விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 9
கிருபாகரன் சாப்பிட்டு விட்டு ஓட்டமும் நடையுமாக வந்தான். கையில் மஞ்சளும் சிவப்புமாக ஏதோ பத்திரிகை.
‘எனக்கு கானா நியூஸ் வந்திருக்குடா..’
கவரை வாங்கிப் பார்த்தோம். ‘மங்கத் தயிரம்மா, கேர் ஆப் ராம்நிஜம் நாயுடு’ என்று விலாசம் எழுதி, இருபத்து நாலு பக்கத்துக்கு இருந்தது. எல்லாப் பக்கத்திலும் நல்ல கருப்பாக ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். அதே சாயலில் ஏழெட்டுப் பேர் டமாரம் வாசிக்கிர படம் கடைசிப் பக்கத்தில்
‘பிரேக் வசந்த’த்துக்கு உறை போடக்கூட வராது.. என்றாலும் இது மாதாமாதம் வரும் போல் தெரிகிறது.
‘ஏண்டா இது உங்க பாட்டி பெயருக்கு மட்டும் வந்திருக்கு?’
‘நான் எல்லோர் பேர்லேயும் தாண்டா அனுப்பிச்சேன்.. அவங்க என்னமோ இது மட்டும் அனுப்பியிருக்காங்க..’
கண் சரிவரத் தெரியாமல், சதா கை உரலில் வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டு, ‘தம்புடு பாக உந்தியா’ என்று நிலைப்படியில் யாராவது வருகிற சத்தம் கேட்டால் விசாரித்துக் கொண்டு பாக்கி நேரம் இருமிக் கொண்டு திண்ணையில் இருக்கப்பட்ட மங்கத்தாயாரம்மாளுக்கு கானா நாட்டு சமாசாரங்களை உடனுக்குடன் அறிவிப்பது தலை போகிற காரியமாக அவர்கள் நினைத்திருக்கலாம்.
‘எலோருக்கும் வந்தாச்சுடா.. ஏதாவது புஸ்தகம்.. பேப்பர்னு.. பாவம்டா சுந்தரம்.. அவனுக்கு இன்னம் வரலே..’
‘எனக்கு நேத்து ஜீவ வெளிச்சம் சர்ட்டிபிகேட் வந்ததே..’
சுந்தரம் விட்டுக் கொடுக்காமல் சொன்னான்.
அதில் நாங்களும் சேர்ந்து பாதியில் விட்டுவிட்டோம்.. வாரா வாரம் பைபிள் சம்பந்தமாகக் கேள்வி அச்சடித்த காகிதம் அனுப்புவார்கள். ‘காயினின் சகோதரன் பெயர் என்ன’ என்பது மாதிரிக் கேள்விகளுக்கு வேறு யாராவது எந்தத் தெருவிலாவது எழுதியதை வாங்கி வந்து பொறுமையாகப் பார்த்து எழுதி அனுப்பினால், அதைத் திருத்தி, ‘ஏசுவை விசுவாசி’ என்று எழுதி முன்பாரம் பின்பாரமாகச் சிலுவை வரைந்து கையெழுத்து போட்டுத் திருப்பி அனுப்புவார்கள். நாலு தடவை இப்படி கடிதப் போக்குவரத்து நடந்து முடிந்ததும் ஒரு சர்ட்டிபிகேட்டும், சின்னச் சின்னதாக நாலு புத்தகமும் வரும். ‘தேவ ஊழியம் செய்ய வாருங்கள்’ என்று சுந்தரத்துக்குக் கடிதம் கூட அச்சடித்து வந்திருக்கிறது.
‘இப்ப வரத் தோதுப்படாதுன்னு எழுதிடுடா.. எலக்ஷன் இருக்கு..’
எழுதினானா என்று தெரியவில்லை.
’ராமு போய்ச் சாப்பிட்டு வரலாமா..’
நான் சைக்கிள் ஆபீசிலிருந்து வெளியே வந்தேன்.
சுட்டெரிக்கிற வெய்யில். விஷ்ணுபுரத்தில் வருஷம் முழுக்க வெய்யில் தான். கோடை விடுமுறையை இன்னும் கூட இரண்டு மாதம் நீட்டிக்கலாம்.
இரண்டு மாதத்தில் நாலு கானா நியூஸ் வரும்.. கொடுத்து வைத்தவர்களுக்கு..
———————————————————-
விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 10
நான் உள்ளே நுழைந்தபோது, வீட்டுக் கூடத்தில் மெகருன்னிஸா.
இப்படிச் சுவரில் சாய்ந்து கொண்டு, காலை நீட்டிக் கொண்டு தொடர்கதை படிப்பதை அசன் ராவுத்தர் பார்த்தால் தொலைந்து விடுவார்.
அம்மாவுக்கு அவள் என்னமோ செல்லம். நித்தியப்படிக்கு மதியம் இங்கே தான். அம்மாவுக்கு எம்பிராய்டரி தெரியும். அதைக் கற்றுக் கொள்ள வருவதாகச் சாக்கு.
’நீங்க வச்ச மைசூர் ரசம் ரெம்ப நல்லா இருந்திச்சு மாமி… இவஹளே பூராக் குடிச்சுட்டாஹ..’ என்று அக்பரின் உம்மா கொல்லைக் கதவைத் திறந்து அம்மாவிடம் சொல்லவும், ‘உங்க நிலத்திலே பயிர் பண்ற வெள்ளரிக்கா தேவாமிர்தமா இருக்கு’ என்று அம்மா சர்ட்டிபிகேட் கொடுக்கவும் மெகர் மூலமாகப் பண்டமாற்று செய்யப்படுகிறது.
‘புவனா நல்ல பிள்ளை மாமி… யார் வம்புக்கும் போக மாட்டா.. என்ன, கொஞ்சம் ஹெட்வெயிட் அதிகம்.. காலேஜ்லே படிக்கிறா இல்லே.. அத்தா அனுப்பியிருந்தா நானும் காலேஜ் போயிருக்க மாட்டேனா என்ன..’
தெருமுழுக்க புவனா பேச்சுத்தான்.
‘கண்டிப்பா.. உன் புத்திசாலித்தனத்துக்கு கலெக்டராக் கூட வரலாம்.. தட்சணம் நிலைமையையும் பார்க்க வேண்டியிருக்கேடி..கலிகாலம்டியம்மா.. கலி..’
‘சும்மா வெளையாட்டா வேணும்னு எழுதியிருப்பானுங்க, மாமி..’
வேணும்னு எழுதினானோ வினையா எழுதினானோ.. எழுதியாச்சு.. படிச்சாச்சு..’
’யார் மாமி எழுதியிருப்பாங்க.. சைக்கிள் காரங்களா இருக்குமோ..’
பேச்சு என்னைப் பார்த்ததும் நின்றது. சைக்கிள்காரன்.
‘இவனை ஏன் மாமி எலக்ஷன் ஆபீஸுக்கு விடறிங்க… அக்பர் பயலும் சொன்னது கேக்காம அங்கே தான் ஓடுறான்.. லீவுன்னா பழைய பாடத்தை எல்லாம் மறக்காம எழுதிப் பார்க்கலாமில்லே..’
முக்காடும், நீளமான தலைமுடியுமாக புடவையில் இருக்கிற அசன் ராவுத்தர்..
‘நல்லா சொல்லுடியம்மா.. இவங்க அப்பாவும் என்ன ஏதுன்னு கேக்கறது இல்லே.. வாசல்லே இருக்கறதோ பரப்பிரம்மம்.. இண்டு பேப்பரே கைலாசம்.. பவான்ஸ் ஜேர்னலே வைகுந்தம்.. முக்காட்டை கடிச்சு எச்சப் பண்ணாதேடி.. காலை மடக்கி உக்காரு..’
அம்மா ரெண்டு சைடிலும் கோல் போடுவாள்.
அக்பரின் அத்தா எங்களைக் கணக்குப் போட வைத்த பிரதாபங்களை மெகர் அம்மாவிடம் விஸ்தாரமாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது நான் சமையல்கட்டில்.
‘அஞ்சு என்ன.. ராவுத்தர் அம்பது கணக்கு கொடுத்திருக்கணும்..’
அம்மா உள்ளே வந்தாள்.
‘கொஞ்சம் இரு.. இவனுக்கு சாதம் போட்டு அனுப்பிட்டு எம்ப்ராய்டரி ஆரம்பிக்கலாம்..’
‘அந்த அக்க சொல்றதை நம்பாதே அம்மா.. அவளுக்கு எம்ப்ராய்டரியும் வராது ஒண்ணும் வராது…சோம்பேறி..’
வாயில் அவசரமாக சாதத்தை அடைத்துக் கொண்டேன்.
‘பாவம்டா.. உனக்கு அக்கா இருந்தா .. இந்த மாதிரி.. இதே வயசு தான் இருக்கும்.. ஒரே மாசம்.. ரெணடு நாள் தான் வித்யாசம்.. இவ உம்மாவும் நானும் பக்கத்துப் பக்கத்துலே ஆஸ்பத்திரியிலே… ஒரு வ்யசுலே ஜன்னி வந்து உங்க அக்கா..’
அம்மா கண்கள் நிறைவதைப் பார்க்க சங்கடமாக இருந்தது.
திடீரென்று சிரித்தாள்.
‘நீ பொறந்த போதும் அதே மாதிரி பக்கத்து கட்டில்லே உம்மா.. வயத்துலே அக்பர்.. நீங்க ரெண்டும் சித்திரைச் சுழியன்கள்..’
‘மாமி.. நாளைக்கு உம்மாவும் அத்தாவும் நிலத்தைப் பார்க்க நெட்டூர் போறாங்க.. நன் உங்க வீட்டுலே சாப்பிட்டுக்கட்டா..’
மெகர் சமையல்கட்டு கதவைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.
‘பேஷா.. உனக்கு என்ன பிடிக்கும்… பருப்பு உசிலி தானே.. பண்ணிடறேன்..’
எனக்கும் இப்படி ஒரு அக்கா இருந்தால் தலை வாரி விடுவாள். கண்ணில் தூசு விழுந்தால் மெல்ல ஊதி எடுப்பாள். சயின்ஸ் நோட்டில் படம் போட்டுக் கொடுப்பாள். மார்கழி மாதம் வாசலில் பெரிய கோலம் போடுவாள்.
மெகருன்னிஸா கோலம் போடுவாளா?
————————————————————————————————————————-