குறுநாவல் மனை இரா.முருகன் பாகம் 8
‘வா சனியனே’
அந்தப் பச்சைத் தளிரை இழுத்தபடியே ஆடியாடிப் போகிற மூத்த நம்பூதிரி.
நீலகண்டன் கார்த்தியாயியை எட்டி உதைத்துத் தள்ளினான்.
‘ரான்.. ரான்.. தள்ளாதீர்கள்.. வல்லாத்த ஷீணம்.. நானே போகிறேன்.. குழந்தையையாவது தயவு செய்து..’
‘உன் வம்சத்தின் நாற்றக் காற்றே இங்கே அண்ட வேண்டாம்.. ஒழிந்து போ..’
பலம் கொண்ட மட்டும் தள்ளிய நீலகண்டனின் கைகளும் கால்களும்… மதில் சுவரில் பலமாகத் தலை மோதி கார்த்தியாயினி குழைந்து விழுந்தாள்.
‘நீயும் ஒழி..’
கருங்கல்லில் மோதப் போன குழந்தையை ஒரு வளைக்கரம் பாய்ந்து பிடித்து நிறுத்தியது.
பகவதி.
‘சித்ரன் எங்கே ஒழிந்தான்? அவன் கொண்டு வந்த பிடாரி, ஊர்ப் பிடாரிகளை எல்லாம் கூட்டி வைத்து இழவெடுக்கிறது..’
மூத்த தம்புராட்டியின் சத்தம்..
பகவதி குழந்தையை அணைத்துத் தூக்கியபடி மதில் பக்கம் ஓடினாள். அங்கே, தீனமான ஓலத்தோடு தலையில் இருந்து ரத்தம் பெருகி வழிய, கார்த்தியாயினி.
’ஏ பகவதி.. உனக்கென்ன பயித்தியமா… கண்ட குப்பையை எல்லாம் இடுப்பில் ஏற்றிக் கொண்டு.. இறக்கி எறிந்து விட்டு வா.. குளித்து விட்டு வந்து தொலை.. நம்பூதிரிப் பெண்ணாகப் பிறந்து ஆசாரமே இல்லாமல்.. கலி.. சம்சயமில்லை.. கலியே தான்..’
நடுத் தம்புராட்டி.
‘இந்த அனாசாரக் கழுதையையும் மனையை விட்டு இறக்கா விட்டால் மனையே தீட்டுப் பட்டுவிடும்’
இளைய தம்புராட்டி கீச்சுக் கீச்சென்று அலறினாள்.
‘நீங்கள் ஒரு கிழத்தின் எச்சிலுக்காகச் சண்டை போடுகிறது ஆசாரம்.. மனையின் நம்பூதிரி பிற ஜாதிப் பெண்ணைத் துரத்திப் போய்த் தொட்டுத் தழுவித் தூக்கி வந்து அவள் விரும்பாமலேயே கட்டாயமாக சுகிப்பது ஆசாரம்.. வீட்டு வேலைக்கு வருகிற பாவப்பட்ட பெண்ணை அவள் புருஷன் பார்க்க அனுபவிப்பது ஆசாரம்.. இந்தப் பச்சைக் குழந்தையைத் தொட்டுத் தூக்கினால் அனாசாரம்..’
நாக்கு வரை வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டு பகவதியின் விழிகள் விசாரித்தன. காலம் காலமாக அடக்கி வைத்த எண்ணங்களின் கனல் தெறிக்கும் பார்வை இது.
‘அம்மே.. நான் சாகப் போகிறேன்.. அம்மே..’
கார்த்தியாயினி சக்தி எல்லாம் திரட்டி அழ ஆரம்பித்தாள். இருமலில் சுவாசம் திணறித் திணறி வந்தது.
‘தம்புராட்டி..’, அவள் விம்மினாள். ‘இவர்கள்.. இவர்கள்..என் குழந்தையையும் கொன்று போட்டு விடுவார்கள்.. தம்புராட்டி அடியளுக்கு ஒரு வாக்கு தரணும்..இவளை..’
‘அம்மா.. வா.. நம் குடிசைக்கே போகலாம்..’
குழந்தையும் விம்மியது.
கார்த்தியாயினி குழந்தையின் கையைப் பிடித்து, பகவதியின் கரங்களில் வைத்தாள்.
‘தம்புராட்டி…இவளை உங்கள் மகளாக வளர்க்க வேண்டும்.. செய்வீர்களா?’
பகவதி தன் கைக்குள் வந்த சின்னக் கரங்களைப் பற்றிக் கொண்டு கண்கள் கலங்கித் தலையசைக்க, ஒரு புன்னகையில் கார்த்தியாயினியின் உதடுகளும் பின் இமைகளும் மூடின. திரும்பவும் அவை மீண்டும் திறக்கப் போவதில்லை என்று பகவதிக்குத் தெரியும்.