உப்பு வணிகமும் பழநிக்கு நடைப் பயணமும்- புரவி மாத இதழில் என் பத்தி வாதவூரான் பரிகளிலிருந்து

ஆடு மேய்ச்ச மாதிரியும் இருக்கணும்,  அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கணும் என்பது தெற்கத்தி  சீமையில் பரவலாக  உதிர்ந்த பழமொழி.   இப்போது பழமொழியின் இடத்தை சினிமா பஞ்ச் டயலாக் அபகரித்துக் கொண்டிருக்கிறது. நிற்க.

 

இன்னொரு பழைய புத்தகம் படிக்கக் கிடைத்தது. சில நூறு வருடம் முன், என்றால் கிட்டத்தட்ட ஆயிரத்து அறுநூறாம் ஆண்டு முதல் நகரத்தார் என்ற நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர் அவ்வப்போது மேற்கொண்ட பக்திப் பயணம் பற்றிப் பேசுவது. அவர்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய காலம் அது. முக்கியத் தொழில் வட்டிக்கடை நடத்துதல்.  வட்டிக்கு விட்டு வருமானம் ஈட்டுவது மட்டும் போதாது என்றுபட நியாயமான மற்ற தொழில் என்ன செய்யலாம் என்று யோசனை. உப்பு விற்றால் என்ன? இதற்கிடையே, குலதெய்வம் பழனி முருகன் சன்னிதிக்கு யாத்திரை போய் தரிசனம் செய்து வர ஒரு நகரத்தார் வீட்டில் ஓயாமல் வற்புறுத்தல்.  உப்பு விற்பனையும் பழனிக்கு யாத்திரையும் ஒரே கோட்டில் சந்திக்க, அவருக்கு ஒரு யோசனை – கடற்கரையில் இருந்து உப்பை வாங்கிக் கடகங்களில் எடுத்துப்போய் பழனியிலும் சுற்று வட்டாரத்திலும் விற்று வரும் லாபத்தில் சிறு சதவிகிதத்தை காணிக்கையாகப் பழநி முருகனுக்குத் தந்தால் என்ன? காணிக்கை நிறைய வேண்டும் என்று முருகன் விருப்பப் பட்டால் அவன் தான் உப்பு விற்பனையை அதிகமாக்க வேண்டும்.

 

பழநிக்கு ஒரு சிறு கூட்டமாக பயணம் போக வேண்டியது. நாலு ஆட்களை உப்பு மூட்டை தலையில் சுமக்க வைத்து பழனி அடிவாரத்தில் அதை விற்கக் கடை போட வேண்டியது. கூடவே பழநிக் கோவிலில் சாமி தரிசனம் நடத்தித் தர உள்ள பண்டாரத்தார் வீட்டில் தங்கி எல்லோருக்கும் மூணுவேளை ஆகாரம். தரிசனத்துக்கு அப்புறம் பழநி முருகனுக்கு லாபத்தில் பங்கை உண்டியலில் போட வேண்டியது.  பண்டாரத்தாருக்கு காணிக்கை, ஆகாரத்துக்கும் தங்கியதற்குமான தொகை என்று தரவேண்டியது. காலி உப்புச் சாக்கும், கைப்பையில் உப்பு விற்ற காசும், மனதில் முருகனுமாக ஊர் திரும்ப வேண்டியது. இப்படி இந்த நகரத்தார் வர்த்தகர்கள் இரண்டு மூன்று வருடம் செய்ய மற்ற நகரத்தார்களும் அதே மாதிரி உப்போடு புறப்பட்டு விட்டார்கள்.

 

நிகழ்வுகள் மறுபடி மறுபடி நிகழ்ந்து நாளாவட்டத்தில் சடங்குகளாகும். பழநி யாத்திரைக் குழுக்கள் அதிகமாகி, யாத்திரைக்கு அடுத்து யாத்திரையாகப் போய்வர, கொஞ்சம் கொஞ்சமாக பழனிப் பயண  விதிகளும் சடங்குகளும், விற்பனைக்காக உப்பு வாங்குவதில் தொடங்கி, பண்டாரத்தாருக்கு சம்மானம் தருவது, அன்னதானம் வரை விரிவாக ஏற்படுத்தப்பட்டு விட்டன.

 

நகரத்தார் அறப் பட்டயங்கள் என்ற நூல் 1608-ஆம் ஆண்டு நெட்டெழுத்து கையொப்பமான பட்டயம் தொடங்கி, 1800-கள் வரை  தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகள் பற்றிய புத்தகம். அதன் கிட்டத்தட்ட நானூறு வருடத் தமிழ் சுவாரசியமானது. பேச்சுக்கும் எழுத்துக்கும் அதிக வேற்றுமை இல்லாத பழந்தமிழுக்காகப் படிக்க வேண்டிய நூல் –

 

பழனிக் கோவிலுக்கு வந்து ஆவணிமூல வீதிக்கும் கீள்புரம் தெய்வநாயக பண்டாரத்து மனையில் வந்து இறங்கி, உப்புக் கடகமும் இறக்கி வைத்து உப்பு மாறி (விற்று) ஒரு பணம் லாபத்திற்கு அரைக்கால் பணம் மகமையெடுத்து தெய்வநாயக பண்டாரத்தின் பெண்சாதி பார்வதியம்மாளிடம் ’எங்களுக்கும் தங்கள் வீட்டிலுள்ளவருக்கும் மூன்று பரதேசிக்கும் சோறு வடித்துப் போடவேணும். பண்டாரத்தையாவை மலைக்கு வரும்படி சொல்லி சுவாமி தெரிசனம் செய்து வைக்கும்படியாகவும் செய்ய வேண்டியது அம்மாள்’ என்று சொல்லபண்டாரத்துக்கு ஒரு பணமும், அம்மாளுக்கு ஒரு பணமும் கொடுத்து, ’மருவளி (மறுபடி) வருவோம். உப்பு மாற வருவோம். இனி வந்தால் தங்கள் வீட்டில் தான் வருவோம்’ என்று சொல்லி..

 

விதிமுறைப் பட்டயம் புரியும் பழைய தமிழில் ஆரம்பிப்பது இப்படித்தான்.  நகரத்தார் இந்தத் தமிழை இன்னும் திருப்பூட்டுதல் (திருமணம்) மங்கல நிகழ்வில், இசைக் குடிமானம் (திருமண ஒப்பந்தம்) எழுத சரளமாக உபயோகிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன