என் புது நாவல் ‘தினை’ அத்தியாயம் 5 இன்று பதிப்பான திண்ணை டாட் காம் இணைய இதழில் பிரசுரமாகி உள்ளது. அதிலிருந்து ஒரு சிறு பகுதி –
குயிலியும் வானம்பாடியும் அவசரமாக நடந்த ’ஏமப் பெருந்துயில்’ Cryostasis என்று எழுதி இருந்த ஒழுங்கை, இருட்டும், அமைதியுமாக நீண்டு போனது.
ஒரே போல ஐந்தடி உயரமும், ஆறடி நீளமும், இரண்டு அடி அகலமுமான தேள்கள் அங்கே நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் பழுக்கக் காய்ச்சிய சம்மட்டி போன்ற பெரிய கொடுக்குகள் எந்த வினாடியிலும் தாக்குதலை எதிர்பார்த்து, பயமுறுத்தும்படி உயர்ந்து நின்றன.
குயிலியும் வானம்பாடியும் ஓரமாக ஒதுங்கி வணக்கத்துக்குரிய ஒரு செந்தேளர், எனில் பெரும் பதவி வகிக்கும் செந்தேள் நகர்ந்துபோக வழி செய்தனர். செந்தேளர் 2345 என்று பெயர் எழுதிய உடல், போன ஏதோ நூற்றாண்டு விமான சேவை நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட விமானம் போல் பிரமிப்பும் அச்சமுமூட்டியது.
கொடுக்கையும் பிருஷ்டத்தையும் மரியாதை நிமித்தம் பின்னால் இழுத்துக்கொண்டு குயிலிக்கும் வானம்பாடிக்கும் வரவேற்பு நல்கும் விதமாகத் தலையைக் குனிந்து நிமிர்த்தி பெருந்தேளர், துயிலரங்கின் பிரம்மாண்டமான கதவுகளுக்கு நேரே நின்றது, எனில் நின்றார்.
பெருந்தேளர். ஒப்பற்ற, பிரம்மாண்டமான, அனைத்து அதிகாரத்துக்கும் ஊற்றுக்கண்ணான பெருந்தேளர். சகல வல்லமையும் கொண்ட, அறிவின் ஏக உறைவிடமான மகத்தான ஆளுமை பெருந்தேளர். ஊரும், நடக்கும், ஓடும், நீந்தும், பறக்கும் சகல உயிரினங்களுக்கும், கர்ப்பத்திலிருக்கும் சிசு முதல் காடேகக் காத்திருக்கும் விருத்தர் வரை அன்போடு எந்நேரமும் வழிநடத்தலும், வழிகாட்டுதலும் செய்த, செய்யும், என்றும் செய்யக் காத்திருக்கும் பேராசான் பெருந்தேளர். கோகர் மலைநாட்டின் என்றென்றைக்குமான, மாபெரும் தலைவர் பெருந்தேளர். பெருந்தேளர். பெருந்தேளர். பெருந்தேளர்.
குயிலியும் வானம்பாடியும் தேளசைவு போல் வலது கையை உயர்த்தி மடக்கி மரியாதை செலுத்தி, உக் உக் உக் என்று அரசு மொழியான தேள்மொழியில் பெருந்தேளரிடம் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அரசுமொழியான தேள்மொழியில்தான் அரசு நடவடிக்கைகள் நடத்தப்படும். அரசுமொழியைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
உள்ளே வாருங்கள். இந்தக் கதவை ஒரு தடவை திறந்தால் எத்தனை கஷ்டப்பட்டாலும் அடுத்த பத்து நிமிடம் மூடாது என்பது தெரியும்தானே.
தடித்த முன் காலை அன்போடு குயிலிக்கு முன் உயர்த்தினார் பெருந்தேளர். சொல்லி வைத்தாற்போல் அந்தப் பெண்கள் மானுடச் சிரிப்பைக் கலகலவென்று உதிர்த்தார்கள்.
தான் சொன்ன நகைச்சுவைத் துணுக்கு அவர்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி அடைந்த பெருந்தேளர் கதவு திறந்ததும் ’ஏமப் பெருந்துயில் நிகழ்வும் நிர்வாகமும்’ பகுதிக்குள் நுழைந்தார்.
இது தேள்களின் மேட்டிமை துலங்கித் தெரியும் அலுவலகப் பகுதி என்பதால் பொறுப்பில் இருக்கும் தேளர்கள் எல்லோரையும் கண்டதுமே குயிலியும் வானம்பாடியும் மரியாதை செலுத்த பதிலுக்கு அமுக்கமாக ஒரு தலையாட்டு மட்டும் செய்து அவர்கள் உள்ளே வெளியே போய்க் கொண்டிருந்தார்கள்.
மிடுக்காக உடையணிந்த காவல் கரப்புகள் முதல் தடவையாகக் கண்ணில் பட்டன. சராசரி மூன்றடி உயரமும், ஐந்து அடி நீளமும், இரண்டடி அகலமுமான அந்தக் கரப்புகளின் பலம் வாய்ந்த இறக்கைகள் இரண்டரை அடி உடலின் இரண்டு பக்கத்திலும் பறக்கத் தயாராக வெளியே துருத்திக் கொண்டிருந்தன.
தேளர்களைத் தவிர வேறு எவருக்கும் தலை வணங்காத கரப்பர்கள்