புது நாவல் ஆல்ட் சி பிரபஞ்சத்தில் அறிமுகமான கடவுள்

உல்லுலூ என்ற இளைய கடவுள் -ஆல்ட் சி பிரபஞ்சத்திலிருந்து

வந்தது தான் வந்தாய். அந்த அழுக்குச் சிறகுப் பெண்ணுக்கும் அவளது அடிவருடிகளுக்கும் நியாயத்தைச் சொல்லிப் போயேன்

பழுப்பு நிற முடை நாற்றச் சிறகடித்து ஊருணிக் கிணறுகளைச் சுற்றியபடி ஒருவருக்கொருவர் பேன் பார்த்து மிதக்கும் ஒரு பிரிவு பணியாளர் தேவதைகள் ஆதனின் கை பிடித்து இழுத்துக் கூறின.
அவன் தோள் பற்றி இரு வகைச் சிறகிகளும் அவனது கவனத்தை ஈர்த்து அவரவர்கள் தரப்பு நியாயத்தைச் சொல்ல முயன்றன.

அப்போது சுனையின் நடுவாந்திரமாக நீந்தி வந்த பெயர் தெரியாத பிரம்மாண்டமான ஏதோ உயிரினம், ஹூம்ம்ம் என்று கனைத்தபடி நீர்ப் பரப்புக்கு மேலே மிதப்பது போல் போக்குக் காட்டி சுனை உள்ளே நுழைந்தது.

உல்லுலு வந்திருக்கு. உல்லலு நீர்நிலைகளின் சிறு தெய்வம். ஆதன், மரியாதை செய் உல்லலுவுக்கு
தேவதைகள் சிறகு நீவிச் சீராக்கியபடி ஆதனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டன. உல்லுலூ என்று ஒரு தெய்வமா, கேட்டதே இல்லையே என்று ஆச்சரியப்பட்டான் ஆதன்.

நீ பார்க்கிறாயே உல்லுலூ உண்டுதான். ஆல்ட் சி கிரகம் நூறாண்டு முந்திப் புதியதாக உருவாக்கிய கடவுள். கடைகளில் பொருள் வாங்குவோர்க்கான காவல் தெய்வமாக உருவான உல்லுலூ குடிதண்ணீர் தெய்வமானது தற்செயலாகத்தான் நிகழ்ந்தது. உல்லுலூ உருவமைப்பும், ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் அறிவும் இந்த ஆண்டு கடைசியில் இறுதிக்கட்ட சோதனைகள் முடிவுக்கு வரும்போது பரவலாகப் பேசப்படும் என்றாள் வாதினி ஆதனிடம்.

யட்சி யுத்தம் முடிவடைந்ததாக இரண்டு தரப்பும் வெள்ளைச் சிறகு உதிர்த்து கைமாற்றிக் கொண்டன, வாதினியும் சாதினியும் ஒருவரை ஒருவர் அணைத்து ஒரு நிமிடம் முத்தமிட்டுக் கொண்டனர்.

உல்லுலூ சுனைக்கு மேலே எழும்பி ஆதனை நோக்கி வாய் திறந்தபடி திமிங்கிலம் போல் மிதந்தது.
அதன் பற்கள் கூர்மையாக நான்கு அடுக்கில் முதலைக்கு வாய்த்தது போல் பயம் கொள்ள வைத்தன.
எல்லா ஜீவராசிகளும் அத்தியாவசியமானதாகப் பருகும் குடிநீர்க் கடவுளை ஒரு துளி தண்ணீர் கூட அருந்தாத, நெருப்புக் குழம்பு குடிக்கும் தெய்வமையாக கட்டமைப்பு செய்தது ஏன் என்பதற்கு ஆல்ட் சி பிரபஞ்ச அறிவியலார் மட்டக் குதிரைகளும் மானுடரும் காரணம் எதுவும் காட்டவில்லை.

உல்லுலூவை கடவுள் அடுக்கில் டிவைன் பாந்தியன் தகுந்த இடம் கொடுத்து அமர்த்த மூன்று மாதம் போனது. உல்லுலூவுக்கான லோர் தொன்மச் சரடு, பாடிப் பரவ கீதங்கள், மற்ற கடவுளரோடு தந்தை, சகோதரன்,சகோதரி, மாமன் என்று உறவு வலுவாக ஏற்படுத்துவதும் நிறைய நேரம் நீண்டது. ஒவ்வொரு புதுக் கடவுளும் பிரபஞ்சங்களினூடாகக் கட்டமைத்த அனைத்துக் கடவுளமைப்பில் இடம் பெற வைப்பதே இந்த உழைப்பின் நோக்கம். கனோனிகல் ஆக இந்த உறவுகளை அமைத்த பின் அவற்றை மாற்ற முடியாது. இத்தனை தகவலும் உல்லுலூ குடிநீர்த் தெய்வம் பற்றி வாதினி கோடி காட்ட ஒரு நிமிடத்திலும் பகுதிதான் எடுத்துக் கொண்டாள். அதுவும் இல்லாமல் பத்து விநாடியில் சொல்லி முடித்திருக்கலாம் தான் வாதினி. அவளை நெருங்கி நின்று விரல்களை சொடக்கிட்டு அவள் கவனத்தை சாதினி ஈர்த்ததுதான் கவனம் கலைந்து ஒரு நிமிடத்தில் சொல்ல வைத்தது.\

மறுபடி வாதினியோடு இதழ் கலந்து நின்றாள் சாதினி. போதும் இதைப் பார்க்க அலுப்பாகிப் போனது பெண்களே நீங்கள் யுத்தமிடும்போது நடுவண் நோக்கராக இருந்து தீர்ப்புத் தரவன்றோ என்னை அழைத்தீர்கள், யாண்டு நடப்பதென்ன என்று ஆதன் ஆச்சரியத்தோடு குறிப்பிட்டான்.

நாங்கள் சண்டையிடும்போது ஜன்ம விரோதிகள். பிற நேரம் ஒருவரை ஒருவர் வெறியோடு காமுறும் சிநேகிதிகள் என்றாள் சாதினிக்குப் பின்னாள் நின்று அவள் கொங்கை வருடி, வாதினி. உல்லுலூ நீரில் எச்சில் உமிழ்ந்தான்.

உல்லுலூ ஆதனைப் பார்த்து நீ எப்படி கடவுள்களோடு இடையாடிக் கொண்டிருக்கிறாய் மானுடனே என்று அதிகாரத்தோடு கேட்டது. வாதினி தலையை அப்படி இல்லை என்று மறுக்கும் படிக்கு அசைத்தது. ஆதன் தர்க்கப் பிழை மூலம் காஸ்மோஸ் பிரபஞ்சத்தில் மானுடனாகப் பிறந்தான். அவனும் உங்களைப் போல் சிறு தெய்வமாக காஸ்மோஸ் பிரபஞ்சத்தில் பிறந்து கடவுளமைப்பில் ஏறியிருக்க வேண்டியவன் என்று சொல்ல, அதைப் பாதி கூட கேட்காமல் உல்லுலூ வலுவில்லாத வெண்சிறகுகள் அடித்து மேலே உயர்ந்தான். சட்டென்று விழவும் செய்தான். அனுபவம் இல்லாத தெய்வமாக இருந்தான் உல்லுலூ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன