தேள்களின் ஊர்வலம் – புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இருந்து

தேள்களும் அவற்றுக்கு ஆட்பட்ட மானுடரும் பங்கு பெறும் ஊர்வலம்
=========================================================================================

ஊர்வலம் பிரம்மாண்டமானதாக இருந்தது.

கலந்து கொண்ட ஜீவராசிகளில் தரையில் சுவாசிக்க முடியாதவை கூட பெரிய பாலிவினைல் தொட்டிகளில் நீர் நிரப்பி அதில் சுவாசித்து உலாவில் கலந்து கொண்டன.

நெருப்பின்றி கந்தக உருண்டைகளை நீண்ட குழாய்களில் நிரப்பி அதிர்வெடிகள் நிலமதிர வெடித்த நூறுகால் பூரான்கள் இரண்டு வரிசையாக அகலவாட்டில் நடந்து வந்தன.

இசைக்கருவி எதுவோ நாராசமாக ஒலித்தது. நடுவே இரு குழுக்களாக வெல்வெட் போல் மெத்தென வழுவழுத்த உடல் கொண்ட செவிப் பூரான்கள் அந்த அகண்ட தாளத்துக்கு சுழன்று சுழன்று ஆட வைக்கப்பட்டன.

பயந்த சில மானுடப் பெண்கள் மானம் மறைக்கும் அளவு மட்டும் உடை உடுத்தி வந்த ஊர்திக்குள் செவிப் பூரான்கள் இழைந்தேறின. அவை அந்தப் பெண்களின் வலது காதுக்குள் புகுந்து இடது காது வழியாக வெளியேற நடுங்கி அமர்ந்திருந்த பெண்கள் கண்ணீர் பெருக்கியதை வெகுவாக ரசித்த கரப்புகள், செவிப்பூரான்களை இந்தப் பெண்களின் இடுப்புக்குக்கீழ் செயல்படத் தூண்டின. கைகூப்பி அது வேண்டாம் என்று வேண்டிய பெண்களின் தீனமான அழுகுரலை பூரான்களும் மிக விரும்பின.

அடுத்து அழுக்குச் சிவப்புக் கம்பளம் நெய்து நகர்த்திக் கொண்டு போவதுபோல் அடர்த்தியும், நூறடிக்கு நூறடி நீள அகலமுமான கரப்புக் கும்பல் ஆடிக்கொண்டு போனது.

அந்தக் கும்பலைத் தொடர்ந்து பச்சோந்திகள் இரு கால் முன்னே உயர்த்திப் பின்கால் ஊன்றி அதிகாலையில் தோட்டத்தில் நடைப் பயிற்சி செய்வதுபோல் நடந்து போயின. அவை ஏழு நிறமும் கொண்ட தட்டுகளை அசைத்து அந்தந்த நிறத்தை உடல் முழுக்கக் கொண்டு வந்து பத்து நொடி நின்றன.

தேளர்கள் மோகிக்கும் ஒரே உயிரினம் அந்தப் பச்சோந்திகள் தான். நிதி மிகுந்த தேளர்கள் போட்டி போட்டு நல்ல விலை கொடுத்து வாங்கி வீட்டில் நிறப்பிரிகை நிரம்பியதுபோல் பச்சோந்தி நடனமும் சொன்னபடிக்கு நிறம் மாறச் செய்வதும் நிகழும்.

அந்த ஓந்திகளை மரப்பல்லிகளோடு கலவி செய்ய வைத்து ரசிப்பதும் உண்டு. பாதி புணர்வில் தலைகளைத் துண்டித்து அப்போது காட்டிய நிறத்தை நிரந்தரமாக்கிப் பாடம் பண்ணிய ஓந்தியுடல்கள் வீட்டு முகப்பில் அலங்காரமாக ஏற்றி வைத்திருப்பது தவிர அந்த உடல்களை உயர்த்திப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துப் போவது தட்டுப்பட்டது.

நிறம் மாறும் பச்சோந்திகளுக்கு அடுத்து வெட்டுக்கிளிகள் கரமரவென்று பற்களை வைத்து உணவாக எதையும் கொஞ்சம் கொஞ்சமாக உண்டபடி வரும் ஓசை சூழ்ந்து செல்லும்போது மற்ற ஓசையெல்லாம் நிலைத்திருந்தன.

நண்டுகள் பாலிவினைல் தொட்டிகளுக்குள் ஊர்ந்து ஊர்வலத்தில் வந்தன. பெருந்தேளரும், அடுத்த வரிசைத் தலைவர்களும் அவ்வப்போது கண்காட்ட, நண்டுகளிருந்த தொட்டிகளில் இருந்து நான்கைந்து வெளியே எடுக்கப்பட்டு, தலைவர்களுக்குக் கொறிக்கத் தரப்பட்டன. கரபரவென்று உயிர் நீங்கும் வாதனையோடு அவை தீனமாக அலறத் தேளர்களுக்கு அது சுகமான சங்கீதமாகக் கேட்டது.

கரடி, ஊர்வலத்தில் நண்டைக் கால் காலாகக் கடித்து மென்றபடி வந்தது. அது தேளரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது என்று சகலருக்கும் தெரிய வந்திருக்கிறது. நண்டுகளுக்குத் தெரியுமா, தெரியவில்லை.

பச்சைக்கிளிகளும், குருவிகளும், சத்தம் போடாமல் அமைதி காத்து நான்கைந்து காக்கைகளும், கொக்குகளும் பிரயத்னப்பட்டு நடந்து வந்தன அடுத்து. கடல் ஆமைகளும், ஈமுக்களும் அடுத்த அடுத்த வரிசையில் நடந்தன.

ஆமைகள் மிக மெதுவாக நடப்பதால் அவற்றைக் கடல் தாவரங்கள் கொண்ட தொட்டிகளில் ஏற்றி ஈமுக்கள் இழுத்துக் கொண்டு மிக மெல்ல ஓடி வந்தபோது நிலாக்கால இரவுகளில் படகு செலுத்திப் போகும் கடலோடிகள் போல் அபூர்வமாகக் கானமிசைத்து வந்தன. அவற்றின் தொண்டை இதற்காக சிகிச்சையில் ஆழ்த்தப்பட்டிருந்தன.

பெருந்தேளரின் சித்திரம் பொதிந்த பதாகைகளை உயர்த்திப் பிடித்து அங்கங்கே ஜீவராசிகள் கௌரவ பாவம் காட்டி எந்த ஒலியுமின்றி நடந்து வந்தன.

அப்புறம் தேள்கள். தேள்கள். தேள்கள்.

சிறு செந்தேள்கள் முதலில் வந்தன. பிறந்து ஒரு மாதமே ஆனவை மற்றும் ஒரு வயது ஆனவை அவற்றின் அன்னையரால் தூக்கி வரப்பட்டு, கொடுக்கு உயர்த்திக் காட்டிக் கடந்து போயின.

கர்ப்பம் தரித்த பெண் தேள்கள் மெல்ல நடந்து நடுநடுவே ஓய்வெடுப்பதையும் ஊர்வலத்தில் காணலாம். இரண்டிலிருந்து மூன்று வயது வரையான தேள்கள் மிடுக்காக நடைபோட்டு அடுத்துப் போகும்.

முழுச் சக்தியோடு மூன்றிலிருந்து ஒன்பது வரையான தேள்கள் அடுத்து பிரம்மாண்டமான உடலும் மிடுக்குமாக அச்சுறுத்தும் வண்ணம் கொடுக்கு நிமிர்த்தி வரும்.

தேள் ராணுவம் மிடுக்காக அடுத்துச் சில வரிசைகளில் வர, தேள் அறிவியலாரும், ஒன்றிரண்டு மானுட, கரப்பு அறிவியலாரும் சேர்ந்து அடுத்து வருவது வழக்கம்.

உடல் தளர்ந்து எந்த நேரத்திலும் இறக்கக்கூடும் என்ற நிலை எய்திய பத்து வயதுக்கு மேலான தேள்களுக்குப் பொது ஓய்வு அறிவிக்கப் பட்டாலும் பிடிவாதமாக ஊர்வலம், பெருந்தேளரின் பிறந்த நாள் கொண்டாட்டம், உணவு விழா இப்படி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் முதிய தேள்கள் பின்வாங்குவதில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன