விஷ்ணுபுரம் தேர்தல் – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1
’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, செப்டம்பர் 1993-ல் பிரசுரமானபோது இந்தக் குறுநாவலின் தலைப்பு – விஷ்ணுபுரம். பிறகு ‘விஷ்ணுபுரம் தேர்தல்’.
இந்தக் குறுநாவலே ’பயோபிக்ஷன்’ வாழ்க்கை வரலாற்று நாவலாக 2005-ல் வாராவாரம் தினமணி கதிரில் வெளியாகிப் பின்னர் நூல் வடிவமும், குறும்பட வடிவமும் பெற்ற ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’வுக்கு ஊற்றுக்கண்.
என் ‘தகவல்காரர்’ குறுநாவல் தொகுப்பில் (அட்சரா வெளியீடு – 1995) இடம்பெற்ற படைப்பு இந்த விஷ்ணுபுரம்.
——————————————————————-
விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 1
‘மதிப்புக்குரிய ஐயா, வணக்கம். நான் எட்டாவது வகுப்பில் படிக்கும் மாணவன். பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து விடுமுறை இப்போது. விஷ்ணுபுரம் என்ற ஊரில் இருக்கிறேன். விஷ்ணுபுரம் சிறிய, அழகான ஊர். தமிழ்நாட்டின் தெற்குக் கோடியில் உள்ளது. இங்கே அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். உலகில் உள்ள எல்லா நாடுகளையும், மக்களையும் பற்றித் தெரிந்து கொள்வது என் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று ஆசிரியப் பெருமக்கள் கூறுகிறார்கள். விடுமுறை நாட்களே இதற்கு உகந்தவையாம். உங்கள் நாட்டைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். உழைப்பால் உயர்ந்த மக்கள். தேச பக்தியில் சிறந்தவர்கள். ஜனநாயகத்தைப் பேணிக் காப்பவர்கள். அவர்களைப் பற்றி இன்னும் சிறப்பாக அறிந்து கொள்ள உதவும் வகையில் உங்களிடம் புத்தகங்களும், பத்திரிகைகளும் இருக்கும் என்று நம்புகிறேன். அவற்றை எனக்கு அனுப்பி வைத்தால் மிகவும் நன்றியுடையவனாவேன். என் அறிவுத் தாகத்தைத் தீர்த்து வைப்பது உங்கள் பொறுப்பு’.
மொத்தம் பனிரெண்டு பிரதிகள் எடுக்க வேணும். பக்கத்துத் தெருவில் யாரிடமிருந்தோ வாங்கி வந்த கசங்கிய காகிதத்தை சீதரன் எனக்குக் கொடுத்திருக்கிறான். என் கையெழுத்து கொஞ்சம் சொல்லிக் கொள்கிறார்போல் இருக்கும் என்பதால் வேலை என் தலையில்.
நாராயணன் கடையில் வாங்கி வந்த வெள்ளைக் காகிதமும் பேனாவுமாக அவனவன் காத்திருக்கிறான்.
‘எப்படிடா முடிக்கறது?’
கிரி சந்தேகத்தைக் கிளப்பினான்.
‘யுவர்ஸ் ஒபீட்னு ஏதோ லீவ் லெட்டர்லே எழுதுவோமேடா…’
வார்த்தை மறந்துவிட்டது. முழுப்பரீட்சை லீவில் அவனவன் பெயர் நினைவில் இருந்தாலே அதிகம்.
’ஒபீடியண்ட்லிடா..’
கண்ணன் ஸ்பெல்லிங்கோடு சொன்னான். வயிற்றுவலி என்று அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டிருக்கிறான் பயல்.
டெல்லியில் இருக்கிற கானா, செக்கோஸ்லோவேகியா, ஹங்கேரி, பிரான்ஸ், இன்னும் ஏதேதோ தூதரகங்களுக்கு கீழ்ப்படிதலுள்ள பனிரெண்டு பேரின் கடிதங்கள் தபாலில் சேர்க்கப் பட்டன.
**************************************
மாதவன் விந்தி விந்தி நடந்து வந்தான்.
பகல் வெப்பத்தில் நடமாட்டம் குறைவான தெரு. வக்கீல் மோகனதாசன் வீட்டுப் பக்கம், புருஷன், பெண்சாதி மாதிரி தெரிந்த இரண்டு பேர் தரையில் உட்கார்ந்து புஸ்புஸ்ஸென்று எதையோ அமுக்கி கலாய் பூசுகிறதை ஒரு மணி நேரமாக வேடிக்கை பார்க்கிறோம். அலுக்கிற நேரம் பார்த்து மாதவன் வந்தான்.
தோளில் பருப்புத் தேங்காய்க் கூடு மாதிரி தகரக் குவளை ஒலிபெருக்கி. சணலில் கட்டி அது தோளில் தொங்குகிறது. மாலை போட்ட மாதிரி ஒரு தமுக்கையும் மாட்டியிருக்கிறான். டமடமவென்று கொட்டி முழக்கிக் கொண்டு வருகிறான்.
பெருமாள் கோயில் தெருவும் எங்கள் தெருவும் சந்திக்கும் இடத்தில் ‘சாலாச்சி வருகடலை நிலையம். எங்கள் ஸ்கூல் தமிழ் வாத்தியார் நீலமேகம் வறுகடலை நிலையம் என்று திருத்தச் சொல்லியும் கடைக்காரர் மாட்டேன் என்று தீர்மானமாக மறுத்து விட்டார்.
’வருகடலைன்னு போட்டா வருமானம் வரும்.. மத்த மாதிரி போட்டா சொத்தக் கடலையை வறுத்து நானும் வாத்தியாரும் தான் வாயிலே அடச்சுக்கணும்’.
அவரோ, வாத்தியாரோ சொத்தைக் கடலை தின்ன வேண்டிய அவசியமில்லாதபடி வழக்கமாக போர்டில் வருகடலை நிலையம் தான் இருக்கிறது. அந்த போர்ட் பக்கத்தில் பெரிய வேப்பமரத்தில் செல்லமாக இடித்துக் கொண்டு நிற்கிறது. வேப்ப மர நிழல்.. மாதவன் அங்கே நிற்கிறான்.
அவனுக்கு முன் நாங்கள் ஆஜர்.
இதுதானா கூட்டம் என்பது போல எங்களை ஒரு பார்வை. சட்டைப் பையிலிருந்து நாலாக மடித்த காகிதத்தை எடுக்கிறான்.
இனிமேல்தான் நாங்கள் எதிர்பார்க்கிற சுவாரசியமான காரியம். தவற விடக்கூடாது. இன்னும் நெருக்கமாகப்போய் அவனுக்கு முன்னால் நின்று கொண்டோம்.
மாதவன் காகிதத்தைத் தலைகீழாகப் பிடித்தான். அதாவது அவனுக்கு எதிர்த்தாற்போல் நிற்கிற நாங்கள் படிக்க வசதியாக. பருப்புத் தேங்காய்க்கூடு வாய்ப் பக்கம் நகர்ந்தது.
’இதனால் யாவருக்கும் அறிவிப்பது என்ன என்றால்.. விஷ்ணுபுரம் நகரசபையாக அறிவிக்கப்பட்டது தெரிந்ததே.. நம் நகராட்சிக்கான தேர்தல் வரும் மே மாதம் இருபத்தெட்டாம் தேதி நடைபெறும் என்று இதனால் அறிவிக்கப்படுகிறது. மொத்தம் பதிமூன்று வார்டுகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. போட்டியிட விருப்பமுடையவர்கள் பஞ்சாயத்து ஆபீஸில் நகல் படிவம் முப்பத்தேழு.. நமூனா எண்..’
ரொம்ப ஜோராகக் கை தட்டினோம். இப்படி திடுதிப்பென்று ஒரு எலக்ஷன்.. அதுவும் பரீட்சை லீவில் பார்த்து..
‘யாரெல்லாம் நிப்பாங்க, மாதவன்?’
அவன் காதிலிருந்து பீடி எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு வெறுமனே சிரித்தான்.
அவனே நிற்கப் போகிறானோ என்னமோ.
****************************
தொடரும்