என் புது நாவல் தினை, இணைய இலக்கியப் பத்திரிகை திண்ணையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் வெளிவந்திருக்கும் அத்தியாயம் நான்கு – சிறுபகுதி இங்கே
———————————————————————————–
வெளியே ஏதோ பெருஞ்சத்தமாகக் கேட்டது. சமவெளியில் இறங்கி, கரும்புத் தோட்டத்துக்குள் யானைகள் உண்டு மகிழ வராமல் அச்சுறுத்தி விரட்ட ஓவென்று கூட்டமாக ஆர்ப்பரித்து அல்லது சீனவெடி வெடித்து ஓட்டுவது வழக்கம் தான். காற்று நிலைத்த மாலை நேரங்களில் அந்தச் சத்தம் மலையேறி ஒலிப்பதுமுண்டு. எனில், பகல் நேரத்தில் யானை எங்கே வந்தது?
காடனும், தொடர்ந்து குறிஞ்சியும் சத்தம் கேட்ட கூட்டவெளிக்கு ஓடினார்கள்.
”குயிலி கதவை சார்த்தி வச்சுக்க, நான் வந்து திறக்கும்போது நீ வெளியே வந்தால் போதும்” என்று சொல்லியபடி ஓடினாள் குறிஞ்சி.
அந்தப் பெண்களும் அதைச் செய்ய மறுத்து உணவு உண்ட ஈரக் கையோடு வெளியே விரைந்தார்கள்.
”இங்கே நிறைய நேரம் கடத்த வேண்டாம் பெருந்தேளர் அலுவலக அழைப்பு எனக்கும் வந்தது” என்று வானம்பாடியிடம் சொல்லியபடி குழலை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டு குயிலி வெளியே ஜாக்கிரதையாக வந்தாள். பின்னால் வானம்பாடி,
மந்தில், என்றால் குன்று பெரும் மேடையில் மரத் தண்டில் அமர்ந்திருந்த சீனர் கீழே விழுந்து கிடந்தார். அவருடைய வாய் கோணிக் கோணி வலித்து இழுத்துக் கொண்டிருந்தது. கைகள் சுட்டி இழுக்கக் கால்கள் தரையை மிதித்து உயர்ந்து தட்டாமாலை சுற்றிக் கொண்டிருந்தன. வாயில் நுரை தள்ளிக்கொண்டிருந்தது.
அவருக்கு வலிப்பு கண்டிருக்கு, எஃகம் எஃகம் என்று எல்லோரும் சொல்ல முதுகிழவோன் வெறியாட்டத்துக்காக மேடைப் பின்னணியாக மண் குவித்து நட்டு வைத்திருந்த வேலை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான்.
சீனருக்கு அதை எச்சிலாக்கக் கொடுத்து விடக்கூடாது என்பதால் தன் மேல்துணியை வேலைச் சுற்றிப் பொதிந்து சீனர் வாயில் இட்டான்.
கொஞ்சம் கொஞ்சமாக சீனர் அமைதியானார். அவர் எழுந்து அமர்ந்து தயவு செய்து என் சிறு பேழையை எனக்குத் தரமுடியுமா, அதில் தான் என் வலிப்புக்கான மருந்தும் நாக்கைக் கடித்துக் கொள்ளத் தடையாக பயனாகும் இரும்புச் சாவியும் இருக்கிறது என்று கேட்டவர், ஓ அதை மாநகரிலேயே மறந்து வைத்துவிட்டேனே என்று தலையைக் கையால் தாங்கியபடி நின்றார்.
”ஒன்றும் கவலை இல்லை, நாளை காடனோ மாடனோ சமவெளி போகும்போது போய் எடுத்து வரச்சொல்றேன். மாநகரில் களவு அரிதிலும் அரிது. பெட்டியை எங்கே வைத்தீர்கள் என்று நினைவு உண்டல்லவா” எனக் கேட்டான் முதுபெருங் கிழவன்.
”அது நினைவு இல்லையே, நேற்று எங்கெங்கோ சுற்றினேன் எங்கே பெட்டியை இறுதியாகக் கொண்டுபோனேன் என்று நினைவில்லையே” என்று கையைப் பிசைந்தார் சீனர்.
முதுகிழவோன் சிரித்தபடி சொன்னான்=
”நான் பரவாயில்லை போலிருக்கு. என் குடில் என்று அடுத்த குடிலுக்குள் போய் முண்டை அவிழ்த்துவிட்டு நிற்கும்போது அங்கே சிங்கச்சிக் கிழவி வந்து என்ன சத்தம் போட்டாள் தெரியுமோ. அவளைக் காமுற்று அவளது அந்தரங்கம் காண வந்தேன் என்று எண்ணம். நான் வீடு மறந்த மாதிரி குன்றேற மலைப் பாதையும் மறந்து விட்டது ஓரிரண்டு முறை”.
தன் வரலாற்றை சாவதானமாகச் சொல்ல ஆரம்பிக்க, கேள்மின் எனச் சொல்லவோ செவிமடுப்பீர் என ஆணையிடவோ யாருமில்லாததால் மலைமுது கிழவனின் சிங்கார நினைவுகள் காற்றோடு போயின.