திருவல்லிக்கேணி பகல்பத்து உற்சவத்தில் நேற்று மோகினி அவதாரம்.
பகல் பத்து காலத்தில் தில்லக்கேணி பெருமாள் மீசை இல்லாமல் தான் காட்சி அளிப்பாராம்.
நாயுடு மெஸ் – 22
(ஆனைக்கவுனியில் அசைவ மெஸ் நடத்தும் முன்சாமி நாயுடு பெரிய கவிஞரும் கூட. அவருடைய மற்ற பாடல்களை சாவகாசமாகத் தருகிறேன். சாம்பிளுக்கு பகல்பத்து பற்றி)
பகல்பத்தாம் கண்டுக்க பார்சாதி ஃபேஸ்கட்
டகல்பாஜி லேதய்யா தாபார் ரகளையா
சாமிகூட செல்ஃப்ஷேவாம் சர்ருனு மீசகாலி
ஏமின்னா தெல்லேது ரா
(கண்டிப்பாக சிரிக்க மட்டும் என்று சொல்லி விட்டிருக்கிறார் முன்சாமி நாயுடு. கிண்டல் சுண்டல் சுறாப்புட்டெல்லாம் கிடையாதாம்)
**************************************
பிரதமர் மைக், கேமிரா முன்னாடி பேசி முடிச்சு ‘சரியா இருக்கா?’ (டீக் ஹை?)ன்னு உதவியாளர்களைக் கேட்டிருக்கார். பிரஹஸ்பதிகள் அதையும் சேர்த்து ரிகார்ட் செய்து மீடியாவுக்குக் கொடுத்துட்டாங்க. அவங்களுக்குத் தெரியாது ஆன்லைன்லே ஒரு கும்பலே இது மாதிரி அவலுக்குக் காத்துட்டு இருக்குன்னு.. ட்வீட் ட்வீட் ட்வீட் ..
************************
இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாதமி விருது. தாமதமாக வந்தாலும் இசை விழா நேரத்தில் வந்து மனதை நிறைக்கிற விருது.
இளையராஜாவுக்கு எப்போதுமே என் வாழ்த்துகள் இதயத்தில் உண்டு. என் இளமைக் காலத்தின் ஒரு அழகான முகம் இளையராஜா.
‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்று ஜானகி அமுத கானமாக விவித பாரதியில் பாடத் தொடங்கி ராஜாவைத் தெரிய வந்த வருடம் தான் நான் ஓவர்சீஸ் பேங்கில் உத்தியோகத்துக்குச் சேர்ந்தது. எத்தனையோ இளையராஜா பாடல்களை வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்ச்சியோடும் பொருத்திப் பார்க்க முடிகிறது. இந்த அளவு என்னைப் பாதித்த இன்னொரு இசைக்கலைஞன் இனி வரப் போவதில்லை.
//
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று..
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொண்டுருவை போக்கென –
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
//
பாம்பே ஜெயஸ்ரீ குரலில் இதைக் கண்ணீர் மல்கக் கேட்கிறபோது பாரதியோடு ராஜாவும் நினைவு வரத் தவறுவதில்லை.
அகாதமிக்கு வாழ்த்துகள்.
என்னப்பா அநியாயம். கலிபோர்னியாவிலே விமானத்திலே போகிற போது பெண் கிட்டே சில்மிஷம் செய்த இந்திய சாப்ட்வேர் இஞ்சினியருக்கு கோர்ட் தண்டனையாம். இவர் முதல் தடவையா இப்படி செய்யலியாம். மூணு தடவை அமெரிக்காவிலே விமானத்திலே பறக்கும் போது இப்படி ஏதோ செஞ்சு மாட்டிக்கிட்ட கேஷ் ஷீட்டராம்.
சரி இந்த 2011 கேசில் என்ன விசேஷம்? இவர் தொட்ட அந்த அம்மா விண்டோ சீட். அவங்க வீட்டுக்காரர் ஓரமா ஐல் சீட். நடுவிலே இவர்.
பாவம். அந்தத் தம்பதி 32-வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட சான் ஓசே போய்ட்டு இருந்தாங்களாம்.. அதுக்குள்ளே நம்மாளு.. வெயிட்.. 32-ஆவது திருமண ஆண்டு விழான்னா அந்த அம்மா வயசு குறைஞ்சது 55 இல்லே 60 இருக்காது? பாட்டியம்மா கிட்டேயா இந்த விபரீத விளையாட்டு?
வழக்கம்போல் இந்தத் தடவையும் அமெரிக்காவில் இந்திய சாப்ட்வேர் பையன்னா நியூஸ்லே அடிபடறது நம்மோட களிதெலுங்கு சகோதரராம். ஏமிய்யா இதி?
*****************************************
நாளை மார்கழி பிறக்கிறது. நாஸ்டால்ஜியாவை, முப்பது வருட அறுதப் பழைய நினைவை எல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு அன்பான விருந்தினர் போல வந்து இறங்கி விடும் அது.
சிவகங்கையை, இனித் திரும்பவே வராத அறுபதுகளின் பள்ளிப் பருவத்தை மேலெழுப்பி வேடிக்கை பார்க்கிறது மார்கழி. ‘இது ஞாபகம் இருக்கோடா?’ என்று ஏதோ ஒரு சிறிய சம்பவத்தை அசைபோட்டு மனதைக் கனக்க, சந்தோஷப்படுத்த, ஒரு கணம் அந்தப் பொழுதில் திரும்பவும் வாழ வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது மார்கழி.
ஒரு முழுப் புத்தகமே ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ எழுதினாலும், மார்கழி கொண்டு வரும் மூட்டையைத் திறந்து பழைய தீபாவளி மலரைப் போல நினைவுகளைப் பக்கம் பக்கமாகப் புரட்டக் காத்திருக்கிறேன்…
நாளை மார்கழி பிறக்கிறது.
*********************************
நம்ம பாரதி மணி சார் கிட்டே அரை மணி நேரம் தொலைபேசினால், மனதில் உற்சாகம் கரை புரளும். சுவாரசியமான தகவல்கள்.
நான் கற்பனை செய்த 1950-களின் தில்லிக்கு இன்னும் அழுத்தமான உருவம் கிடைத்தது. 1955-ல் தில்லிக்கு நூற்று சில்லரை ரூபாய் சம்பளமும் எஸ்.எஸ்.எல்.சி சர்ட்டிபிகேட்டுமாகப் போன அவர், எம்.ஏ வும் மேலும் முடித்து பாரத் எலக்ட்ரானிக்ஸ் (சுஜாதாவுக்கு அங்கே பத்து வருடம் சீனியர்), அப்புறம் ஸ்டேட் ட்ரேடிங் கார்ப்பரேஷன் மேலதிகாரி என்று அமர்க்களப்படுத்தியவர். கூடவே நாடகங்கள்..
சாவகாசமாக ஒரு நாள் முழுக்க பேச வரலாமா என்று கேட்டிருக்கிறேன். கிடைக்கும்.
1950-களில் நிகழும் அச்சுதம் கேசவம் நாவல் முடித்து அவருக்கு சமர்ப்பணம் செய்ய அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அருளட்டும்.
*********************************
நண்பர் க்ரேஸி மோகன் ஐந்து நிமிடம் முன் பகிர்ந்து கொண்ட, அவர் எழுதிய மார்கழி கீர்த்தனை – ராகம் ஹம்ஸத்வனி.
முகவைக் கண்ண முருகனார் ஸ்ரீபகவான் சன்னிதியில் எழுதிய, திருமதி சுலோசனா நடராஜன் இசைப்படுத்தியதை படித்த ஆர்வத்தில் எழுதியது….ராகம்- ஹம்ஸத்வனி தாளம்-ஆதி….
’’அண்ணா மலைரமண ஆசிரியன் சொன்னாற்போல்
உன்னால் முடியாது உன்முக நாட்டமெனில்
முன்நாள் முருகனார் மூர்த்திமுன் பாடிய,
பண்ணாய் சுலோசனா பாடமாய் செய்ததை,
நன்நாள் மார்கழியில் நாத்தழும்பு ஏறிட
சொன்னால் கிடைக்குமே சாயுஜ்யம் சற்றேனும்
நன்னாய் உறங்கினீர் ,நாட்காலே நீராடி
ஒண்ணாய்க் கலந்தோதி உய்வீர்கள் எம்பாவாய்’’….
***********************************
எவ்வளவு அருமையான பழக்கம். இங்கிலாந்தில் பாலே நடன நிகழ்ச்சி முடிந்த பிறகு பங்கு பெற்ற கலைஞர்களுக்கு ரசிகர்கள் பூங்கொத்து பரிசளிப்பார்கள்.
நம்ம ஊர்லே கச்சேரி முடிஞ்சதும் தொப்பையைத் தள்ளிக்கிட்டு சபா செகரட்டரி, மற்ற சபாக்காரர்கள் மேடைக்கு வந்து கவரை நீட்டுவார்கள். கச்சேரிக்கான சன்மானம். ஒரு தடவை அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு ஒரு பொட்டலம் இட்லி கெட்டி சட்னி சன்மானம் கிடைச்சதா பி.டி. ஸ்ரீராம் எழுதியிருந்தார்..
*********************************
தினமலர் நாளிதழில், தி.மு.க., குறித்த செய்திகளை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், எங்களின் செய்திகளை சுவர்களில், கரித்துண்டுகளை வைத்து எழுதுவோம்,” என, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின், 91வது பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார் – தினமலர் செய்தி.
இதைவிடச் சிறப்பாக வேறு யாரும் அந்தப் பத்திரிகைக்கு இப்படி ஒரு விளம்பரம் கொடுக்க முடியாது. குழந்தை மாதிரி அதென்ன ஒரு பிடிவாதம் இந்த வயசில்? தினமலர்தான் வேணும்… வேறே எதுவும் வேணாம் போ…
***********************************************
இளைய தலைமுறையைப் பகைச்சுக்கறது எந்த அரசுக்கும் நல்லது இல்லே. அதுவும் கூட்டமாகப் பாலியல் வன்முறை நடந்த தில்லியில் சாரிசாரியாக இளைஞர்களும் பெண்களும் திரண்டபோது, கண்ணீர்ப்புகையும், தண்ணீர் பீரங்கியும் வச்சு தாக்கி விரட்டறது .. சரியே இல்லை..
ஏற்கனவே அடுத்த தலைமுறை அரசியல் பற்றி கிட்டத்தட்ட சினிக்கலாத்தான் நினைக்கறாங்க.. இது மாதிரி வேறே நடந்தா வேறே வினையே வேணாம்.. இருபது வருடம் கழித்து அரசாங்கம் எப்படி இருக்குமோ?
நான் இருக்க மாட்டேன்.. இருக்கப் போறவங்க, பேஸ்புக்கிலே (அது இருக்குமோ) ஸ்டேட்டஸ் மெசேஜ் போடுங்க
***************************************
நாளையில் இருந்து ஒரு வாரம் பவர்-டவுண் விடுமுறைக்காலம். வருடம் முழுக்க பயனாகும் கம்ப்யூட்டர், நெட் ஒர்க், எலக்ட்ரிக் சர்க்யூட், தண்ணீர் இணைப்பு, ஜெனரேட்டர், ஏர் கண்டிஷனர் இப்படி எல்லாவற்றையும் சரி பார்த்து வைக்கவும். ஊழியர்கள் குடும்பத்தோடு இருந்து நேரம் செலவழிக்கவும் ஏற்படுத்தப்பட்டது. எல்லா ஐ.டி, உற்பத்தி கம்பெனிகளிலும் பரவலாக இருக்கும் ஒன்று.
ஒருவாரத்துக்கு எழுத, படிக்க, சொந்த வேலை, வீட்டு வேலை என்று பட்டியல் போட்டு இன்று நாடகம் எழுத ஆரம்பித்து விட்டேன். சஞ்சய் சுப்பிரமணியன் கச்சேரி இன்னும் ஒன்று இரண்டு கச்சேரிக்கு முன்பதிவு..
மற்றவற்றையும் கிரமமாகச் செய்து முடிக்க நேர்ந்தால் நன்றாக இருக்கும்..
*****************************************
தெலுங்கு பதிப்புலே ரேலங்கி செய்த அளவுக்கு தமிழ் ‘மருமகள்’ படத்திலே டி.ஆர் ராமச்சந்திரன் செய்ய முடியலேன்னு ராண்டார்கை இந்து பத்திரிகை Blast from the past பத்தியில் எழுதியிருக்கார். அப்படியா? தமிழ்லே ரேலங்கின்னா பெரிய மீசை வச்சுக்கிட்டு இருமி இருமி நாலாவது ரீல்லே போய்ச் சேர்ற பெரிசாத்தான் தெரியும்.. தெலுகுலே பெரிசா ஆக்ட் கொடுத்திருக்கார் போல
************************