விஷம் குறுநாவல் – ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ

விஷம்  – குறுநாவல்                                       இரா.முருகன்

 

இது என் முதல் குறுநாவல். 1991-ல் கணையாழி குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பிரசுரமானது.

 

முதல் குறுநாவல் என்பதாலோ என்னமோ, கட்டற்ற, ‘கேர் ஃபார் நத்திங்’  மனதோடு கதை போகிற போக்கில் எழுதிப் போன குறுநாவல் இது. எழுதும் போது இருந்த அந்த மகிழ்ச்சி இத்தனை வருடம் கழித்து மீண்டும் படிக்கும்போதும் உண்டாகிறது. முதல் காதல்!

 

——————————————————————————————————————

 

அத்தியாயம்  – 1

 

ரஞ்சனா ஆடிக்கொண்டிருக்கிறாள். கடமை கருதிச் சிரிக்கிற உதடுகளும், காண்டாக்ட் லென்ஸ் பொருத்திய கண்களில் முடிந்தவரை பிரதிபலிக்கும் சிங்காரமுமாக.

 

யாரோ ஒரு மொஹபத்ரா சட்டை இல்லாமல் தரையில் உட்கார்ந்து, மத்தளத்தைத் தட்டித் தட்டி வெறியேற்றிக் கொண்டிருக்கிறான்.

 

நான் தான் பாட்டுக்காரன். சூரிய உதயத்தில் தாமரைகள் கொஞ்சம் கொஞ்சமாக மலர்கிற ஆச்சரியமான விஷயத்தைப் பற்றிக் கண்கள் செருகப் பாடிக் கொண்டிருக்கிறேன்.

 

ரஞ்சனாவின் கைகள் ஒரு பிரம்மாண்டமான தாமரையை அபிநயிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. அந்தத் தாமரை பூரணமாக விடரும் முன், நேரம் ஆகி விட்டதென்று திரைக்குப் பின்னால் நிறுத்தாமல் மணி அடிக்கிறார்கள்.

 

‘இன்னும் கொஞ்சம் தான். நீங்கள் மட்டும் ஒத்தாசை செய்தால் இதோ முடித்து விடலாம்’ என்பது போல் ரஞ்சனா கண்களால் விண்ணப்பிக்க,

 

மணிச் சத்தம் மட்டும் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

 

வெளியே தான் மணியை யாரோ விடாமல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இழுத்துப் போர்த்திக் கொண்டு படுக்க வைக்கும் இந்த டில்லிக் குளிரில் யாருக்கோ என்னை அழைக்க வேண்டிய அவசியம்.

 

நான் வேலை செய்யும் இடத்தில் கம்ப்யூட்டர் நின்றுபோய் என்னைக் கூப்பிட வந்திருக்கலாம். கனவான்கள் யாராவது மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார நிலை பற்றியோ, காலத்தால் அழியாத பதிமூன்று தமிழ்ச் சிறுகதைகள் பற்றியோ என்னோடு அவசரமான கலந்துரையாடலுக்கு வந்திருக்கலாம். ரயில் தாமதமாக வந்து சேர்ந்து, நாங்குனேரியில் இருந்தோ, பாலக்காட்டில் இருந்தோ என் உறவுக் காரர்களோ, நண்பர்களோ, பகைவர்களொ என்னைத் தேடி வந்திருக்கலாம். இதற்கு முன்னே வந்திருக்கிறார்கள்.

 

அல்லது, ரஞ்சனா வந்திருப்பாள்.

 

ரஞ்சனாவாக இருந்தால் அற்ப சங்கையைப் பொறுத்துக் கொண்டு காதல் உரையாடல் எதுவும் நடத்த முடியாது.

 

போன மாதம் ஒரு நாள், லஜ்பத் நகர் மார்க்கெட்டில், கீகடமான இடத்தில் செருகி வைத்த தாபாவில் சீக்குப் பிடித்த கோழியை அறுத்துப் போட்டு வைத்த சிக்கன் குருமாவும் ரூமால் ரொட்டியும் தின்று மூன்று நாள் மலச்சிக்கலான நேரத்தில், ரஞ்சனாவோடு ராஷ்டிரபதி பவன் பூந்தோட்டத்தைப் பார்வையிடப் போக வேண்டி வந்தது.

 

சரீர உபாதை மட்டுமில்லை, நெல்லூர் அரிசி மூட்டைக்கு சல்வார் கமீஸ் போட்ட மாதிரி, ரஞ்சனாவின் பிரம்மாண்டமான பாட்டியாலா புவா என்ற பாட்டியாலா பழிகாரி அத்தையும் அன்றைக்குக் காதலுக்கு சத்ருவாகக் கூட வந்தாள். ஆட்டோவிலும்,             ஃபட்ஃபட்டியிலும் பயணமே அவளுக்காகத்தான்.

 

அத்தைக்கு டெல்லியைச் சுற்றிக் காட்ட வேண்டிய கடமை எனக்கு. நடுவே அவள் கால் வலித்ததென்று சட்டமாக உட்கார்ந்து விட, ரஞ்சனா என்னைப் பார்த்த காதல் பார்வையில் அந்த அத்தையை முதுகில் சுமந்து கொண்டு நடக்கவும் வேண்டுமோ என்று பயந்து போனேன்.

 

பாட்டியாலா அத்தை பரலோகம் புறப்பட்டுப் போன சந்தோஷ சமாசாரத்தை உடனுக்குடன் தெரிவிக்க ரஞ்சனா வந்திருக்கக் கூடும். பொறுமை இல்லாமல் மணி அடிக்கிறாள், போக வேண்டும்.

 

மணியை அடிப்பது நின்று போனது.

 

நல்லிதயம் படைத்தவர்கள் தமிழ்ச் சிறுகதைகள் பற்றி, வரும் ஞாயிற்றுக்கிழமை மகாபாரதம் முடிந்த பிறகு கலந்தாலோசித்துப் பட்டியல் தயாரித்துக் கொள்ளலாம் என்று தீர்மானம் உண்டாகிப் புறப்பட்டுப் போயிருக்கலாம்.

 

ரஞ்சனாவின் அத்தை மறுபிறவி எடுத்து பாட்டியாலா திரும்பிப் போக யத்தனித்திருக்கலாம். அல்லது ராஷ்டிரபதி பவன் பூந்தோடத்தில், ச்ல்வார் கமீஸ் அணிந்த புஷ்டியான பட்டாம்பூச்சியாக பறக்க முயன்று கொண்டிருக்கலாம்.

 

என்றாலும், நான் எழுந்தாகி விட்டது. வாசல் அல்லது டாய்லெட்.

 

நான் டாய்லெட்டில் இருந்தபோது மறுபடி மணி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன