ஜெரஸோப்பா சமண பிரார்த்தனைக் கூடத்தில் போன மாதம் அக்ஷ்ரானந்தாவின் பளிங்குச் சிலை நிறுவப்பட்டது. திசைகளைப் புனித ஆடைகளாக உடுத்திய கோலத்தில் தீர்த்தங்கரரின் விக்ரஹம் நிர்மாணிக்கப்பட்டு தினமு ஆயிரக்கணக்கான பக்தர்களால் வணங்கப் பட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று சதுர்முகவசதி இரவு ஒன்பது மணிக்கு வழக்கம்போல் சத்சங்கம் முடிந்து பத்திரமாகப் பூட்டப்பட்டு வெளிக்கதவும் பூட்டப்பட்டது. இன்று காலை ஏழு மணிக்கு வழக்கம்போல் வசதி திறக்கப்படும் நேரத்தில் அங்கே நிர்வகிக்கும் ஸ்வேதாம்பர அனந்தரும் ராகூலரும் அதிர்ச்சியடையும்படி கதவெல்லாம் மட்டமல்லாக்காகத் திறந்து கிடக்க, அக்ஷ்ரானந்தாவின் கருங்கல் விக்ரகம் பீஜத்தில் உளியால் சிதைக்கப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
எனினும் கருங்கல் விக்ரகம் என்பதால் சேதம் ஏதுமில்லை. ஊரில் சமண மதத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பங்கள் சாரிசாரியாக வந்து கைபிசைந்து துயருற்று, ஆனந்தருக்கு பசுவின் பால் கொண்டு அபிஷேகம் செய்து பிரசாதமாகத் திருப்பி அளிக்கப்பட்டது.
பவ்ய ஜீவன்களாக ஒரு புழு பூச்சிக்குக் கூட துன்பம் வரவழைக்காமல் வாழ்க்கையைக் கடத்தும் சாதுக்களான இல்லறத்தார் சமண மதத்தினரையும், புனிதத் துறவிகளையும் சரீரத்திலும் மனதிலும் காயப்படுத்த பெரும்பான்மை வைதீக சமய இந்துக்கள் முன்கை எடுப்பது துரதிருஷ்டவசமானது என்று வருந்துகிறது ஜெரஸூப்பா ஜைன சபா. பேரரசி சென்னபைரதேவி மகாராணியவரு அவர்களின் நீண்ட புகழுக்குரிய ராஜ்ய பரிபாலனத்துக்குக் களங்கம் கற்பிக்க யாரோ செய்யும் முயற்சிகள் வெற்றி பெறாது போக ஜீவனானந்தா அருளைத் தேடுவதாக சபா அறிவிக்கிறது.