கள் எல்லோருடைய அகத்துக்காரிகள், அப்புறம் நித்திய சுமங்கலி சுப்பம்மாள் என்று ஒரு குழு. இது ஊர் எல்லாம் சுற்றிக் கொண்டு அம்பலப்புழை போய்ச்சேர ஏற்பாடு.
சுப்பிரமணிய அய்யர், சங்கரன், கல்யாணி அம்மாள் என்று இன்னொரு கோஷ்டி. இது விசேஷத்துக்கு இரண்டு நாள் முன்னால் கிளம்பிப் போய்ச் சேருவதாகத் திட்டம். கடையை ஒரு வாரத்துக்கு மேல் வியாபாரம் இல்லாமல் முடக்கி வைக்க சங்கரனுக்கு இஷ்டம் இல்லை.
முதல் கோஷ்டி அரசூரில் இருந்து கிளம்பி குறைந்த தூரத்துக்கு மாட்டு வண்டி குடக்கூலிக்குப் பிடித்துக் கொண்டும், காலாற நடந்தும் அங்கங்கே தங்கி இளைப்பாறியும் வழியில் கோவில்களில் தரிசித்துக் கொண்டும் கொல்லம், ஆலப்புழை வழியாக அம்பலப்புழை சேர்வது என்று திட்டம் பண்ணிக் கொண்டு இருபது நாள் முன்னாடியே கிளம்பி விட்டார்கள் இவர்கள்.
தூரம் நின்று போன ஸ்திரீகள் என்பதால் பெண்டுகளைக் கூட்டிப் போக நாள் கணக்கு எதுவும் ரகசியமாக விரல் மடக்கிப் பார்க்க வேண்டியிருக்கவில்லை. சுப்பம்மாள் மூத்த குடிப் பெண்டுகளை அழுது தொழுது வேண்டிக் கொண்டு அவர்களில் எவளொருத்திக்காகவும் இன்னும் இரண்டு மாச காலம் தூரத்துணியை அரையில் கட்டிக் கொள்ளத் தேவையிலை என்று சத்தியப் பிரமாணம் வாங்கி விட்டாள்.
அவள் இப்போதெல்லாம் சுப்பிரமணிய அய்யர் வீட்டுக்கு வருவதே குறைந்து போனது. அந்த ராட்சசி துர்மரணப் பெண்டு மற்ற நித்திய சுமங்கலிகளை எல்லாம் அடித்துத் தள்ளிக் கொண்டு சுப்பம்மாள் மேலேறி அவளை இம்சிக்கிறது தாளாமல் எடுத்த முடிவு இது.
சுப்பம்மாள் வேண்டிக் கொண்டதால் ஜோசியர் நாணாவய்யங்கார் ஏகப்பட்ட கிரந்தங்களைப் பரிசீலித்துச் செப்புத் தட்டில் ஒரு யந்த்ரம் செய்து கொடுத்தார். கழுத்திலோ காதிலோ கட்டித் தொங்கப் போட்டுக் கொள்கிற தோதில் செய்து தருவதாக அவர் சொல்லி இருந்தாலும், மூலைக்கு ஒன்றாகத் தேவதைகளை நிறுத்தியதில் ஏகப்பட்ட இட நெருக்கடி உண்டாகி, அந்தச் சதுரத் தகடு முக்காலே மூணு மாகாணி அடி நீள அகலத்தில் முடிந்தது.
ஒன்று ரெண்டு தேவதைகள் ஆவாஹனம் பெறாவிட்டால் பரவாயில்லை என்று சுப்பம்மாள் சொல்லிப் பார்த்தாள். யந்திரத்தின் அளவு அதிகமாகிப் போகிறது தவிர, ஜோசியருக்குத் தர வேண்டிய காசும் கூடிக் கொண்டு போகிறது என்பதும் அதற்கு ஒரு காரணம்.
ஒவ்வொரு தேவதையும் ஒவ்வொரு பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிற்பதால் செப்புத் தகட்டை அளவு குறைக்க முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் ஜோசியர்.
அந்த யந்திரத்தைக் கழுத்தில் மாட்டிக் கொண்டபோது விலகு – இது என்னோட இடம் – இது எனக்கு என்று தேவதைகள் அடிபிடி சண்டை போட்டது அவள் காதுகளில் கேட்டது. மூத்த குடிப் பெண்டுகள் அவர்களைச் சமாதானம் செய்து வைத்து எல்லோரும் கால் ஊன்றிக் கொள்ள வழி பண்ணினார்கள்.
கழுத்தில் எல்லாத் தேவதைகளும், சுற்றி மூத்த குடி நித்திய சுமங்கலிகளும் இருந்தபோது சாமாவைப் பிடித்தவள் சுப்பம்மாள் பக்கம் வரவில்லை தான். ஆனால், பத்து இருபது பேரைக் கட்டிச் சுமக்கும் போது சுப்பம்மா கிழவிக்குத் தாங்க முடியாத தோள் வலியும், இடுப்பில் நோவும் ஏற்பட்டது. மூத்திரம் சரியாகப் பிரியாமல் வயிறு கர்ப்ப ஸ்திரி போல் ஊதிப் போனது.
பாறாங்கல்லைக் கழுத்தில் கட்டி எடுத்துப் போவது போல் நடக்க சிரமப்பட்டு அங்கங்கே தடுமாறி விழும்போதெல்லாம் மூத்த குடிப் பெண்டுகள் பரிவோடு தூக்கி விட்டார்கள்.
அப்புறம் அவர்கள் ஆலோசனை சொன்னபடிக்கு தச்சு ஆசாரி சுப்பனிடம் சொல்லி ஒரு மர வண்டி செய்வித்து வாங்கிக் கொண்டாள் சுப்பம்மாள். இடுப்பில் கோர்த்த ஒரு கொச்சக் கயிறால் பிணைத்த அந்த வண்டி பின்னால் உருண்டு வர அவள் நடந்தபோது முதல் இரண்டு நாள் தெருவில் விநோதமாகப் பார்த்து அப்புறம் அடங்கிப் போனது.
மரப்பாச்சியைப் பொம்மைச் சகடத்தில் வைத்து இழுத்து வரும் குழந்தை போல் நாணாவய்யங்கார் ஸ்தாபித்த யந்திரத்தைச் சக்கரங்களுக்கு மேலே இருத்தி இழுத்துப் போவதை தேவதைகள் ஆட்சேபித்தார்கள். தெருவில் திரிகிற நாய்கள் பக்கத்தில் வந்து மோந்து பார்க்கும். காலைத் தூக்கும். குழந்தைகள் விஷமம் செய்வார்கள். எங்களுக்கு இது சரிப்படாது.
திரும்பவும் சுப்பம்மாள் சார்பில் மூத்த குடிப் பெண்டுகள் வாதாடி, பிரதிஷ்டையான தேவதைகளைச் சம்மதிக்க வைத்தார்கள். இன்னும் கொஞ்ச நாள். அப்புறம் அந்தப் பீடை தொந்தரவு அடியோடு ஒழிந்து விடும். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் வேண்டியபோது அவர்கள் சார்பில் சுப்பம்மா நடுத்தெருவில் ஒவ்வொரு திசையாகப் பார்த்து புழுதியில் விழுந்து கும்பிட வேண்டிப் போனது.
இந்தப் பக்கம் மூத்த குடிப் பெண்டுகளும் பின்னால் கட்டி இழுத்துக் கொண்டு தேவதைகளுமாக அவள் நடந்தபோது ஒரு நிமிஷம் நின்று குரலெடுத்து அழுதாள். காசியில் எதை எதையோ விட்டதுக்குப் பதில் உசிரை விட்டுவிட்டு வந்திருந்தால் இந்த ஹிம்சை எல்லாம் இருக்காதே என்று ஒரே ஒரு நிமிஷம் தோன்றியதை மாற்ற மூத்த குடிப் பெண்டுகள் அவள் நாக்கில் இருந்து கொண்டு வலசியதி கிண்கிணி என்று அஷ்டபதி பாடி அவளைக் குதித்துக் கூத்தாட வைத்தார்கள்
நடுவில் ஒரே ஒரு நாள் யந்திரம் இல்லாமல் ஒரு பகல் பொழுதில் கல்யாணி அம்மாளைப் பார்க்க அவசரமாக அவள் போனபோது வாடி தேவிடியாளே என்று அந்த லங்கிணி சுப்பம்மாள் மேலே வந்து உட்கார்ந்து விட்டாள்.
நாணாவய்யங்கார் சுப்பிரமணிய அய்யருடன் உட்கார்ந்து சங்கரன் ஜாதகத்தையும், அம்பலப்புழை குப்புசாமி அய்யன் இளைய சகோதரி பகவதிக்குட்டி ஜாதகத்தையும் வைத்து நவாம்சமும் அலசிக் கொண்டிருந்த நேரம் அது.
இந்தச் சோழியன் உன்னை வச்சுண்டு இருக்கானா ?
சுப்பம்மாள் உள்ளே நுழைந்ததுமே வேறு குரலில் அலறிக் கொண்டு நாணாவய்யங்காரின் குடுமியைப் பிடித்து இழுத்து முகத்தில் அறைந்தாள். அவருடைய வற்றிய மாரில் எட்டி உதைத்துதாள். காரி வரவழைத்த சளியை முகத்தில் உமிழ்ந்தாள். பூணூலைக் கால் விரலில் மாட்டி அறுப்பது போல் போக்குக் காட்டினாள்.
அப்புறம் யாரோ சொன்னது போல் ஐயங்காரை உதட்டில் முத்தமிட யத்தனிக்க, ஜோசியர் ஏட்டை எடுத்துக் கொண்டு சமயம் சரியில்லே அய்யர்வாள். உங்காத்துக்குப் ப்ரீதி நடத்தணும். நான் வெகு சீக்கிரம் நடத்தித் தரேன். இந்தக் கிழவி பண்ணிக் கொடுத்த யந்திரத்தோடு சதா இருந்தா இதெல்லாம் நடக்காது என்று சொல்லி வெளியே அவசரமாகக் கிளம்பிப் போனார்.
சுப்பம்மா அவர் கொடுத்த யந்திரத்தை வைத்துக் கொள்ளப் புது இடம் கிடைத்து விட்டதாக அறிவித்து இடுப்புக்குக் கீழே காட்டிச் சிரித்தாள்.
இப்படி யந்திரத்தோடு போனால் ஒரு மாதிரியும் போகாவிட்டால் இன்னொரு மாதிரியும் அவஸ்தை தொடர்ந்ததால் சுப்பம்மாள் புகையிலைக்கடை அய்யர் வீட்டுக்கு வருவது குறைந்தே போனது.
இருந்தாலும் சங்கரனுக்குப் பொண்ணு பார்க்க மலையாளக் கரைக்குப் போக வேணும். க்ஷேத்ராடனமாக மதுரை, பாணதீர்த்தம், சுசீந்திரம் எல்லாம் தரிசித்துக் கொண்டு ஆலப்புழைக்குப் போகலாம் என்று சுந்தர கனபாடிகள் சொன்னதும் வேறு எதுவும் யோசிக்காமல் சரி என்று விட்டாள் அவள்.
ஆனாலும் ஜோசியர் நாணுவய்யங்கார் யோசனைப்படி, மடிசஞ்சியில் அந்த யந்திரத்தைப் பத்திரமாக எடுத்துப் போக மறக்கவில்லை அவள்.
எல்லோரும் சுப்பிரமணிய அய்யரின் வீட்டில் இருந்து புறப்படுவதாகத்தான் ஏற்பாடு. ஆனாலும் மாட்டு வண்டியை எதிர்பார்த்து சுப்பம்மாள் நாலு தெரு சந்திப்பிலேயே நார்ப்பெட்டியும், சஞ்சியுமாக நின்றாள்.