தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து
தினை மத்தியாங்கம் ஆ
சிறு நகரக் கற்கோட்டையில் சாவைக் குணமாக்க மருந்து கண்டுபிடித்து விட்டார்கள். அதைப் பரிசோதிக்க பத்து பேரை, ஆளுக்கு நூறு பொன் கூலிக் காசு கொடுத்து, ஆயுசும் ஐநூறு வருடம் நீடிக்கப்படுகிறார்கள்.
பிரசவ ஆஸ்பத்திரி தாதிகளில் இருந்து சுடலையில் பிணம் சுடும் வெட்டியான் வரை வேறேதும் பேச்சு இல்லை. வீட்டில் வளர்க்கும் கிளிகளும் மருந்து மருந்து என்று மந்திரமாக உச்சரிக்கின்றன. கோட்டைக் கதவுகள் அடைத்து மூடப்பட்டன.
மருத்துவர் ஆயுள் மருந்தை உருவாக்குவது பக்கத்து கிராமம் சிறு நகரம் என எங்கும் பரவியது. அது பல வடிவாகத் திரிந்தது. ஒரு திரிபு உடலின்றி உயிர் மட்டும் நீடிக்க மருந்து வந்ததாகச் சொன்னது.
மற்றொன்று குரங்குகளின் உயிரை மனுஷர்களுக்கு மாற்றி வைத்து அவர்களை மார்க்கண்டேயர்களாக்கினதாக எக்காளம் முழக்கியது.
வேறொன்றோ மருந்து உண்ண ஆயுள் நீடிக்கும், எனில், உடல் சுருங்கி சிட்டுக்குருவி ஆகிவிடும் என்று பயமுறுத்தியது. அது வந்த சுவட்டிலேயே அடுத்த வதந்தி மருந்து உண்ண உடலும் பூரிக்கும் என்று எதிர்காலத்தில் எல்லோரும் சிறு குன்றுகளாக நகர்வர் எனக் கூறின.
உடல் குரங்காக ஆயுள் ஐநூறாண்டாவதை இன்னொரு திரிபு சொல்லியது. மருந்து உட்கொள்ள மலச்சிக்கல் தீரும் என்ற வதந்தியை நூறு பேராவது நம்பினார்கள்.
எது எப்படியோ, வெளியூரார் வராமல் இருக்கக் கோட்டைக் கதவுகள் அறைந்து சாத்தப்பட்டன. அவர்களும் நம்மவர்கள் தானே என்று வெளிமதில் பக்கம் சூழ்ந்து நின்றவர்களைப் பற்றிப் பரிதாபம் காட்டிய மனிதாபிமானிகள் இருந்தார்கள். அவர்களை இழுத்துப்போய்க் கோட்டை வாசலுக்கு அந்தப்பக்கம் தள்ளிவிட்டுப் பிரச்சனை தீர்ந்ததாக அரசு தரப்பில் மனநிறைவு தெரிவிக்கப்பட்டது.
இது வெளிவட்ட நிகழ்வுகளின் தொகுப்பு என்றால், நகருக்குள் நிலைமை வேறு மாதிரி இருந்தது.
மருந்து காய்ச்சி முடித்தவுடன் வியர்வையும் கையில் பிசுக்காக மருந்து ஒட்டியிருந்ததையும் களைய ஆற்றுக் கரையில் ஊற்று போட்டு அதில் இறங்கி ஒரு மணி நேரம் குளித்தார் மருத்துவர்.
பகல் சாப்பாட்டையும் ராத்திரி சிற்றுண்டித் தீனியையும் ஒரே இருப்பில் உண்ணப் போகிறேன் என்று அடுத்து மனைவியிடம் கூறியபோது அவள் இன்னொரு தடவை ஆச்சரியப்பட்டாள்.
ஓலைச் சுவடி படித்துப் படித்து தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு குளிகத் தனமாக ஏதாவது செய்ய முனைந்திருக்கிறீர்கள். ரெண்டு வேளை சாப்பாட்டை ஒரே தடவை எப்படி உண்ண முடியும்? அவள் கேட்டாள்.
அரசரைச் சந்திக்கப் போகிறேன். அவர் பேச ஆரம்பித்தால் மணிக் கணக்காகப் பேசுவது மட்டுமில்லை, சாப்பிட ஒரு கை அவல் பொரி கூடக் கொடுக்க மாட்டார். குடிக்கத் தண்ணீர் மட்டும் போனால் போகிறது என்று கொடுக்கச் சொல்வார். இப்படி நிலைமை இருக்க, எளிதாக காலையில் பேச ஆரம்பித்து சாயந்திரம் வரை பிடுங்கி எடுத்து விடுவார் என்பதால் பசிக்காமல் இருக்கச் சாப்பிட்டுப் போவேன் என்று மருத்துவர் விளக்கம் செய்து உண்டு போனார்.
அரசர் மருத்துவர் வருவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு முகமன் கூறிப் பாராட்டியது இந்த வகையில் இருந்தது –
ஆயுள் அதிகம் ஏற்படுத்த மூலிகைகள் பயிரிட வேண்டும் தானே? மைதானத்தில் பயிரிட்டுக் கொள்ளுங்கள் அங்கே காலைக்கடன் கழிக்க யாரும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
அரசர் தாராளம் காட்டினார். மிக்க நன்றி என்று ஒரு தடவை சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து எழுந்து, இன்னும் சில கோரிக்கைகளும் உண்டு. சமூகம் அனுமதித்தால் சுருக்கமாகாச் சொல்வேன் என்றார் மருந்துவர்.
அதென்ன சுருக்கி உரைத்தல்? உங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதெல்லாம் விவரித்துச் சொல்லுக என கம்பீரம் காட்டிய அரசர் மருத்துவன் ஐநூற்றுக் குறிஞ்சி என்று சொல்லி வரும்போது உறங்கி விட்டார்.
எல்லோருக்கும் பெருமாள் கோவில் துளசி தீர்த்தம் போல் கொடுங்கள்.
அவர் சொல்லியது எழுந்தபோது தான்.
இந்த அபூர்வ மருந்தை இன்றைக்கே வீடு வீடாகப் போய்க் குடிக்கத் தரலாம் தான். ஒரு சிறு பிழை இருந்தாலும் கூட மருந்து வேலை செய்யாது. அது மட்டுமில்லை, வேறு ஏதாவது விளைவை ஏற்படுத்தலாம். ஆகவே ஒரு பத்து பேரைப் பயன்படுத்தி தீர சோதனை செய்து பார்த்து விடுவது நல்லது என்றார் மருத்துவர்.
அதிலென்ன சிரமம்? அரசர் போகட்டும் போகட்டும் என்று கையை வைத்து அபிநயம் பிடித்தார். அந்தப் பத்துப் பேர் என்று ராகம் இழுத்தார் மருத்துவர். யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் என்று அனுமதி கொடுத்தார் அடுத்து தாராள மனதோடு.
இப்படி மக்கள் தொகைப் பட்டியலில் சகட்டுமேனிக்குப் பெயர் தேர்ந்தெடுத்தால் அவர்கள் வருவார்களா?
சந்தையில் கத்தரிக்காய் வாங்குவது போல் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்ல, அரசர் சீறினார்.
ஆயுசு கூட்டும் மருந்து உண்டாக்க கத்தரிக்காயும் வேண்டுமென்றால் சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே. அது இல்லாமல் புனுகுபூனைக்குக் குதத்தில் கசிந்து வராது என்று ஏதோ பேசிக்கொண்டு போகிறீர்.
அப்படியில்லை அரசே, மருந்தை ஐயம் திரிபற சோதிக்க ஒரு பத்து பேர் பத்து பேர் மட்டும், மருத்துவர் சொல்லி முடிக்கும்முன் யார் வேண்டும் உமக்கு? அரசி, அமைச்சர்,காரியக்காரர்கள், வாத்தியம் வாசிக்கிறவர்கள் யார் வேண்டுமானாலும் சோதனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் மீண்டு வந்தாலும் சரி, குரங்காக மாறினாலும் சரி. விளைவு தான் முக்கியம் என்று ஆள் இல்லாத உள்வீட்டில் ராஜபார்வை பார்த்தார் அரசர்.