விஸ்வரூபம் நாவல் முன்னுரை
——————————
யாரும் ‘மா நிஷதா’ சொல்லவில்லை. வாழ்த்தாகவோ, வசவாகவோ. நானாவது காத்திருந்திருக்கலாம். அவர்கள் சொல்லும்போது சொல்லட்டும் என்று எழுத ஆரம்பித்து விட்டேன்.
இதற்கெல்லாம் ஆதிகாரணம் குளோரியா அம்மாள். பிரிட்டீஷ் மூதாட்டி. பரிசுப் பணம் கிடைத்தால் கவர்மெண்ட் பென்ஷன் நின்று போனாலும் நாலைந்து மாதமாவது காலத்தை ஓட்டலாமே என்ற நப்பாசையோடு தொலைக்காட்சிப் போட்டியில் கலந்து கொண்டவள். அபான வாயு வெளியேற்றும் போட்டி.
’வாயு’ என்று குளோரியா அம்மாளைப் பற்றி ஒரு குறுநாவல் எழுதினேன். இது தமிழ்ச் சூழ்நிலை இல்லை என்பதைச் சுட்ட, மொழிபெயர்ப்பு போல் கொஞ்சம் மொடமொடப்பான க்ஞ்சிப்பசை, கொஞ்சம் மெழுகுதுணி நெகிழல் என்று ஒரு நடையை உருவாக்கிக் கொண்டு எழுதிய அந்தக் குறுநாவல் நான் எழுதிய குறுநாவல்களில் என் மனதுக்கு நிறைவானது.
அபானவாயு பற்றி எல்லாம் கதையா, தமிழ்நாட்டில் இப்படி ஒரு போட்டியா, ஏன் இந்தத் தமிழ் வித்தியாசமாக இருக்கிறது இப்படி விமர்சனங்கள். உச்ச கட்டமாக ஒரு லைப்ரேரியன் ‘கிறுக்கன் எழுதின கதை’ என்று ஞானபீடமும் எனக்கு அளிக்க, பரம சந்தோஷம்.
இதுக்கு பத்து வருஷம் முன்னால் ‘முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப்படம்’ என்று ஒரு குறுநாவல் எழுதினேன். முதிர்கன்னியான எலிமெண்டரி ஸ்கூல் டீச்சர் முத்தம்மா சினிமா பார்க்கப் போகிறாள். ஒரே படம் தான். ஒவ்வொரு தடவை பார்க்கப் போகும்போதும் ஓர் அனுபவம். ஒரு கட்டத்தில் அவளும் திரைப்படத்தில் கையில் குடையோடு கலந்து விடுகிறாள்.
எனக்குப் பிடித்த இந்தக் குறுநாவல் பற்றியும் அரவமில்லை. ஆனாலும் முத்தம்மா டீச்சர் மனதிலேயே குடையோடு வளைய வந்து கொண்டிருந்தாள். அவள் தான் நம்ம ஊரைப் பத்தி ஒரு குறுநாவல் எழுதேம்பா என்பாள் அவ்வப்போது. டீச்சர், சினிமா பார்க்கப் போங்க என்று விரட்டுவேன் உடனே.
இந்த இரண்டு குறுநாவல்களின் தடத்தில் கூடுதலாக உதாசீனத்தை விலைக்கு வாங்கி வைத்துக் கொள்ள இன்னொன்று எழுதினால் என்ன? கதையை 1850 களுக்கு எடுத்துப் போய் அந்தத் தமிழிலும் எழுதிப் பார்க்கணும். அரசூர் வம்சம் என்று பெயர் வைத்து எட்டே அத்தியாயத்தில் ராஜாவையும் ராணியையும் மட்டும் கதாபாத்திரங்களாக வைத்து கடகடவென்று ஓட்டி முடித்து விடலாம்.
இப்படி நான் முடிவு செய்தபோது ராத்திரி மணி ஒன்று. இடம் பிரிட்டனில் மேற்கு யார்க்ஷையரில் ஹாலிபாக்ஸ் என்ற குறுநகரத்தில் வசிப்பிடம். பாகிஸ்தானி தாபாவில் சாப்பிட்ட பெஷாவரி னான் ஜீரணமாகாத தூக்கமின்மை தூண்டிய முடிவு அது..
ஆக, பாகிஸ்தானி தாபா னான் தான் ‘அரசூர் வம்சம்’ நாவலுக்கு மா நிஷாதா சொன்னது.
தினசரி பாகிஸ்தான் தாபா வயிறு வாடாமல் காத்த புண்ணியத்தால் அரசூர் வம்சம் சடசடவென்று வளர்ந்து தானே முற்றும் போட்டுக் கொண்டது அத்தியாயம் ஐம்பத்துரெண்டில். அது நிகழ்ந்த காலகட்டமாகக் கருதப்பட வேண்டியது 1870-கள். தமிழ் பாண்டி பிரதேசம், மலையாளத்தில் ஆலப்புழை பகுதி. இங்கே மாறி மாறி தமிழும் பகுதி மலையாளமுமாக மனிதர்கள். சூழல். கதையாடல்.
இப்போதைக்கு அடுத்த நாவல் இல்லை என்று பிரசவ வைராக்கியம். சட்டென்று ஒரு நாள் – நான் இங்கே இந்தியா வந்த பிறகு – னான் சாப்பிடாமலேயே மா நிஷாதா மனதில் கேட்டது. கொல்லூருக்குப் போகிற அம்பலப்புழை குடும்பத்து குப்புசாமி அய்யனின் அடுத்த வாரிசு. கூடவே அஸ்திக் குடத்தில் அம்மா விசாலாட்சி.
அடுத்த தலைமுறைக் கதை. அது என் கதையும் கூடத்தான் ஒரு விதத்தில்.
விஸ்வரூபம் எழுத ஆரம்பித்தேன். அரசூர் வம்சத்தின் பின் குறிப்பாக நாலு பக்கமாவது சிறுகதையாக எழுதி நிறுத்த உத்தேசம். நம்மைக் கேட்டுக்கொண்டா கதை நடக்கிறது?
நாலு பக்கம் நூற்று ரெண்டு அத்தியாயமாக முடிந்தபோது விசாலாட்சி சொன்னாள் – இன்னும் ஒரே ஒரு அரசூர் அம்பலப்புழை கதை எழுதிடுடா குழந்தே. அச்சுதம் கேசவம்னு பேர் வை. அமோகமா இருக்கும்.
அவள் எனக்கு முன்னோரில் ஒருத்தி. சொன்னால் தட்ட முடியாது. எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அரசூர் முக்கதை (டிரைலஜி)யில் இந்த விஸ்வரூபம் தான் நேரத்தையும் உழைப்பையும் அதிகமாக எடுத்துக் கொண்டது. கிட்டத்தட்ட இரண்டரை வருடம் எழுதி முடித்த நாவல் இது.
3 நாடுகள், 8 ஊர்கள், 4 கலாச்சாரச் சூழல்கள் ஊடே 6 இழைகளாகக் கடந்து போகிற கதை. ஒன்று 1938-லும் மற்றவை 1889-1891ல் தொடங்கி இவை 1938-ல் முடியும்.
மொழிபெயர்ப்பு போல் எழுதும் நடையை ‘வாயு’வில் பயன்படுத்தி இருந்ததாகச் சொன்னேனே. இந்த நாவலில் இரண்டு அத்தியாயம் 1910 பத்திரிகை பயணக் குறிப்பாக அதை இன்னும் கூர்மையாக்கி எழுதிய சுவாரசியம் வேறு எதிலும் வராது.
அதைத் தவிர 6 மொழி நடைகள். 50-க்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள்.
அத்தனை பேரையும் விட, நுங்கம்பாக்கம் மகாலிங்கய்யன் எப்படியோ முன்னால் வந்து பழைய போட்டோவில் போஸ் கொடுக்கிற சின்னத் தாத்தா போல விறைப்பாக நிற்கிறான். அவனை இந்தக் கதையில் கட்டுப்படுத்த முயன்று முடியாது என்று பட, விட்டுவிட்டேன்.
1860-களில் தொடங்கி 1940 வரையான மைக்ரோ ஹிஸ்டரியை (நுண் வரலாறு என்று சொல்லலாமா?) முழுவதுமாகச் சொல்ல முடியாவிட்டாலும் தொட்டுக்காட்ட முடிந்த திருப்தி உண்டு. சரித்திரத்தைச் சொல்வதை விட கதையைப் பெரிய கான்வாஸில் நகர்த்திப் போவது ஷுமேகர் கார்ப் பந்தயத்தில் பார்முலா கார் ஓட்டுகிறது போல் மகிழ்ச்சி.
ஒன்றிரண்டு பெரிய கதாபாத்திரங்களை சமூக வரலாற்றில் இருந்து நேரடியாக நாவலுக்குள் இறக்கி இதை மேக்ரோ ஹிஸ்டரி சார்ந்த புனைவாக மாற்றி இருக்கலாம். அரசூர் வம்சத்திலேயே அந்த சவுகரியம் இருந்தது. ஆனாலும் இந்த விஷயத்திலும் சோதனை செய்து பார்ப்பதில் தான் உற்சாகம். அது ஏன் பெரிய பாத்திரங்கள்? நாலு வாய் காப்பி குடிக்கிற சைஸ் குட்டி டம்ளர்களே போதுமே.
அரசூர் வம்சத்தில் மதராஸ் கருப்புப் பட்டிணத்தில் சுவிசேஷப் பிரசாரகர் பரணி ஆண்டி நிஜ மனிதர். விசுவரூபத்தில் மொரிஷியஸுக்கு கரும்புத் தோட்ட ஒப்பந்தத் தொழிலாளரை அனுப்பி கமிஷன் வாங்கும் தொழில் பார்த்த புதுவை கருப்பாயி அம்மாள் நிஜமாக சுவாசித்துக் கொண்டு இருந்தவள்தான். கருப்பாயி அம்மாள் மட்டுமில்லை, எடின்பரோ நாடக அரங்கில் நடக்கும் ‘ஓ சோசன்னா’ நாடகம் மெய்யாலுமே அந்தக் காலகட்டத்தில் நடந்தது. குறிப்பிடப்படும் வசனங்கள் நாடக ஸ்க்ரிப்டில் உள்ளவை. நாடக நடிகர்கள், இங்கிலாந்து இளவரசரின் ஸ்காட்லாந்து பயண அத்தியாயங்களில் வருகிற ரயில்வே சிப்பந்திகள் பலரும் மூச்சு விட்டுக்கொண்டு இருந்தவர்கள் தான். பிரயாணக் குறிப்பு வெளியிடும் அந்தத் தினப் பத்திரிகையை மட்டும் மனதில் ஒரு பிரதி அடித்து வைத்துக் கொண்டேன். அதன் ஆங்கிலத்துக்கு கொஞ்சம் ஸ்காட்மேன் பத்திரிகை சாயல் உண்டு.
நாவலில் 1890-1920 கால கட்ட லண்டனையும் எடின்பரோவையும் சித்தரிப்பதில் சிரமமே இல்லை. ஆனால் அதே கால கட்ட சென்னை (மதராஸ்) எழுத்தில் உருவாக அதிக முனைப்பு தேவைப்பட்டது. லண்டனும் எடின்பரோவும் நூறு வருடமாக பழையன இருத்தலும் புதியன புகுதலுமாக பழையதைப் பாதுகாக்கிறதால் அங்கே நான் குடியிருந்து பெற்ற இன்றைய வாழ்வனுபவத்தின் மூலம் சுலபமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டு போக முடிந்தது. நேற்று மதியம் இருந்த மதறாஸ் இன்று இல்லை. திருக்கழுக்குன்றமும், அம்பலப்புழையும் கூடத்தான். மாறட்டும். அதுவும் வேண்டித்தான் இருக்கு.
மேஜிக்கல் ரியலிசம் இந்த நாவலிலும் உண்டு. மிகை படச் சொல்வது போல், அடைமொழி கொடுத்து அழைத்துப் பெயரை மனதில் பதிய வைப்பது போல், காலத்தில் முன்னே பின்னே சகஜமாக நகர்ந்து கண்ணிகளை முடியவும் இழுத்து அவிழ்க்கவும் அது ஒரு சௌகரியத்தைத் தருகிறது – என் லேப்டாப்பும் தமிழ் ஒருங்குகுறி என்னெச்செம் ரைட்டர் மென்பொருளும் எப்படி என் எழுத்தை உருவாக்க உதவுகின்றனவோ அது போல்.
எழுத ஆரம்பித்ததும் விஸ்வரூபம் ஆலப்பாட்டு வயசன் போல் நாலு எட்டு அடி எவ்வி மேலேறி மிதக்க அந்த இலக்கிய உத்தி வழி செய்கிறது. சகலமானதோடும் ஒட்டியும் ஒட்டாமலும் நெருங்கியும் விலகியும் புகுந்து புறப்படாமல் என்ன கதை எழுத வேண்டிக் கிடக்கிறது?
அரசூர் வம்சத்தில் நாவல் முழுக்க வந்த மாந்திரீக யதார்த்தம் இந்த நாவலில் காசர்கோட்டு குடும்பத்தோடு இழைந்து வருகிறது. அவர்களோடு மற்ற பாத்திரங்கள் ஊடாடுவதை எழுதும்போது எனக்கு அதெல்லாம் எப்படி முன்னேறிப் போகும் என்று முன் கூட்டியே தெரியாததால் படித்துக் கொண்டே எழுதும் ஒரு அலாதி இன்பம் விஸ்வரூபத்தில் கிடைத்தது. இது ஓர் அபூர்வமான அனுபவம்.
படிக்கும் உங்களுக்கும் நல்ல வாசிப்பனுபவம் கிடைக்க அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அருளட்டும்.
இரா.முருகன்
டிசம்பர் 2012
புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் (ஜனவரி 2013) கிடைக்கும்.